கிராமியப் பாடல்களில் கட்டபொம்மன்

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

ரகுபதி ராஜா


‘கெட்டி பிரம்மடு’ என்ற பெயர் பேச்சு வழக்கில் தெலுங்கில் ‘கெட்டி பொம்மு’ என்று திரிந்தது. ‘கெட்டி பொம்மு’ என்று தெலுங்கில் வழக்கில் இருந்த பெயர் தமிழில் மேலும் திரிந்து ‘கட்ட பொம்மன்’ என்று ஆகிவிட்டது.

நமது பாஞ்சாலங்குறிச்சியின் காவலன் ‘கெட்டி பிரம்மடு’. ‘கெட்டி பொம்மு’ என்று தெலுங்கிலும், ‘கட்ட பொம்மன்’ என்று தமிழிலும் அழைக்கப்பட்டான்.

சில மரபுகள் நம்மைக் கவர்கின்றன—

“கிஸ்தி கட்ட முடியாது” என்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாருடன் வரிந்து கட்டிக்கொண்டு குஸ்தி போட்டு பல போராட்டங்களுக்குப் பிறகு எட்டப்பனால் காட்டிக்கொடுக்கப்பட்ட கட்டபொம்மன் கைதாகி தூக்குதண்டனை விதிக்கப்பட்டான்.

‘கயத்தாறு’ என்னும் இடத்தில் புளிய மரத்தில் தூக்குப் போட ஏற்பாடு ஆகியிருந்தது. கட்டபொம்மனை தூக்கிலிடுவதைப் பார்க்க இதர பாளையக்காரர்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப் பட்டிருந்தனர். அவர்களிடையே பீதியை உண்டாக்க இப்படி ஒரு சூழ்ச்சி வலை.

கட்டபொம்மனின் முகத்துக்கு முன்னால் சுருக்கு போடப்பட்ட கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் பிரிட்டிஷ் அதிகாரி கூறுகிறான்: கட்டபொம்மனே! இந்தக் கடைசி நேரத்தில் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். இன்னும் காலம் கடந்து விடவில்லை. இப்பொழுதுகூட நீ கிஸ்தி கட்ட ஒப்புக்கொண்டால் போதும். உன்னை விட்டுவிடுகிறேன் என்றான்.

கட்டபொம்மன் வீரபாண்டியனல்லவா! சீறுகிறான்.

சீ குக்க! நீகு கிஸ்தி இச்சே தானிகன்ன நேனு சச்சேனுரா!

சீ நாயே! உனக்கு கிஸ்தி கொடுப்பதைவிட நான் சாகிறேனடா! என்று கூறி தனக்கு முன்னே தொங்கிக் கொண்டிருந்த தூக்குக்கயிறு சுருக்கு வளைவுக்குள் தன் தலையை தானே நுழைத்துக்கொண்டான்.

கர்ணபரம்பரைச் செய்திகள் இப்படித் தொடர்கின்றன.

கட்டபொம்மனின் வீரத்தையும் அவன் வெள்ளைக்காரனுக்கு எதிராக நடத்திய போராட்டத்தையும் மக்கள் வெகுவாக சிலாகித்துப் போற்றினர். அவனது தீரமும், சாதுர்யமும் கிராமியப் பாடல்களாகப் பாடப்பட்டு தமிழகமெங்கும் பரவின. கிராமியப் பாடல்களாகப் பாடி பின்னாட்களில் விடுதலை உணர்வைத் தூண்டியவர்கள் பெரும்பாலும் பிச்சை எடுத்தவர்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். தெரு மூலைகளில் பிச்சைக்காகப் பாடும்போது கட்டபொம்மனின் பாடல்களைப் பாடி கிராமங்களில் விடுதலை வேட்கைக்கு அவர்கள்ஔதவினர்.

விடுதலை இயக்கத்தில் பிச்சைக்காரர்களின் பங்கு என்று யாராவது ஆய்வு செய்தால் (இதுவரை யாரும் ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை) இது போன்ற பல செய்திகள் கிடைக்கலாம்.

பெரிய ஊர்களில் பாரதியின் எழுச்சி மிக்க பாடல்களும், கிராமங்களில் உணர்வுகளைத் தூண்ட கட்டபொம்மனின் கிராமியப் பாடல்களும் அந்தக் காலத்தில் பெரிதும் உதவின. விடுதலைக்குப் பின்னும் சிவஞான கிராமணியார் (ம.பொ.சி) கட்டபொம்மனின் வரலாற்றை பேச்சிலும் எழுத்திலும் பரப்பிவந்தார். பின்னாட்களில் சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமா பெரும் ஹிட்டாகி பிரபலமானபிறகு கிராமியப் பாடல்கள் குறைந்துவிட்டன. இதற்கு சினிமா மட்டும் காரணமல்ல. பாடித்திரிந்த பிச்சைக்காரர்களும் மறைந்துவிட்டனர். அவர்கள் பாடிய பாடல்களும் அவர்களோடு மறைந்துவிட்டன.

தன்மானமிழந்து எதிரியிடம் அடிமைபோல வாழ்வதைவிட மடிவது மேல் என்ற உறுதிப்பாட்டினை வெளிக்காட்டிய கட்ட பொம்மன் மக்களின் மனதில் உயர்ந்து நிற்கிறான். – வாழ்க அவனது மரபு.


— ரகுபதி ராஜா
ragupathirajaibr@gmail.com

Series Navigation