சன் டிவி

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

அருளடியான்


கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவி தி.மு.விற்கு பெரிய பலமாக இருந்தது. ஆனால், இப்போதைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணத்தின் ஆடம்பரத்தை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்திய பெருமை சன் டிவியையே சேரும். ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு 70% க்கு மேல் இது மட்டுமே காரணம். ஆனால், தற்போது சன் டிவியின் வியபார ஒழுங்கிண்மையால், தி.மு.கவிற்கே சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

1. சன் டிவி, தன்னிடம் நாடகம் ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் போடும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒருதலைப் பட்சமானது. அயோக்கியத் தனமானது. மோசடித் தனமானது.

2. சன் டிவி குழுமம் நடத்திய சுமங்கலி கேபிள் நெட்வொர்க் மக்கள் வெறுக்கும் வண்ணம் நடந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தது. பிற சேணல்களைப் பார்க்க விடாமல் செய்தது. அதிக கட்டணம் வசூலித்து வாடிக்கையாளர்களைச் சுரண்டியது.

தாங்கள் மட்டுமே இத்துறையில் ஆதிக்கம் செய்ய வேண்டும். பிற யாரும் தலையெடுக்கக் கூடாது என்ற மனப்பான்மையில் செயல்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸை விட மோசமாக செயல் பட்டார் கலாநிதி மாறன். இதற்கு இவரது தம்பி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அனைத்து உதவிகளும் செய்தார்.

3. செய்திகளில் ‘முஸ்லிம் தீவிரவாதிகள் ‘ என்ற சொல்லை நீண்ட காலமாகப் பயன்படுத்தினர். தற்போது தான் நிறுத்தி உள்ளனர். சன் டிவிக்கு எதிராக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டம் பாராட்டுக்கு உரியது.

4. தமிழ் நாட்டின் உயிராதாரமான பிரச்சினைகளுக்கு, பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதும் கலைஞர், ஜெயலலிதா கொண்டு வந்த கேபிள் டிவி மசோதாவுக்கு கையெழுத்துப் போட வேண்டாம் என கவர்னரிடம் தன் பேரனுடன் சென்று கேட்டார். தயாநிதி மாறனும், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் இது தொடர்பாகப் பேசுகின்றனர். ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு கட்சியா ?

5. தினகரனை, சன் டிவி வாங்கியதே ஒரு முறையற்ற வணிக நடவடிக்கை. இது போன்ற வணிக நடவடிக்கைகள் அமெரிக்காவில் தான் நடைபெறும். பல பத்தாண்டுகளாக, தினத்தந்தி தமிழ் நாட்டில் விற்பனையில் முதலிடம் பெற்று விளங்கியது. நாளிதழான ‘தின மலர் ‘ எவ்வளவு முயன்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே தினத்தந்தியை தாண்ட முடிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட தினமலர் நாளிதழால், தினத்தந்தியின் விற்பனையை தாண்ட முடியவில்லை. தற்போது, சன் டிவி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் தினகரன், தமிழ் முரசு நாளிதழ்களில் வேலை செய்யும் செய்தியாளர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தினமலரில் இருந்து ஒரே நேரத்தில் வேலையில் இருந்து நின்று சன் டிவியின் பத்திரிக்கைகளில் வேலைக்கு சேர்ந்தவர்கள். இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. அடக்க விலையை விட குறைத்து விற்பது, இலவசப் பொருட்கள் என விற்று பிற நாளிதழ்களை பாதிக்கும் சன் டிவி நிறுவனத்தின் இதழ்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.

6. மத்திய அரசின் செய்திகளை வெளியிடும் போது, தயாநிதி மாறனின் செய்திகளை மட்டுமே வெளியிடுவது, பிற அமைச்சர்களின் செய்திகளை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசின் நலத்திட்டங்களை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசைப் பற்றிய விமர்சனங்களை மட்டுமே வெளியிடுவது, திமுகவிலேயே தயாநிதி மாறன், ஸ்டாலின் ஆகியோரை மட்டுமே காட்டுவது, அன்பழகன், துரைமுகன் – போன்ற தலைவர்களை செய்திகளில் காட்டாமல் இருப்பது, கூட்டணிக் கட்சிகளின் செய்திகளைப் புறக்கணிப்பது என பட்டியலிட்டு மாளாது சன் டிவியின் அழிம்புகள்.

-அருளடியான்

aruladiyan@yahoo.co.in

Series Navigation