கு. அழகிரிசாமி

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

வெங்கட் சாமிநாதன்


கு.அழகிரிசாமி (1923-1970) என்றொரு தமிழ் எழுத்தாளர் இருந்தார். அந்தக் காலத்தில் சிறுகதைகள் எழுதியவராக அறியப்பட்டார். அவரைப் பற்றி நம்மில் சிலருக்கு நினைவு இருக்கலாம். இளைய தலைமுறை அவர் பெயரைக் கேள்வி கூட பட்டிருக்க மாட்டார்கள். 1950 களின் ஆரம்ப வருடங்களில் நான் ஒரிஸ்ஸா மாநிலத்தின் புர்லா என்ற அணைகட்டு முகாமில் இருந்த போது இரண்டு புத்தகங்கள் சக்தி காரியாலயத்தார் வெளியிட்டவை, அந்தக் காலத்துக்கு மிக அழகாக, ஆசையுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு புத்தகங்கள் வெளிவந்தன. ரகுநாதன் கதைகள், அழகிரிசாமி கதைகள் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். அப்போது அழகிரிசாமி அப்படி ஒன்றும் பிரபலமான எழுத்தாளர் இல்லை தான். முப்பது வயதில் அதிகம் எழுதாத, அதிகம் தெரியவராத ஒரு எழுத்தாளருக்கு அப்படி ஒரு சிறப்பான வரவேற்பு நம் வெளியீட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது பற்றி இன்று யோசிக்கும்போது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது தான். அவ்வளவு அழகாக செய்நேர்த்தியுடன் அக்காலத்தில் சாதாரணமாக யாருக்கும் பிரசுரம் கிடைத்ததில்லை என்று தான் நினைக்கிறேன். அதற்கு சில வருடங்களுக்குள் கு. அழகிரிசாமி பற்றி க.நா.சு. பேச ஆரம்பித்து விட்டார். அழகிரிசாமியின் ‘திரிவேணி’, ‘ராஜா வந்தான்’ கதைகளைப் பற்றி அவர் சிறப்பித்துப் பேசியிருக்கிறார். அதிகம் அறியப்படாத, பேசப்படாதவர்களைப் பற்றிப் பேசி ஒரு சிறிய வட்டத்திற்குள்ளாவது சிறப்பாக எழுதுகிறவர்கள் என்று தாம் கருதுகிறவர்களைப் பற்றி கவனத்தைத் திருப்பச் செய்திருக்கிறார். ஆனால், க.நா.சு வேகூட யார் என்று நினைவூட்ட வேண்டிய காலம் வந்துள்ளது.

தான் மறந்துவிட்ட மறைந்த பெரியவர்களுக்கு சிலை எழுப்பி ஆண்டுக்கு ஒரு முறை மாலை சார்த்தி சொற்பொழிவாற்றி பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துத் தலைப்பை உறுதிப் படுத்திக்கொள்ளும் தர்மத்தின் வழி என்று சொல்லத்தான் தோன்றுகிறது. ஆனாலும், சாகித்திய அகாடமியின் பதிப்புகள், கு.அழகிரிசாமி கதைத் தொகுப்பு ஒன்றும் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் கு.அழகிரிசாமி பற்றி ஒரு சிறிய புத்தகமும் வெளிவந்துள்ளது, அவரது இளமைக்கால நண்பர் கி.ராஜநாராயணன் சாகித்திய அகாடமியின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்த காரணத்தாலும் இருக்கலாம். எத்தனையோ பேர் என்னென்னவோ தமக்குச் செய்து கொள்கிறார்கள். ராஜநாராயணண் தம் நண்பரை நினைவு கொண்டு செய்த காரியம் நட்புக்கும் இலக்கியத்திற்கும் செய்த சேவை என்று சொல்லவேண்டும்.

கு.அழகிரிசாமி சிறு கதை எழுதியவராகவே அறியப்பட்டார். மலேயாவுக்கு அவர் சென்று தமிழ் முரசு ஆசிரியராக பணிபுரிந்த காலம் அவர் அங்கு அழைக்கப்பட்டதும், அறியப்பட்டதும் சிறு கதைக் காரராகத்தான். கு.அழகிரிசாமிக்கு இடைக்கால பிரபந்தங்களிலும் கம்பனிலும் இருந்த ஈடுபாடு க.நா.சு வுக்கு தெரியும் அந்த ஈடுபாட்டுக்கும் க.நா.சு.விடம் நிறைந்த மரியாதை இருந்தது. அது பற்றி அவர் எழுதியுமிருக்கிறார். க.நா.சு. பெயரையே நான் திரும்பத் திரும்பச் சொல்லக் காரணம், கு.அழகிரிசாமி பெயரை அவரைத் தவிர அவர் அளவுக்குப் பிரஸ்தாபித்து பேசியவர் வேறு யாரும் எனக்குத் தெரியவில்லை.

கு.அழகிரிசாமி பற்றி சாகித்ய அகாடமி பிரசுரத்திற்காக எழுதியிருப்பவர் வெளி. ரங்கராஜன். நாடகங்களில் அதிக ஈர்ப்புக் கொண்டவர். வெளி என்ற ஒரு பத்திரிகையை நாடகத்திற்கென்றே நடத்தியவர். சாகித்திய அகாடமியிடமிருந்து இம்மாதிரியான வாய்ப்புக்களைப் பெற்று எழுதியுள்ளவர்கள் புத்தகங்களைப் பார்க்கும் போது பொதுப் பணித்துறையிடமிருந்து சாலை போடும் குத்தகை பெற்றது போன்ற சமாசாரமாகத் தான் இதையும் பார்க்கத் தோன்றும். அப்படி நினைபெழுந்தால் குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால், ரங்கராஜனின் இப்புத்தகம் விதி விலக்கானது. தனக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கு நியாயம் செய்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். இப்படிப்பட்ட விதி விலக்குகள் தான் நடைமுறைக்கு சாட்சியம் சொல்கின்றன.

பெரும்பாலும் அக்காலத்தில் கூட சிறு கதைக்காராக மட்டுமே தெரிய வந்த கு.அழகிரிசாமியின் மற்ற பரிமாணங்களைப் பற்றியும் ரங்க ராஜன் நிறைந்த ஈடுபாட்டுடன் எழுதியிருக்கிறார். அழகிரிசாமியின் ஆளுமையின் முழுமை நம்மை அழகிரிசாமியை வியப்புடன் எத்தகைய உயர்ந்த மனிதர் தன் குறுக்கிய கால வாழ்க்கையை எவ்வளவு இடர்பாடுகளிடையேயும் எவ்வளவு அழகும் அன்பும் துலங்க வாழ்ந்துள்ளார் என்று நினைக்க வைத்து விடுகிறது. இலக்கிய உலகில் உறவு கொண்டவர்களோடும், நண்பர்களோடும், இவற்றுக்கெல்லாம் வெளியே எதிர்ப்பட்ட எதிர்படாது தம் வழிச் சென்றவர்களோடும் சரி எத்துணை ஆதரவோடும் அன்புணர்ச்சியோடும் நெருங்கு உணர்ந்து வாழ்ந்துள்ளார் என்பது சாதாரணமாக எழுத்தாளர் கலைஞர் பட்டயம் சுற்றிக்கொண்டு நம்மைச் சுற்றியுள்ளோரிடம் இன்று நாம் காணமுடியாத குணங்கள். இவையெல்லாம் அழகிரிசாமியின் தனித்வ குணங்கள் என்ற நிச்சயத்தோடு அன்றைய கால கட்ட சூழலையும் ஒரு வேளை நாம் காரணம் காட்டலாம். ஒரு வேளை தான்.

அவர் எழுதும் கதைகளும் அப்படி ஒன்றும் லக்ஷக்கணக்கில் இல்லை, ஆயிரக் கணக்கில் கூட வாசக கூட்டத்தைச் சொக்கி மயங்க வைக்கும் குணம் எதுவும் கொண்டதில்லை. வெகு சாதாரணம் என்று வாசகர்கள் சொல்லக்கூடும் கதைகள் தான். ஏது சம்பவங்கள், உணர்ச்சி மிகும் கட்டங்கள், அலங்கார நடைகள், கவர்ச்சிமிக்க வர்ணணைகள் இப்படியான மசாலா எதுவும் அற்றது. அவர் சொன்ன கதையைத் திருபச் சொல்வது கூட கஷ்டம். மொத்தத்தில் உப்புச் சப்பற்ற என்று தான் சொல்லக் கூடும். எம்.டி. ராம நாதனின் அடித் தொண்டை கரகரப்பை அவர் குரலின் மலைப்பாம்பு ஊர்தலைக் கேட்க எத்தனை பேருக்குப் பிடிக்கும்? இப்படியெல்லாம் பட்டாசு வெடிகளோ, பட்டாடை பளபளப்புகளோ, அவரிடம் இருந்ததில்லை. வெகு சாதாரண மனச் சலங்களை, சத்தம் எழுப்பாது, வெகு சாதாரண வார்த்தைகளில் எழுப்பி மனத்தில் லேசான அதிர்வுகளை எழுப்பி விடுவார். அதிர்வுகள் நம் மனத்தில் தான் மெல்ல மெல்ல எழும்பித் தளும்புமே தவிர அவர் எழுத்தில் அவை மெல்லிய அலைகளாகத்தான் இருக்கும். எப்படித் தான் எழுதினாரோ என்று இருக்கும். மற்றவர் கைகளில் சப்பென்று போய்விடக்கூடியவை அவர் எழுத்தில் வாசிப்பவர் மனதில் கரைசலைக் கிளப்பிவிடும்.

கதைகள் என அவர் அதிகம் எழுதியவருமில்லை. எழுதும் வாய்ப்புக்களும் மன நிலையும் அவருக்கு இருந்ததில்லை. பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தால் என்ன நடக்கும்? என்ன சாத்திய மாகும்? சக்தி, பிரசண்ட விகடன் போன்ற பத்திரிகைகளில் இருந்த போது கட்டுரைகள் எழுதியது தான் அதிகம். நிறையவே எழுதியிருக்கிறார் என்று இப்போது தெரிகிறது. அவை கவனிக்கப்படவில்லை என்பதும் தெரிகிறது. அதிலும் அழகிரிசாமி தன் ஆளுமையை நன்கு பதித்துள்ளார் என்பதும் தெரிகிறது. அவற்றிலிருந்து மாதிரிக்கு ஒன்றை சற்று விரிவாகவே தரவேண்டும்.

சென்னையில் காலை நேரத்தில் கேட்கு இரண்டு குரல்களைப் பற்றி எழுதுகிறார். ஒன்று மொக்கு மாவு விற்கும் ஒரு பெண். இரண்டு முள்ளங்கி விற்கும் இரண்டு சிறுவர்கள்: அவரே சொல்லட்டும்.

“ஏக காலத்தில் ‘முள்ளங்கி, முள்ளங்கி’ என்று கூவுவது காலைக் காற்றில் கலந்து சிறிது தூரம் பிரயாணம் செய்து, நான் குடியிருந்த வீட்டின் மாடியில் ஏறி, ஜன்னல் வழியாக ஏதோ தெய்வ சுரங்களை மிழற்றிக்கொண்டும் என் அறைக்கு வரும். மற்றொரு குரல் தெய்வக் குரலே தான். ..இந்தப் பெண் மொக்கு மாவு என்று கூவும்போது அந்தச் சொல்லில் ஒரு எழுத்துக்கும் மற்றொரு எழுத்துக்கும் இடையில் எத்தனையோ அழகான இனிய அசைவுகள். விம்மியும் மெலிந்தும் ஒலி வெளிப்படும்போது எத்தனையோ நெளிவுகள், அதை விவரித்து புரிய வைக்கமுடியாது. எந்த சங்கீத வித்வானாலும் அது போல கூவிக் காட்ட முடியாது……..ஏதோ ஒரு பறவை தன் மழலை முற்றாத குரலில் தாயைப் பார்த்துக் கூவுவது போல இவள் குரல் கேட்கும்……இவளை வெகு நாட்கள் வரை நான் பார்க்கவில்லை. ஒரு நாள் அதிகாலையில் எழுந்து இவள் வருகைக்காக நான் தெருவோரத்தில் வந்து நின்றுகொண்டேன். …அவளும் வழக்கம் போல வந்தாள். சுமார் 25 வயதுடைய பெண். அழுக்கு புடவை. சிக்கு விழுந்த கூந்தல். மொக்கு மாவைத் துளாவியதால் வெள்ளைப் பொடி அப்பிய விரல்கள். குரலுக்கேற்ற அழகியல்ல அவள். அத்துடன் அருகில் நின்று கேட்கும்போது, அந்த குரலில் இருந்த சுகம் முக்கால் வாசி மறைந்தும் விட்டது. அந்தக் குரல் காற்றோடு கலந்து, காற்றோடு அசைந்து, எங்கெங்கோ முட்டி, எத்தனையோ கரகரப்புகளை உதறிவிட்டு, அனேக எதிரொலிகளைப் பின்னணி இசைகளாக ஏற்றுக் கொண்டு என் அறையில் புகும்போது தான் இனிமையாக இருந்தது. காற்றில் கலந்த ஒலியின் மகிமை இது.

இப்படி நீள்கிறது அந்தக் கட்டுரை. ஓசைகளையும் சங்கீதம் பற்றியும் கவிதை பற்றியும் எழுதும் போது, வார்த்தைகள் குழைந்து குழைந்து வடிந்தோடி வருகிறது அவர் பேனாவிலிருந்து என்று தான் தோன்றுகிறது. மேலே நான் முழுவதையும் கொடுக்கவில்லை. முன்னும் பின்னும் மட்டுமல்ல, இடையிலும் வெட்டியிருக்கிறேன். அழகிரிசாமியின் கட்டுரைகள் அத்தனையும் நமக்குக் கிடைக்கச் செய்யவேண்டும்.
சங்கீதம் பற்றிய அவர் உணர்வுகள் அவராகவே கேட்டுக் கேட்டு தன்க்குள் பக்குவப் படுத்திக்கொண்டவை. அது அவரதே. இதில் அவருக்கேற்ற சகா ராஜநாராயணன். இன்னொன்று சகாயம் பக்கத்திலேயே விளாத்திகுளம் சுவாமிகளின் காருகுருச்சி அருணாசலத்தின் ஸ்பிரசன்னங்கள். ஒரு இடத்தில் அவர் மிக காரசாரமாக சங்கீத பண்டித உலகம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டிருப்பதை மறுக்கிறார். மேளகர்த்தா ராகங்கள் 32 தான். அதற்கான தன் வாதங்களையும் வைக்கிறார். “காந்தாரத்துக்கு சதுஸ்ருதி ரிஷபத்தையும், நிஷாதத்துக்கு சதுஸ்ருதி தைவதத்தையும் சேர்த்துக்கொண்டு கனகாங்கி என்று ஒரு ராகத்தை உண்டாக்கினார். ரிஷபம் எப்படி காந்தாரம் ஆகும்?” என்று கேட்கிறார். மற்றவர்களைப் போல இதில் ஜாதி புகுவதில்லை. புகுவது வாதம்.

இப்படி தான் ரசனையும், தன் அனுபவமும் தான் வழிகாட்டலாகக் கொண்டு பல கேள்விகளை, சமூகம் ஏற்றுக் கொள்ளாத கேள்விகளைக் கேட்கிறார். காரைக்கால் அம்மையாரையும் திருவாசகத்தையும் கவிதையாக ஏற்றுக்கொள்ளும் அவர் பெரிய புராணத்தையும் திருவிளையாடற்புராணத்தையும் ஏற்பதில்லை. கம்ப ராமாயணத்தை கவிதையாக ஏற்கும் அவர் மனதுக்கு நம்மாழ்வார் பாசுரங்கள் கவிதையாகப் படுவதில்லை. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துக்கு முறையான பதிப்பு கொணர்வதில் மனம் செல்கிறது அவருக்கு. தனிப்பாடல்களில் அவருக்குப் பிடித்தவற்றைத் தொகுக்கிறார். அழிந்து வரும் பதங்களைத் தேடி அலைகிறார். தஞ்சையைச் சேர்ந்த தாசி ஒருவரிடமிருந்து பழம் பரதப் பதங்களைச் சேர்த்து புதுமைப் பித்தனுக்கு அனுப்புகிறார். கீர்த்தனங்களை விட பதங்களில் ராகத்தின் பாவங்கள் தோய்ந்திருக்கப் பார்க்க முடிகிறது என்கிறார். இப்படி அவர் தனக்கு எனச் சேர்த்துக்கொண்ட ரசனையும் பார்வையும் அவரதே. அவற்றில் அனேகம் வழமைக்கு மாறானவை. Unorthodox and unconventional.

ராஜநாரயணனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் அவர் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயுள்ளன. எதிர்கால பிரசுரம் கருதி எழுதும் முன்னதாகவே மனத்துக்குள் வெட்டி, பட்டி வைத்து தைத்து ஜாக்கிரதையாக தயாரிக்கப் பட்ட அலங்காரங்கள் அல்ல அவை. தான் விரும்பும் தோற்றத்தை தரவல்லதாக அல்ல, உண்மையான அழகிரிசாமியின் மனக்குரலைப் பதிவு செய்தவை அவை. அவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் ஏமாற்றங்களையும், போராட்டங்களையும் பற்றி நாம் அறிவது அவர் தம் நண்பர்களுக்கு முக்கியமாக ராஜநாராயணனுக்கு எழுதியுள்ள கடிதங்களிலிருந்து தான். வேறு எங்கும் அவர் சொல்லிக்கொள்வதில்லை. அவரை அறிந்தவர்கள் அவர் கஷ்டங்களை அறிந்தவர்கள் இல்லை. அவர் கதைகள், கட்டுரைகள் அதைச் சொன்னதில்லை. எவ்வளவுதான் கஷ்டங்கள் அவரை வருத்தினாலும், மகிழ்ச்சியாகவே, அவர் தன்னைக் காட்டிக் கொண்டார். அவ்வளவுக்கிடையிலும் அவர் தன் ரசனைக்கேற்ப வாழ்ந்து கொள்ள முடிந்திருக்கிறது. அவரது ரசனைக்கு “தூங்கு மூஞ்சி மாமா” என்று எழுப்பும் குழந்தைகள் இருந்தால் போதும். “மொக்கு மாவு” என்று கூவும் அழகே இல்லாத ஒரு அழுக்குப் புடைவைப் பெண்ணின் தெருக் கூவல் முட்டி மோதி அவர் அறைக்கு வரும்போது அது உதய கன்னியின் கீதமாக மாறிவிடும். கிட்டப்பாவின் எவரனி ஆயிரம் தடவை கேட்டாலும் அலுப்பதில்லை. பன்னிரண்டு மைல் நடந்து விடிய விடிய ராஜரத்தினத்தின் தோடியும், திருவீழி மிழலையின் ‘ஸ்வர ராக ஸ¤தா” கேட்க இருக்கும் போது எத்தனை வருத்தும் வாழ்க்கையும் இனிமையாகி விடுகிறது. கொஞ்சம் சம்பளம் கிடைத்தாலும் போதும், தேவியும் டி.கே.சி. யும் இருக்கும் போது அவர்கள் கவிதை பற்றி அளவளாவ இருக்கும் போது என்று எண்ணத் தோன்றுகிறது. முக்கூடற்பள்ளு வைத் தேர்ந்தெடுப்பவருக்கும் விறலிவிடு தூதுவும் விலக்கல்ல. ஆனந்த குமாரசுவாமியும் அன்னி பெஸண்ட் அம்மையாரும் விலக்கல்ல.

ரசனையும் இன்பமும் வசதிகளினால் வருவதல்ல. அவரது கதைகள், கட்டுரைகள், கடிதங்கள், அவர் தேர்வு செய்து கொண்ட இடைக்கால பிரபந்த இலக்கியங்கள், சங்கீதம் எல்லாம் சேர்ந்து தான் அழகிரிசாமி. எளிமையிலும் வாழ்வை ரசித்து மகிழும் ஆளுமை அவரது.கு. அழகிரிசாமி (வெளி. ரங்கராஜன்) சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443 அண்ணா சாலை, சென்னை-18:123 பக்கங்கள் விலை ரூ 25.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

1 Comment

Comments are closed.