கால நதிக்கரையில்……(நாவல்)- 28

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

வே.சபாநாயகம்


சிதம்பரம் வீட்டுக்கு நேர் எதிரே தெருவின் மறுபக்கத்தில் நின்றிருந்த அந்தக் கல்க்கம்பத்துக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு. அது தெருவிளக்குக்கான கம்பம். அதில் கண்ணாடிக் கூண்டு வைத்து முன்பெல்லாம் அதனுள் இரவில் விளக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அது வெகுகாலத்துக்கு முன்பாக இருக்கலாம். சிதம்பரத் துக்கு நினைவு தெரிந்த நாளாய் அதில் விளக்குக் கூட்டைக் கண்டதில்லை. கூண்டைப் பொருத்த ஒரு இரும்பு முளை மட்டும் கல்த்தூணின் உச்சியில் இருந்தது. பிற்பாடு அந்தக் கல்த்தூண் சிதம்பரம் வீட்டுக்கு அடையாளச் சின்னம் ஆகிப் போனது.

கிராமப் பஞ்சாயத்து எல்லாம் வரும் முன்னர் ஊர்ப் பெருந்தனக்காரர் ஒருவரை ‘உஷார்க் கமிட்டி’ என்ற ஒரு கண்காணிப்புக் கமிட்டியின் தலைவராக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் நியமித்திருக்கிறார்கள். வரிவசூல் செய்வது
மணியக்காரர் பொறுப்பு. மற்றபடி ஊரின் நல்லது கெட்டது எல்லாம் கவனிப்பது தலைவர் தான். அது கௌரவ உத்தியோகம். சிதம்பரத்தின் பெரியப்பா ‘உஷார்க் கமிட்டி’த் தலைவராக வெகு நாட்கள் இருந்தார். அதனால் விளக்குக் கம்பம் அவர்
வீட்டுக்கு எதிரே அமைக்கப் பட்டது. அதுவே தலைவர் வீட்டு அடையாளம் ஆயிற்று.

உஷார்க் கமிட்டி என்ன வேலை செய்ததோ சிதம்பரத்துக்கு நினைவில்லை. ஆனால் ஊரில் நடக்கும் சண்டை, வம்பு வழக்கு தலைவரிடம் பஞ்சாயத்துக்கு வரும். யார் வீட்டிலாவது திருட்டுப் போய், திருடன் அகப்பட்டால் திருடனைப் பிடித்து வந்து தலைவர் வீட்டுக்கு எதிரே உள்ள கல்த்தூணில் கட்டி விடுவார்கள். தலைவர் விசாரித்து அபராதமோ தண்டனையோ வழங்குவார். அந்த வழக்கம் காரணமாய், எந்த இருவருக்குள்ளாவது தகராறு வந்தால், ‘நடுத்தெருப் புள்ள வீட்டுக் கல்த்தூண்ல புடிச்சுக் கட்டிடுவேன், ஆமாம்!’ என்று சவால் விடுவது சகஜமாயிற்று.

பெரியப்பா காலையில் எழுந்து தெருவுக்கு வந்ததும் அவர் கண்ணில் படுவது விளக்குக் கம்பத்தில் கட்டப் பட்டிருக்கும் திருடனும், அவனுக்குக் கிடைக்கப் போகும் தண்டனையை வேடிக்கை பார்க்கக் காத்திருக்கும் கும்பலும்தான். பெரியப்பா வீட்டுக் குறட்டில் நீளமான புளியம் கொப்புகள் – பத்துப் பதினைந்து போல வெட்டி வைக்கப் பட்டிருக்கும். திருட்டுக் கொடுத்தவன் தயார் செய்து வைக்க வேண்டிய சாங்கியம் அது.

பெரியப்பா கொஞ்சம் தாமதமாக காலை 8 மணியளவில் தான் எழுந்து தெருவுக்கு வருவார். சாதாரணமாகவே அவர் ரொம்பவும் கோபக்காரர். இரக்கம், தயை, தாட்சண்யம் அவரது பார்வையில் இருக்காது. விசாரணை எதுவுமே இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே தண்டனை தான். அதனால் பெரியப்பாவைப் பார்த்ததுமே குற்றவாளி நடுங்கிக் குற்றுயிராகிவிடுவான்.

முழங்காலுக்கு சற்று மேலே நிற்கிற மாதிரி நெஞ்சுவரை உயர்த்திக் கட்டிய நாலு முழ வேட்டி மட்டும் தான் அப்போது அது அவரது உடை. எலும்புகள் துருத்தி நிற்கும் நெஞ்சுக் கூட்டை முன்னிறுத்தியவாறு வந்து திண்ணையில் உட்காருவார்.
உடனே திருட்டுக் கொடுத்தவன் முன்னால் வந்து திருட்டு நடந்த விவரம் சொல்லிகையும் கªவுமாய்த் திருடனைப் பிடித்ததைச் சொல்லுவான்.

அவ்வளவுதான்! ‘குபீலெ’னப் பெரியப்பா எழுவார். எதிர்ச் சாரிக்கு வேகமாய் நடந்து போய் கல்த்தூணில் கட்டப்பட்டு பயத்தால் மிரட்சியுற்றிருப்பவனை ஒரு பயங்கர பார்வை – இரைமீது பாயப் போகும் கொடிய விலங்கு போலப் பார்ப்பார்.
அதற்குள் பிராது கொடுத்தவன் புளியங் கொப்புகளை ஏந்தியபடி பின்னே வந்து நிற்பான். திருடும்போது கையும் கªவுமாய்ப் பிடிபட்ட தகவல் மட்டும் போதும். குற்றம் சாட்டப் பட்டவனிடம் எதுவும் கேட்க வேண்டியதில்லை அவருக்கு.

”குடுறா..!” என்ற அதட்டல் ஒலி அவரிடமிருந்து எழும். அவரது நீட்டிய கையில் நீண்ட புளியங்கொப்பு வைக்கப்படும். அடுத்த கணம் ‘வீல்’ என்ற அலறல் தான் கேட்கும். பயப்பிராந்தி எல்லோர் கண்களிலும் தெரியும்.

அடி என்றால் அப்படி ஒரு ஆவேசமான அடி! உடல் முழுக்கக் கண்மூடித் தனமான விளாசல்! ஏதோ அவரை எதிரி தாக்கியதுபோலவும் அதில் வெறி கொண்டு அவனை விளாசுவது போலவும் இருக்கும். ரத்தம் பீரிட்டுப் பெருகி வழியும். மரண ஓலம் போல அடிபடுகிறவனின் அலறல் இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு அவர்கள் மீது விழும் அடிபோல உடல் நடுங்கும். ஆனாலும் தடுப்பவர் எவரும் இலர். அந்தக் காலத்தில் கிரேக்கத்தில் அடிமைகள் மீது பசித்த சிங்கத்தை ஏவி விட்டுக் கடித்துக் குதறச்செய்வதை வேடிக்கை பார்த்த மக்கள் போலத்தான் இங்கும். ‘என்ன கொடுமை இது?’ என்று சிந்திக்கவும் கூடாமல் அத்தனை பேரும் வேடிக்கைக் காட்சி போலப் பார்த்ததுதான் பெரிய கொடுமையாக சிதம்பரத்துக்கு அந்த வயதில் பட்டது. சில சிறுபிள்ளைகள் கோரக்காட்சியைக் கண்ட பயத்தில் அலறி அழுவார்கள்.

கை ஓயும் வரை அல்லது அடிபடுகிறவன் மயங்கி விழும் வரை அடி நிற்காது. நாலைந்து கொப்புகள் ஒடிந்து வீசப்பட்டுவிடும். அப்புறம்தான் கையிலிருக்க்¢ற கொப்பை வீசி எறிந்துவிட்டு, “அவுத்து உடுடா!” என்று ஓய்வார். அதற்குள் அவர் கை அசந்தும் கால் தொய்ந்தும் களைத்துப் போனவராய் ‘பொத்’ தென்று திண்ணையில் வந்து விழுவார். மேல்மூச்சு கீழ்மூச்சுவாங்கும்.

இத்தனைக்கும் அடி பட்டவன் ‘பூ…’ என்று வேகமாக ஊதினால் ஒரு கஜம் தள்ளிப் போய் விழுகிற நோஞ்சான் உடம்பு அவருக்கு. ஆனால் கட்டப்பட்டவனிடம் பயம் எதற்கு? கட்டப்படாதிருந்தாலும் கூட அவன் அவரை எதிர்க்க முடியுமா?

பிறகு வழக்கமான நடைமுறைப்படி பெரியப்பா வீட்டிலிருந்து கொடுக்கப்படும் எண்ணெயை வாங்கி அடிபட்டு ரத்தம் கசியும் இடங்களில் தடவி ஒத்தடம் கொடுப்பதும் பெரியப்பா விட்டெறியும் காசை வாங்கிப்போய் வலி மறக்க அவனுக்குக் கள் வாங்கிக் கொடுப்பதும் அவனைச் சேர்ந்தவர்களின் பொறுப்பு.

இத்தகைய குரூரத் தண்டனையைப் போலீசில் புகார் செய்யவும் முடியாது. அந்தளவு பெரியப்பாவுக்கு செல்வாக்கும் அதிகாரமும் இருந்தது. இப்போது எண்ணிப் பார்க்கையில் சிதம்பரத்துக்கு அந்தக் கொடுமைக்காரரின் தம்பி மகனாக இருந்து
விட்டதற்கான குற்ற உணர்ச்சி எழுகிறது. வீழ்ந்து புதைந்து கிடக்கும் கல்க்கம்பத் தைப் பார்க்கிறார். பெரியப்பாவும் அவரது குரூரமுமே சாய்க்கப்பட்டு மண்ணில் புதைந்து கிடப்பது போலத் தோன்றுகிறது.

கண்மூடித்தனமாக அடித்தாலும் கை மார்புக்கு மேல் எழாமல் கவனமாய் இருப்பார் பெரியப்பா. அதனால் உயிராபத்து ஏதும் நிகழ்ந்ததில்லை. உணர்ச்சி வசப்படாமல் எந்திரத்தனமாய் தண்டனை இருக்கும் என்பதால் அவருக்கு எந்தப்
பழியும் வந்ததில்லை.

ஆனால் அடுத்த ஊரில் பெரியப்பாவைப் பார்த்து இப்படிக் கட்டிவைத்து அடித்த ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு ஆள் செத்துப் போனான். அதற்குக் காரணம் உணர்ச்சி வசப்பட்டு, பின் விளைவுகளைச் சிந்திக்காமல் கத்துக்குட்டித்தனமாக
கண்டபடி அடித்ததால் ஒரு அடி செவிப்பொட்டில் பலமாய் விழுந்து ஆள் செத்து விழுந்தான். ஆவேசம் தணிந்த பிறகுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது. அடித்தது ஒருவர் மட்டுமல்ல, இரண்டு மூன்றுபேர் என்பதால் கிலி பிடித்து மிரண்டவர்களுக்குத் தென்பு ஏற்பட்டது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்து, செத்தவன் வெளியூர் ஆள் என்பதால் அவசர அவசரமாய் செய்தி பரவுவதற்குள் உடலைக் கொளுத்தி விட்டார்கள். ஊர் ஒரே ஜாதிக்காரர்களைக் கொண்டது என்பதால், கட்டுக்கோப்பாக செய்தி வெளிப்படாமல் அழுத்தி விட்டார்கள். மணியக்காரருக்கு லஞ்சம் கொடுத்து அவர் புகார் செய்யாமல் சரிக்கட்டி விட்டார்கள்.

ஆனாலும் எப்படியோ விஷயம், செத்தவனின் ஊர் ஆட்களுக்குத் தெரிந்து போலீசுக்குப் போய் புகார் கொடுத்து விட்டார்கள். போலீஸ் வந்து தலைவரையும் அவரது கூட்டத்தையும் பிடித்துப்போய் வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளி
விட்டார்கள். போலீசுக்குத் தகவல் தராமல், உடலைக் கொளுத்துவற்கு உடந்தையாய் இருந்த மணியக்காரரும் கம்பி எண்ண வேண்டியாதாயிற்று. வெள்ளைக்காரன் காலத்துப் போலீஸ் என்பதால் சரிக்கட்ட முடியாது போயிற்றோ என்னவோ?

ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் பத்து வருஷம் போல கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்து நாய்ப் படாத பாடுபட்டு, சொத்துக்களை விற்று வழக்கை நடத்தி, கடைசியில் சாட்சி சொல்ல ஆள் இல்லாததால் ஒரு வழியாய் விடுதலை ஆனார்கள். முன்யோசனை இல்லாத முரட்டுத்தனம், வறட்டு அதிகார போதை காரணமாய் இளமையையும் சொத்துக்களையும் இழந்ததுதான் மிச்சம் பாவம்!

இதில் சம்பந்தப் பட்ட மணியக்காரர்பாடுதான் பரிதாபத்திற்குரியது. அவர் சிதம்பரம் ஊர்க்காரர்தான். எதிலும் ஜாக்கிரதையும் கவனமும் காட்டுபவர்தான். ஆனாலும் கனத்த தொகை நீட்டப்பட்டதால் வசமிழந்து சிக்கிக் கொண்டார்.
கொலை நடந்த ஊர்க்கார்கள் ஒட்டு மொத்தமாய் ஜாதி விசுவாசத்தால் கொலைகாரர்களுக்கு அனுசரனையாய் ஆதரவாய் இருந்தார்கள். ஆனால் மணியக்காரருக்குச் சொந்த ஊரில் எந்தப் பிடிப்பும் அனுதாபமும் இல்லை. தன் ஊரிலிலேயே கொஞ்ச நாட்கள் மணியம் பார்த்தபோது தாட்சண்யம் காட்டாமல் பலரது பகைமையைச் சம்பாதித்துக் கொண்டவர். அதனால் கொலை வழக்கில் அவர் சிக்கிக் கொண்டதில் ஊரில் அநேகருக்கு மகிழ்ச்சிதான். அவர் தலைமறைவாய் அலைந்த போதும் பணி நீக்கம் செய்யப் பட்ட போதும் சொந்த பந்தங்களின் அனுதாபம் கூடக் கிட்டவில்லை. அதற்குக் காரணம் இருந்தது.

அவர் ஊர்ப் பெரியவர்களின் வெறுப்பையும் சொந்த சாதிக்காரர்களின் பகைமையையும் சம்பாதித்திருந்தார். யாருக்கும் கட்டுப் படாத சுபாவம். தெய்வ பக்தி, சாஸ்திர சம்பிரதாயங்களைப் பேணுதல் எதிலும் நம்பிக்கை இல்லாதவர். அவரது அப்பா இறந்தபோது பதினாறாம் நாள் காரியம் கூட அவர் செய்யவில்லை. பிறகு திதி, திவசம் எதுவும் செய்யவில்லை. ‘பெத்த தகப்பனுக்கு திவசம் கூட செய்யாத பாவி – அந்த பித்ரு சாபம்தான் இப்பொழுது கொலைக்கேசில் சிக்கிச் சீரழிகிறான்’ என்பது பெரியவர்களின் தீர்ப்பு.

அப்பொழுது சிறுவனாய் இருந்த சிதம்பரத்துக்கும் அவர் தன் அப்பாவுக்குக் கருமகாரியம், திவசம் எல்லாம் செய்யாதது பெரிய குற்றமாகத்தான் பட்டது. இப்பொழுது அதை நினைத்துப் பார்த்தால் அவர் மீது அனுதாபமே எழுகிறது.
இன்று தானும் சகோதரர்களும் வந்திருக்கிற முடிக்கு அவர் ஐம்பது வருஷத்துக்கு முன்பே வந்திருந்தது இப்போது குற்றமாகப் படவில்லை. அப்பா ஆசார அனுஷ்டானங் கள் மிக்கவர்கள். மிகுந்த தெய்வ பக்தியும் தெய்வ நம்பிக்கையும் உடையவர்கள்.
தினசரி சிவபூஜையும் அனுஷ்டானமும் தவறாது செய்தவர்கள். பிள்ளைகளையும் அப்படியே வளர்த்தவர்கள். இருந்தும் பின்னாளில் எல்லா சகோதரர்களும் வெகு தொலைவில் வேறுவேறு இடங்களில் வாழ்ந்ததால் அப்பா அம்மா திதிக¨ளை சிறிது காலத்துக்குப் பின் தொடர முடியாமல், பக்கத்து நகரில் இருந்த ஒரு அநாதைச் சிறுவர் இல்லத்துக்கு ஒரு பெருந்தொகையைக் கட்டி ஆண்டு தோறும் அவர்கள் நினைவு நாட்களில் ஒருநாள் முழுதும் அநாதைச் சிறுவர்க்கு உணவிட ஏற்பாடு செய்து தம் பித்ருக் கடனைத் தீர்க்க வேண்டிவந்ததை இப்போது எண்ணிப் பார்த்தார். அப்பாவுக்கும் இந்த திதி திவசங்களில் பெரிதும் நம்பிக்கை இல்லாததால், இப்படி ஏழைச் சிறுவர்களுக்கு அவர்கள் நினைவாக உணவிடுவது ஏற்புடையதாகத்தான் இருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டார்கள். ஆனால் இயலாமையாலோ, நம்பிக்கை இன்மையாலோ அப்போது மணியக்காரர் தன் பித்ருக் கடனைச் செய்யாததைக் குற்றமாகக் கருதியதை எண்ணி இப்போது உறுத்தல் ஏற்பட்டது.

“கிளம்பலாமா?” என்று மருது அவரை எழுப்பினான். எழுந்து மேல மந்தையை நோக்கி நடந்தார்கள்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்