கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

புகாரி


.
மூடு பள்ளிகளை
அகற்று கீற்றுகளை
கைதுசெய் துரோகிகளை
இது என்ன பள்ளியா
அரசின் முழக்கம்
களுக்கென்று சிரிக்கிறார்
ஓர் அதிகாரி
இன்னும் எத்தினி நாளைக்கி
இந்தக் கூத்து
.
இனி என்ன செஞ்சு
எனக்கு என்ன ஆச்சு
பாவியலா பாவியலா
எம்பிள்ளை போச்சே
கதறிக் கதறிக்
கருகிக் கருகி
மடிஞ்சே போச்சே
நாளைய துக்கம் தடுக்க
யார் சட்டையைப் பிடித்தும்
கண்ணீரா உலுக்கும்
கைகள்தானே உலுக்கும்
.
எத்தினியோ பிள்ளைகள்
சாகாம வீட்டுக்கு வந்துட்டாங்க
விதியிருந்தா உம்பிள்ளையும்
வீடுவந்திருக்காதா ?
இருநூறு கொடுத்தா
போலீஸ் விட்டுடுவான்
இரண்டாயிரம் கொடுத்தா
தாசில்தார் விட்டுடுவான்
இருபதாயிரம் கொடுத்தா
அடுப்பு மேடையும்
பள்ளிக்கூடம் ஆகிடாதா ?
.
வாத்தியாருங்க எல்லாம்
எங்கே போனாங்க ?
பிள்ளைகளைவிட
தப்பிக்கிற அறிவு
அதிகமா இருந்ததாலே
தப்பிச்சுட்டாங்களோ ?
அவர்கள் கைகளில் இருந்த
இந்தியாவின்
வளமான எதிர்காலத்தைப்
பாதுகாக்க ஓடிவிட்டார்களோ
.
கருகிய பிஞ்சுகளின்மேல்
கட்சிக்கொடி போர்த்தி
எதிர்க்கட்சியைத் தூற்றி
மேடை முழக்கம்
பெரும் சாலை கோசம்
அடப்பாவிகளா
என்னிக்குத்தான்டா உங்க
வியாபாரத்தை நிறுத்துவீங்க
இன்னிக்காச்சும்
விடுமுறை விடக்கூடாதா
.
ஒரே ஒரு மனிதன்
கொத்தனார் ரஞ்சித் குமார்
தீண்டும் மரணத்தைத்
துரத்தியடித்துக்கொண்டு
பிஞ்சுகளின் உயிர்களுக்காய்
தீரச்செயல்புரிந்து வீர மரணம்
இந்த மாமனிதன்
இறந்து வாழ்ந்த நாளை
பள்ளிகளின் பாதுகாப்புத் தினமாக
அறிவிக்க ஆணையிடுகிறது
இதயம்
.
அன்புடன் புகாரி
—-
buhari@sympatico.ca

Series Navigation

புகாரி

புகாரி