கேட்டாளே ஒரு கேள்வி

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

இளந்திரையன்


ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலை வேளை. கோடைக் காலச் சூரியனின் வரவு காணும் இடங்களிலெல்லாம் செஞ்சாந்து பூசி கோலங்காட்டிக் கொண்டிருந்தது. நான் படுத்திருந்த படுக்கையறையின் தடித்த

திரைச்சீலைகளுக்குள்ளாலும் உள் நுழைய பகீரதப் பிரயத்தனப் பட்டு தோற்றுக் கொண்டிருந்தன செங்கதிர்கள்.

காலைத் தூக்கத்தின் சுகத்தை இழக்க விரும்பாது கண்களைப் பிரிக்காது படுத்திருந்தேன். பிள்

ளைகள் ஒவ்வொருவராக எழுந்து தங்களின் காலை விளையாட்டை விளையாட ஆரம்பித்தார்கள். வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்த தங்கள் தாயாரிடம் கேள்விகள் கேட்பதும் தங்கள் விளையாட்டைத் தொடர்வதுமாக இருந்தார்கள்.

காலைத் தூக்கத்தை இழக்க விரும்பாத நானோ தூக்கத்தினுள் ஆழ்வதும் விழித்துக் கொள்வதுமான ஒரு

இரண்டுங் கெட்டான் மன நிலையிலிருந்தேன். பிள்ளைகளின் இரைச்சலில் தூக்கம் குழம்பிகொண்டிருந்தாலும் அவர்களை கடிந்து கொண்டு அவர்களின் இனிய காலை பொழுதையும் சந்தோசமான விளையாட்டையும் கலைக்க மனதில்லாது வாளாவிருந்தேன்.

தூக்கத்துக்கும் விழிப்புக்குமான ஊசலாட்டத்தில் அவர்களின் விளையாட்டைக் கவனிப்பதும் மோன வெளியில் மூழ்குவதுமான ஒரு மன நிலையில் நான் இருந்த போதுதான் மகளின் அந்தக் கேள்வி என் செவிப்பறையைத் தாக்கியது.

‘ குழந்தைகள் ஒரு மேதையின் மன நிலையில் பிறக்கிறார்கள் … இருக்கிறார்கள் ‘ என்ற

வார்த்தைகளுக்கு வலு சேர்க்கும் கேள்வியாக அது இருந்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இல்லாவிட்டால் இந்த எட்டு வயதுக் குழந்தையின் மனதில் எப்படி இப்படியொரு கேள்வி எழுந்தது.

‘பரமாத்வாகிய என்னிலிருந்து என் அம்சமாகவே பிறப்பெடுக்கும் உயிர்கள் தேடித் தேடி இறுதியில் என்னையே வந்து சேருகிறார்கள் ‘. என்ற கீதையின் பொருள் சார்ந்த வாக்கியங்களை ஏன் என் நினைவில் தூவி விட்டுப் போக வேண்டும்.

பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கின்ற கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு பால் வீதியின் ஏதோவொரு ஓரத்தில் இருக்கின்ற சிறிய ஒரு நட்சத்திரமான சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் ஒன்பது கோள்களில் மிகவும் சராசரியான சிறிய கோளான இந்தப்

பூமியில் கோடிக்கணக்கான மனித உயிர்களில் ஒன்றாகிய இந்த எட்டு வயதுக் குழந்தையின் மனதில் எழுந்தக் கேள்வி பிரபஞ்சம் பற்றிய விசாரிப்பையும் அதைப் படைத்தவனின் லீலைகளைப் பற்றிய கேள்வியையும் என் மனதில் எழுப்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்.

ஆனாலும் பிரபஞ்சம் பற்றிய ஆச்சரியங்களும் விடுவிக்கப் படாத புதிர்களின் முன்னாலும் மனித

வாழ்வு என்பதும் மனிதர் என்பதும் மிகவும் சாதாரணத்துள் சாதாரணம் என்பது புரியும் பொழுது ஏற்படுவது அசாதாரண மலைப்புத்தான்.

புரிந்து கொள்ளப்படவேண்டிய தெரிந்து கொள்ளப் படவேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கையில் லோகாவாத, லேவாவாதச் சிக்கலுக்குள் தன்னைப் புதைத்து வாழ்வை வீணடிக்கும் மனித வாழ்வு

மிகவும் அற்பமெனவே தோன்றியது.

ஒரு சிறிய சூரியனின் கவர்ச்சியில் தங்களை ஓர் ஒழுங்குக்குள் உட்படுத்தி ஒழுகிக் கொள்ளும் கோள்களும் பலகோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் சிறிய கோள்களான புளுட்டோ, நெப்ரியூன் போன்ற கோள்களே தப்பிச் செல்லவோ தனித்துப் போகவோ முயலாது மந்திரத்துள் கட்டுப் பட்டவை போன்று சூரியனைச் சுற்றி வர உபகோள்களான சந்திரன் போன்றவை இவை எதனையும் சட்டை செய்யாது பூமி போன்ற

கிரகங்களைச் சுற்றி வருவது இன்னும் இன்னும் ஆச்சரியம் சுமக்கும் விடயங்களே.

இது இதனால் இதற்காக என்று காரண காரியங்கள் பகுத்துணரப் படாத எத்தனையோ புதிர்

களின் முன்னால் இந்த எட்டு வயதுக் குழந்தையின் கேள்விக்கு மனித இனம் தரக்கூடிய பதில் தான் என்ன ?

ஒன்றுக்கொன்று எதிரானதும் புதிரானதுமான கவர்ச்சி விசையில் இந்தப் பிரபஞ்சம் கட்டுண்டு

கிடப்பதன் இரகசியம் தான் என்ன ?

ஒன்றிலிருந்து ஒன்று தப்பிப் போக முடியாமலும் ஒன்றோடொன்று மோதிஅழிந்து போகாமலும்

எதிரும் புதிருமான விசைகளில் ஒழுங்கை உருவாக்கி உலவ விட்டவர்கள் யார் ?

சூரியன் ஆண் என்று வைத்துக் கொண்டால் பூமி என்பது பெண்ணா ? … சந்திரன் பெண்ணென்றால் பூமி ? …. எத்தனை விசித்திரமான கேள்விகள்…. விடுவிக்க முடியாப் புதிர்களுடன் முகவரி தேடி அலையும் வினாக்கள்.

தூக்கம் தொலைந்து போன முடிவில்லா விசாரத்தில் என்னை மூழ்க வைத்த பிள்ளைகளோ

தங்கள் விளையாட்டில் மும்முரமாக.

ஒத்த முனகள் ஒன்றையொன்று தள்ள …. ஒவ்வா முனைகளோ ஒன்றையொன்று கவர … கவர்ச்சியே வாழ்வாக , வாழ்க்கையோ வேறுபட்டு பிளவுண்டு கிடக்க …ஒற்றுமையும் வாழ்வாக … வேற்றுமையும்

வாழ்வாக, தன்னைப் பிரிந்து சென்ற ஆத்மாக்களின் தேடலுக்கு ஒரு பிரபஞ்சத்தையே விரித்து வைத்து அதற்குள்

கோடானு கோடி நட்சத்திரங்களையும் கோள்களையும் கொட்டி வைத்து அங்கெல்லாம் உயிர் நட்டு , பசுமை

தீற்றி, பந்தயம் வைத்து, சிந்தனை பூட்டி … சிந்திக்க வைத்து … குழப்பம் வைத்து …

அலகில்லா லீலைகளில் இறங்கி தன்னிலிருந்து பிரிந்து சென்ற ஆத்மாக்களின் தேடலுக்காய் பிரபஞ்சத்தையே படைத்து அவற்றின் மீள் வருகைக்காக காத்திருக்கும் ஒரு ஆச்சரியம் இதுவென்றால்…. அந்த பரமாத்மாவிலிருந்து பிரிந்து சென்ற ஆத்மாக்களில் பேதம் எப்படி இருக்க முடியும் ?

இந்த எட்டு வயதுக் குழந்தையின் மனதில் ஏற்பட்ட கேள்வியும் இதுதான். ‘ அம்மா என்னையும் தங்காவையும் girls எண்டும் தம்பியை boy எண்டும் எப்படி சொல்லுவியள் ‘

எப்படிச் சொல்லலாம் ?….இந்தக் கேள்வியும் விடை காணாப் புதிராக இன்னும் முகவரி தேடியபடி.

sathya@rogers.com

Series Navigation