குமுதம் சுஜாதாவும் முஸ்லிம் முரசு மீரானும்

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

மலர்மன்னன்


நான் மிகவும் விரும்பி வாசிக்கும் தோப்பில் முகமது மீரான் படைப்புகள் குறித்து எனது பெரு மதிப்பிற்குரிய கலைஇலக்கியசமூக விமர்சகரும் ஆய்வாளருமான வெங்கட் சாமிநாதன் மே 17, 2007 திண்ணையில் எழுதியிருப்பதைப் படித்தபோது பலவாறான சிந்தனைகள் எழலாயின.

ஹிந்து சமூகம் என்பதாக ஒன்று இல்லை எனவும், ஹிந்துஸ்தானத்தில் பல ஜாதி சமூகங்கள்தாம் உண்டு எனவும் திட்டமிட்டு நடைபெறும் பிரசாரத்திற்கு ஊட்டம் அளிக்கிற மாதிரியான ஒரு தோற்றமாக வெங்கட் சாமிநாதனின் கட்டுரை அமைந்துவிடுமோ எனக் கவலைதோன்றலாயிற்று.

ஹிந்து சமூகமானது வர்ணாசிரம தர்மத்தின் பிரகாரம், அவரவர் குணவியல்புகளில் எது மேலோங்கியுள்ளதோ அதற்கு இணங்க அவரவர் இயங்ககுமாறு அமைந்தது எனவும் சாதிப்பிரிவுகள் மக்கள் அவரவருக்கு அமைந்த தொழில் முறையின் பின் விளைவாக தனித்தனி அடையாளங்களாக உருவாயின என்பதும் பல மானிடவியலாளரும் சமூகவியலாளரும் ஒப்புக்கொண்ட கருதுகோள். மானிட வாழ்க்கையின் நான்கு கட்டங்களாக விவரிக்கப்படும் பிரம்மச்சரியம், கிருஹஸ்தாசிரமம், வானப்ரஸ்தம், சந்நியாசம் ஆகியன ஆசிரமம் என அழைக்கப்படுவதிலிருந்தே ஆசிரமம் என்பது கடைப்பிடிக்கப்படும் ஒழுக்கம் என்பதைச் சுட்டுவதுதான் எனப் புரிந்துகொள்ளலாம்.
ஆக, வர்ணாசிரமத்திற்கும் சாதிப்பிரிவுகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிவிடுகிறது. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், ஒரு சாதிப் பிரிவு தன் மீதான விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் வன்முறைத் தாக்குதலில் இறங்கிவிடுமானால் அதனைக் குறிப்பிட்ட அந்தச் சாதியின் குறைபாடாகக் கொள்ள வேண்டுமேயன்றி மொத்த ஹிந்து சமூகத்தின் சுபாவமாகக் கருதிவிடலாகாது.

பிற்காலத்தில் சாதியடிப்படையில் ஹிந்து சமூகம் பிளவுபட்டுச் சிதறிவிடும் என்னும் அச்சம் காரணமாகத்தான் கம்யூனல் ஜீ ஓ என்கிற சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கான அரசு ஆணை எதிர்க்கப்பட்டது. அந்த ஆணை செல்லாது என நீதிமன்றம் பின்னர் தீர்ப்பும் அளித்தது. அதன்பின் ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளால் அந்த நீதி மன்றத் தீர்ப்பைச் செல்லாக் காசாக்கும் பொருட்டு அரசியல் சாசனத்திலேயே சாதிப் பிரிவிலான இடஒதுக்கீட்டிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதையும் எதற்காக ஞாபகப் படுத்துகிறேன் என்றால் சாதியடிப்படையிலான இட ஒதுக்கீட்டால் ஹிந்து சமூகம் சிதைந்து வெறும் சாதிகளின் சமூகங்களாகப் பிளவுபட்டுப் போய்விடும் என்கிற அச்சம் நியாயமானதுதான் என்பது தெளிவாகி வருவதால்தான்.

சுய எள்ளலும் சுய விமர்சனமும் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமும் இல்லாமல்போய்விடவில்லை என்பதோடு, அதற்கு சம்பந்தப்பட்ட சமூகத்தாரிடமிருந்து சகிப்புத்தன்மையில்லாத எதிர்விளைவு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதற்கும் ஆதாரங்கள் நிரம்பவே உள்ளன. மாதவையா, புதுமைப் பித்தன், வ. ரா., ரசிகன், எஸ்.வி.வி. முதலானோரின் எழுத்துகளில் அவற்றைக் கண்டுகொள்ள முடியும். பிரேம் சந்த் போன்ற ஹிந்தி எழுத்தாளர்களிடமும், சிவராம காரந்த் போன்ற கன்னட எழுத்தாளர்களிடமும் மிகக் கடுமையான சுய விமர்சனங்களைக் காணலாம். ஹிந்து சமூகத்தில் நிலவும் வேண்டாத வழக்கங்களைப் பற்றிய கடும் விமர்சனங்களுக்கு வன்முறையான எதிர்வினை நிகழ் ந்ததில்லை. தொடக்க காலங்களில் உடன்கட்டை ஏறுதலுக்கு மறுப்பு ஆலயப் பிரவேசக் கிளர்ச்சி முதலான சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, கடும் எதிர்ப்புக் கிளம்பிய போதிலும், ஹிந்து சமூகத்தவராலேயே அந்த எதிர்ப்பு ஒதுக்கப்பட்டு, அவை போன்ற சீர்திருத்தங்களுக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பே பெறப்பட்டது. முக்கியமாக ஹிந்து ஆலயங்களின் வரவுசெலவு மேற்பார்வை நிர்வாகமே அரசுடமையாக்கப் பட்டபோதிலும் அதற்கு வன்முறையான எதிர்வினை ஏதும் நிகழ்ந்துவிடவில்லையே!

பிள்ளையார் பொம்மை உடைப்பு, ராமபிரான் பட எரிப்பு போன்ற அனாகரிகமான பகிரங்க நிகழ்வுகள்கூட வன்முறையை எதிர்கொள்ளவில்லையே! இன்று ஹிந்துக் கடவுளர் பிறந்த மேனியில் வரையப்படும் சித்திரங்களுக்கு வன்முறையிலான எதிர்வினைகள் விளைவதைக் கண்டிப்பவர்கள்கூடப் பெரும்பாலும் ஹிந்துக்கள்தாமே!

ஆக, ஹிந்துக்கள் தங்கள் சமயம் தொடர்பான விமர்சனங்கள் எவ்வளவு கடுமையானவையாக இருப்பினும் அவற்றுக்கு வன்முறையில் எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புவதில்லை. ஆனால் ஹிந்துக்களில் சில சாதியார் தமது சாதி தொடர்பான விமர்சனம் ஏதும் வருமானால் அதைச் சகித்துக்கொள்ள இயலாதவர்களாகவும் கண்மூடித்தனமாக வன்முறையில் இறங்கிவிடுபவர்களாகவும் உள்ளனர். இதனை ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தின் குறையாகக் கொள்வது சரியாக இருக்காது.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை சாதியுணர்வு மங்கிவிடாமல் உயிர்த் துடிப்புடன் இருப்பதற்குத் திராவிட இயக்கங்கள்தான் பொறுப்பு. இட ஒதுக்கீடு என்ற சாக்கில் சாதிகளை வாழவைப்பவை, அவை. இதனால் பிற அரசியல் கட்சிகளும் ஓட்டுகளை இழக்க நேரிடுமேயென்ற கவலையினால் இட ஒதுக்கீட்டுக்குத் தலையாட்டிக் கொண்டிருக்கின்றன. சாதியடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கும்வரை சாதிகள் இருக்கும். அவற்றுக்கிடையே போட்டியும் பொறாமையும் இருக்கும். சாதியுணர்வு சாதி வெறியாக வளர்ந்து வன்முறைகளில் இறங்கும் நிலைமையும் இருக்கும். இட ஒதுக்கீட்டிற்கு சாதிகளை அல்லாமல் வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டாலன்றி இதற்கு விமோசனமில்லை.

குமுதம் என்கிற மிகப் பிரபலமான இதழில் சுஜாதா எழுதிய ஒரு தொடர்கதையில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்ததாக அடையாளங்காட்டப்பட்டு, இழிவான முறையில் அந்தச் சாதியின் பெயர் சொல்லி அக்கதாபாத்திரம் அழைக்கப்படுவதாக எழுதியதால் அந்தச் சாதியைச் சேர்ந்த சங்கங்கள் வன்முறையிலான எதிர் விளைவை வெளிப்படுத்தின. குமுதம் என்கிற பிரபல ஜனரஞ்சக இதழுக்குப் பதிலாகக் கணையாழியில் அவர் அதனை எழுதியிருந்தால் அந்த மாதிரியான எதிர்விளைவு நிகழ்ந்திருக்கக்கூடுமா என யோசிக்க வேண்டும்.

தற்காலத் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கிற அருமையான எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் முஸ்லிம் முரசு என்கிற வெகு சொற்ப கவனத்தை மட்டுமே பெறக்கூடிய பத்திரிகையில் சுய எள்ளலாகவும் சுய விமர்சனமாகவும் அமைந்த படைப்புகளை எழுதியதால்தான் கடுமையான எதிர்விளைவு எதனையும் அவரோ, முஸ்லிம் முரசு பத்திரிகையோ சந்திக்க நேரவில்லை எனலாம் அல்லவா?

எந்த தேசத்திலோ எந்த மொழியிலோ எந்தப் பத்திரிகையிலோ தங்கள் மார்க்க இறைத் தூதர் பற்றிக் கிண்டலாகக் கார்ட்டூன் வெளியாகியது என்பதற்காக அதனைப் பார்க்கக்கூட வாய்ப்பில்லாத போதிலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நமது தேசம் உள்ளிட்ட சர்வ தேசங்களிலும் பொதுச் சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் அடித்து நொறுக்கிச் சின்னாபின்னமாக்கி, வழியோடு போகிறவர்கள் மீதும் எவ்விதக் காரணமும் இன்றித் தாக்கித் திரிந்தவர்களை இதற்குள் எவரும் மறந்திருக்க இயலாது. பெங்களூரில் தவறான அனுமானங்களின் பேரில் ஏஷியன் ஏஜ், டெக்கான் ஹெரால்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலான பத்திரிகைகள் மீது நிகழ்த்தப் பட்ட வன்முறைத் தாக்குதல்களும் நினைவுக்கு வராமல் போகா.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை காலப் போக்கில் இயல்பாகவே அணைந்து போய் விட்டிருக்கக் கூடிய சாதியமைப்பு என்கிற நெருப்பை இட ஒதுக்கீடு, சலுகைகள் என்ற பெயரால் ஊதி ஊதிப் பெருக்கிப் பெரும் ஜ்வாலையாக்கிவிட்டதால்தான் சாதி யுணர்வு சாதி வெறியாகி, தனிச் சங்கம் இல்லாத சாதியே இல்லை என்கிற நிலைமை இன்று உருவாகிவிட்டிருக்கிறது.ஒட்டுமொத்த சமூக நலன் என்பதற்குப் பதிலாகச் சாதி நலன் என்பதுதான் ஒவ்வொரு சாதிக்கும் முக்கியமாகிவிட்டது. இதற்கு முற்றிலும் பொறுப்பேற்க வேண்டிய திராவிட இயக்கம் தன்னைச் சாதி மறுப்பு இயக்கமெனக் கூறிக்கொள்வதுதான் இதி லுள்ள முரண் நகை. கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்பார்கள். ஆனால் ஹிந்து ஆலய வழிபாட்டு முறைகளில் தலையிடுவார்கள். கேட்டால் ஆலயங்கள் இருக்கிறவரை அப்படித்தான் தலையிடுவோம் என்பார்கள். அதே மாதிரிதான் இந்த விஷயத்திலும். சாதிகளை மறுப்போம், ஆனால் சாதிகள் உள்ளவரை சாதிப் பெயர் சொல்லி இட ஒதுக்கீடு, சலுகைகள் என்றெல்லாம் கேட்போம் என்பார்கள்.

தோப்பில் முகமது மீரான் இன்று மிகப் பிரபலமான ஒரு இதழில் தமது முந்தைய படைப்புகளுக்கு இணையான படைப்பினை எழுத முற்பட்டால் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நம்மால் ஒருவாறு யூகிக்க முடியும். சல்மா அவரது இரண்டாம் ஜாமங்களின் கதைக்காக ஓரளவு இலக்கியப் பிரக்ஞை உள்ளவர்களாலேயே எப்படியெல்லாம் தூற்றப் பட்டார் என்பதை மறக்க முடியுமா? எழுத்தாளராக அவர் காட்டிய தோற்றத்திற்கும் தேர்தலில் தன் சமூகத்தவரின் வாக்குகளைப் பெறவேண்டும் என்பதற்காக பகுத்தறிவு இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் தி மு க வேட்பாளராக இருந்த போதிலும் தமது மார்க்க நிபந்தனைகளுக்கு ஏற்ப அவர் மேற்கொள்ள நேரிட்ட தோற்றத்திற்கும் இருந்த வித்தியாசமும் நமக்குத் தெரியுந்தானே!

+++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்