காவிரி தீர்ப்பில் கர்நாடகத்தின் நிலைப்பாடுகள்

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

ஜடாயு


காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அனேகமாக எதிர்பார்த்தது போலவே வந்தாயிற்று.
தீர்ப்பு வந்த அன்று தென் கர்நாடகம் முழுவதும், குறிப்பாக பெங்களூரில் பதட்டம் நிலவியது; சில இடங்களில் போக்குவரத்து தடைபட்டது; ஆனால் எந்த விதமான கலவரங்களும் நடைபெறவில்லை. 1991ல் இது போன்ற தீர்ப்பின் போது தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப் பட்ட வன்முறை போன்று இந்த முறை கண்டிப்பாக நடக்க விடக் கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக நின்றது. காவல் படைகள் குவிப்பு மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது இவை மூலம் தற்போதைய ஜனதாதள, பா.ஜ.க கூட்டணி அரசு இதை முழுமையாக சாதித்து விட்டது என்றே சொல்லவேண்டும். பல மாநிலங்களில் கலவரங்கள் அதே இடங்களில் கட்டுக்கடங்காமல் மீண்டும் மீண்டும் முளைத்து வருகையில் கர்நாடக அரசும், மக்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பு எளிதாக வெளிப்படக் கூடிய இந்தத் தருணத்திலும் கடமை உணர்வுடன் அமைதி காத்தது பாராட்டத் தக்கது. பெங்களூர் கேபிள் தொலைக்காட்சி விநியோகஸ்தர்கள் தமிழ் தொலைக் காட்சி சேனல்களைத் துண்டித்திருப்பதும், திரையரங்குகள் தமிழ்ப் படங்களை நிறுத்தியிருப்பதும் கொஞ்சம் மனக் கசப்பு தரும் விஷயங்கள். ஆனாலும், பெரிய அளவிலான தமிழர் எதிர்ப்பு உணர்வு இப்போது இல்லவே இல்லை என்பது நிம்மதி தரும் விஷயம்.

தீர்ப்பு வந்தவுடன் தமிழக அரசியல்வாதிகள் தங்களது உடனே “எங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நியாயமானவை என்று நிரூபிக்கப் பட்டு விட்டது” என்று அகமகிழ்ந்தனர். கர்நாடக அரசியல்வாதிகள் “இந்தத் தீர்ப்பு பெரும் துரோகம் இழைத்து விட்டது” என்று கொதித்தனர். ஆனால், கர்நாடகத்தின் சார்பாக வாதிட்ட இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர் ஃபாலி எஸ். நரிமன், தீர்ப்பு திருப்தி தரும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டார். பிரபல கலைஞரும், கன்னட எழுத்தாளருமான கிரீஷ் கர்னாட் “நாம் பரஸ்பரம் ஒப்புகொண்டு அமைக்கப் பட்ட இந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்று அமல் படுத்துவது தான் சரியானது” என்று அறிக்கை வெளியிட்டு பல கன்னட இயக்கங்களின் கடுப்பை சம்பாதித்திருக்கிறார். தஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாதன் “தேவைக்குக் குறைவாக உள்ள காவிரி நீரைப் பங்கிடுவது என்பது பற்றாக் குறை பட்ஜெட் போடுவது போன்ற விஷயம். எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்துவது சாத்தியமே இல்லை. நாங்கள் கேட்ட அளவு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் தீர்ப்பை வரவேற்கிறோம்” என்றார். “இரண்டு நாட்கள் எங்கள் வீட்டில் தண்ணீர் வரவில்லை, இதுல தமிழ்நாட்டுக்கு வேற தண்ணி குடுக்கணுமா? இது அக்கிரமம்” என்ற வகையில் இந்தப் பிரசினையின் தலையும் வாலும் புரியாத பெங்களூர் சாஃப்ட்வேரிணிகள் ஆங்கிலத்தில் பொரிந்தார்கள். “பெங்களூரிலேயே ஒரு கன்னடருக்கு மூன்று தமிழ் ஆட்கள் என்கிற மாதிரி இருக்காங்க. கர்நாடகத்துக்கு உரிய தண்ணீரில் பெரும்பங்கையும் அவங்க தான் குடிக்கிறாங்க. விவசாயிக்கு என்ன பிரயோசனம்?” என்று மாண்டியா விவசாயி ஒருவர் குமுறினார்.

சன் நெட்வொர்க் குழுமத்தை சேர்ந்த கன்னட உதயா டி.வி. ஒருவிதமான தர்ம சங்கடத்திற்கு ஆளாகியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. தீர்ப்பு வந்த திங்கட்கிழமை அன்று “உதயா வார்த்தெகளு” (உதயா செய்திகள்) சேனலில் விவசாய, கிராமத் தலைவர்களைப் பேட்டி கண்டு இந்த தீர்ப்பு எப்படி ஒருதலைப் பட்சமானது என்று ரொம்ப மெனக்கெட்டு விளக்கினார்கள். “ஏற்கனவே கர்நாடக அரசியல் வாதிகள் சாதுரியம் இல்லாமல் இருக்கும் நிலையில் இப்போது மத்தியில் காங்கிரஸ் எதிர்க்கட்சி வேறு. தமிழக அரசியல் வாதிகள் தேசிய அரசியலில் புகுந்து கலக்கும் ஜித்தர்கள். இது தான் இத்தகைய பாரபட்சமான தீர்ப்புக்கு வழிவகுத்தது” என்று பல கன்னட பொதுமக்கள் கருதுகிறார்கள். “ராஜகீய இச்சா சக்தி இல்லா” (அரசியல் முனைப்பு இல்லை) என்று தொலைக்காட்சிகளில் பலர் குறைப் பட்டுக் கொண்டார்கள்.

மொத்தத்தில் கர்நாடகம் ஒரு பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. ஐந்து தொகுதிகளும் ஆயிரம் பக்கங்களும் உள்ள இந்தத் தீர்ப்பைப் படித்துப் புரிந்து கொண்டு அதன் ஒவ்வொரு அம்சங்களையும் விளக்கும் கடினமான வேலையே இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் எதிர்ப்பு, மேல்முறையீடு, மறுவிசாரணைக்கான உடனடி கோரிக்கை என்று மும்முரமாக வியூகங்கள் வகுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. “தமிழகத்துக்கு 410, கர்நாடகத்துக்கு 270 தான்” என்று எண்ணிக்கை விளையாட்டை வைத்து உணர்ச்சிகள் தூண்டப் படுகின்றன. இதுநாள் வரை அமலில் இருந்த இடைக்காலத் தீர்ப்பின் படி வருடத்திற்கு 205 டிஎம்சி கன அடி தண்ணீர் (மேட்டூர் நீர்த்தேக்கத்தில் அளவீடு) கர்னாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று இருந்தது. இப்போது 192 டிஎம்சி கன அடி தண்ணீர் (பில்லி குண்டுலு நீர்த்தேக்கத்தில் அளவீடு) படி வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. இடையில் உள்ள 60 கி.மீ நிலப்பரப்பில் சேகரமாகும் 25 டிஎம்சி கன அடி தண்ணீரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம் ஏற்கனவே தரக் கடமைப் பட்டுள்ளதை விட அதிகம் தர வேண்டியது 12 டிஎம்சி கன அடி (192+25-205) தண்ணீர் தான்! இதற்குத் தான் இந்தப் பாடு! ஆனால் “கர்நாடகம் கேட்ட 465 கிடைக்கவில்லை, இது அநியாயம்” என்ற ரீதியில் பிரசாரம் நடக்கிறது.

காவிரி நதி பாயும் நிலப் பரப்பு தமிழகத்தை விட கர்நாடகத்தில் அதிகம். ஆனால் நதி நீரால் பயன்பெறும் டெல்டா பிரதேசம் என்று கணக்கிட்டால் கர்நாடகத்தை விட தமிழகத்தில் அதிகம் : “சோழ வளநாடு சோறுடைத்தாகிய” காலங்களிலிருந்து இதற்கு வரலாற்றுக் காரணங்கள் உண்டு. மொத்த நீரை, பயன்பெறும் டெல்டா பிரதேசங்களின் விகிதத்திற்கு ஏற்றபடி பங்கிட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் இந்த தீர்ப்பு தரப் பட்டுள்ளது. தமிழக டெல்டாப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் அளவு 128 டிஆம்சி கனஅடியையும் சேர்க்க வேண்டும் (ஆனால் கர்நாடக நிலத்தடி நீர் அளவை சேர்க்க வேண்டாம்!) என்று கர்நாடக விவசாயிகள் தரப்பில் வைத்த வாதம் எடுபடவில்லை. மேலும், இந்தத் தண்ணீரை வைத்துக் கொண்டு குருவை, சம்பா என்று வருடத்திற்கு இரண்டு பயிர் செய்கிறார்கள் என்று கர்நாடக விவசாயிகள் தமிழக விவசாயிகள் மீது புகார் சொல்கிறார்கள். “ஏற்கனவே பெருமளவில் கிடைக்கும் மழைநீரை சேமிக்காமல் தமிழகம் கடலில் கொட்டுகிறது, அதே சமயம் கர்நாடகத்திலிருந்தும் தண்ணீர் வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. கர்நாடகம் தரும் தண்ணீரில் பெரும்பகுதியும் விவசாயத்திற்கு அல்ல, கடலில் தான் போய்ச் சேரும்” : இந்தக் கருத்தும் பல கர்நாடக விவசாயிகளிடம் உள்ளது. இதற்குத் தீர்வாக, கர்நாடகத்தோடு சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, கல்லணை என்ற பழைய அணைக்கட்டு மட்டுமன்றி வேறு சிறு அணைகளையும் தமிழ்நாடு உருவாக்கி காவிரி நீர் கடலில் போய் வீணாவதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இதில் உண்மை உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

பதினேழு வருடங்கள் பல வல்லுனர்களின் சிந்தனை மற்றும் விவாதங்களின் அடிப்படையில் வழங்கப் பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு, கர்நாடகத்தில் பெரிய அளவு எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு? “தமிழகத்திற்கு சொட்டுத் தண்ணீர் கூடத் தரவேண்டாம்” என்று தீர்ப்பு வந்தால் தான் கர்நாடகம் முழுமையாகத் திருப்தி அடையும் என்றால், அது மிகவும் கவலைக்குரிய விஷயம். நம்மிடம் இருக்கும் குறைந்த அளவு வளங்களை தேசிய சிந்தனையுடன் இருசாராருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பங்கிட்டுக் கொள்வது தான் நடைமுறையில் சிறந்த வழி. இந்த நடுவர் மன்றம் அதைச் செய்திருக்கிறது என்று ஒப்புக் கொள்ளத் தடையாக இருப்பது காவிரியை வைத்து கர்நாடகத்தில் பின்னப் பட்டுள்ள வெகுஜன அரசியல் தான்.

இதற்கு தூபம் போடும் வகையில் இது பற்றிய செய்திகளை வெளியிடும் எல்லா ஊடகங்களும் (குறிப்பாக தொலைக்காட்சிகள்) இது ஒரு சமூக வளங்களின் பங்கீடு என்பதாக இல்லாமல், போர் முடிவு போலவும், கிரிக்கெட் ஆட்ட முடிவு போலவும் “பெரும் வெற்றி”, “படுதோல்வி” என்கிற போக்கில் சித்தரித்து வருகின்றன. ஆங்கில செய்தி ஊடகங்களில் இருப்பவர்கள் பெங்களூர் என்ற மாபெரும் உலகத் தொழில் நகரம் பற்றி அறிந்த அளவு தஞ்சை விவசாய பூமி பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த தீர்ப்பு “பெங்களூரின் வளர்ச்சிக்கு எதிராக” இருப்பதாகவும் ஒருவிதமான பிம்பம் உருவாக்கப் படுகிறது, இது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூர் போன்ற ஒரு வளரும் நகரம் தன் தண்ணீர்த் தேவைகள் அனைத்திற்கும் காவிரியை மட்டுமே நம்பியிருக்காமல், மற்ற பெருநகரங்கள் போல குழாய் கிணறுகள் மற்றும் வேறு பல வழிகளில் தன் நீர்த்தேவைகளை நிறைவேற்ற முயலவேண்டும். தமிழகமும், கர்நாடக விவசாயிகளின் அச்சங்களைப் போக்கும் வகையில் சிறு அணைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இத்தகைய முயற்சிகள் தான் இந்தப் பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு காண வழிவகுக்கும்.


http://jataayu.blogspot.com

jataayu.b@gmail.com

Series Navigation