குறுநாவல்:சேர்ந்து வாழலாம், வா! – 1

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

ரெ.கார்த்திகேசு


ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் வாகனங்கள் நகரவில்லை. ஆனந்தன் ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். பினாங்குப் பாலத்தை இணைக்கும் கடற்கரை விரைவுச்சாலை திறந்தவுடன் பினாங்கு வடகிழக்கிலிருந்து நகருக்குள் நுழையும் மற்ற சாலைகளில் நெருக்கடிகள் குறைந்து விடும் என்றுதான் சொல்லியிருந்தார்கள். திறந்தவுடன் கொஞ்சம் குறைந்தது போலத்தான் தெரிந்தது. ஆனால் இப்போது மீண்டும் ஊர ஆரம்பித்துவிட்டது; குறிப்பாக இப்படி வேலைக்குச் செல்லும் காலை வேளைகளில் நெரிசல் ரொம்ப மோசம்.

8.30-க்குக்கு நீதிமன்றத்தில் இருக்க வேண்டும். மணி இப்போது எட்டுதான். இந்த நெரிசல் சந்திப்பைத் தாண்டிவிட்டால் ஜாலான் நெகிரியிலிருந்து வெளியேறி மெக்கலிஸ்டர் சாலை வழியாக விரைந்து போய் 8.20 போல் நீதிமன்ற வளாகத்தை அடைந்து விடலாம். எப்படியும் உமா இன்னேரம் போயிருப்பாள். எல்லாக் கோப்புகளையும் தொகுத்து வைத்திருப்பாள். வழக்குக்கான நேரம் வந்து விட்டாலும் நீதிபதியிடம் சாமர்த்தியமாகப் பேசி ஒத்திவைக்க அவளால் முடியும். ஒழுங்கும் கட்டுப்பாடும் செயல் திட்பமும் உள்ளவள். அழகி.

வானொலி ஆறிலிருந்து 60-களில் வந்த பாடல்களை யாரோ ஒரு இளம் அறிவிப்பாளர் நல்ல தமிழில் அமைதியாக அறிவித்துப் போட்டுக் கொண்டிருந்தார். “யார் யார் யார் இவள் யாரோ…. ஊர் பேர்தான் தெரியாதோ….சலவைக்கல்லே சிலையாக….”. சுசிலாவின், (பழைய) சீனிவாசின் குரல்கள் சுகமாக இருந்தன. உமா நினைவுக்கு வந்து பாடலை இன்னும் அர்த்தமுள்ளதாக்கினாள்.

சாலையில் நெருக்கடி இருந்தாலும் மனம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. பாட்டும் உமாவும் மட்டும் காரணங்களல்ல. இன்றைக்கு வீட்டில் காலைப் பசியாறலே ரொம்ப சுகமாக இருந்தது. அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று கேள்விப்பட்டு அண்ணன் அருணன் மூன்று நாள் லீவு எடுத்துக்கொண்டு தன் இளம் மனைவியுடனும் இரண்டு வயதுக் குழந்தையுடனும் கே.எல்.லிலிருந்து தன் காரில் வந்து விட்டான். பிள்ளையையும் பேரக் குழந்தையையும் கண்ட உற்சாகத்தில் அம்மாவுக்குக் காய்ச்சல் போன இடம் தெரியவில்லை. எப்போதும் ரொட்டியும் மார்ஜரினும் ஜேமும் பசியாறக் கொடுப்பவர் நேற்றிரவு மாவு ஊறவைத்து கிரைண்டரில் அரைக்காமல் இந்தோனேசிய வேலைக்காரப் பெண்ணிடம் கொடுத்து ஆட்டுரலில் போட்டு அரைத்து, இன்று காலை தோசை வார்த்து சட்டினியுடன் சுடச்சுடப் பரிமாறினார். எல்லாரும் நாக்கைச் சப்புக் கொட்டிச் சாப்பிட்டதை விட அண்ணனின் 2 வயது மகன் வியாசன் அவர்களோடு உயரமான குழந்தை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தோசைத் துண்டுகளை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு ஒன்றைப் பிய்த்து வாயிலும் ஒன்றை பிய்த்துக் கீழே சுற்றிக் கொண்டிருந்த கிழப் பூனைக்கும் எறிந்து ஆனந்தமாகத் துள்ளிக் கொண்டிருந்தது பரவசமாக இருந்தது.

ஆபிசுக்குப் புறப்படும்போது வியாசனைக் கொஞ்சப் போக அம்மா சொன்னார்: “வியாஸ், சித்தப்பா கிட்ட சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு தங்கச்சிப் பாப்பா பெத்துக் குடுக்கச் சொல்லு!” என்றார். அம்மா விடாமல் தமிழ்நாட்டிலிருந்து வரும் தொலைக் காட்சித் தொடர்களைப் பார்த்துக் கெட்டுவிட்டார் என்று ஆனந்தன் மகிழ்ச்சியோடு நினைத்துக் கொண்டான்.

வியாசன் “சித்தப்பா, பாப்பா” என்று தொடர்ந்து தாளம் போட்டான்.

நினைக்கும்போது ஆனந்தனுக்கு முகத்தில் புன்னகை மலர்ந்தது. மகிழ்ச்சியான குடும்பம்தான். எல்லாம் அம்மாவின் கைவண்ணத்தால் ஆனவை. அப்பா மதிய வயதில் இறந்த பின்னர் அம்மா ஒண்டியாக இரண்டு பையன்களை வளர்த்தெடுத்தார். அதிலும் தேசிய இடைநிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருந்து தன் உழைப்பினாலும் திறமையினாலும் தலைமை ஆசிரியை ஆகி ஓய்வு பெற்றவர். உத்தியோகம் குடும்பம் இரண்டையும் ரொம்ப நேர்த்தியாக நடத்திச் செல்ல அம்மாவால் முடிந்தது.

அண்ணன் பொருளாதாரம் படித்துப் பட்டம் பெற்று அதன் பின் வர்த்தகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்று ஒரு பெரிய பொருளகத்தில் முதலீட்டுப் பிரிவு இயக்குனராக ஆனார். தானும் அம்மாவின் நிழலிலிருந்து கொண்டே வழக்கறிஞர் ஆகிவிட முடிந்தது. இப்போது ஒரு பெரிய வழக்கறிஞர் நிறுவனத்த்¢ல் பங்குதாரர்.

அண்ணன் வேலை பார்த்த குவாலா லும்பூரில், தனது பொருளகத்தில் கணினிப் பகுதிப் பொறுப்பாளராக இருந்த விலாசினியைக் காதலித்து மணந்து கொள்ளச் சம்மதம் கேட்ட போது “பொண்ணு நல்லவளா? நம்ப குடும்பப் பெயரக் காப்பாத்துவாளா?” என்று மட்டும் கேட்டார்.

“நல்ல பொண்ணுதாம்மா! ஆனா குடும்பப் பெயரக் காப்பாத்துவாளான்னு சொல்றதுக்கு முன்னால அதோட முழுப்பேரக் கேட்டா நீங்க என்ன சொல்லுவிங்களோ தெரியில!”

“அப்படி என்ன விசித்திரமான பேரு?”

“எலிசபெத் விலாசினி ஜோர்ஜ்”

அம்மா வியந்து பார்த்தார்.

“ஆமாம்மா. மலையாளக் கிறிஸ்துவப் பொண்ணு. குடும்பம் முழுக்க நல்லா தமிழ் பேசிறாங்க. ஆனா கிறிஸ்துவ சமயத்தில ரொம்ப ஈடுபாடு உள்ளவங்கதான்! ஞாயிற்றுக் கிழமை தவறாம சர்ச்சுக்குப் போறவங்க” என்றார் அண்ணன்.

அம்மா எழுந்து சமையலறைக்குச் சென்று ஏதோ ஒரு பாத்திரத்தை அவசியமில்லாமல் கழுவி வைத்து விட்டுத் திரும்பி வந்தார். அண்ணன் ஆவலுடன் காத்திருந்தார்.

“இப்ப நான் முடியாதுன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ?”

அண்ணன் நெளிந்தார். “நீங்க அப்படி சொல்ல மாட்டீங்கன்னுதான் நெனைக்கிறேன்!”

“அப்படிச் சொல்லிட்டா?”

….

“என் சம்மதமில்லாமலே போய் கட்டிக்குவியா?”

….

அம்மா சென்று அண்ணனின் தோளைத் தழுவினார். சிரித்தார். “இதப் பாரு கண்ணா! எனக்கு இந்தக் குடும்பம் ரொம்ப முக்கியம். பிள்ளைகளோட மகிழ்ச்சி முக்கியம். என் பிள்ளைகள் புத்திசாலிங்க, விவேகமானவங்கன்னு நம்பிக்கையும் எனக்கு இருக்கு. உன்னோட தேர்வு பிழையாப் போகாது. பொண்ணக் கொண்டுவந்து எங்கிட்ட ஒரு தடவ காட்டிடு! அவ்வளவுதான்!” என்றார்.

அண்ணன் எழுந்து அம்மாவைத் தழுவிக் கொண்ட நான்காண்டுகளுக்கு முன்னான அந்தக் காட்சி ஆனந்தனுக்கு இன்னும் கண்ணில் நின்றது.

அம்மாவின் இந்த சுமுகமான சம்மதத்திற்குப் பிறகு தேவாலயச் சடங்கைத் தொடர்ந்து கோயிலில் சடங்கு செய்துகொள்ளவும் அண்ணியின் வீட்டாரும் இணங்கினார்கள். அண்ணி வெள்ளைத் திருமண கவுனில் அழகாக இருந்தது போலவே பட்டுப் புடவை, பொட்டு, பூவிலும் அழகாக இருந்தார்.

காதலையும் அன்பையும் முதன்மைப் படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இந்த இணக்கப் போக்கினால் முதலில் கொஞ்சம் கெடுபிடியாக இருந்த அண்ணி வீட்டினரும் ரொம்ப இணக்கமாக வந்துவிட்டார்கள். அண்ணியும் கிறித்துவச் சடங்குகளை அண்ணனைக் கேட்டுக் கலந்து கொண்டே கடை பிடித்தார். முக்கியமானவற்றைத் தவிரச் சில்லறைச் சடங்குகளை அவரும் வலியுறுத்துவதில்லை. அண்ணனும் அப்படித்தான். குடும்பம் சிதறாமல் வாழ்க்கை அனுபவங்கள் கசக்காமல் இருக்க வேண்டும் என்பதில் இருவரும் கருத்தாக இருந்தார்கள்.

கிறிஸ்துமஸ் சமயத்தில் வீட்டில் மரம் வைத்து அலங்கரித்தும் தீபாவளி சமயத்தில் எண்ணெய் தேய்த்து மத்தாப்புக் கொளுத்திக் கொண்டும் மேத்தியூ வியாசன் அருணன் கலாச்சாரக் கலப்பின் செழிப்போடு வளர்ந்தான்.

தானும் இப்படி ஒரு அன்பான குடும்பத்தை ஏற்படுத்த முடியும். “அன்பும் அறனும் உடைத்தாயின்…” என வள்ளுவன் சொன்னது போல அமைத்துக் கொள்ள முடியும். “நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்” என்று பாரதிதாசன் சொன்னது போல வாழலாம். “பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா, பேசும் பொற் சித்திரமே” என்று பாரதி பாடியது போல ஒரு பிள்ளையை – சில பிள்ளைகளை- பெற்றுக் கொண்டு வாழலாம். அவன் படித்த தமிழ்க் கவிதைகள் இப்படிச் சரியான தருணத்துக்கு வந்து தன் சிந்தனைக்குச் சொற்கள் கொடுப்பது ஆனந்தமாக இருந்தது. இளவயதில் தன்னை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்.

உமாவைப் பொறுத்தவரையில் சிக்கல்கள் இல்லை. அழகான சாந்துப் பொட்டு வைத்துக் கொள்ளும் இந்து. புன்னகை ஒரு கீற்றுப் போலச் சிறிதாக இருந்தாலும் வசீகரமானது. கழுத்தோடு கத்தரித்துவிட்ட முடியானாலும் கோணல் வகிடெடுத்து நெற்றியில் தவழவிட்ட பாணி அழகாகத்தான் இருந்தது. கழுத்தில் ஒரு சிறு சங்கிலியும் காதுகளில் அடங்கிய கடுக்கன்களும் தவிர வேறு நகை இல்லை.

இந்தக் குடும்பத்துக்கு மிக உகந்தவள் என்றுதான் பட்டது. அம்மா மிகவும் சீராட்டிப் பாராட்டி வைத்துக் கொள்வார். அம்மாவையும் உடன் வைத்துப் பராமரித்துக் கொள்ளும் கூட்டுக் குடும்பமாகக் கூட வாழலாம். ஆனால்…

இதுவரை ஆனந்தனின் காதல் சமிக்ஞை எதற்கும் அவள் பதில் கொடுத்ததில்லை. தொழில் ரீதியாக மட்டுமே அவனைச் சந்திப்பதும் பேசுவதும். அதை மீறி ஒரு விநாடி கூட அவன் அறையிலோ அருகாமையிலோ அவள் நின்றதில்லை.

அது கூட ஆனந்தனுக்கு மிகவும் பிடித்துத்தான் இருந்தது. பார்ப்பவர்களிடம் பல்லிளிப்பவள் இல்லை. அவளை ஒரு ‘·ப்ளர்ட்’ என்று யாரும் சொல்லமுடியாது. தானும் அந்தக் காதல் சமிக்ஞைகளைத் தீவிரமாக அனுப்பியதாகச் சொல்ல முடியாது. தானும் பெண்களிடம் பல்லிளிக்கும் வகையறா அல்ல.

அம்மாவுக்கு அவளை நிச்சயமாகப் பிடிக்கும். ஆனால் உமாவுக்குத் தன்னை முதலில் பிடித்திருக்க வேண்டுமே! இன்று அது பற்றி அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.

கார் ரேடியோவில் பாட்டு மாறியிருந்தது. “பொன்னொன்று கண்டேன், பெண்ணங்கு இல்லை… என்னென்று நான் சொல்ல வேண்டுமா?”

*** *** ***

15 கிரேம் கொக்கேய்னுக்கு மேல் தன் வசம் வைத்திருந்து பிடிபட்டவருக்குக் குற்றம் நிருபிக்கப் பட்டால் ஆயுள் தண்டனை அல்லது ஐந்தாண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன் 10-க்கு மேற்படாத கசையடிகளும் கொடுக்க வேண்டும் என்று 1952-ஆம் ஆண்டின் அபாயகரமான மருந்துகள் சட்டம் சொல்லுகிறது. மாரியம்மாள் பெண்ணாக இருப்பதால் கசையடி இருக்காது. ஆனால் தன் இரண்டு இளம்பிள்ளைகளை விட்டுவிட்டு சிறையில் போய் இருந்தால் அவள் வாழ்வு அதோடு சிதறிவிடும். அவள் கணவன் ஏற்கனவே போதை மருந்துகள் வியாபாரக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுத் தப்பியோடித் தலை மறைவாக இருக்கிறான்.

உமா அப்போதுதான் வழக்கறிஞர் சான்றிதழ் பெற்றுப் பயிற்சிக் காலம் முடிந்து சட்ட உதவியாளராகச் சேர்ந்திருந்தாள். ரொம்பத் தன்னம்பிக்கையுள்ள துடிப்பான பெண். ஆங்கிலமும் மலாயும் சரளமாகப் பேசினாள். இந்த வழக்கு உமாவின் மூலமாக ஆனந்தனின் நிறுவனத்துக்கு வந்த போது நிறுவனத்தின் மூத்த பங்குதாரரான வஹாப் அந்த வழக்கு வேண்டாம் என்று தள்ளிவிடத்தான் எண்ணினார்.

ஒரு காலை அலுவலகக் கூட்டத்தின்போது இந்த வழக்கை உமா முதன்முறையாக முன்மொழிய அவர் சொன்னார்: “உமா, போதைப் பொருள் வழக்கை நாம் சாதாரணமாக எடுத்து நடத்துவதில்லை. வெல்லும் வாய்ப்புக்கள் குறைவு. ரொம்பக் கொடுமையான போதைப்பொருள் வியாபாரம் நடத்தும் ஆட்களுடன் உறவாட வேண்டும். தொல்லை. வேண்டாம்” என்றார்.

உமா விடவில்லை. “சே வஹாப். இந்தப் பெண் எனக்கு ஓரளவு தெரிந்தவள். இவள் கணவன் போதைப்பொருள் விற்பனை வலையில் மாட்டிக் கொண்டவன்தான் என்றாலும் இவள் அதில் எந்த நாளும் சம்பந்தப் பட்டதில்லை!”

“சரி! ஆனால் வீட்டில் போதைப் பொருளுடன் பிடிபட்டிருக்கிறாளே!” என்றார் வஹாப்.

“அவளைப் பிடித்த இந்த இந்தியப் போலிஸ் அதிகாரி அந்த வீட்டுக்கு அடிக்கடிப் போக வர இருந்தவர். அவள் கணவனைத் தேடும் சாக்கில் போயிருக்கிறார். மாரியம்மாளின் மேல் இவருக்கு ஆசை. அவள் இணங்க மறுத்ததால் இப்படிக் கதை ஜோடித்திருக்கிறார். நான் மாரியம்மாவைக் காவல் நிலையத்தில் நேர்காணல் செய்த போது அவரே இதைக் கூறினார்!”

“சாதாரணமாக குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளப் பெண்கள் இப்படிக் கதை ஜோடிப்பது வழக்கம்!” என்றார் வஹாப்.

“மாரியம்மா சொல்வது உண்மை என என் உள்மனம் சொல்லுகிறது! ஒரு முயற்சி செய்து பார்ப்பது நல்லது!” என்றாள் உமா. புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு இளம் வழக்கறிஞர் இவ்வளவு துணிவாகப் பேசுவதே அரிதுதான்.

ஆனந்தனைப் பார்த்தார் வஹாப். “என்ன சொல்கிறீர்கள் ஆனந்த்?” என்று கேட்டார். ஆனந்தன் அதுவரை மாரியம்மாளைப் பார்த்ததில்லை. எல்லாம் உமாவின் மூலம் வந்த செய்திகள்தான். “எனக்கும் தயக்கம் இருக்கிறது வஹாப். இதில் ஈடுபட்டு நேரத்தையும் முயற்சியையும் செலவிட்டுத் தோற்றுவிட்டால் எல்லாம் வீண். அப்படி வழக்குக்குப் பெரிய பணம் கொடுக்கும் கிளையண்டாகவும் தெரியவில்லை!” என்றான் ஆனந்தன்.

உமா பேசினாள்: “இந்த வழக்கின் எல்லாத் தயாரிப்புக்களையும் நான் செய்கிறேன். உங்களில் யாரவது ஒருவர் கோர்ட்டில் பிரசன்னமானால் போதும். ஜெயித்தால் சரி. தோற்றால் நான் ஒரு பாடம் கற்றுக் கொள்வேன். எனக்கு நீதிமன்றப் பயிற்சியளிக்கும் வாய்ப்பாக இதை எண்ணிக்கொள்ளூங்கள். மாரியம்மாளிடம் அதிகம் பணம் இல்லைதான். பணத்துக்காக நாம் இதைச் செய்ய வேண்டாம்!”

வஹாப் சிரித்தார். “அப்படியானால் உன் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளலாமா?” என்றார்.

“சரி!” என்றாள் உமா.

வஹாப் சிரித்தார். “இந்தச் சின்னப் பெண்ணுக்கு ரொம்பத் துணிச்சல்தான்” என்றார். ஆனந்தனுக்கு அவள் நம்பிக்கையும் துணிச்சலும் பிடித்திருந்தது. “சரி வஹாப், வழக்கை எடுத்துக் கொள்ளலாம்!” என்றான்.

“எனக்கு நேரமில்லை” என்றார் வஹாப்.

“ஓகே! நான் எடுத்துச் செய்கிறேன்!” என்றான் ஆனந்தன்.

அப்படித்தான் மாரியம்மாளுக்கு எதிரான மலேசிய அரசாங்கத்தின் வழக்கு அவர்களிடம் வந்தது. அந்த வழக்கின் தயாரிப்பின் போதும் கலந்துரையாடலின் போதும்தான் உமாவை இன்னும் அணுக்கமாக அவனால் அறிந்து கொள்ள முடிந்தது. உமாவின் உடல் வாசனைகளும் அங்க அசைவின் நளினங்களும் அவனுக்குள் இறங்கி ஒரு காதல் மூட்டத்தை ஏற்படுத்தியது இந்தத் தருணங்களில்தான்.

அந்த வழக்கின் இறுதிப் பகுதியில் ஒரு கட்டம்தான் இன்று.

(1225)

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு