சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

சு. பசுபதி, கனடா


“ஏம்பா, ‘மதுரைக் காஞ்சி’ங்கறயே? மதுரை, காஞ்சி ஸ்தலங்களைப் பத்தி ஸ்தல புராணங்கள் சொல்லப் போறயா? உனக்கு ரொம்பப் புண்யம்பா ! ஆகா! மதுரை மீனாக்ஷி ! காஞ்சி காமாக்ஷி! காசி விசாலாக்ஷி! ஏம்பா, மதுரை, காஞ்சி என்ற வரிசையிலே காசியை விட்டுட்டே?”

கேட்டவர் என் நண்பன் கிட்டுவின் தாயார். டொராண்டோவில் வசதியாய் இருக்கும் தன் பையனைப் பார்க்க மதுரையிலிருந்து வந்திருந்தார். மாமிக்குக் கற்பூர மூளை. வட அமெரிக்க அரசியல் அத்துப்படி. இந்தியாவிற்குத் திரும்பும்போது தன் இந்தியக் குடும்பத்தினருக்கு வாங்கவேண்டிய பொருள்களின் பட்டியலும் தலைகீழ்ப் பாடம். நான் , பத்துப்பாட்டிலேயே மிகப் பெரிய பாடலாகிய மதுரைக் காஞ்சியைப் பற்றி கிட்டுவிடம் அன்று விளக்கத் தொடங்கி இருந்தேன். அப்போது, வீட்டில் இருந்த மாமி இந்தக் கேள்வியைக் கேட்டார்.

“மாமி, இந்தக் ‘காஞ்சி’ ஓர் ஊரில்லை. ‘காஞ்சி’ என்பது ஒரு திணை. உலகம், பணம், வாழ்வு … இவை நிரந்தரமல்ல என்று சொல்வது ‘காஞ்சித்’ திணை. மதுரையிலிருந்த நெடுஞ்செழியன் என்ற மன்னனுக்கு, மாங்குடி மருதனார் என்ற புலவர் நிரந்தரமற்ற உலக வாழ்வைப் பற்றிக் கூறிய பாடல் இது. பாட்டில் மொத்தம் 782 அடிகள். அதில் ஏழு வரிகளைத் தான் ‘காஞ்சித் திணை’ என்று சொல்லலாம்! மற்றபடி, மதுரையைப் பற்றி நிறைய சொல்வதால் ‘ கூடற் பாடல்’ என்றும் இதற்குப் பெயர். பத்துப் பாட்டில் ஆறாவது பாட்டு. ” என்றேன்.

” அப்படியா? நானும் அதையே தான் கிட்டுவுக்கும் சொல்லிண்டே இருக்கேன். டாலர் டாலராய்ச் சேர்த்து வைத்து இவன் என்ன சுகங் காணறான் ? நான் மதுரைக்குத் திரும்பிப் போகும் போது அங்கே உள்ள என் பேத்திகள் இரண்டு பேருக்கும் நிறைய தங்க நகைகளைக் கொடுக்கணும்னு பார்க்கிறேன் ; ‘உங்கள் கிட்டு மாமா ஆசையாய் வாங்கி தந்தார்ன்னு அவர்களிடம் பெருமையாய்ச் சொல்லுவேன். வாங்கித் தாடா’ன்னு கேட்டுண்டே இருக்கேன். காதிலேயே போட்டுக்க மாட்டேங்கறானே?”

கிட்டு அசடுவழிய நெளிந்தான். “சரி, சரி, மதுரையைப் பற்றிப் பாடல் என்ன சொல்கிறது ” என்று பேச்சை மாற்றினான்.

நான் தொடர்ந்தேன்.

“பாட்டின் தொடக்கத்தில் அலைகடல் சூழ்ந்த உலகைப் பற்றிப் பாடுகிறார் புலவர். பிறகு தேன்கூடுகள் நிறைந்த மலை உச்சிகளைப் பற்றியும் சொல்கிறார். செல்வம், இளமை, வாழ்வு இவையெல்லாம் அலைகள் போல் நிலைக்காதவை; அதனால் , மலைபோல் நிலைத்திருக்கும் புகழ் தரும் செயல்கள் செய்யவேண்டும் என்று அரசனுக்குக் குறிப்பாக உணர்த்துகிறார் மருதனார். மேலும், மலை உச்சியில் இருக்கும் தேனைப் பெறக் கஷ்டப்பட்டு மலையில் ஏறவேண்டும் ; விடாது முயல வேண்டும். அதே போல்தான் வாழ்விலும் என்பதையும் அங்கே உணர்த்துகிறார் புலவர். ”

“ஆமாண்டா, நீயே கொஞ்சம் சொல்லு என் கிட்டுவிற்கும். வேர்க்கடலையை கொறிச்சுண்டு, அப்பப்போ ‘ஆசமனம்’ பண்ணிண்டு , டீவியில் எப்போப் பார்த்தாலும் ஹாக்கிங்கற பேர்லே நிறைய குண்டங்க சண்டை போட்டுக்கறதைப் பார்க்கிறதிலேயே நேரம் எல்லாம் கழிக்கறானே? ஏதாவது அவன் உபயோகமாய்ப் பண்ண நீயாவது சொல்லேன்! ” கிட்டுவின் நெளியல் : எண் இரண்டு.

” நெடுஞ்செழியனின் முன்னோரின் பெருமையெல்லாம் சொல்லி விட்டு, அவர்கள் இன்று உயிருடன் ‘இல்லை’ என்பதையும் உணர்த்துகிறார் மருதனார். மன்னனின் படைச் சிறப்புப் பற்றிச் சொல்லிவிட்டு, போருக்குத் ‘தினவு’ எடுத்து அலையும் மன்னன் குணத்தைப் பற்றிச் சொல்லி மெல்ல ‘ஊசி’யைச் செருகுகிறார் புலவர். மன்னனுக்கு அவன் வேண்டியவை எல்லாம் கையில் கிடைத்தாலும், பகைவர்மேல் படைஎடுத்துக் கொண்டே இருப்பான்.பனி நிறைந்த மலைகளில் உள்ள காடுகளைக் கடந்து சென்று, பகைவருடைய உள்நாடுகளில் நுழைந்து, அவர்களுடைய அரண்களைக் கைப்பற்றுவான்; அதோடு நிற்கமாட்டான். தான் அழித்த நாடுகளை , முன்பிருந்த சிறப்பைவிட மேன்மையாய் விளங்கச் செய்ய உறுதி கொண்டு, அந்த நாடுகளிலேயே பல ஆண்டுகள் தங்கியிருந்து , அவற்றின் தரத்தை உயர்த்துவான்.

பனிவார் சிமையக் கானம்
அகநாடு புக்குஅவர் அருப்பம் வௌவி
யாண்டுபல கழிய வேண்டு புலத்து இறுத்து
மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்!

[ சிமையம் – மலை : அருப்பம் – அரண் : யாண்டு – ஆண்டுகள் : வேண்டு புலத்து இறுத்து – அழித்த நாடுகளில் தங்கி: மேம்பட மரீஇய – நீ அங்கே தங்கி இருப்பதால் அந்நிலம் முன்பிருந்ததை விட மேம்பாடு அடையும் பொருட்டு அங்கே தங்கியிருக்கும் : வெல்போர்க் குருசில் – வெல்லும் போரினை உடைய தலைவனே! ]

மேலும், அவன் போரெடுத்த நாடு எப்படியெல்லாம் பாழ் ஆகிறது என்பதையும் நயமாய்க் குறிப்பிடுகிறார்.

நாடெனும்பேர் காடுஆக
ஆசேந்தவழி மாசேப்ப
ஊர் இருந்தவழி பாழ்ஆக

போரினால் நாடு காடாகிறது; பசுக்கள் இருந்த இடங்களில் புலிகள் உலாவும். ஊரெல்லாம் பாழாகும்…. என்று விவரிக்கிறார்”

” ஏண்டா, இந்த மருதனாரை பல வருஷங்களுக்கு முன்னாலேயே கூப்பிட்டு உங்கள் ‘பக்கத்தூரு புஷ்கோட்’டிற்கும் கொஞ்சம் உபதேசம் செய்யச் சொல்லி இருக்கணும் போலிருக்கிறதே ”

” பாண்டிய நாட்டில் உள்ள ஐவகை நிலங்களையும் … குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை… அழகாய் வர்ணிக்கிறார் மருதனார். பிறகு மதுரையின் சிறப்புகளைச் சொல்லத் தொடங்குகிறார். நகரத்தில் இருக்கும் நாளங்காடி, அல்லங்காடி என்ற கடைத் தெருக்களை விவரிக்கிறார். பகல் நேரக் கடைகள் இருந்த இடம் நாளங்காடி; இரவு நேரக் கடைகள் இருந்த இடம் அல்லங்காடி. (அல்=இரவு). ”

“ பார்த்தாயாடா? எங்க மதுரையிலேயே 2000 வருஷங்களுக்கு முன்னேயே, நாகரிகமாக, ராத்திரி பஜார் வைச்சிருந்தான் பாரு ! உங்க டொராண்டோ என்னம்மோன்னு பீத்திக்கிறயே?ராமுழுக்க நிம்மதியா நான் ‘ஷாப்’ பண்ற மாதிரி ஒரு கடையும் இல்லையேடா? ஒருவேளை, எனக்குச் சொல்லாமல் மறைச்சு வைச்சிருக்கானோ கிட்டு?” கிட்டுவின் மூன்றாம் நெளியல்.

” நாளங்காடியில் பொருள்களைக் குவிக்கக் குவிக்க , மக்கள் வாங்கிக் கொண்டே போய்க் கொண்டிருப்பார்களாம். கடல்நீரை மேகம் கொள்ளுவதால் கடல் அளவில் குறைவதில்லை; ஆறுகள் சேர்வதால் கடல் மிகுவதும் இல்லை. அதே போல், மதுரைக் கடை வீதிகள் மக்கள் பொருள்களை வாங்குவதால் குறைந்து போனதாகவோ, பலர் விற்கக் கொண்டு வரும் பொருள்களால் மிகுந்து போனதாகவோ தெரியாமல் எப்போதும் போல் பரந்து விளங்கியது.

மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.

அந்த அங்காடியில் எப்படி ஒரு ஆரவாரம் தெரியுமா? கோயில் விழாவில் ஏழாம் நாள் முடிவில் இறைவன் தீர்த்தமாடுவாரே? அப்போது கூடியிருக்கும் மக்கள் எழுப்பும் பேரொலிபோல் நாளங்காடியில் ஒரே சப்தமாம்! ”

” ஆமாம், ‘ஷாப்பிங் மால்’ பக்கத்தில் என்னைக் கிட்டு விட்டால்தானே, ஒங்க ஊரிலும் இதே மாதிரி ‘ஜே ஜே’ன்னு கும்பல் இருக்கான்னு பார்க்கலாம்? இவன் சனிக்கிழமை, சனிக்கிழமை, வீட்டில் ‘தீர்த்தவாரி’ பண்றானே, கண்றாவி, அந்த புட்டி திறக்கும் ஓசைதான் எனக்கு இந்த ‘ட்ரிப்’பிலே கொடுத்து வச்சிருக்கு! ” கிட்டுவின் எரிச்சல், முழித்தல் : நம்பர் இரண்டு.

“மத நல்லிணக்கம் இன்று பெரிதும் அடிபடுகிற பெயர். மருதனார் , ‘மதுரைக் காஞ்சி’யில், அருகருகே இருக்கும் பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி, சமணப் பள்ளி இவற்றை அழகாக விவரிக்கிறார். ‘பல மலைகள் ஒன்றுசேர ‘ நிற்பது போல் இருக்கின்றன என்கிறார். பிறகு, நீதி மன்றம், அமைச்சர்கள் வாழும் தெரு, வணிகர் தெரு இவற்றை வர்ணிக்கிறார்.

வணிகர் தெருவில் ‘ அறநெறி பிழையாது’ ( தர்ம நெறியிலிருந்து தவறாது ), மலை நிலம் கடல் பிற இடங்களிலிருந்து பெற்ற பொருள்களை, மணி, முத்து, பொன் முதலியவற்றை வாங்கிக் கொண்டு, ‘சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நர்’ ( சிறந்த அயல் நாட்டுப் பண்டங்களை விற்கும் வணிகர் ) பலர் இருந்தனர் என்கிறார்.

மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்,
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நர்

“ நல்ல வேளை, ஞாபகப் படுத்தினேப்பா! டொராண்டோவில் நல்ல ‘இத்தாலி’ப் பவழம் கிடைக்குமாமே, என் பெண்ணிற்கு வாங்கிக் கொண்டு போகணும். கிட்டுவை அழைச்சுண்டு போகச் சொல்றேன்” என்றாள் மாமி. கிட்டு என்னைக் கனல் கக்கப் பார்ப்பதை ஓரக் கண்ணால் உணர்ந்த நான் அவன் பக்கமே திரும்பவில்லை.

“ அறக்கூழ்ச் சாலைகளில் , அதாவது ‘அன்ன சத்திரங்களில்’, பலாச் சுளைகளையும், மாம்பழங்களையும், கறிகளையும், கற்கண்டுத் துண்டுகளையும், இறைச்சி கலந்த சோற்றையும், கிழங்குகளையும், இனிய பாற்சோறு, அக்கார அடிசில் முதலியவற்றைக் கொடுப்பார்களாம். ”

“கிட்டு, கேட்டாயோடா? எங்க மதுரைலே எப்படியெல்லாம் அந்த நாளிலே இலவசமாய்க் கொடுத்திருக்கா? இங்கே எப்போது வெளியில் போனாலும், அந்த பாழாப் போன ‘மெக்டோனால்டு’ கடையிலே ஒரு கண்றாவி உருளைக்கிழங்கு உப்பேறி வாங்கித் திணிக்கிறயே, என் கையிலே? சொல்லிக் கொடுடா, இந்தக் கடங்காரங்களுக்கு, எப்படி நாக்குக்கு ருசியாக் கொடுக்கணும்னு? ” கிட்டுவின் எரிச்சல், முழித்தல், நெளிதல் ..இதையெல்லாம் கணக்கிடுவதை நிறுத்திவிட்டேன்.

” அதற்குப் பிறகு, மாங்குடி மருதனார், ஒரு நாள் இரவு முழுதும் மதுரை எப்படி இருக்கும்? எம்மாதிரி சம்பவங்கள் நடக்கும்? என்றெல்லாம் விவரிக்கிறார். ”

” ஏண்டாப்பா, ராஜ்கபூர் ‘ஜாக்தே ரஹோ’ படக் கதையை இங்கிருந்துதான் சுட்டானோ?”

” மாலையில் , குலமகளிர் தங்கள் இல்லங்களில் கணவர்மார்களோடு சேர்ந்து இன்பமாய் இருப்பர். பரத்தையரும் மும்முரமாய் அவர்கள் ‘கருமமே கண்’ ணாகி இருப்பார்களாம். திருமணம் நடத்தும் செல்வர்களின் வீடுகளுக்குச் சென்று, அங்கே விளக்கின் அடியில் நின்றுகொண்டு, கண்டோரை மயக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பார்களாம்.”

“ஏண்டா, கிட்டு, அன்னிக்கு டொராண்டோ ‘டௌன்டௌனு’க்கு நீ கூட்டிண்டு போனபோது, தெருவிளக்கின் அடியே சில ‘லிப்ஸ்டிக் லேடீ’ஸ் குறுக்கும் நெடுக்கும் உலாத்திண்டே இருந்தாளே, பார்த்தேனேடா? அவர்களும் இப்படியோ? ”

“திருமால் பிறந்த ஓணநாள் விழாவில் மறவர்கள் புரியும் சேரிப்போர், கோவிலுக்குச் செல்லும் பெண்டிர், வேலன் வெறியாட்டு, முதல் யாம, இரண்டாம் யாம நிகழ்ச்சிகள், கடைகள் மூடப் படுதல் இவற்றை விவரிக்கிறார். கள்வரையும், அவர்கள் வராது ஊர்க்காவல் செய்யும் காவலர்களையும் மிக அழகாக வர்ணிக்கிறார் . முதலில் கள்வரைப் பற்றிச் சொல்கிறார்.

பேய்களும், துன்புறுத்தும் தெய்வங்களும் திரியும் மூன்றாம் சாமத்தில், பெண்யானையின் கருத்த மேல்தோலைப் போன்ற கரிய இரவில் கள்வர் வருவர். அவர்கள் கையில் கல்லையும், மரத்தையும் துண்டாக்கும் கூரிய வாள் இருக்கும். செருப்பணிந்திருப்பர். தொடையில் உடைவாள். கரிய உடை. சுவரில் ஏற ஒரு நூலேணி.

பிறகு காவலர்களைப் பற்றி வர்ணனை ஆரம்பிக்கிறார். காவலர்கள் தூங்காத கண்ணினர். அஞ்சாத கொள்கை உடையவர்கள். அறிஞர் புகழும் ஆண்மை உள்ளவர்கள். களவு பற்றிய எல்லா நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர்கள். தப்ப முயலும் கள்ளரை அம்புகளால் வீழ்த்துபவர். கடமையில் தவறாமல், யானையைப் பிடிக்கச் செல்லும் புலிபோல் கள்வரைப் பிடிப்பர்.

பிறகு மன்னன் துயில் கொள்ளல், மன்னனின் பள்ளியெழுச்சி, மன்னன் பலருக்கும் பரிசு வழங்கல் இதையெல்லாம் வர்ணித்துவிட்டு, மன்னனுக்கு வாழ்த்துச் சொல்லிப் பாடலை முடிக்கிறார் மருதனார். ” என்று நான் என் விளக்கத்தை முடித்தேன்.

“ரொம்ப நல்லாச் சொன்னேடா! இன்னொரு தடவை வந்து இதே மாதிரி , மதுரையைப் பத்தி இன்னொரு பாடல் சொல்லேன் ” என்று கிட்டுவின் தாயார் எனக்கு மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன். ஏனோ தெரியவில்லை, கிட்டு இன்னும் என்னைக் கூப்பிடவில்லை.

~*~o0O0o~*~

s dot pasupathy at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா