எஸ். காமராஜ்
பேருந்தின் பயணம் எல்லா நேரமும் சிலாக்கியமாக இருப்பதில்லை காலங்கள் மாறும்போது நெரிசலும் சண்டையும் போட்டிபோட்டு இடம் பிடிக்கும். கூட்ட நேரங்களில் ஜன்னல் வழியாக பை, கைக்குட்டை ஆகியவற்றைப் போட்டுவிட்டு சாவகாசமாக ஏறி இது என் சொத்து என்று மல்லுக்கு நிற்கிற மனிதர்கள் கிராம நகர வித்தியாசமில்லாமல் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களின் அப்போதைய பிரச்சினைக்கு அது தீர்வாகிப்போகிறது. அப்போது யாரும் தகுதி திறமை பற்றிப் பேசுவதேயில்லை. கொவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி போகிற அந்தப்பேருந்து வந்து நின்றவுடன் கடலை வண்டிக்காரர்கள் ஒதுங்கி நின்றுகொண்டார்கள். தேனீர்க்கடையில் சுட்டு அடுக்கி வைத்திருந்த இனிப்பு போண்டாக்கள் பளபளப்பாகியது. ஒன்பதுமுறை தண்ணீர் கலக்கப்பட்ட பாலைப் போனியில் அள்ளித் தலைக்குமேல் தூக்கி மீண்டும் பால் பாத்திரத்துக்குள் ஊற்றி வித்தைகாட்டிக்கொண்டிருந்தார்கள் டீ மாஸ்டர்கள். ஓரத்து தூண் மரைவில் நின்றுகொண்டு ஒரு எதிர்கால எஞ்சீனியரும், எதிர்கால மனைவியும் வெயில் உருகக் காதலித்துக்கொண்டிருந்தார்கள். மார்கழிக்குளிர் குறையாத அந்தக் காலை ஒண்பது மணிக்கு மூலையில் அழுக்குப்பொட்டலமாக ஒரு மனிதன் சுருண்டுகிடந்தான். பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் நேற்றுவாங்கிய பிச்சைச்சோற்றின் மீது ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தது. அவனுக்கருகில் வேஷ்டிவிலகியபடி பிரித்துப்போடப்பட்ட எந்திரம் போல ஒரு குடிமகன் விரிந்து கிடந்தான். அவ்வப்போது அவன் கால் பக்கத்தில் சுருண்டு கிடந்த அழுக்கு மனிதனின் மேலே பட எரிச்சலோடு எழுந்து நகர்ந்து படுத்துக்கொண்டான். தூரத்தில் பொதுக்கழிப்பறையிலிருந்து மூத்திரம் வழிந்து ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தது. பெரியாற்றில் நீர்கேட்டு நடைபயணம் நடக்கிற சுவரொட்டியும், சுவர் விளம்பரமும் பேருந்து நிலையம் முழுக்க நிறைந்திருந்தது. நக்கலமுத்தன் பட்டியில் தலித் பஞ்சாயத்துத் தலைவர் கொலைவழக்கில் கைதான கொலையாளிகளில் ஒருவர் ஜாமீனில் விடுதலை எனும் செய்தியை செய்தித்தாள் தேச விடுதலையைச் சித்தரிக்கிற மாதிரி சிரித்தபடியே தொங்கிக்கொண்டிருந்தது.மள மளவென எல்லோரும் ஜன்னல் வழியே பையைப்போட்டுவிட்டு காத்திருக்க முண்டிண்டிக்காமல் அந்த நெரிசலுக்குள் எனக்கென ஒரு வரிசை அமைத்துக்கொண்டு எறினேன். பேருந்துக்குள் நுழைந்தபோது வெறும் எட்டுப்பேர் மட்டும் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். மீதம் நாற்பத்தி ஒன்பது இருக்கை காலியாகக் கிடந்தது. ஒவ்வொன்றாக தேடி உட்காரப் போகும்போது ஜன்னலுக்கு வெளியே இருந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது. பின் வாசல்வழியே ஏறி ஓட்டுநர் இருக்கை வரை போய்த்திரும்பி வந்தேன் இடமில்லை. இனி வேறு வழியில்லை எனத் தீர்மானித்து நடுப்பகுதிக்கு வந்து ஒரே ஒரு மஞ்சள் பையிருந்த இருக்கையில் அமர்ந்தேன். இப்போது பேருந்தின் இருக்கைகள் எல்லாம் நிறைந்திருந்தது. ஆனால் அந்த மஞ்சள் பைக்கு சொந்தக்கரர் வரவே இல்லை. மஞ்சள் பை எனக்குள் எதோவொரு கலக்கதை உண்டு பண்ணியது. சின்னவனாயிருந்தபோது தெருவில் கிடக்கும் பொட்டலங்களில், மணிப்பர்சுகளில், அதிர்ஷ்டம் மறைந்திருக்கும் எனத் தேடித்திரிந்தேன். ரெங்கநாயகி வந்து அலைக்கழிக்கும் வரை எனது பெரும்பாலான கனவுகளில் சில்லறைகளும், ஹெர்க்குலஸ் சைக்கிளும் தான் வந்துபோனது. விடுதியிலிருந்து எட்வர்டு ஹைஸ்கூலுக்குப்போகிற ஒரு மத்தியானத்தில் வேலவர் கண்டெடுத்த மணிப்பர்சில் ஒரு பத்து ரூபாய்க் கற்றை இருந்தது எடுத்து அதை வைத்து என்ன செய்யவதென்று தெரியாமல் தினறி சாத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த கதை நீண்ட நாட்கள் பேசப்பட்டது. ஆனால் இப்போது சினிமாக்கள், பத்திரிக்கைகள் எல்லாம் சேர்ந்து தனியே விடப்பட்ட பைகள் சூட்கேசுகள் மேலொரு பயத்தை ஏற்றி வைத்திருந்தன. எழுந்து விடலாமா என யோசனை பண்ணி, சந்தேகம் என் மீது திரும்பிவிடுமோ எனும் சந்தேகத்தில் உட்கார்ந்திருந்தேன். நடத்துனர் வந்து பயணச் சீட்டுக் கொடுக்க ஆரம்பித்தார். அது திருச்செந்தூர் போகிற வண்டியாக இருந்ததால் அதுவும் கந்த சஷ்டிக்கு முந்தின நாள் என்பதாலும் திருச்செந்தூர்க்கான கூட்டம் அதிகமாக இருந்தது. இப்போது பேருந்து கிளம்பத்தயாராக இருந்தது. பக்கத்து மஞ்சள் பைக்கான சொந்தக்காரர் இன்னும் வரவில்லை. வராமலே போய்விட்டால் என்ன செய்வது என்கிற யோசனை என்னை உறுத்த ஆரம்பித்தது. பேருந்து இப்போது வாசலைத்தாண்டி வெளியேறிவிட்டது. காலியான அந்த இடத்தில் ஒரு கிளிஜோசியப் பெட்டி வந்து உட்கார்ந்தது பின்னாலேயே சொந்தக்காரர் வந்து அமர்ந்தார். மீசைக்காரர் ஒருவர் ஒவ்வொரு இருக்கையாகக் கடந்து வந்தார் கடக்கிற போதெல்லாம் நெரிசலும் வசவுமாகக் கடைசியில் என்பக்கம் வந்து, ” இங்க ஒரு மஞ்சப்பையி போற்றுந்தன்ல, இது ஏ எடம் எந்திரியும் என்று அதட்டினார் ”, வாக்குவாதம் வந்தது, இறுதியில் கிளி ஜோசியக்காரர் எழுந்துகொண்டார். அவர் எட்டயபுரத்தில் இறங்கிவிடுவதாகச் சொல்லிக்கொண்டு அந்தப் பிரச்சினையை முடித்துவைத்தார். வண்டி ஆஸ்பத்திரி நிறுத்தத்திலும், அடுத்த நிறுத்தத்திலும் நின்று ஆள் ஏற்றிக்கொண்டு கிளம்பவும் மஞ்சள் பைக்காரர் எழுந்தார், எழுந்து இது கடலையூர் போகாதா எனக்கேட்டார் ஒட்டு மொத்தப் பேருந்தும் சேர்ந்து அவரைத் தள்ளிவிடாத குறையாகத் கீழிரக்கி விட்டது. திரும்பவும் கிளிப்பெட்டி என்னருகில் வந்தது, எங்க போகனும் நண்பரே என்று கேட்டேன், நா தூத்துக்குடி தா சார் என்று சொல்லி எனது கண்ணுக்குள் பார்த்தார். ஜோசியக்காரர்கள் எப்போதும் வெளித்தோற்றத்தை வைத்துக்கொண்டு தங்களால் யூகிக்க முடிந்த இரண்டு சேதிகளைச்சொல்லி அசர வைத்துவிட்டு பிறகு தங்களின் கற்பனைகளை நடக்கப்போகும் எதிர்கால நிகழ்வுகளாக்கிவிடுவார்கள். அப்போது பெரும்பாலும் அவர்கள் எதிராளியின் கண்ணுக்குள்ளே நுழைந்துவிடுவதுபோல ஊடுறுவிப் பார்ப்பார்கள். நாம் முந்திக்கொள்ளவேண்டும் என்று முடிவு பண்ணி ”உங்களுக்கு சிந்துவம்பட்டியா” என்று கேட்டேன் கொஞ்சம் நிலைகுலைந்த அவர் சுதாரித்துக்கொண்டு இல்லை கோவில்பட்டி தான், பக்கத்துல தான் தெரு இந்தா பாருங்க இந்த ஐஸ்கூல்ல தாம் படிச்சேன், ஆமா ஒங்களுக்கு எந்தத்தெரு கேட்டார் நான் வெளியூர் என்று சொன்னேன், எங்க வேல பாக்றீங்க, கேட்டதற்கு அரசாங்க வேலைதான் என்று இரண்டு கேள்விக்கும் நேரடியான பதில் கிடைக்காததனால் இன்னும் குளம்பிப் போயிருந்தார். ஆமா ஒரு தரம் வெளியேறிப்போனா எத்தனை நாள் கழிச்சு வீட்டுக்கு வருவீங்க நான் கேட்ட தொனியில் கொஞ்சம் அதிகாரம் கூடுதலாக இருந்ததை நான் உணரவில்லை ஆனால் அவர் உணர்ந்திருக்க
வேண்டும். ஒரே நாள்ல திரும்பவோம், ஒரு மாசங்கழிச்சும் திரும்புவோம் சொல்லமிடியாதுசார், முன்னப்போலவா இருக்கு என்று ஒரு நூறுவருட அனுபவத்தைச்சொல்பவர் போலச்சொன்னார்.
அவருக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபத்தைந்து வயது இருக்கும். மஞ்சள் கட்டம் போட்ட சட்டை, வெள்ளை வேஷ்டி, கழுத்தில் மடித்துவைக்கப்பட்ட கைக்குட்டை, லேசாகத்திருகிவிடப்பட்ட அரும்புமீசை, நெற்றியில் சந்தனக்கோடும் அதைச்சுற்றி ஒரு கருப்பு பார்டர், நடுவில் ஒரு சின்ன புள்ளியாகத்திருநீறு என்று கவனம் ஈர்க்கிற பொட்டு வைத்திருந்தார். அவரிடமிருந்து வந்த மெலிய பாண்ட்ஸ் பவுடர் வாசமும் ஜவ்வாது வாசமும் அமுங்கிப்போகும் அளவுக்கு சிகரெட் வாசமும் இருந்தது. கண்ணுக்குக்கீழே உள்ள வலையங்கள் முந்தின நாள் இரவு சாப்பிட்ட மதுவை நினைவூட்டிக்கொண்டிருந்தது. என்ன நைட்டு மானிட்டரா சாப்ப்டீங்க
கேட்டதும் யோசனை பண்ணி பிறகு சார் மாசத்துக்கு ஒரு தரம் தா சார் அதுவும் லேசா கட்டிங், நேத்து சாப்பிடல, சார் நீங்க சாப்டுவீங்களா சார், ஆமா இப்ப ஒங்கள மாதிரி ஆளுங்க தான அதிகமாச் சாப்ட்றாங்க, அதென்ன சிகுநேச்சர் ராயல் சேலஞ்ச்சின்னு. சார் நம்மளுக்கெல்லாம் மானெங்கெட்ட மாநிட்டர்தா லாயக்கு சார் குப்புன்னு ஏறனும். சார் இப்பல்லாம் பூரா நம்பர்டூ தா சார், அதுவு அந்த சிவகாசிச் சண்டியர், சார் அங்கதா எல்லா நம்பர் டூவுங்கெடக்கி, ஆப்படிச்சாலு லேசாக்கிள்ளுன மாதிரிதா இருக்கு. போன வாரம்கூட கட்டிங்தான் போட்டேன் ஒன்னுஞ் சரியில்ல பிறகு போய் ரெண்டுகோட்டரு அடிச்சி தேட்டருக்குப்போய் படம்பாத்துட்டுருக்கம்போதே தூங்கிட்டேன். அரைமணிநேரங்கழிச்சு உசுப்பிவிட்டாங்க நடந்து வந்துக்கிட்டிருந்தா எஸ்ஸை அவர்தா மாரிமுத்துப்பாண்டியன் நல்ல போல்ட்டான ஆளு பைக்கில வந்தாலே ஊரே நடுங்கும், கைமட்டுந்தா ஸ்டேரிங்கப் பிடிச்சிருக்கும் கால் ரெண்டு பறந்து பறந்து அடிப்பார் அவருக்கு நிரைய தமிழ்ச்சினிமாப் பார்த்தத அனுபவமிருந்தது, தேவமார்தா ரொம்ப நல்ல மனுசன், இப்போது என்னுடைய கண்ணுக்குள் பார்த்துவிட்டு ஏதோ எதிர்பார்த்தார். நான் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். தொடர்ந்தார்.
எலே இனிமேக்கொண்டும் லேட் ராத்திரி தெருவச் சுத்தக்கூடாதுன்னு சொல்லி விரட்டிப்புட்டார். நடத்துனர் வந்து பயணச்சீட்டுக் கேட்டார், இரண்டுபேரிடமும் சில்லறை யில்லை அவருக்கும்சேர்த்து நானே பணம்கொடுத்தேன் கூச்சமும், சந்தோசமுமாக மறுத்தார். வற்புறுத்தவும் தூத்துக்குடியில் இறங்கும்போது சில்லறை மாற்றித் தருவதாக திரும்பத்திரும்பச்சொனார்.
”ஆமா எவ்வளோ ஊருக்குப்போயிருப்பீங்க”
இப்போது ரொம்பப் பிரகாசமாகிவிட்டார் கண்கள் கூடுதலாக விரிந்தது ஒவ்வொரு பேச்சுக்கும் நடுவே என்னைத் தொட்டுப்ப்பேச ஆரம்பித்தார். மெற்றாஸ், பம்பாய், மைசூர் போயிப்பதாகச் சொன்னார், நான் ஆச்சரியப்பட்டதும் இதென்ன பிரமாதம் அந்தமான் கூட போயிருக்கேன் என்று சொன்னார். அங்கு ஒரு கப்பல் அதிகாரி தமிழ்நாட்டுக்காரர் இருப்பதாகவும் அவருக்கு ஜோசியம் சொல்லி அது பலித்துவிட்டதால் அவரே டிக்கெட் போட்டு அழைத்துப் போனதாகவும் அங்கு பத்தாயிரம் வரை சம்பாதித்து வந்ததாகவும் சொன்னார்.
எல்லாம் அந்தக் கிளியோட ராசி யென்றும் அது ஒரு நாள் பறந்துபோய்விட்டதாகவும் சொன்னார்.
”அந்தக்கிளி எப்பிடி…பிடிச்சு பழக்கப்படுத்துறதா”
”இல்லசார் மின்னயெல்லாம் நாங்களே பிடிச்சு வளத்துப் பழக்கப்படுத்துவோம், இப்பல்லாம் ரெடிமேடுக்கிளிகள் தா சார்”.
”’கிளி…..ரெடிமேடா…. ” என் வியப்பு அவருக்கு உற்சாகத்தை உண்டாக்கியது.
”’மதுர மீனாச்சியம்மங்கோயில்ல கெடைக்குஞ்சார் ரக ரகமா, ஒருகிளி ஆயிர்ரூவா”,
”’ஆயிரமா”,
” நீங்க என்ன இன்னுஞ்சின்னப்பிள்ளயா இருக்கீங்க, நாஞ்சொன்னது சாதாக்கிளிக்குத்தா, பெசல் கிளிகள்ளாம் ஐயாயிரம் பத்தாயிரமுன்னு போகும். இத விக்கிறவரு நம்ம ஏரியாக்காருதா நாய்க்கரு, ஒங்கள மாதிரிதா இருப்பாரு”, இப்போதும் கொஞ்சம் இடவெளிவிட்டு எனது அபிப்பிராயத்துக்காகக் காத்திருந்தார், பிறகு தொடர்ந்தார்.
” வெளிநாட்டுக்கிளியன்னு வச்சிருக்காரு, ஆளில்லாத நேரம் நாம அதுட்டயே, யாவாரம்பேசிட்டு வரலாம் அப்பிடிக் கிளி.”
” சார் அது தெலுங்கில பேசும் சார், ஒங்களுக்குத்தெலுங்கு தெரியுமா, மனுசு ஒச்சேசு, ரண்ட ரண்ட ந்னு சொல்லி நாய்க்கரக்கூப்பிடும் சார்”.
” எத்தன கோடி குடுத்தாலும் நீங்க காட்டுற நெல்லுக்குத்தான அது கட்டுப்படும் ”.
” சார் அப்பிடிச்சொல்லாதீங்க சார் அது கடவுள் அவதாரம், ஜனங்க மூடநம்பிக்கையில அப்பிடிச் சொல்லுது, நெல்லுக்கும் கிளிக்கும் சம்பந்தமில்லை. கிளிக்கு அருள் இருக்கா இல்லையான்னு டெஸ்ட்டுப் பண்ணிட்டுத்தா தொழிலுக்கு குடுப்பாங்க. தெய்வாம்சமுள்ள கிளிகள் ஆயிரம்பேர் இருக்கிற கூட்டத்துல ஊர் பேர் சொல்லி அனுப்பிவிட்டாப் பறந்து போயி அந்த ஆளச் சட்டையப்பிடிச்சி இழுக்கும் சார். இங்க நம்ம கோவில்பட்டில ஒருத்தர் இருக்காரு ஜவுளிக்கட வச்சிருக்காரு அவரு வீட்ல ஒரு கிளியிருக்கு சார் என்னா அசத்தலாப்பேசும் சார், பங்களா வாசல்ல இருக்குது சார் ஆள் வந்தவுடனே சத்தங்குடுக்கும். அவர் பேருகூட ஆங் சரியா நாபகொ இல்ல, கனி ஜவுளிஸ்டோர்க்காரர் சார் நாடாரு, போனா நல்லாக்குடுப்பாரு”
இப்போது ஜோசியக்காரரின் கண்ணுக்குள் என்னைக் கண்டு பிடிப்பதற்கான ஆவல் தேங்கிக்கிடந்தது.
” ஆமா நீங்க ஏம்படிக்கல, சின்ராசு ”
” சார் ஒங்களுக்கு எம்பேரு எப்பிடித்தெரியு சார் ”
” ஒங்க கையில தா பச்ச குத்திருக்கில்ல, ஆமா நீங்க என்ன ஏடிஎம்கே வா”
” இல்ல சார் நமக்கெல்லா இப்ப கச்சி கிடயாது சார், எங்க மலைவேடன் சங்கந்தா சார். எங்க தலைவரு தெரியுமா சார். அவர் எந்தக்கச்சிக்கு சொல்றாரோ அதுக்குத்தான் நம்ம ஓட்டு. ”
”பின்ன, எம்ஜிஆர் படம் பச்ச குத்திருக்கு”
”அது சும்மா சின்னப்பிள்ளைல குத்துனது, நமக்கு ரஜினிதா சார்”.
”சார் என்னதா இருந்தாலு ரஜினி நடிப்பு கணக்கா வருமா சார், அவரு ஆளப்பாக்கத்தா அப்பிடி இப்பிடி, ஆனா ஐயராமில்ல சார். இப்போது கூட என்னைத்தேடவில்லை எனது கலர் அவருக்கு நான் ஐயராக இருக்கமுடியாது என்கிற முடிவுக்கு தீர்மானத்துக்கு வரக்காரணமாக இருந்திருக்கலாம். அவர் எடுத்த மூன்று நான்கு சீட்டுக்குள்ளாகவும் எனக்கான அடயாளம் கண்டுபிடிக்காமல்
போனது. செல்லமுத்து வாசுகி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தேனம்மாள் போல விண்ணப்ப படிவத்தின் ஜாதி விபரத்தைப்புரட்டிப் பார்க்க முடிகிற வசதியும் லாவகமும் சின்ராசுக்கு இல்லை. எனவே கண்டுபிடிக்கமுடியாமல் திணறிப்போய் அதனால் என்னலாபம் என்று சகஜாமானார்.
பிறகு நாங்கள் நடிகர் விஜயகாந்த் வருங்கால முதல்வரான அரசியல், ஆபாசம் பொங்கிவழியும் இப்பதைய சினிமா, ஒரு ரூபாயாக இருந்த சினிமா டிக்கட் இப்போது ஐம்பது நூறாகிப்போன பொருளாதாரம் என இந்த உலகம் பற்றிப் பேசிக்கொண்டே வந்தோம். எட்டயபுரம் கடக்கிறபோது பாரதி சிலையைப்பார்க்க வெளியே தலை நீட்டினேன், என்னை அன்பால் கடிந்தார் அதில் என்மேலுள்ள பிரியம் தெரிந்தது. ரெண்டு தண்ணீர் போட்டலம் வாங்கி எனக்கொன்று தந்தார். குறுக்குச்சாலை வந்ததும் பாஞ்சாலங்குறிச்சி சாலையில் அலங்கார வளைவை ரெண்டுபேரும் பார்த்தோம். ரத்தினா ஆரம்பப் பாடசாலையில் படிக்கும் போது டீச்சர்ஸ் மீட்டிங்குக்கு நாடகம் போட்டார்கள், அதில் எனக்கு கட்டபொம்மன் வேசம் தரவில்லை என்று சாப்பிடாமல், பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டு விட்டுக் கோபித்துக்கொண்டு அலைந்த காலங்கள் நினைவுக்கு வந்தது. நானாகச் சிரித்துக்கொடேன். வீர கம்பள நாயக்கர் சங்க மாநாடும் அதன் தலைவர் அழைக்கிறார் என்றும் சுவரெழுத்தும் ஆளுயரத்தில் எழுதியிருந்தது, இப்போது சுள்ளென்று வெயில் மூஞ்சியில் அடித்தது. அலங்கார வளைவு முறுக்கி விடப்பட்ட கட்டபொம்மனின் மீசையைக் கவுத்தி வைத்த மாதிரி இருந்தது. முன்னால் உள்ள கைப்பிடி கம்பியில் முகம் வைத்து தூங்கப்போனேன், என்னை உழுக்கி எழுப்பி ” சார் பாத்தீகளா எப்பிடி அடிச்சிருக்கான்னு இந்த லாரிக்காரப்பயக எப்பயுமே இப்பிடித்தா குடிச்சுப்பிட்டு கண்டமானிக்கு, தூங்கிட்டிகளா” மீண்டும் உரையாடலை ஆரம்பித்தார் சின்ராசு.
நிலா சீ புட்ஸ் ன் குளிர்பதனக்கிடங்கு ஒரு அழகிய திரையரங்கு போல, சுற்றுலாத்தளம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது, காற்றில் கருவாட்டு வாசம் வந்து பசியைத்தூண்டியது. கடந்துபோகிற காடுகளில் வெள்ளை மணல் தெரிய ஆரம்பித்தது தூத்துக்குடியை நெருங்கி விட்டோம்.
” சார் நீங்க எங்கபோனு”
” செயற் குழுக்கூட்டம்”
” என்ன கூட்டம்”
வேற்று மொழியைக்கேட்ட மாதிரி மூளையைக் கசக்கினார்.
சங்க மீட்டிங் சொன்னதும் புரிந்துபோன பாவனை முகத்தில் வந்தது. பேருந்திலிருந்து இறங்கும்போது இருவரும் தனித்தனியானோம், கொஞ்சம் நடந்து திரும்பினேன் சின்ராசு கூட்டத்துக்குள் மறைந்துப்போயிருந்தார். மீண்டும் பிராதானச்சாலைக்கு வந்து ஆட்டோவுக்காகக் காத்திருந்த போது கிளிப்பெட்டியோடு என்னை நோக்கி ஓடி வந்த சின்ராசுவின் கையில் எனக்குக்கொடுக்க வேண்டிய சில்லறை இருந்தது. வற்புறுத்தி கொடுத்ததை வேடிக்கை பார்த்தது கூட்டம். உரிமையோடு டிக்கெட் பணத்தை என் பைக்குள் வைத்தார் நான் திரும்ப எடுத்தபோது பைக் சாவி விழுந்தது அதைக் குனிந்து எடுத்த சின்ராசு அதிலிருந்த பகத்சிங் படத்தைப்பார்த்தார்
” நீங்க தோழரா, எங்க தெருவுல டைபி இருக்கு நாங்கூட அதுல மெம்பர் ” ஏதேதோ பேசிவிட்டு விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.
என்னோடு எதோ ஒரு வகையில் நெருங்கி விட்ட சந்தோசத்தோடும் என்னைக் கண்டுபிடித்து விட்ட திருப்தியோடும் கழுத்தைச் சாய்த்துக்கொண்டு வலது கையில் வேட்டி நுனியைப் பிடித்துக் கொண்டு கடந்து போனார் தோழர் சின்ராசு.
skraj_125@yahoo.co.in
- கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!
- சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’
- முஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)
- சான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்
- விளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- இன்னும் சில ஆளுமைகள்
- எச்சரிக்கை
- An Invitation
- மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை
- என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
- எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்
- கடித இலக்கியம் – 46
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை !
- தாஜ் கவிதைகள்
- நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா
- இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”
- ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது
- கருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……
- தைத்திருநாள் விழா கவியரங்கம்
- இலை போட்டாச்சு! – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி
- மடியில் நெருப்பு – 26
- பூக்கள் என் கவிதைகள்
- காதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்
- திருட்டும் தீர்ப்பும்
- பெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- கவிதை மரம்
- கவிதைகள்
- ஈசாநபியான இயேசுகிறிஸ்துவின் கருணைக்கு
- நாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்
- பெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா? –
- கிளிஜோசியக்காரரின் தேடல்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)
- நீர்வலை – (12)
- சிறகொடிந்த பறவை