கொடிகள் அறுபடும் காலம்( உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை ‘-நாவல் அறிமுகம்)

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

பாவண்ணன்


மனிதன் ஒரு சமூக விலங்கு என்பது சிறுவயதில் படித்த வரி. மனிதர்கள் அனைவரும் கூட்டமாக வாழத் தெரிந்தவர்கள். கூட்டத்தை நடத்திச் செல்லத் தெரிந்தவர்கள். கூட்டமாக தேடத் தெரிந்தவர்கள். கூட்டமாகச் சேர்ந்து போராடி வெல்லத் தெரிந்தவர்கள். கூட்டமாக அடையத் தெரிந்தவர்கள். இப்படி பல பொருள்களை அந்த வரி தருகின்றது. மனித வாழ்க்கையை நாம் அப்படித்தான் பார்த்துப் பழகியிருக்கிறோம். திடாரென ஒரு குரல் எதிர்முனையிலிருந்து ‘யாரும் யாருடனும் இல்லை ‘ என்று எழும்போது அதற்கான காரணத்தை அறியும் வேகமும் ஆர்வமும் கிளர்ந்தெழுகின்றன. அதற்கான பின்னணிகளையும் தருணங்களையும் நிகழ்வுகளையும் தொகுத்துப் பார்க்கும் ஆர்வம் சகஜமாகவே கிளைத்தெழுகிறது.

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சின்னச்சின்ன குடும்பங்களே பரவிப் பெருகியிருக்கும் இன்றைய சூழலில் கூட்டுக் குடும்பம் என்னும் அமைப்பை இழந்த சொர்க்கமாக நினைப்பவர்களும் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். சுதந்தரத்துக்குப் பிறகு ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்தியமொழிகளில் எழுதப்பட்ட பல படைப்புகள் கூட்டுக்குடும்பம் உருவாக்கிய வேதனைகளையும் கசப்புகளையும் பதிவு செய்திருக்கின்றன. ஒரிய நாவல் ‘மண்பொம்மை ‘ உடனடியாக நினைவுக்கு வரும் சிறந்த எடுத்துக்காட்டு. முப்பது நாற்பதாண்டுகளின் இடைவெளியில் தனிமைப்பட்ட இருப்பின் உச்சத்தை உணர்ந்த மனம் அதன் சாரத்தை அல்லது சாரமின்மையை உணர்ந்து தெளிந்ததன் விளைவாக மீண்டும் மண்பொம்மைக்கான ஆவலை வளர்த்துக்கொண்டிருப்பதற்கான அடையாளங்கள் எங்கெங்கும் காணக் கிடைக்கின்றன.

இச்சூழலில் வெளிவந்திருக்கும் இந்த நாவல் ஒரு கூட்டுக்குடும்பத்தின் ஓட்டைகளையும் கோணல்களையும் எந்தவிதப் புகார்த் தொனியுமின்றி தீட்டிக் காட்டுகிறது. ஆளாளுக்குத் தனித்தனியான நோக்கங்களும் எதிர்பார்ப்புகளும் பாதைகளும் நிறைந்த குடும்பம் ருரமான ஒரு வன்முறைக்களனாக மாறிவிடும் சந்தர்ப்பங்களை மிகையின்றித் தீட்டிக் காட்டுகிறார் உமா மகேஸ்வரி. இல்லற வாழ்வில் இயற்கையாகவும் சகஜமாகவும் அமைய வாய்ப்புள்ள காமம் கூட யாருக்கும் மலரினும் மெல்லிதாக இல்லை. குரங்கு பிடுங்கித் தின்கிறமாதிரிதான் உள்ளது. சிதையத் தொடங்குகிற முதல் கனவாக மாறுகிறது காமம் . இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கனவும் சிதைந்தபடி செல்கிறது. இதனாலேயே குடும்ப உலகில் யாரும் யாருடனும் இல்லாமல் போகிறார்கள் போலும். இதை நம்பகத் தன்மையுடன் தீட்டிக் காட்டுகிறார் உமா மகேஸ்வரி. இதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய பலம். கொந்தளித்துப் பொங்கும் வெவ்வேறு உணர்வு மோதல்களின் எல்லையின் விளிம்பில் கையறு நிலையில் கண்டடையத் தக்க இந்த அம்சத்தை சின்ன ஒரு சித்திரத்தில் காணக்கூடிய ஒன்றாகச் சுருக்கிவிட்டதை பலவீனமாகக் கொள்ளலாம்.

இந்த நாவலில் இடம்பெறும் ஆண்களின் சித்திரங்களையும் பெண்களின் சித்திரங்களையும் வரிசைப்படுத்திப் பார்ப்பதன் மூலம் ஏன் யாரும் யாருடனும் இல்லாமல் போனார்கள் என்பதற்கான ஒரு விடையை வாசகர்கள் கண்டறியும் வாய்ப்புண்டு. முதல் தலைமுறையைச் சேர்ந்த பொன்னையா முதல் அடுத்த தலைமுறையினரில் ஒருவனான நரேன் வரை கதையில் இடம்பெறும் எல்லா ஆண் பாத்திரங்களுக்கும் பணமீட்டல் முக்கியமான ஒரு கடமையாக இருப்பதைக் காணலாம். பொன்னையாவுக்கு மட்டுமே அது கடமையாக மட்டுமல்லாமல் சவாலாகவும் இருக்கிறது. விவசாயத்திலிருந்து விலகி வேறொரு புத்தம்புது துறையில் அடிவைத்து வெற்றியை அடையும் துடிப்பு அவருக்குள் நிறைந்திருக்கிறது. அந்தச் சவாலை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு உழைத்து வெற்றியை ஈட்டுகிறார். அந்த வெற்றியையும் வெற்றியால் ஈட்டிய செல்வத்தையும் அவரால் இன்பமுடன் அனுபவிக்கவும் முடிகிறது. மனைவியை மதிக்கத் தெரிகிறது அவருக்கு. மனைவியின் வார்த் தைக்குக் கட்டுப்பட்டு கால் ஊனமான ஒரு பெண்ணை ஒரு வளர்ப்பு மகளைப்போல ஏற்றுக்கொண்டு வளர்க்கவும் தெரிகிறது. மனைவியின் வழியாகக் கிடைத்துக்கொண்டிருந்த உடலின்பம் குறைந்த சமயத்தில் குற்ற உணர்வின்றி தனக்குப் பிடித்த வேறொரு பெண்ணுடன் ஒரு மனைவியுடன் வாழ்வதைப்போல வாழவும் தெரிகிறது. அவருடைய பிள்ளைகளின் நிலையோ வேறு. அவர்களுக்கு எந்தச் சவாலும் இல்லை. பாதைகள் தீர்மானமானவை. பயணங்கள் திட்டமிடப்பட்டவை. அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் தொடர்ந்து பயணம் செய்தபடி இருப்பதுதான். ஆனாலும் பொன்னையாவைப்போல சந்தோஷமாக அவர்களால் இருக்கமுடியவில்லை. அவர்களுக்குக் காமத்தாலும் இன்பமாக இருக்கத் தெரியவில்லை. செல்வத்தாலும் இன்பமாக இருக்கத் தெரியவில்லை. காமம் என்பது இவர்களுக்கு உடற்கூடலாக வெப்பத்தைத் தணித்துக்கொள்ளும் முயற்சியாக சுருங்கிப் போகிறது. எந்த ஆணுக்கும் மனைவியிடம் தொடர்ந்து நாலு வார்த்தைக்குமேல் பேசத் தெரியவில்லை. ‘வா..வா.. எவ்வளவு நாளாவுது ‘ என்கிற அழைப்பையும் ‘வரிசையா பொட்டப்புள்ளையா பெத்துப் போடறியே ‘ என்கிற சலிப்பையும் தவிர வேறு எந்த வார்த்தைகளும் வெளிப்படுவதில்லை. குற்றுயிரும் குலையுயிருமாக மருத்துவமனையில் கிடந்து உடல்தேறி வீட்டுக்குத் திரும்பிய மனைவியிடம் அவளைப்பற்றியோ அவளுடைய ஆரோக்கியத்தைப்பற்றியோ ஒரு சின்ன விசாரிப்பு கூட இல்லாமல் மோகத்துடன் கூடுவதற்குத் தயாராகிறார்கள். உதிரப்போக்கு நிற்காமல் பதற்றத்துடன் இருக்கும் சூழலிலும் மனைவியிடம் சுகத்தை எதிர்பார்க்கிறார்கள். பிறந்த குழந்தையைத் தொட்டுத் துாக்குவதிலும் கொஞ்சுவதிலும் அவர்களுக்கு எந்த ஈடுபாடுமில்லை. ஆனால் மகள் பிறந்ததுமே திருமணத்துக்கு நுாறு சவரன் சேர்க்கவேண்டுமே என்கிற பதற்றத்துடன் பணம் சேர்க்கிறார்கள். இருபது வயதில் திருமணமாகி இருபத்தைந்து வயதில் மூன்று மகள்களுக்குத் தகப்பனாகிறவனுக்கு ஐம்பது வயது வரைக்கும் அம்மூன்று பிள்ளைகளுக்கும் சேர்த்து முந்நுாறு சவரன் நகைகளுக்கான செல்வத்தைச் சேர்ப்பதே வாழ்க்கைக் குறிக்கோளாகிறது. யாரும் யாருடனும் இல்லாமல் போவதற்கு அவர்களுடைய வாழ்க்கை நோக்கே காரணம். செத்துப்போன பொன்னையாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க வருகிற பெண்ணைப் போன்றவர்களின் அன்புக்குக்கூட அவர்கள் வாழ்வில் இடமின்றிப் போகிறது.

பெண்களின் உலகமோ விசித்திரமானது. பதினேழு வயதில் திருமணம். இருபது இருபத்திரண்டு வயதுக்குள் மூன்று நான்கு பிள்ளைகளுக்குத் தாய். பிறக்கும் பிள்ளை ஆணாக இருந்து தன்னைப் பழியிலிருந்து காப்பாற்ற வேண்டுமே என்கிற எண்ணத்தைத் தவிர பிறந்த பிள்ளையை ஆசையாகக் கொஞ்சவோ சிரிக்கவோ சோறுாட்டவோ அவர்களுக்குத் தெரியவில்லை. பெற்ற குழந்தைகளின் உலகத்துக்குள் அவர்களால் செல்லவே இயலவில்லை. தீராத அவப்பெயரைத் தமக்குத் தேடித்தந்த ஜென்மங்களாக பெற்றெடுத்த பெண்குழந்தைகளைப் பார்க்கிற பார்வை மட்டுமே அவர்களிடம் நிறைந்திருக்கிறது. ஆளுக்கொரு நாளாக சமையல் வேலையைச் செய்து முடித்து துணிதுவைத்து வீடு பெருக்கி கணவனுக்கு சோறு பரிமாறி காப்பி கொடுத்து பகல் துாக்கம் துாங்கியெழுந்து பொழுதைக் கழிக்கிறார்கள். தன் பிள்ளைக்கு கெட்டிப்பால் மற்ற பிள்ளைகளுக்கு தண்ணீர்ப்பால் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் சம்பவத்திலிருந்து பாகப் பிரிவினையின் போது எதைஎதை எப்படி எடுத்துக்கொள்ளலாம் என் ற எண்ணத்தை வெளிப்படுத்தும் சம்பவம் வரை எல்லாமே அவர்களது உள்ளக்கிடக்கையை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அவர்களது எண்ணங்களாலும் எதிர்பார்ப்புகளாலுமே அவர்களுக்கு யாரும் யாருடனும் இல்லாமல் போகிறார்கள்.

அவ்வளவு பெரிய குடும்பத்தில் ஒருவர்மீது ஒருவர் ஆசையோடு இருப்பவர்கள் குணாவும் வினோதினியும். துரதிருஷ்டவசமாக கொழுந்தனும் அண்ணியுமாக வாழ்பவர்கள் அவர்கள். அந்த ரகசிய உறவு அம்பலப்படும்போது அந்த ஒட்டுதலும் நொறுங்கிப் போய்விடுகிறது. பெற்றவர்களால் நுழைய முடியாத குழந்தைகள் உலகில் கால் ஊனமான சுப்பக்கா எளிதில் இடம்பிடித்து உலா வருகிறாள். எதிர்பாராத விதமாக தோட்டக்காரனுடைய காமம் அவளுடைய இளமையைப் பலிவாங்கியதும் அன்பால் நிறைந்த அந்த உலகம் சோப்புநுரையாக உடைந்துபோகிறது.

கதையின் இறுதியில் தரையிலிருந்து கிளைத்து மாடிவரை படர்ந்து நீள்கிற மல்லிகைக்கொடியின் அடித்தண்டை வெட்டிச் சாய்க்கிறான் நரேன். அந்தக்கொடி தன் பங்கு நிலத்தில் முளைத்து தன் சகோதேரனுடைய பங்குக்குரிய பகுதியில் பூப்பதை அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அக்கணத்தில் அறுபடுவது கொடி மட்டுமல்ல, கொடிவீடு என்னும் பெயரைப் பெற்ற அக்குடும்பத்தின் சிதைவையே அக்காட் சி சுட்டிக்காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு மனிதர்கள் ஈரமற்ற நெஞ்சினராக மாறிவிடுகிறார்கள். ஈரமற்றவர்களுடன் யார்தான் இருக்கமுடியும் ?

( யாரும் யாருடனும் இல்லை-உமா மகேஸ்வரி, தமிழினி பதிப்பகம். 342, டி.டி.கே சாலை, சென்னை-14. விலை ரூ130)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்