கீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


என் ஆசைகள் மிகையானவை!
அவற்றுக்கு ஏங்கித்
தவிக்கும் என் கூக்குரல்
இரங்கத் தக்கது!
தர மறுக்கும் உன் தீவிர எதிர்ப்புகள்
என்னைப் பாதுகாப்பன,
எப்போதும்!
அக்கறையுடன் என்மீது
அவ்விதம் நீ கொள்ளும்
ஆழ்ந்த பரிவு
வாழ்க்கையில் போகப் போகச்
சூழ்வது தெரிகிறது!
பேராசைப் பேரிடர்கள் எவையும்
நேராமல் காத்து,
இவ்வகண்ட
வான்வெளி, பரிதி ஒளி,
உடல், உயிர், உணர்வு போன்ற
நான் கேளாத
அரும்பெரும் எளிய கொடைகளை
எனக்களித்து
நாளுக்கு நாள்
அருகதை உள்ளவனாய் என்னை
ஆக்குபவன் நீ!

களைத்துப் போய் நான் வெகுநேரம்
காலோய்ந்து கிடக்கும்
காலமும் உண்டு!
விழித்துக் கொண்டென்
குறிக்கோளைத் தேடி நான்,
விரைந் தோடுவதும் உண்டு!
ஆனால் நீ
இரக்கமற்ற முறையில்
என்கண் முன்பு தோன்றாமல்
ஒளிந்து கொள்கிறாய்!
முழுமனம் விரும்பாத,
உறுதி யில்லாத என்னாசைப்
பிடிகளுக்கு
உடனே நீ செய்யும் மறுப்பு
எனக்கு விடுவிப்பளித்து,
அனுதினமும்
ஏற்றுக் கொள்ள
என்னை
அருகதை உள்ளவனாய்
ஆக்குபவன் நீ!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 18, 2005)]

Series Navigation