சத்யஜித்ராய் தரும் மனித நம்பிக்கை.

This entry is part [part not set] of 16 in the series 20010505_Issue

எஸ். ஆல்பர்ட்.

மானுடத்தின் கலை இலக்கியச் செல்வத்துக்கு நின்று பயன் தரும் பங்களிப்பைத் தந்திருக்கும் சினிமாக் கலை மேதை, சத்யஜித்ராய். வங்கச் சமூகத்தில் அவர்கள் பேசும் வங்க மொழியோடும் கலாச்சாரத்தோடும் அவர் ஆழ்ந்து கண்டு செய்த மனிதப் பதிவுகள் உலகில் காலம் உள்ளவரை மனிதமேம்பாட்டுக்கான வாழ்க்கை நெறியினை எல்லார்க்கும் ஏற்ற வகையில் உணர்த்தவல்ல அரிய கலைப்படைப்புகள்.

தம் எண்ணற்ற மெளனப்படங்கள் மூலம் மனித இன ஒருமைப்பாட்டையும் உயர்வையும் எல்லாரும் மகிழ்ந்திருக்கும் சாத்தியத்தையும் அனுபவமாக்கிக் காட்டும் சார்லிசாப்ளின், ஏதும் அறியாத சிறியவர் முதல் மெத்தப் படித்த மேதாவிகள் வரை எல்லாரும் அறிந்திருக்கும் சினிமாக் கலைஞர். தம் எளிய ஆரோக்கியமான நகைச்சுவையால் எல்லாரும் சமமென்று உறுதியாக்கி விடுவார். சார்லி சாப்ளினுக்கு அடுத்தபடி உலகம் கண்டு போற்றத்தக்க சினிமாக்லைஞர் சத்யஜித்ராய். திரைப்படங்கள் வழி மனிதனை உன்னதமாகப் பாடியவர்களில் முதன்மையானவர் ராய். இந்த உண்மையை உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்பது தெளிவு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தம் வாழ்வு காலச் சாதனைக்காக ராய் பெற்ற ஆஸ்கார் விருது குறிப்பிடத் தகுந்தது. கலைத்தரத்தின் அடிப்படையில் நடைபெறும் உலகப் படவிழாக்கள் அனைத்திலும் பலமுறை சிறப்பிக்கப் பெற்றவர் அவர். தரமிக்க விழாக்களில் ராய் அடைந்த அளவு மதிப்பும் கெளரவமும் வேறு எந்த சிறந்த இயக்குநரும் அடைந்ததில்லை. அநேகமாக அவர் செய்த படங்கள் ஒவ்வொன்றும் பாராட்டுக்குரியதாயிற்று. மிகவும் பிரபலமான ஆஸ்கார் விருது, ஹாலிவுட் விருது, வணிக சினிமா, வெகுஜன சினிமாவின் உலக உச்சத்தைச் சுட்டி நிற்பது. இந்த இடத்தில் சதயஜித்ராய்க்கு என்ன மரியாதை இருக்க முடியும் ? ஆனால் அற்புதங்கள் பூமியில் நிகழ்கின்றன. ஆஸ்கார் விருதுகளிலேயே உயர்ந்தும் பரிபூரணமானதும் ஆகிய வாழ்வுக்காலச் சாதனை விருதினை ராய்க்கும் வழங்கித் தன்னை ரட்சித்துக் கொண்டது ஆஸ்கார். நம்பிக்கை வளர்கிறது.

சிகரங்களாக கருதப்படும் ஐசன்ஸ்டான் (ரஷ்யா), பெர்க்மன்(ஸ்வீடன்), ரெனுவா(பிரான்ஸ்), ஃபெலினி (இத்தாலி), குரோசாவா (ஜப்பான்) போன்ற புகழ்பெற்ற படைப்பாளிகள்கூட இந்தியாவின் சத்யஜித்ராய்க்கு ஒப்பாக முடியாது என்று வாதாட இடமிருக்கிறது. மொழிமாற்றம் செய்துதந்துவிட்டால் எந்த எளிய சாமானியனும் ராய் படங்களை அனுபவித்து ரசிக்க முடியும்; இன்னொருபுறம் சினிமாக் கலையில் தேர்ச்சிமிக்க அழகியல் நுண்மையையும் செறிவையும் ஆய்ந்து சுவைக்கும் அறிஞனையும் அசத்திவிடுகிறது ராயின் படைப்பு. அவருடைய முதல் படம் பதேர் பாஞ்சாலி 1955-இல் வெளிவந்தது. 1956-இல் பிரான்ஸ் தேசத்துக்கான சர்வதேசத் திரைப்பட விழாவின் உயர்ந்தப் பரிசைப் பெற்றது. ‘The best human document ‘ என்று அங்கே அப்படம் வர்ணனை செய்யப்பட்டது கவனிக்கத்தக்க ஒரு செய்தி. ராயின் படங்களை ஒட்டு மொத்தமாக உயர்ந்த மனித அனுபவத்தின் நேர்மையான பதிவுகள் என்று அழைப்பது பொருந்தும்.

தரத்துக்கு முதலிடம் தரும் சர்வதேசப் படவிழாக்களில் சிறந்தது Cannes International Film Festival. ராயின் முதல் படைப்பே இவ்விழாவின் அபூர்வ மதிப்பைப் பெற்றதுமுதல், உலகின் சினிமாக்கலை ரசிகர்களின் கவனம் ராய் மீது திரும்பியது. ராய் படம் ஒன்று தயார் என்றால் அதை எப்படியாவது தங்கள் படவிழாவுக்குப் பாடுபட்டு வரவழைத்துப் பரிசு கொடுத்துத் தங்கள் கெளரவத்தை உயர்த்திக் கொள்வது என்பதே போகப் போகப் பொதுவான கொள்கையானது. உலகளவில் குறிப்பிடத்தக்க சினிமா விமர்சகர்கள் பலர் ராயை உற்சாகமாகப் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். முன்னணி இயக்குநர்களும் சத்யஜித்ராய் படைப்புகளின் தனிச்சிறப்பை ரசித்து ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

1967-இல் திருச்சியில் திரைப்படக் கழகம் (Film Society) தொடங்கப்பட்டது. Cine Forum-Tiruchi என்று பெயர். சேசு சபைத் துறவிகள் அருள்திரு. பிரான்சிஸ் பெஸ், அருள்திரு. லாரன்ஸ் சுந்தரம் ஆகிய இருவரின் முயற்சியில் தொடங்கியது. அவர்கள் பராமரிப்பில் வளர்ந்தது. திருச்சி புனித வளனார் கல்லூரியின் லாலி மன்றத்தில், உலக சினிமாவின் சிறந்த திரைப்படங்களைத் தருவித்து, பிரத்தியேகமாகத் திரையிட்டுப்பார்த்து விவாதித்து மகிழ்வோம். இத்தகைய அபூர்வமான கலைப்படங்கள் எங்கிருந்து கிடைக்கும் ? பெரும்பாலும் அந்நிய நாட்டுத்தூதரகங்களில் இருந்தும், திரைப்படச் சங்கங்களின் கூட்டமைப்பு மூலமாகவும் படங்களைப் பெற்றுத் திரையிடுவோம். ஆனால் சத்யஜித்ராயின் பதேர் பாஞ்சாலி எங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்று சொன்னால் நம்ப முடியாது. திருச்சி மாவட்டக் களவிளம்பர அலுவலகத்தில் (Field Publicity Office) ஒரு பிரதி விநியோகத்துக்கு இருந்தது; படத்தைப் பார்த்து ஆராய்ந்தோம். இது கலைப்படம். மிகவும் மெதுவாகத்தான் நகரும். கதை வசனம், ருசிகரமான திருப்பங்கள், ஒப்பனைச் சிறப்பு, ஆரவாரமான நடிப்பு, விறுவிறுப்பு இவற்றை எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. பார்க்க நிறையப் பொறுமை வேண்டும் என்றெல்லாம் பேசிக் கொண்டோம். விஷயம் தெரிந்த ஓரிருவர் இதுதான் சினிமா, அற்புதமான படைப்பு என்றார்கள். ஆனால் ரொம்ப பேருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை என்பது உண்மை. எல்லாரும் கல்லூரிப் படிப்புப் படித்தவர்கள். பாதிப் பேர் கல்லூரி ஆசிரியர்கள்.

ஆனால் இன்னொரு பெரிய உண்மை: பதேர்பாஞ்சாலி படத்தைப் பட்டி தொட்டிகளிலெல்லாம் அரசின் களவிளம்பரத்துறை திரையிட்டிருக்கிறது அறுபதுகளில். பாமர மக்கள் உட்கார்ந்து, பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். வழக்கமாக அவர்கள் சினிமாக் கொட்டகைகளில், திரைப்படங்களில் பார்ப்பது கதைகள், நடிகர்கள். பதேர்பாஞ்சாலியில் அவர்கள் பார்த்தது அவர்கள் வாழ்க்கைக்கு நெருக்கமான வாழ்க்கை, மனிதர்கள். கிட்டதட்ட அவர்களைப் போல் தொடர்ந்து வறுமையில் உழலும் ஒரு குடும்பம். குடும்ப சமூக உறவுகள், சிறுசிறு இன்ப துன்ப நிகழ்ச்சிகள். ஜனனம், பால்யம்—இளமை—பூப்பு—திருமணம்—நடுவயது—மூப்பு—மரணம் அவ்வப்போது வரும் விழாச் சிறப்புகள் பருவகால மாற்றங்கள். இப்படியாக படம் நகருகிறது, யதார்த்த வாழ்வின் இயல்பில், நிதான கதியில். அவசரமும் ஆத்திரமுமான யந்திர நாகரிகம் இன்னும் ஊருக்குள் நுழையவில்லை. படத்தின் பிற்பகுதியில் ஊருக்கு வெளியில் மனித நடமாட்டம் அருகிய தரிசு பூமி வழியாக விளையாட்டுப் பொம்மை போல் ஒரு ரயில் வந்து கடந்து சென்று மறைவதை ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்க்கிறார்கள் தற்செயலாக அங்கு வந்த குழந்தைகள்—அப்புவும் அவனது அக்கா துர்காவும்.

பதேர்பாஞ்சாலியை ஒருமுறை பார்த்தாலும் அதில் வரும் முகங்கள் நெஞ்சை நிறைத்துக் கொள்ளும். குறிப்பாக அப்பா ஹரிஹர், அம்மா சர்போஜயா, மகள் துர்கா, மகன் அப்பு, கிழவி இந்திர்—இனி வரும் காலமெல்லாம் உங்கள் மனதுக்குள் இடம் பிடித்துக் கொண்டு விடுவார்கள். வாழ்வின் கனத்தையும் சோகத்தையும் உணர்ந்தவர்கள். அழகியல் ரீதியாக இது ஒரு சுகமான அனுபவம். அறிவியல் ரீதியாக உரம்தரும் அனுபவம். பதேர்பாஞ்சாலி கதையைச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது வாழ்க்கை; அதில் நாம் வாசிப்பது பாத்திரங்கள் அல்ல, மனிதர்கள் என்று சொன்னால், விஷயம் தெரிந்தவர்கள், ‘பதேர்பாஞ்சாலி ஒரு நாவல்; விபூதிபூஷண் பானர்ஜி என்னும் வங்க நாவலாசிரியர் எழுதியது; அதைக் கொண்டுதான் சத்யஜித்ராய் தன் படத்தை எடுத்திருக்கிறார் அல்லவா ? ‘ என்று கேட்கலாம். இதற்குப் பதில் இரண்டு. ஒன்று இந்த நாவலே யதார்த்தத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் மிக நெருக்கமாகப் பிரித்தறியாத அளவு நேரிய வாழ்க்கைப் பதிவாக இருக்கிறது. ‘நாவல் ‘ ‘புதினம் ‘ அல்லது ‘நடுங்கதை ‘ என்று பழகிய எந்த இலக்கிய வடிவப் பெயரும் சரியாக பொருந்துவதில்லை விபூதி பூஷண் எழுதிய பதேர் பாஞ்சாலிக்கு. குறிப்பிடுவதற்குச் செளகரியம் என்ற அளவில் மட்டும் ‘நாவல் ‘ என்று இந்த எழுத்தை அழைக்கிறோம். கதையியல் (narratology) வகுக்கும் அறிஞர்களின் இலக்கண முயற்சிகளுக்கு ஒருபோதும் எட்டாத வாழ்க்கை வடிவம். இதை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் ராய். விபூதிபூஷணின் இந்த எழுத்தையே திரைப்படமாக்க வேண்டும் என்று தீர்மானித்தபோது நான் பெற்றிருந்த தெளிவையும் புரிதலையும் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்: ‘ஏற்கனவே சொல்லப்பட்ட எந்தக் கதை வடிவ அச்சு மாதிரிக்கு இதை ஊற்றி உருக்கொடுத்தாலும் அது தவறாகும் என்று உணர்ந்தேன். திக்கின்றித் திரியும் இந்த நாவலின் இயல்பை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் உள்ளதை உள்ளபடியே அறியும் உணர்வுக்கு இந்த இயல்புதான் இட்டுச்செல்லும். ஓர் எளிய வங்க கிராமத்தில் வாழ்க்கை இப்படித்தான் இலக்கின்றித் திரிகிறது. ‘

இப்படிக் காட்டாறுபோல இலக்கின்றி ஓடும் வாழ்க்கையின் இரகசியத்தை எந்த வரம்புக்குள்ளும், எந்தச் சட்டகத்துக்குள்ளும், எந்த இலக்கணத்துக்குள்ளும் அடங்காத வாழ்க்கை இலட்சணத்தை, சாரத்தை, உயிரை, எப்படியாவது தன் வசப்படுத்திக்கொள்ளும் ஒரு வடிவத்தை தேடுவதும், அந்த வடிவத்தில் வாழ்க்கையைச் செறித்து வைக்க முனைவதுமே மனிதனின் இடைவிடாத முயற்சியாக இருந்து வருகிறது. கலை, இலக்கியம், சமயம், தத்துவம், சித்தாந்தம், அறிவியல் இவை யாவும் வாழ்க்கையை, குறிப்பாக மனித வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே சிந்தாமல் சிதறாமல் சிக்கெனப் பிடித்து வைத்துக்கொள்ளும் முயற்சிகள்தான். வாழ்க்கைக் கடலை ஊற்றிவைத்துக்கொள்ளும் மகா பாத்திரத்தை மனிதன் எப்போது செய்யப் போகிறான்….. ?

மனித வாழ்வை நேசிக்கும் ராய்க்கு அதை ஒரு கதைச் சட்டத்துக்குள் கொண்டுவந்தால் கூட அதன் உயிருக்கு ஊறு நேர்ந்துவிடும் என்று தோன்றுகிறது. இந்து விபத்துக்குட்படாமல் தன் உண்மையை இழக்காத வாழ்க்கை பதேர்பாஞ்சாலி நாவலில் கிடைக்கக் கண்டு அதை அப்படியே படமாக்குகிறார். இந்தத் தேர்வுதான் ராயின் வாழ்க்கை அழகியலுக்கு முழு நியாயம் செய்திருக்கிறது. எனவே அவரது முதல் படமான பதேர்பாஞ்சாலியே அவர் அளித்திருக்கும் படங்களிலெல்லாம் முதன்மையானது என்றும் கருதப்படுகிறது. நாவலின் பிற்பகுதியையும் அதன் தொடர்ச்சியாக அதே பாணியில் தன் கற்பனையால் வளர்த்ததையும் மேலும் இரு படங்களாக –அபராஜிதோ, அப்புர் சம்சார்– செய்து ஓர் ‘அப்பு முப்படத் தொடரை ‘ உருவாக்கினார். நூற்றுக்கு நூறு சத்யஜித்ராய் முத்திரை கொண்ட படங்கள் இவையே என்றும் சொல்லத் தோன்றுகிறது.

வாழ்க்கை தன் உண்மையான இயல்பில் இலக்கின்றித் திரியும் என்று பேசும்போது, ‘வாழ்வுநெறி ‘ என்று எதுவும் இல்லையா, மனிதனின் செயல்களில் நல்லது கெட்டது கிடையாதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. நன்னெறி, நல்ல மனிதன், ஒழுக்கம், சிறந்த வாழ்க்கை என்று தேடித்தேடி ஒவ்வொரு படத்திலும் இவ்விஷயத்தையே மையப்படுத்தித் தருகிறார் ராய். இப்படித்தான் வாழவேண்டும் என்று உணர்த்துவதாக அப்படங்கள் அமைந்திருக்கின்றன.

ஆனால் குறிப்பிட்ட எந்தச் சமயநெறியும் வாழ்க்கை நெறியை நிர்ணயிப்பதில்லை. தன் கோட்பாட்டுக்குள் வாழ்க்கையை வரையறுப்பதில்லை ராய் படங்களில். நிறுவன சமயத்தை முற்றிலும் நிராகரித்து விடுகிறார். எண்பதுகளின் மத்தியில் இதய பலவீனத்தை முன்னிட்டு, ‘சற்று ஓய்வாக இருந்தபோது அவர் செய்த படம் கணசத்ரு (ஜன விரோதி). இது உலகறியும் நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சன் எழுதிய An enenmy of the people நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. எல்லாம் இந்தியாவில், வங்காளத்தில், ஓர் ஊரில் நடந்ததுபோல் வியக்கத்தக்க யதார்த்தத்துடன் படைத்திருக்கிறார். இப்ஸன் நாடகத்தை அறியாதவர்கள், ராய் படத்தின் ஆரம்பத்தில் இவ்விஷயத்தைச் சொல்லியிருப்பதையும் கவனிக்காவிட்டால் ஜனசத்ரு ஒரு மேலை நாட்டு நாடகத்தின் தழுவல் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள்.

இப்ஸனில் காணமுடியாத இந்த நாடகத்தைப் பொறுத்தவரை ஒரு மையமான விஷயம், இப்படத்தில் இந்து சமயத்துக்கும் மருத்துவ அறிவியலுக்கும் இடையே நேர்வதாகத் தோன்றும் மோதல். அந்த ஊரில் மஞ்சள் காமாலை நோய் பரவுகிறது. மக்கள் நெரிசலாக வாழும் பகுதியில் நோயின் ஆதிக்கம். அப்பகுதியில் பயன்படுத்தப்படும் நகரசபைக் குழாய் நீரை இரசாயனப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் நோய்க்கிருமிகள் இருப்பதைக் கண்டு, உடனே ஆபத்திலிருந்து மக்களைக் காப்பதற்கான நடவடிக்கையில் இறங்குகிறார் டாக்டர் அசோக் சென். குறிப்பாக, அங்கு பிரபலமடைந்து யாத்ரீகர்களைப் பெருமளவில் ஈர்க்கும் புதிய இந்துக் கோயிலினால் ஆபத்து அதிகம் என்று தெரிகிறது. கோவிலின் விசேஷம் அங்கு வழங்கப்படும் புனித நீர். நகரசபைக் குழாய் மூலம் பெறப்படுவது. இந்த நீரைப்பக்தியோடு வாங்கிப் பருகிறது யாத்ரீகர்கள் கூட்டம். மஞ்சள்காமாலை நோய் பல ஊர்களுக்கு வெகுதூரம் பரவக்கூடிய ஆபத்து.

அசோக் சென் திட்டமிடுகிறார். நிலத்திற்கடியில் புதைக்கப்பட்டிருக்கும் நகர சபைக் குடிநீர்க் குழாய்களில் கழிவுநீர் சென்று கலக்கிறது. அதனால் தான் குடிநீரில் நோய்க்கிருமிகள். பாதிக்கப்பட்ட நகர்ப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கும் குழாய்களைத் தோண்டிப்பார்த்து கழிவுநீர் கலக்கவிடாது அவற்றைச் சரியாக சீல் செய்து புதைக்க வேண்டும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முடியும்வரை கோயிலை மூடிவைக்க வேண்டும்.

டாக்டர் அசோக் சென் அவர்களின் தம்பிதான் நகரசபைத் தலைவர். டாக்டர் தரும் இந்த பாதுகாப்புத் திட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் உடையவர் அவர். ஆனால், இந்தச் செய்திகள் கசப்பானவையாக இருக்கின்றன. நோய் ஆபத்தை காரணம் காட்டிக் கோவிலை மூடினால் அது யாத்ரீகர்களின் வருகையையும் அதன் மூலம் ஊருக்குக் கிடைக்கும் வருமானத்தையும் ஒரேயடியாகப் பாதித்துவிடக்கூடு. மேலும் புதைக்கப்பட்ட குடிநீர்க் குழாய்களைத் தோண்டி எடுத்துப் பழுதுபார்ப்பதென்பது நகரசபைக்குப் பெரும் செலவை இழுத்துவிடும் வேலை. நிராகரித்து விடுகிறார் தலைவர்.

ஓர் இடதுசாரிப் பத்திரிக்கையில் குடிநீர்க்கேடு அபாயத்தைப் பற்றி விளக்கமாக எழுதி மக்களுடைய விழிப்புணர்வை தூண்டி விடலாம் என்று முயற்சி செய்கிறார், டாக்டர் நகரசபைத் தலைவரின் தலையீட்டால் பத்திரிக்கை அதிபரும் ஆசிரியரும் பயந்து கட்டுரையை வெளியிட மறுத்து விடுகின்றனர்.

நாடகக்குழு ஒன்றைச் சேர்ந்த சமூகப் பிரக்ஞையுள்ள ஓர் இளைஞன். டாக்டரின் மகளுடைய நண்பன். அவன் தன் நாடக மன்றத்தில் டாக்டருடைய சொற்பொழிவு ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறான். ஊருக்கு நேர்ந்திருக்கும் ஆபத்து பற்றி டாக்டர் பேசப் போகிறார் என்று கூட்டம் கூடியிருக்கிறது. நகர சபைத்தலைவர் நுழைந்து மீண்டும் காரியத்தைக் கெடுக்கிறார். ‘கெட்டிக்காரத்தனமாகக் கூட்டத்திற்குத் தலைவர் ஒருவர் அவசியம் என்று தான் அழைத்துவந்திருக்கும் ஒருவரைக் கூட்டத் தலைவராக்கி விடுகிறார். பின் அந்த தலைவரின் அனுமதியைக் கோரிப்பெற்று டாக்டர் பேசுமுன் நகரசபைத் தலைவர் பேசுகிறார்—மக்களைத் தூண்டிவிடும் வகையில். பேசவிருக்கும் டாக்டருக்குக் கோவில் மதம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இருக்கிறதா ? அவருக்கு மத நம்பிக்கை உண்டா ? என்று கேள்விகளை எழுப்புகிறார். தான் ஓர் இந்து என்று டாக்டர் கூறுகிறார். அப்படியானால் டாக்டர் கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனை முறை கோவிலுக்கு வந்திருக்கிறார் ? தான் ஒரு இந்து என்றாலும் சில விஷயங்களில் நமது நம்பிக்கை வேறுபட்டது என்று டாக்டர் சொல்கிறார். அவர் ஒழுங்காகக் கோவிலுக்குப் போவதில்லை என்பது கூட்டத்துக்குப் புலனாகிறது. அடுத்த அடுக்குக் கேள்விகள் மக்கள் கூட்டத்தை நோக்கி வீசப்படுகின்றன. ஊர்க் கோவிலை அவமதிக்க மக்கள் அனுமதிப்பார்களா ? ஊர்க்கோவிலை மூடி வைக்க வேண்டும் என்று சொன்னால் அது சாத்தியமா ? புனித நீரில் நோய்க்கிருமிகள் இருக்க வாய்ப்புண்டா ? புனித துளசி கலந்த தீர்த்தமாயிற்றே ? நோய்களையெல்லாம் தீர்க்கும் அருமருந்தல்லவா துளசி ?

தங்கள் கோவிலுக்கும் புண்ணியதீர்த்தத்திற்கும் அவமரியாதை வரும் வகையில் டாக்டர் பேசுவதாக இருந்தால் அவர் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை என்று குழப்பமடைந்து கூட்டம் கலைகிறது. ஆத்திரத்துடனும் பதற்றத்துடனும் பரிவுடனும் டாக்டர் விடுக்கும் வேண்டுகோள்களை உதாசீனப்படுத்தி விட்டுப் போய் விடுகின்றார்கள்.

கவலையுடன் இடிந்துபோய் வீட்டிலிருக்கும் டாக்டருக்கு மேலும் துன்பம், அவர் வீட்டைநோக்கி கல்வீசுகிறார்கள் சில விஷமிகள். வீட்டுக்குச் சொந்தக்காரர் தயங்கித் தயங்கிப் பேசி வீட்டைக் காலி பண்ணுமாறு வேண்டிக் கொள்கிறார். இல்லாவிட்டால் ஊரார் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும் என்று கெஞ்சுகிறார். டாக்டர் அவநம்பிக்கைக் கோடிக்குத் தள்ளப்படுகிறார். மதத்தின் பெயராலும் மூட நம்பிக்கையாலும் ஏமாற்றப்பட்டு, நோய் வருமுன் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்யாமல் அழிந்து போகவிருக்கும் இந்த மக்களுக்கு எப்படி அறிவுறுத்துவது ? டாக்டர் தன் முயற்சியை கைவிட வேண்டியதுதானா….. ?

இல்லை. வழி இருக்கிறது. அந்த இடதுசாரிப் பத்திரிக்கையில் இருந்த உதவியாசிரியர்–டாக்டர் எழுதிய கட்டுரையின் அருமையை உணர்ந்தவர்—வருகிறார். வங்காளத்தின் வேறு பத்திரிக்கைகளில் இந்த உண்மைகளை எழுதி வெளியிடுவேன் என்று உறுதி கூறுகிறார். வெளியே, ‘டாக்டர் அசோக் சென் ஜிந்தாபாத் ‘ என்று முழக்கம் கேட்கிறது. என்ன இது ? யார் இவர்கள் ? விழிப்புணர்வு மிக்க நாடகக் குழுவின் முற்போக்கு இளைஞர்கள். டாக்டருக்கு ஆதரவாக அணிதிரட்டுகிறது. இயக்கம் நடத்தப் போகிறார்கள், பூரித்துப் போகிறார் டாக்டர். கண சத்ரு நிறைவு பெறுகிறது.

சதயஜித்ராயின் இறுதிப்படங்களில் ஒன்று கண சத்ரு. அறுபது வயதுக்குமேல் இதயநோயினால் அதிகம் அலுத்துக் கொள்ளக் கூடாத உடல்நிலையில் தான் இன்னும் சொல்ல வேண்டிய செய்தி இருக்கிறது என்னும் தெளிவோடும் பக்குவத்தோடும் செய்திருக்கும் படம். தொண்ணூற்று ஒன்பது சதவீதம் செட்டுக் குள்ளேயே படபிடிப்பு. டாக்டர் வீடு, பத்திரிக்கை அலுவலகம், நாடக மன்றம், கோவில்–இவைதான் களங்கள். வெளியே விரிந்த வானத்தையோ, பசுமையான இயற்கைப் பரப்பையே அநேகமாகப் பார்க்க முடியாது, கண சத்ருவில். ஓய்வாக இருக்க வேண்டிய உடல் நிலையில் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, சகமனிதர்களிடம் ராய் பகிர்ந்து தீர வேண்டிய முக்கியமான விஷயம் இருக்கிறது என்பதுபோல் அமைந்திருக்கும் படம் கணசத்ரு.

அசோக் சென் மனிதநேயத்துடன் பணியாற்றும் ஒரு டாக்டர். ஊரில் எல்லோருடைய மதிப்புக்கும் நன்றியுணர்வுக்கும் பாத்திரமான லட்சிய புருஷர். தம் தொழிலிலும் மருத்துவ விஞ்ஞானத்திலும், தாம் வாழும் சமூகத்திலும் நம்பிக்கை வைத்திருக்கிறார். சமய நம்பிக்கை அவருக்கு இருக்கிறதா என்னும் கேள்விக்கே இடமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் மதத்தின் பேரால் கொள்ளையடிக்கும் சிலருக்கும், மதநம்பிக்கையைத் தங்கள் வாழ்வில் மிகப்பெரிய விஷயமாகக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்தக் கேள்வி இறுதித் தீர்ப்புக்குரிய கேள்வியாகிறது; ஆக்கப்படுகிறது, அரசியல் தந்திரவாதிகளால். (அரசியலுக்குள் நுழைவதை ராய் தவிர்த்து விடுகிறார் எப்போதும்), டாக்டர் தான் ஓர் இந்து என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால் கோவில், சடங்குகள் போன்ற விஷயங்களில் அவருக்கு நம்பிக்கையில்லை. படத்தில் வளர்ந்து உச்சம் அடையும் மோதல் மனிதர்களுக்கிடையிலான மோதல். மதங்களுக்கிடையிலானதோ, ஆத்திக நாத்திக நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதோ அல்ல. உடல் ஆரோக்கியம் பற்றிய பிரச்சினை, நோய் அபாயப் பிரச்சினை. ஆனால் விஷமத்தனமாக மதம் ஒரு வழிமறிப்பதாகப் பயன்படுத்தப்படுகிறது. சிலரால் இப்படிக் குறுக்கே நிறுத்தப்படும் மதத்தைச் சாடுவதில்லை டாக்டர். எய்தவர் இருக்க அம்பை நோவதேன் என்று விடுகிறார். எய்தவர்களைக் குறிவைப்பதிலும் விரோதத்தை வளர்ப்பதிலும் காலத்தை வீணடிக்க முடியாது. மனித உயிர்களை நோய் அபாயத்திலிருந்து காக்க வேண்டும். வழக்கமான பழைய ஏற்பாடுகள் எல்லாம் எதிர்ப்புகளாக மாறி, விரக்தி நிலைக்குத் தள்ளினாலும் ‘இரவின் உச்சம், விடிவின் ஜனனம் ‘ என்பதுபோல் புதிய நம்பிக்கை பளிச்சென்று துளிர்க்கிறது ஒரு மனிதரிடமிருந்து, சில மனிதர்களிடமிருந்து. மனிதன் வாழ்வதற்கு முகாந்தரமிருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் ஆனந்தம் இருக்கிறது. இதுவே கணசத்ரு தரும் நல்ல செய்தி. இதுவே தம் படைப்புகள் வழி ராய் தரும் செய்தி.

மத நம்பிக்கையை ஒரு பிழைப்பாகவோ, அர்த்தமற்ற சடங்காகவோ, மனித மூடத்தனத்தை வளர்த்து லாபம் பெறும் கருவியாகவோ மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ளும் நிலையைக் காட்டியிருக்கிறார் ராய். பதேர்பாஞ்சாலியில் தொடங்கிய படைப்பு வாழ்க்கை நெடுகிலும், பல படங்களில்.

இரண்டு அப்பாவி இந்து பிராமணர்கள். பதேர்பாஞ்சாலியில் ஒருவர், ஆஷானி சங்கேத்தில் ஒருவர். இவர்களுக்குக்கூட இவர்களின் மதநம்பிக்கை துன்பதுயர நேரங்களில் கைகொடுப்பதாகத் தெரியவில்லை.

பதேர்பாஞ்சாலியில் கணவராக வரும் ஹரிஹர், பிராமணர். தன் பிறப்பாலும் மதத்தாலும் வந்த புரோகிதத் தொழில் மூலம் வயிற்றுப்பாட்டுக்குக்கூட வழிசெய்து கொள்ள முடியவில்லை அவருக்கு. அதில் ஈடுபாடும் இல்லை. பண்ணைக் கருவூலத்தில் கணக்கெழுதிச் சம்பாதிக்கிறார். அவருக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம். நிறைய எழுதிக் குவித்த காகிதங்களெல்லாம் பயனற்ற குப்பையாகிப் போனதை விரக்தியோடு அள்ளிக்காட்டுகிறார். சிதைந்த வீட்டைக் காலி பண்ணிக் கொண்டு ஊரை விட்டே போகத் தன் உடமைகளை எடுத்துவைக்கும்போது. ராயின் கடைசிப் பத்து படங்களில் ஒன்றான ஆஷானி சங்கேத் (தூரத்து இடிமுழக்கம்) காட்டும் கதாநாயகன் கங்காசரண் பானர்ஜி. அவனும் இந்துப் பிராமணன். மணம் செய்து கொண்டு, சொந்த ஊரில் வாழமுடியாது, வரட்சி என்று பசுமை நிறைந்த ஒரு கிராமத்துக்குப் பிழைப்பைத் தேடி வந்தவன் ஊருக்குக் கிடைத்த ஒரே பிராமணனாக இருப்பதால் பிழைப்பு நன்றாகவே நடக்கக்கூடிய வாய்ப்பினை ஆரம்பக் காட்சித் தொடர்கள் காட்டுகின்றன. புரோகிதம், ஆசிரியம், அரைகுறையாகத் தெரிந்த மருத்துவம், இவை அந்த இளம் தம்பதிகள் வாழ்வுக்குப் போதிய வருமானம் தரும். ஆனால் ‘எங்கோ நடக்கும் இரண்டாவது உலக யுத்தம் மக்கள் எல்லோருக்கும் பெரிய சோதனை ஆகிவிடுகிறது. 1943இல் வங்காள தேசத்தில் லட்சக்கணக்கில் மனித உயிர்களைப் பட்டினி போட்டுச் சித்ரவதை செய்து அழிக்கிறது. பஞ்சம். இயற்கையில் விளைச்சலுக்கு குறைவேயில்லை. ஆனால் விளைந்ததெல்லாம் யுத்த காலத்தில் எங்கோ காணாமல் போய்விடுகிறது. கஞ்சிக்கில்லாமல் சாகும் மக்கள் கூட்டம், மதம், சடங்கு சம்பிரதாய ஏற்பாடுகள்…. எதையும் நம்பிப் பயனில்லை. பசிக்கும் பஞ்சத்துக்கும் முன் ஆதாரங்களெல்லாம், புனிதங்களெல்லாம் விழுந்துவிடுகின்றன. ஆனால் கங்காசரணும் அவன் மனைவியும் ஒழுக்கத்தையும் மனித நேயத்தையும் உறுதியாகப் பற்றிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறார்கள். அவர்கள் பார்க்கும் திசையில் எட்டுப்பேர் கொண்ட ஏழைக் குடும்பம் அவர்களின் விருந்தோம்பலை நம்பி வருகிறது. இனியும் வயிற்றுக்கு உணவு காண இயலாத அட்ட தரித்திரம். அந்த எட்டுப் பேருடன் தங்கள் இருவரையும் சேர்த்துக் கொண்டு இனி பத்து பேர் உயிர் வாழ்க்கைக்கு வழிதேட வேண்டும் என்று தன் இளம் மனைவியைப் பார்த்து நம்பிக்கை இழக்காமல் பேசுகிறான் கங்காசரண். ‘பத்து அல்ல பதினொன்று ‘ என்று அவனைத் திருத்தி நாணத்தில் தலை குனிகிறாள் அவள். அன்பும் பரிவும் விளங்கும் புன்னகையுடன் அவளைப் பார்க்கிறான் கங்காசரண்.

ஆங்கிலக்கவி மில்டன் தம் இழந்த சொர்க்கம் காவியம் பாடும் பொருள் பற்றிச் சொல்லுகிறான். இவனுக்குமுன் எழுதிய காவியங்களெல்லாம் பலரைக் கொன்று தங்கள் பராக்கிரமத்தை நிலைநாட்டிய வீரத்தைப் பாடின. ‘நான் அதற்கும் மேலான வீரமான, துன்பங்கள் எத்தனை வந்தாலும் நிலைகுலையாமல் பொறுமையுடன் தாங்கி நிற்கும் உறுதியையும் தியாகத்தையும் பாடுகிறேன் ‘ என்று குறிப்பிடுகிறான். சத்ஜித்ராய் காட்டிய பதேர் பாஞ்சாலியில் வரும் தாய் சர்போஜயா, ஆஷானி சங்கேத்தில் கங்காசரண், அவன் மனைவி, கரேபைரேயில் நிகில் போன்ற மனிதர்களைக் காணும்போது மில்டனின் கருத்து, நினைவுக் கதவைத் தட்டுகின்றது. மனித நம்பிக்கையில் வாழ்க்கையின் அருமையை அழகாகக் காட்டியிருக்கிறார் சத்யஜித்ராய் ‘.

**

Series Navigation