கோயிற் சிலையோ?

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

குரு அரவிந்தன்


கண்களை மெல்லத் திறந்த போது தேவதை போல அவள்தான் எதிரே தரிசனம் தந்தாள். சாட்சாத் அம்மனே கர்ப்பகிரகத்தில் இருந்து இறங்கி முன்னால் உலா வருகிறதோ என்ற நினைப்பில் கூப்பிய கரங்களை ஒரு கணம் எடுக்க மறந்தேன்.
பெண்மையின் இயற்கையான அழகு, நீண்டு விரிந்த கூந்தலின் கலைந்த ஓரங்கள் வெள்ளிச் சருகையாய் மின்னியதில் தெய்வீகமாய் மிளிர்ந்தது. அன்றலர்ந்த ரோஜா போன்ற மஞ்சள் கலந்த சிரித்த முகம். மூக்குத்தி மின்னிய அந்த முகத்தின் நெற்றியில் குங்குமக் கோலம். காலமெல்லாம் அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல ஒரு தெய்வீகத் தோற்றம்!
‘தம்பி ஊருக்குப் புதிதோ?’ வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த அந்த முதியவர் கண்களை இடுக்கி என்னையே பார்த்தபடி கேட்டார். வாடகைக்காரில் இருந்து நான் இறங்கி வந்து, பாதணியை அகற்றிவிட்டு கோயில் வாசலிலே நின்று கும்பிடுவதை அவர் அவதானித்திருக்க வேண்டும்.
‘இல்லை’ என்று தலை அசைத்தபடி அலை பாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து என்னை நானே சுதாரித்துக் கொண்டேன்.
‘யாரென்று தெரியலையே..?’
‘கந்தசாமி மாஸ்டரின் மகன்’ என்றேன்.
‘அது தானே பார்த்தேன், தெரிந்த முகமாய் இருக்கிறதே, அமெரிக்காவிலேயே தங்கி விட்டதாய் அப்பா சொன்ன ஞாபகம’; என்றார்.
அவள் அர்ச்சனைத் தட்டுடன், அன்னநடை நடந்து வாசலில் உள்ள படிக்கட்டுகளுக்கு நொந்துவிடுமோ என்ற பயத்தில் அடிமேல் அடிவைத்து மெதுவாக இறங்கினாள்.
அருகே வந்த அவளைக் கண்ணுக்குள் படம் பிடித்தேன். நெற்றியில் பளீச் சென்ற குங்குமப்பொட்டு. கூந்தலைத் தழுவிய மல்லிகைச் சரத்தின் மல்லிகை வாசம். சேலைக்குள் ஊஞ்சலாடும் தாலி. தாய்மையின் மென்மைப்பொலிவு.
‘ஆமா, கிட்டத்தட்ட இருபத்தியேழு வருடங்களாகி விட்டது.’ என்றேன்.
‘அப்படியா, ராமனின் வனவாசத்தைவிட இது கொஞ்சம் அதிகம்தான்!’
அவள் ‘க்ளுக்’ என்று குலுங்கியது எனக்கு மெதுவாகக் கேட்டது.
சட்டென்று திரும்பினேன், அந்தச் சிரிப்பில் எங்கேயோ எப்போதோ பார்த்த, முகம் ஒன்று சலனமாய்த் தெரிந்தது.
‘மேற்படிப்பிற்காக அமெரிக்கா போனேனா, படித்து முடிந்ததும் அங்கேயே தங்கி விட்டேன். குடும்பம், குழந்தை குட்டியென்று .இப்போது தான் பிறந்து வளர்ந்த ஊர் ஞபகம் வந்தது.’
‘சொந்த பந்தங்களைப் பார்த்து விட்டுப் போக வந்ததாக்கும்’
‘ஓம், அம்மா படுக்கையில் கிடக்கிறா என்று செய்தி வந்தது’
அவள் முழங்காலை மடித்து அடக்கமாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள். முதியவர் திரும்பி அவளைப் பார்த்தார்.
‘தம்பிக்குப் பிரசாதம் கொடம்மா’ என்றார்.
அவள் எழுந்து வந்து இரண்டு கைகளாலும் தட்டை என்னிடம் நீட்டினாள்.
அரசமிலையில் இருந்த வீபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டேன். அவள் அருகே வந்து நின்றபோது எப்போதோ, எங்கேயோ முகர்ந்த நறுமணம் மீண்டும் சுகந்தமாய் சுவாசத்தில் கலந்தது.
‘அதுசரி தம்பி பயணம் வர்றது வீட்டில தெரியுமோ!’
விளையடிக் களைத்து வியர்வைசிந்த ஓடி வந்தான் ஒரு பையன்.
‘என்னம்மா கூப்பிட்டீங்களா?’
‘இல்லையே’ என்றாள் அவள்.
முகத்தில் வழிந்த வியர்வையைக் கைவிரலால் வழித்துக் கொண்டே என்னை வினோதமாய்ப் பார்த்தான்;.
‘உங்க பையனா, என்ன பெயர்?’
‘ராஜா!’ என்றான் பையனே முந்திக் கொண்டு.
‘எத்தனையாம் வகுப்பு படிக்கிறே?’
‘அஞ்சாம் வகுப்பு!’
‘நல்லது, நான் போயிட்டு வர்றேன்!’ பெரியவரைப் பார்த்து பொதுவாகச் சொல்லிக் கொண்டே கிளம்பினேன்.
எங்க வீட்டிலே வரவேற்பு எப்படி இருக்குமோ?
எல்லோர் முகத்திலும் படிப்படியாகக் கேள்விக்குறியும், ஆச்சரியமும் அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியும் தெரிந்தது. படுக்கையில் கிடந்த அம்மாவின் கண்கள் மட்டும் எனக்குப் பின்னால் யாரையோ தேடிவிட்டு ஏமாற்றத்தில் வாடிப்போனது.
நான் கொண்டு வந்த சூட்கேஸைத் திறந்து முதலில் சாக்லெட் எடுத்து எல்லோருக்கும் நீட்டினேன். வாசலில் நிழல் தட்டியது. கோயிலில் கண்ட அதே பையன்.
‘சாவி வாங்கிட்டுப்போக வந்தேன்’ என்றான்.
தங்கை சாவியை எடுத்து அவனிடம் கொடுக்க, நான் கையிலிருந்த சாக்லட்டை அவனிடம் நீட்டினேன்.
‘தாங்யூ’ என்று சொல்லிக் கொண்டே அவன் சாக்லெட்டோடு ஓடி மறைந்தான்.
‘சுட்டிப் பயல் அவன் அப்பாவைப் போலவே இருக்கிறான்’ என்றார் அப்பா.
‘என்னப்பா சொல்றீங்க, யார் அந்தப் பையன்?’
‘தெரியல்லையா?’
‘தெரியல்லையே வரும்போது கோயிலிலே பார்த்தேன்!’
‘வேறு யாருமில்லை, உன்னோட ப்ரெண்ட் சிவாவோட பையன்’
‘சிவாவோட மகனா? அப்போ நான் கோயிலில் பார்த்தது சிவாவோட மனைவியா?’
‘கோயிலிலே அவளைப் பார்த்தியா?’
‘ஆமா!’ என்றேன்
‘அது யாரென்று அடையாளம் தெரிஞ்சுதா?’
‘இல்லையேப்பா! அவளை எங்கேயோ பார்த்த ஞாபகம் மட்டும் இருக்கு’
‘பார்த்த ஞாபகமாவது இருக்கே! அதுதான் சாரு, மறந்திட்டியா?’
‘சாருவா?’ ஒரு நிமிடம் நினைவுகளை மீட்டேன்.
பழைய நினைவுகள் மீண்டும் ஒவ்வொன்றாய்ப் பசுமையாய்ப் பூத்தன.
‘ஓ, மைகாட் அவளா? அவளையா சிவா கல்யாணம் செய்தான்?’
‘ஏன்? உனக்கு ஆச்சரியமாய் இருக்கா? அவளே தான்!’
அப்பா இப்படி எல்லாம் என்னோடு முகம் கொடுத்துப் பேசுவார் என்று நான் எதிர்பார்த்து வரவில்லை. அவருடைய சம்மதம் இல்லாமல் தான் எனது திருமணம் அமெரிக்காவில் நடந்தது. நான் எதிர்பாராத விதமாய் இங்கே மனித மனங்களில் ரொம்ப மாற்றங்கள் நடந்திருக்கின்றன! கடந்தகால அனுபவங்கள் அவர்களை மாற்றி இருக்கலாம்.
என்னால் மறக்க முடியுமா அந்தக் கல்லூரிப் பருவத்து நாட்களை?
நான், சிவா, கண்ணன், நாதன், சூரியா எல்லோரும் பள்ளித் தோழர்கள்.
எங்களைப் பஞ்சபாண்டவர் என்று தான் சொல்வார்கள். சிவாதான் வயதில் கூடியவன். அம்மன் கோயில் கிழக்குத் தெரு மூலையிலே உள்ள அந்தப் பெரிய கருங்கல்லுப் பாறைகள்தான் எங்கள் தங்குமடம். அந்தக் கல்லிலே உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு தினமும் அரட்டை அடிப்போம். அரட்டை என்றால் சும்மா அரட்டையல்ல, ஊர்வம்புதான்!
வெள்ளை நிறச் சீருடை அணிந்து பளீச்சென்று சையிக்கிளில் அவள் போனபோதுதான், அவளை முதன் முதலாகப் பார்த்ததாக ஞாபகம் நிற்கிறது. பெண்களாலும் சையிக்கிள் ஓட்டமுடியும் என்பதைக்கூட நினைத்துப் பார்க்க முடியாத அந்த நாட்களில், அவள் சையிக்கிளில்; போனது இந்தக் குக்கிராமத்தில எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், கிராமத்தில் வசதியுள்ள ஆண்கள் மட்டுமே சையிக்கிள் ஓட்டிய காலமது. ஏனோ அவள் சைக்கிளில் சென்ற அந்தக் காட்சி எங்களுக்கு எரிச்சலைத்தான்; தந்தது. எங்களுக்குப் போட்டியாக ஒரு பெண் சையிக்கிள் ஓட்டுவதா?
அதன்பின் தினமும் சையிக்கிளில் அவள் எங்களைக் கடந்து அந்தத் தெருவால் போகத் தொடங்கினாள். அவளைப் பார்ப்பதற்கென்றே தினமும் தெருவிலே கூட்டம் சேரத்தொடங்கியது. வெகுவிரைவில் கிராமத்து வயசுப் பெண்களுக்கு அவள் ஒரு ஹீரோயின் ஆகிவிட்டாள்!
யார் அந்த தேவதை என்ற கேள்விதான் எங்கள் எல்லோர் மனதிலும் எழுந்தாலும் அந்த வயதிலே வெளிப்படையாக அதைக் காட்டிக் கொள்ள ஆண்மை மறுத்தது. முரண்டு பிடிக்கும் பருவமாகையால் எதையுமே முட்டி மோதிப் பார்ப்பதில்தான் இளமனசு ஆர்வம் காட்டியது.
யாரிவள்? எங்கள் எரிச்சலைக் கொட்டிக் கொண்டு தினமும் இவள் எங்கே போகிறாள்?
மறுநாள், நாதன் அவளைப் பற்றிய முழுவிவரங்களை முன்வைத்தான்.
பெயர் சாருலதா, பக்கத்துக் கிராமம். வயது பதினெட்டோ, பத்தொன்பதோ இருக்கலாம். பக்கத்து நகர மருத்துவமனையில் மருத்துவ தாதியாக சேர்ந்திருக்கிறாள். என்று விளக்கமும் கொடுத்தான் நாதன்.
அவளுடைய நடத்தை சரியில்லையாம்! நர்ஸிங்ஹோமில் எல்லா ஆண்களோடும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசுகிறாளாம்! எங்களுடைய ஆர்வத்திற்குத் தீனி போடுவதுபோல, இப்படி அவளைப் பற்றி தினமும் ஏதாவது புதுப்புதுக் கிசுகிசுக்களையும் சேகரித்துக் கொண்டு வந்தான் நாதன். எனக்கு அந்த வயதில் சிலசமாச்சாரங்கள் புரிவதில்லை. ஏனென்றால் எங்க கூட்டத்தில் நான் தான் வயதில் குறைந்தவன். எதுவுமே தெரியாதவன் என்ற நினைப்பில் என்னை கொஞ்சம் ஒதுக்கித்தான் வைத்திருந்தார்கள்.
‘அப்படின்னா என்ன?’ என்று ஆர்வம் காரணமாய்க் கேட்டு வைத்தேன்.
‘ரியூப்லைட், இது கூடத் தெரியாதா?’ என்றான் நாதன் விளக்கம் தராமலே.
ஏனோ அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் சிவாவிற்கு மட்டும் கோபம் வருவதை நான் அவதானித்தேன். அன்று மாலை வழமை போல அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது அவள் எங்களைக் கடந்து சையிக்கிளில் போனாள்.
‘ஆட்டோ’ என்று சத்தம் போட்டுக் கத்தினான் நாதன். அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு உடனே புரியாவிட்டாலும், நானும் அவனுடன் சேர்ந்து என் பங்கிற்கு உரக்கக் கத்திவைத்தேன்.
அவள் திரும்பிப் பார்த்தாள்.
‘வருமா?’ என்றான் நாதன்.
அவள் முகத்தில் எதிர்பாராத அதிர்ச்சி தெரிந்தது. எதுவுமே சொல்லாமல் தலை குனிநது கொண்டு போய்விட்டாள். அவளை நன்றாக அவமானப்படுத்தி அனுப்பி விட்டதாக நாங்கள் நினைத்து சந்தோஷப்பட்டோம். அழுதிருப்பாளோ?
மறு நாள் வழமையாக வரும் நேரத்தில் அவள் வரவில்லை. சற்று நேரத்தின் பின் சையிக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தாள்.
‘எக்யூஸ்… மீ’ என்றாள்.
‘என்ன?’ என்பது போல நிமிர்ந்து பார்த்தோம்.
நாதன் ஒருகணம் நடுங்கிப் போய்விட்டான். ஏதாவது பிரச்சனைப் படுத்துவாளோ?
‘இஃவ்யூ…டோன் மைண்ட், சையிக்கிள் பம் இருக்குமா?’
அப்பாடி, நாதன் பயந்தது போல பிரச்சனை ஒன்றுமில்லை. உஷாரானோம்!
‘தமிழில் சொன்னால் தான் எங்களுக்குப் புரியும்’ என்றான் கண்ணன்.
‘வந்து, சில்லு காற்றுப் போய்விட்டது அதுத்தான்..!’ தயங்கினாள்.
‘அத்தானோ..?’ சிவாதான் குரலை உயர்த்திக் கேட்டான்.
‘இல்லை வந்து, ஐம் சொறி’ சிவா இப்படிச் சொல்வான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போய் ஒரு கணம் நின்றவள், எதுவும் பேசாது சையிக்கிளைத் தள்ளிக் கொண்டு மீண்டும் நடந்தாள்.
மறுநாள் அந்தப் பக்கம் அவள் வரவேயில்லை. அண்ணன் தம்பி என்று ஆட்சேர்த்துக் கொண்டு வருவாளோ? எதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்.
மறுநாள் பாடசாலையில் தலைமையாசிரியர் எங்களை மட்டும் கூப்பிட்டனுப்பினார். என்னவோ ஏதோ என்று பயந்தபடியே சென்ற எங்களை அவரது அறைக்கு வெளியே வரிசையாக நிற்கவைத்தார். கையிலே இருந்த பிரம்பு பயம் காட்டியது.
‘ஆட்டோவில யாராவது நின்று கொண்டு போவாங்களா?’ என்று கிண்டலாகக் கேட்டார். நாங்க யருமே பதில் சொல்லவில்லை.
ஏதோ புரிந்தது போல அருகே நின்ற நாதன் மெல்ல இடித்தான்.
‘இப்ப நீங்க எல்லோரும் நின்று கொண்டே ஆட்டோவில் போகப்போறீங்க’ என்று சொல்லி எல்லோரையும் அங்கே இருந்த பென்ஞ்சு மேல ஏறி நிற்கச் சொன்னார்.
அந்தப்புரம் கடைக்கண்ணால் எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு போனபோது சட்டையை உரிந்து எடுத்தது போல இருந்தது. இதைவிட இரண்டடி அடிச்சுப்போட்டு விட்டிருந்தால் பரவாயில்லைப்போல இருந்தது.
‘போச்சு, மானம் போச்சு….!’ அம்மா தலையிலே அடித்துக் கொண்டாள்.
அப்பா இருட்டிய பின் தான் வீட்டிற்கு வந்தார். அவரது மௌனம் என்னவோ செய்தது. பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.
‘சாப்பிட்டியா?’ மௌனமாய் இருந்தேன்.
‘என்னாச்சு உனக்கு ஊர் வம்பை ஏன் விலைக்கு வாங்குகிறாய்? நீ படித்து நன்றாக வரவேண்டும் என்று தானே நான் கஷ்டப்படுகிறேன். இங்கே இருந்தால் உருப்படமாட்டாய்.’
குறுக்கும் மறுக்கும் சிந்தனையோடு நடந்தார்.
‘என்ன செலவானாலும் காணி பூமியை விற்று என்றாலும் வெளியே அனுப்பிப் படிக்கவைக்கப் போகிறேன். நீ அங்கே தான் படிப்பைத் தொடரப் போகிறாய், புரியுதா?’ அப்பா முடிவாகச் சொன்னார். சொன்னது மட்டுமல்ல, அதைச் செய்கையிலும் காட்டினார்.
அன்று போனவன்தான், படித்து பட்டம் பெற்று வேலை தேடி குடும்பஸ்தனாகி இன்று தான்; திரும்பி வந்திருக்கிறேன். அதே கோயில், அதே தெரு, அதே படிக்கட்டு, என்று கிராமத்தில் பெரிதாக மாற்றமெதுவும் தெரியவில்லை. ஆனால் காலத்தின் சுவடுகள் மட்டும் முகங்களில் அப்படியே தெரிந்தது.
சாயந்தரம் சிவா வீடு தேடி வந்தான்.
‘ஹாய், சிவா எப்படி இருக்கே?’
‘நல்லாய் இருக்கேன், ராஜா சொன்னான்’ என்றான்.
இருவரும் பழைய கதைகளை அசைபோட்டுக் கொண்டு கிழக்குத் தெருவால் கோயிலை நோக்கி நடந்தோம். சிவா தன் கதையைத் தொடர்ந்தான்,
‘அப்புறம் என்ன? நீ திடீரென அமெரிக்கா போய்விட்டாய். நாங்கள்தான் தனித்துப் போய்விட்டேம். வீட்டிலோ பிரச்சனை. எனக்கோ அவள்மேலே இருந்த கோபம் மட்டும் தீரவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன். ஒரு நாள் வசமாக மாட்டிக் கொண்டாள்.
‘ஏன்டி, என்னை ஏன் இப்படி மாட்டிவிட்டாய்? நாங்கள் என்ன சொல்லி விட்டோம் என்று முறைப்பாடு செய்தாய்?’
அவள் ஏதும் பேசாமல் மௌனமாய் தலை குனிந்து கொண்டு நின்றாள். அவள் கண்களில் மருட்சி தெரிந்தது. அவளது மௌனம் மேலும் எரிச்சலைத் தந்தது. வாயில் வந்தபடி திட்டினேன்.
‘ஏன்டி .உனக்கு வீட்டிலே அடக்கமாய் ஒரு குடும்பப் பெண்ணாய் இருக்கத் தெரியாதா? வேலையாம் வேலை! கண்ட கண்ட ஆண்களோட எல்லாம் பேசிச் சிரித்துக் கொண்டு இப்படி மானம்கெட்டு நடக்க உனக்கு வெட்கமாய் இல்லை?’
இதுவரை பொறுமையாய் இருந்தவள் ஆத்திரத்தில் மௌனம் கலைத்தாள்.
‘இந்தா பாருங்க, நீங்க என்னதான் மனசிலே நினைச்சிட்டு இருக்கிறீங்க? எனக்கு சொந்தம் என்று சொல்லிக்க வயது போன என் அப்பாவைத் தவிர வேறு யாருமில்லை. எங்க அப்பாவை நான் தான் வைத்துக் காப்பாற்றணும். எங்களுக்கும் வயிறு என்று ஒன்றிருக்கே! அதற்காகவாவது நான் வேலைக்குப் போய்த்தான் ஆகணும். ஒரு நோயாளியோடு அன்பாய்ப் பேசிப் பழகவேண்டியது ஒரு தாதியோட கடமை. அதை மற்றவர்கள் தப்பாக நினைத்தால் நான் என்ன செய்யட்டும். நான் எந்தத் தப்புமே செய்யலை, நான் ஏன் பயப்படணும்? யாருக்குப் பயப்படணும்?’
‘ஓ கோ, நீ பயப்பட மாட்டாய், நீ கெட்டது போதாதென்று எங்க ஊரையும் கெடுத்திடாத, இனிமேல் இந்தப் பாதையால நீ போகக் கூடாது. புரிஞ்சுதா?’ மிரட்டிக் கொண்டே, ஆத்திரத்தில் அவளது சையிக்கிளைக் காலால் எட்டி உதைத்தேன்.
அவள் நிமிர்ந்து பார்த்தாள். பார்வையில் சினம் தெரிந்தது.
‘மிஸ்டர் உங்களைப் பார்த்தால் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் போலத்தான் தெரிகிறது. ஏன் இப்படி தெருவிலே நின்று அனியாயமாய் கலாட்டா பண்ணுறீங்க. உங்க அப்பா அம்மா உங்களுக்காக எவ்வளவு கஷ்டப் படுகிறாங்க என்று எப்பவாவது நினைச்சுப் பார்த்திருக்கிறீங்களா? அரும்புமீசை வைச்சுக்கிட்டா மட்டும் போதாது ஒரு ஆம்பிளையாகவும் நடந்து காட்டணும். நீங்க சொன்னது போல எனக்கும் ஒரு நல்ல மனைவியாய், குடும்பப் பெண்ணாய் இருக்க ஆசைதான். யாரையா எங்களைக் கட்டிக்குவான்? இந்த நிமிடமே நான் வேலையை விட்டுர்றேன், என்னைக் கட்டிக்கிறியா? அவள் சென்று நெடுநேரமாகியும் அவள் தந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. என் ஆண்மைக்குச் சவால் விட்டு விட்டாளே. ‘நான் யார் இதை எல்லாம் கேட்பதற்கு’ என்று சொல்லாமற் சொல்லிவிட்டுப் போனாளே. அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது அவள் மேலே என்னை அறியாமலே ஒரு வகை அனுதாபமோ இல்லை ஈர்ப்போ இருந்திருக்கிறது. அது தான் என்னை இப்படி எல்லாம் பேசவைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
அப்புறம் என்ன, அவளது சவாலை ஏற்றுக்கொண்டேன். இங்கேயே நல்ல வேலை ஒன்று தேடிக் கொண்டேன். உன் அப்பாவிடம் தான் தயங்கித் தயங்கி நடந்ததைச் சொன்னேன். அவர் சிரித்து விட்டுச் சொன்னார்,
‘சிவா, நீங்கள் எல்லாம் படித்து விட்டு ஒரு பொறுப்புமில்லாமல் ஊர்சுத்திக் கொண்டு இருந்ததை நினைத்து நான் கவலைப்பட்டிருக்கிறேன். கற்பனை தான் வாழ்க்கை என்று நினைத்து, அந்த வயதிலே இளைஞர்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்வது சகஜம்தான். சீர்சனம் என்று புலம்பும் இன்றைய சமுதாயத்தில் காலத்திற் கேற்ப, ஒரு பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொண்டு நீ எடுத்த இந்த முடிவு ரொம்பவும் வரவேற்கத்தக்கது. உனக்குத் தெரியுமா சிவா, அந்த வீதியிலே இருந்த ஒரு கருங்கல்லைத் தான் இங்கே வந்த சிற்பி தெரிந்தெடுத்து சிலை வடித்தான். தெருவிலே இருந்த அந்தக் கருங்கல்லுத்தான் இன்று கோயிலிலே தெய்வமாகி நிற்கிறது. அந்தத் தெய்வத்தைத்தான்; கையெடுத்துக் கும்பிடுகின்றோம். பெண் என்பவளும் அப்படித் தான். தெருவிலே நின்றால் அவள் எல்லோராலும் விமர்சிக்கப் படுகின்றாள். குடும்பம் என்கிற கோயிலில் குடியிருந்தால் எல்லோராலும் மதிக்கப்படுகின்றாள். உங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.’
அப்பாவா இப்படி வாழ்த்தினார். என்னால் நம்பமுடியாமல் இருந்தது. காலம் மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகின்றது. நான் உணர்ச்சி வசப்பட்டு சிவாவின் கைகளைப் பற்றினேன்.
‘சிவா, நான் வெளிநாட்டில் படித்தாலும் இன்றும் பழமையில் ஊறித்தான் இருக்கிறேன் என்பதை நினைக்க எனக்கே வெட்கமாக இருக்கின்றது. நீயோ இந்தக் கிராமத்தில் இருந்து கொண்டு முற்போக்கான சிந்தனையோடு புதுமைப் புரட்சி செய்திருக்கின்றாய். அதை நினைத்துப் பார்க்க எனக்கே பெருமையாய் இருக்கிறது. உன்னைப் போன்ற உயர்ந்த உள்ளங்கள் தான் இந்த மண்ணிற்குத் தேவை. ஆல்த பெஸ்ட்’
சிவாவின் கைகளைப் பற்றிப் பாராட்டிவிட்டு, நான் மௌனமாய் வீடு நோக்கி நடந்தேன். அந்த நாட்களில் சின்னப்பையன், விவரம் தெரியாதவன் என்று இவர்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தாலும், எனக்கும் அப்போ சாருமேல ஒருவகை ஈர்ப்பு இருந்தது என்பதை நான் கடைசிவரை காட்டிக் கொள்ளவே இல்லை.

Series Navigation

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்