குறளின் குரல் : காந்தி

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

சு. பசுபதி, கனடா


மகாத்மா காந்தியைப் பற்றிப் பல தமிழ்க் கவிஞர்கள் பலவிதமாகப் பாடியிருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, பாரதி பாடிய ‘வாழ்க நீ எம்மான்’ என்று தொடங்கும் ‘மகாத்மா காந்தி பஞ்சகம்’ மிகப் பிரசித்தம். காந்தியின் வாழ்வோடு பிணைந்த பல இயக்கங்களைப் பற்றியும் பல கவிதைகள் உள்ளன. உதாரணமாக, பாரதிதாசன் ‘ காந்தியடிகளும் கதரும்’ என்ற பாடலில் சொல்கிறார்:

இன்னல் செய்தார்க்கும்
இடர்செய்திடாமல்
இராட்டினம் சுற்றென்று
சொல்லும் – எங்கள்
ஏதமில் காந்தி
அடிகள் அறச்செயல்
வெல்லும் -வெல்லும் – வெல்லும்

கன்னலடா எங்கள்
காந்தியடிகள் சொல்
கழறுகின்றேன் அதைக்
கேளே — நீவிர்
கதரணிவீர் உங்கள்
பகைவரின் வேரங்குத்
தூளே – தூளே – தூளே

பழங்காலத் திரைப் படங்களிலும் காந்தியைப் பற்றிய பல பாடல்கள் ஒலித்திருக்கின்றன. எம்.கே.தியாகராஜ பாகவதரின் கம்பீரக் குரலில் எழுந்த ‘காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை’ என்ற பாபநாசம் சிவனின் பாடலைக் கேட்டு மயங்காதவரும் உண்டோ? இன்றும் பல தென்னிசை மேடைகளில் காந்தியை நினைவு கூரும் ‘சாந்தி நிலவ வேண்டும்’ என்ற பாடல் ஒலிப்பதைக் கேட்கலாம்.

ஆனால், காந்தீயக் கவிஞர் என்று ஒருவரைக் குறிக்க வேண்டுமென்றால், அது நாமக்கல் கவிஞர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட இராமலிங்கம் பிள்ளை அவர்களாகத் தான் இருக்கமுடியும். இதைக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களே ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். ‘தமிழக ஆஸ்தான’ கவிஞராகத்
திகழ்ந்த நாமக்கல்லாரைப் பற்றிக் கவிமணி

முந்தும் அன்பே உருவாக
வந்த மூர்த்தி
மூதறிஞன் காந்திமகான்
வழிபின் பற்றிச்
செந்தமிழ்நாட் டாஸ்தான
கவிஞ னாகிச்
சீரோங்கி ராம
லிங்க நண்பனே !

என்று அன்புடன் அழைத்து, வாழ்த்துகிறார். காந்தி மகானைப் பற்றிப் பல கவிதைகள் புனைந்த நாமக்கல் கவிஞர், காந்தி வித்திட்ட பல பயிர்களான கதர் வளர்ச்சி , தீண்டாமை ஒழிப்பு, அகிம்சை போன்ற இயக்கங்களைப் பற்றியும் பல பாடல்கள் இயற்றி நமக்கு அளித்துள்ளார்.

காந்தி அடிகள் உப்புச் சத்தியாக்ரகப் போரைத் தொடங்கிய போது, அந்தப் போரில் கலந்துகொண்ட ‘வீரர்கள்’ உற்சாகமாகப் பாடிச் செல்ல ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார் நாமக்கல் கவிஞர். இந்தப் பாடல் மூலமாகத் தான் நாமக்கல் கவிஞர் தமிழ் நாட்டிற்கே அறிமுகம் ஆனார் என்றும் சொல்லலாம்.

கத்தி யின்று ரத்தம் இன்றி
யுத்தம் ஒன்று வருகுது

என்று தொடங்கும் அந்தப் பாடலிலேயே

காந்தி என்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்த ருக்குள் தீமை குன்ற
வாய்த்த தெய்வ மார்க்கமே

என்று பாடி , காந்தியிடமும், காந்தீயத்திலும் தாம் கொண்ட பக்தியை வெளிப்படுத்தினார். பிற்காலத்தில், ‘காந்தி வழி இக்காலத்திற்குச் சரியா? என்பது போன்ற கேள்விகள் எழுந்த போது, ‘காந்தி வழி பழசா’ என்ற தலைப்பில் அவர் எழுதிய பாடல்கள் சிறந்தவை .

காந்தியையும் தமிழினத்தையும், தமிழ் நெறிகளையும் இணைத்து நாமக்கல் கவிஞர் பல அழகான பாடல்கள் புனைந்துள்ளார். அவற்றிலிருந்து ஒரு பகுதி இதோ!

இன்பதுன்பம் எவ்வுயிர்க்கும்
ஒன்றே என்றே
ஈ,எறும்பு, புழுக்களுக்கும்
இரக்கம் காட்டி
அன்புவழி வாழ்ந்தவர்கள்
தமிழர் தாமே
அருள்மிகுந்த ஒருநாடு
தமிழ்நா டாகும்
முன்பு இருந்த தமிழறிஞர்
சேர்த்து வைத்த
மூதறிவே மோகன்தாஸ்
கரம்சந்த் காந்தி
நம்பன்இவன் சரித்திரமே
உலகைக் காக்க
நாமெல்லாம் கடவுளிடம்
நயந்து கேட்போம்.

கொல்லாமை பொய்யாமை
இரண்டும் சேர்ந்த
கூட்டுறவே மெய்ஞ்ஞானக்
குணமாம் என்ற
நல்லாண்மை அறம்வளர்த்த
தமிழ்நா டொன்றே
நானிலத்தில் அமைதிமிக்க
நாடாம் என்றும்
வல்லாண்மை நமக்குவர
வாழ்ந்து சென்ற
வள்ளுவனே மறுபடியும்
வந்தான் என்னச்
சொல்லாண்மை புகழவொண்ணாக்
கருணை சோதி
சுத்தன்எங்கள் காந்திமகான்
நாமம் வாழ்க

ஆம், ‘கொல்லாமை, பொய்யாமை’ பற்றி 323-ஆம் குறளில் சொன்ன வள்ளுவனின் மறு அவதாரமாகவே காந்தியைப் பார்த்தார் நாமக்கல் கவிஞர், இன்னொரு பாடலில்,

திருக்குறள் அறிவெல்லாம் – ஒன்றாய்த்
திரண்டுள நெறியெனவாம்
உருக்குறள் காந்திமகான் – தந்துள
ஒப்பரும் சாந்த வழி.

என்றும் சொல்கிறார்.

ஆம், உண்மைதானே? முக்கியமாக 323- ஆம் திருக்குறளைப் படிக்கும்போது நமக்குக் காந்தி நினைவு வராமல் இருக்காது; அந்தக் குறளைக் ‘காந்தி’க் குறள் என்றே சொல்லலாம் என்று தோன்றுகிறது! காந்திக்கும் பிடித்த குறள்தான் அது.

அந்தக் குறளின் பொருளை ஒரு இசைப் பாடலில்

ஒன்றாய் நல்லது
கொல்லா விரதமும்
உயர்வால் அடுத்தது
பொய்யாச் சரதமும்
என்றார் அதன்படி
இவர் நடந்தவர்
எவரும் இலரெனப்
புவனம் வியந்திட
வள்ளுவன் குறள்களை
வாழ்க்கையில் நடத்திய
வள்ளல் காந்தி மகான்

என்றும் அழகாகச் சொல்கிறார் நாமக்கல் கவிஞர்.

காந்தியையும் , வள்ளுவரையும் வேறுபட்ட ஒரு கருத்தின் மூலமாகவும் பிணைக்கலாம். உதாரணமாக, ‘பட்டாம்பூச்சி விளைவு’ என்பது ‘ ஒழுங்கின்மைக் கோட்பாடு’ ( Theory of Chaos) என்ற அறிவியல் தத்துவத்தில் வரும் ஒரு சுவையான கருத்து. ஒரு சின்ன நிகழ்வின் விளைவு காலம் கழித்தும்
ஒரு பெரிய விளைவை உண்டாக்கலாம் என்பதே இதன் அடிப்படை. ஒரு சின்ன பனிப் பந்து உருள்வதால் ஒரு மிகப்பெரிய பனிச் சரிவே மலையில் நடப்பது போன்ற நிகழ்வு இது. அண்மையில் வந்த ‘தசாவதாரம்’ என்ற தமிழ்ப் படத்தில் இந்தக் கருத்து ஓர் இடம் பெறுவதால், இந்த அறிவியல் கோட்பாடு மீண்டும் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த விளைவைப் பற்றிச் சில
ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கவிதை இதோ! காந்தியும், ‘காந்தி’க் குறளும் இடம்பெறும் கவிதை இது.

பட்டுக்கோட்டையில் பறந்திடும்
பட்டுப்பூச்சி சிறகடித்தால்
பட்டணத்தில் பருவமழை
பலக்கும்.

காலவெளிக் கடலில்
ஓர் அதிர்வாம்;
ஞாலத்தில் வேறிடத்தில்
ஒரு விளைவாம்.

வள்ளுவப் பூச்சி வாயசைத்தது.
“ஒன்றாக நல்லது
கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.”

அதிர்வுகள் அமுங்கின;
ஆண்டுகள் கழிந்தன.
அகிம்சை மின்னியது;
வாய்மை இடித்தது.
பெய்தது மகாத்மா
காந்தி மாரி.
குளிர்ந்தது பாரத மண்.

மீண்டும் வருமா
வண்ணப் பூச்சி? ( பசுபதி )

pas_jaya@yahoo.ca

[ நன்றி ; தமிழர் பூங்கா, டிசம்பர் 08 ]

~*~*~o0O0o~*~*~

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா