காப்புரிமையின் புதிய தமிழ் பரிமாணங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

கண்ணன்


kalachuvadu@vsnl.com

தமிழகப் புத்தகச் சந்தையில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவது ஷனவரி 2002 சென்னை புத்தகச் சந்தையில் மறுக்க முடியாதபடி தெளிவு பெற்றது. அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்ப் புத்தக உலகில் நிகழப்போகும் பல பாய்ச்சல்களுக்கு இது கட்டியம் கூறியுள்ளது.

ஒரு தீவிரத் தமிழ் எழுத்தாளன் தன் எழுத்தை நம்பி வாழும் காலத்தின் வருகை விரைவில் நிகழும் என்ற நம்பிக்கையை இந்த மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. ‘‘இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டுவிடாதே. அது உன்னைக் கொன்றுவிடும். இலக்கியம் வறுமையைத்தான் கொடுக்கும்’’ என்ற புதுமைப்பித்தனின் எச்சரிக்கை காலாவதி ஆகிப்போவது நமக்குப் பெருமை தரும் செய்தியாக இருக்கும்.

தமிழ் எழுத்தாளனின் நல்வாழ்வு பதிப்பாளரின் நல்கைகளை நம்பியதாக இருக்க முடியாது என்பதைக் கடந்தகால பதிப்பாளர் – எழுத்தாளர் உறவு தெளிவாகக் காட்டுகிறது. புத்தகங்கள் விற்பதில்லை என்ற பதிப்பாளரின் தீராத புலம்பல் தமிழகத்தின் பலவீனமான புத்தகச் சந்தைக்கு சான்றாக இருப்பதோடு, சில வேளைகளில் எழுத்தாளனின் காப்புரிமையைப் பறிக்கும் ஒரு தந்திரமாகவும் இங்கு தொழிற்பட்டுள்ளது. அத்தோடு எழுத்தாளரின் படைப்பு வேகத்தைப் பல சமயங்களில் அதன் கருவறையிலேயே சாம்பலாக்கியுள்ளது. எழுத்தாளரும் அவர் குடும்பமும் எழுத்துப் பணியைப் பற்றித் தாழ்வுணர்ச்சி கொள்ளும் நிலையையும் ஏற்படுத்தி யுள்ளது.

. . . என் நண்பர் கு. ப. ராஷகோபாலன் காலமானார். சென்ற 35 வருஜ காலமாக (1909 – 1944) ஒரு மாறாத காட்சியை தான் கண்கூசாமல் கண்டு கொண்டு வருகிறேன். எழுத்தாளர்கள் பாதரக்ஷை கூட இல்லாமல் கப்பிக்கல் ரோட்டில் நடந்து போகிறார்கள். அவர்களைக் கட்டி மேய்த்துத் ‘தீனி’ போடுகிறேன் என்கிற இடையர்கள் (புத்துயிர் பிரசுரலாய சொந்தக்காரர்கள்) மோட்டார் கார்களிலும், வைரத் தோடுகளின் மினு மினு இடையில் ஈடுபட்டு மெய்ம்மறந்து போகும் காட்சியைக் காண்கிறேன். உழவன் வீட்டில் நெல் குதிர் ஏது ?

(கே. எஸ். வெங்கட்ரமணி, போகிற போக்கில், பாரதமணி, மே 1944)

சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு துறை வல்லுனரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆங்கிலப் புலமையும் உலகளாவ பயணித்த அனுபவமும் பெற்றவர் அவர். தம்முடைய துறை சார்ந்து சில பத்தாண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய தமிழ் நூல் பற்றிப் பேச்சுத் திரும்பியது. தாம் எழுதிய நூலுக்குரிய காப்புரிமை தமக்கா அல்லது வெளியிட்ட பதிப்பகத்திற்கா என்ற குழப்பத்தில் இருந்தார் அவர். நூலில் காப்புரிமை உங்களுக்கு என்றுதானே அச்சாகியுள்ளது என்று கேட்டேன். நூலின் பதிப்பு விபரப் பக்கத்தை அவர் பார்த்ததில்லை. ஆனால் இதில் வியப்படைய எதுவுமேயில்லை. மிகப் பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்கள் தம் நூலின் பதிப்பு விபரப் பக்கத்தைப் பார்ப்பதில்லை. வருமானம் இல்லாத இடத்தில் உரிமையைத் தக்க வைத்துக்கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டாததில் பிழையில்லை. சில மோசடிப் பதிப்பாளர்கள் எழுத்தாளரின் உரிமையைப் பதிப்பு விபரப் பக்கத்திலேயே பறித்துவிடும் சம்பவங்களும் இங்கு நிகழ்கின்றன. மேலும் பதிப்பாளர்களுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்குமான உறவு இங்கு பல சமயங்களில் ஆண்டான் அடிமை உறவைவிடக் கேடானதாக இருந்து வந்திருக்கிறது.

. . . என் புத்தகங்கள் மிகுதியாக விலையாகமாட்டா என்பதையும் உங்கள் முயற்சியாலேயே இவ்வளவுதானும் விலையாவது என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். ஏனையவற்றை நோக்கக் கள்ளர் சரித்திரத்திற்குச் சற்று மிகுதியாக என்னிடம் ஆர்டர் வந்து கொண்டிருக்கிறது. அஃது ஒரு வகுப்பினைப் பற்றியதாகையாற் போலும் ? பத்திரிகை வாயிலாக வெளியிடங்களிற் பரவுமாறு செய்யின் இன்னம் சிறிது மிகுதியாக விலைப்படக் கூடும். நிற்க – பொருள் வருவாய் ஒன்றே கருதியிருப்பின் நான் இவற்றையெழுதி வெளிப்படுத்தியிருக்கமாட்டேன். இப்புத்தகப் பதிப்புகளுக்கு என் நண்பர்களிற் சிலர் முன்வந்து உதவியிராவிடில் எனக்கு மிகுந்த நஷ்டமுண்டாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. யாதொரு வேலையும் செய்யாது சில புத்தகங்களை இருக்கிறபடியே அச்சிட்டுப் பொருளீட்டுதல் கூடுமென்பதும், ஆராய்ச்சிகளி னாலே பெரும் பிரயாசையும், பொருள் நஷ்டமும் உண்டாகும் என்பதும் எனக்குச் செவ்வனே விளங்குகின்றன என்றாலும் இனியும் நான் அம்முறையை மாற்றவியலாது. முன் சென்ற முறையில் இன்னம் திருத்தமாகவும் விரிவாகவும் செல்ல வேண்டுவது கடமையென ஓர்கின்றேன். உண்மையில் பொருளி லாவது புகழிலாவது எனக்கு விருப்பமுண்டு என்றால் அது நான் ஆற்ற வேண்டும் பணிகளுக்கு வலியளிக்கக் கூடுமே என்ற எண்ணத்தினாலேயே ஆகும் . . .

(ந. மு. வே. நாட்டார் பதிப்பாளருக்கு எழுதிய கடிதம்; ஆ. இரா. வேங்கடாசலபதியின் ஆய்வேட்டிலிருந்து)

நன்றாக விலைபோகும் தன்னுடைய நூலை மறுபிரசுரம் செய்ய வேண்டி எழுத்தாளர் பதிப்பாளருக்கு எழுதிய கடிதம் இது!

பதிப்பாளர்கள் தமிழ் எழுத்தாளர்களின் காப்புரிமைத் தொகையை சுருட்டிய ஆயிரம் சம்பவங்கள் இங்கு நடந்துள்ளன. இதுவரை எந்த எழுத்தாளர் கூட்டமைப்பும் எழுத்தாளர் உரிமைக்காகக் குரல் கொடுத்ததில்லை. ஆனால் எழுத்தாளரின் உரிமை பற்றி அரை நூற்றாண்டிற்கு முன்னரே கரிசனப்பட்டவர் தினமணி (முன்னாள்) ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம்.

தங்களுடைய பாட்டுக்கள் பிரசுரமானால் போதும் என்று கவிகள் நினைக்கிறார்கள். கதைகள் புத்தக ரூபமாய் வந்தால் போதும் என்று அவற்றை எழுதுகிறவர்கள் விரும்புகிறார்கள். இந்த நினைப்பைப் பல பிரசுரகாரர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

(‘தமிழ் எழுத்தையும் எழுத்தாளரையும் பற்றி திரு. டி. எஸ். சொக்கலிங்கம்’, மணிமலர் ப. 40.)

என்று அவர் வருந்திக் கூறி எழுத்தாளர்களைச் சங்கம் அமைக்குமாறு தூண்டியுள்ளார்.

‘‘(டி. எஸ். சொக்கலிங்கம்) எழுத்தாளர்களின் பதிப்புரிமை, ஊதியம் ஆகியவற்றை முறையாகவும், முழுமையாகவும் பெறுவதற்கு இடைவிடாது முயன்றார். ஓர் எழுத்தாளரின் கதையைத் திரைப்படமாக்கவும், எழுத்தாளரை ஏமாற்றவும் முயற்சியொன்று நடந்ததை அறிந்த சொக்கலிங்கம் உடனே அக்கதையைத் ‘தினமணி’யில் தொடராக வெளிவரச் செய்து, பதிப்புரிமையைக் காப்பாற்றினார்.’’

(டி. எஸ். சொக்கலிங்கம் : அரசியல் இதழியல், பா. மதிவாணன், 1998)

புதுமைப்பித்தன் தினமணி, மணிக்கொடி, காந்தி இதழ்களில் எழுதிய கதைகளுக்கான உரிமை அவருக்கே உரியது என்பதைத் தெளிவுபடுத்தி டி.எஸ்.சொக்கலிங்கம் எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்துள்ளார்.

Dhinamani

Editor : T.S.Chockalingam, M.L.A. G.T., MADRAS.

4th Nov.1939

C.Vridhachalam Esq.,

Madras.

Dear Sir,

With reference to our conversation, I write this to confirm that copy-right of your stories that appeared in Gandhi, Manikkodi Weekly and fortnightly editions, Dhinamani daily and Dhinamani Annual, rests with you.

Yours sincerely,

T.S.Chockalingam

இதற்கு அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு குமுதம் அதில் வெளியிடப்படும் அனைத்து எழுத்துகளுக்கான முழு உரிமையை எழுத்தாளர்களிடமிருந்துள பிடுங்கும் அறிவிப்பை (யுபிரசுரமாகும் கதை, கட்டுரை மற்றும் படைப்புகள் அனைத்திற்கும் பதிப்பாளரே உரிமையாளராவார்ரு) ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டு வருகிறது.

தமிழ் எழுத்தாளனின் காப்புரிமையை நாம் வலியுறுத்துவதன் காரணம் காப்புரிமை புனிதமானது என்பதால் அல்ல. மொழிபெயர்ப்புகள் வெளியிடும் நலிந்த தமிழ் பதிப்பாளர்களிடமிருந்து ஒரு தொகையைப் பிடுங்கி மேற்கத்திய எழுத்தாளர் கையில் ஒப்படைத்து விடவேண்டும் என்பதாலும் அல்ல. பிற மொழிப் படைப்புகள் தமிழாக்கம் செய்யப்படுவதற்குத் தடை ஏற்படுத்தும் விதத்தில் காப்புரிமையை நடைமுறை சாராத ரீதியில் வலியுறுத்துவதும் நமது நோக்கமல்ல. எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவுதான் அடிப்படையானது. இந்த உறவை வலுப்படுத்தும் நோக்கிலேயே காப்புரிமையை அணுகவேண்டுமே அன்றி படைப்பை முடக்கும் நோக்கில் அல்ல.

முதல் காப்புரிமைச் சட்டம் 1879இல் இயற்றப்பட்டது. பல படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் திருடப்படுவதாக கொடுத்த புகாரே இதற்கு அடிப்படை. முதல் உலகளாவிய காப்புரிமை உடன்படிக்கை ஷெனீவாவில் செப்டம்பர் 1952இல் கையெழுத்தானது. பின்னர் அது பல திருத்தங்களுடன் ஷுலை 24 1971இல் பாரீசில் கையெழுத்தானது. பெர்ன் நகரிலும் 1971ஆம் ஆண்டு இலக்கிய மற்றும் கலைப்பொருட்களுக்கான காப்புரிமையைப் பாதுகாக்கும் நோக்கோடு பிரத்யேகமாக ஒரு மாநாடு கூட்டப்பட்டு உடன்படிக்கை காணப்பட்டுள்ளது. இதில் ஒரு படைப்பை மொழிபெயர்த்து பிற மொழிகளில் வெளியிடுவது தொடர்பாக விரிவான சட்டங்கள் உள்ளன.

1. ஒரு படைப்பாளியின் படைப்பு பிரசுரிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும், உலகளாவிய காப்புரிமை உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கும் ஒரு நாட்டின், பரவலாகப் பேசப்படும் ஒரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரமாகவில்லை என்றால், அந்த நாட்டின் அரசு அந்நூலை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான உரிமையை (முழு உரிமையை அல்ல) வழங்க முடியும்.

2. மூல ஆசிரியரைத் தொடர்பு கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு இயலவில்லை என்பதை நிரூபித்து மொழிபெயர்ப்பு உரிமையைப் பெறலாம்.

3. முன்னர் வெளிவந்த மொழிபெயர்ப்பின் எல்லாப் பிரதிகளும் விற்றுத்தீர்ந்துவிட்டன என்ற அடிப்படையிலும் பிரசுர உரிமையைப் பெறலாம்.

4. மூல ஆசிரியரையோ காப்புரிமை பெற்றவரையோ தொடர்புகொள்ள இயலாத நிலையில் அவர் எந்தத் தேசத்தின் குடிமகன் என்ற விபரம் தெரிந்தால், அந்நாட்டின் தூதரகம் மூலமாக உரிமை கோரி விண்ணப்பிக்கலாம். அல்லது அந்நூலின் பதிப்பாளருக்கு விண்ணப்பிக்கலாம். இத்தகைய விண்ணப்பங்களை அனுப்பிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு பதில் இல்லாத நிலையில் மொழிபெயர்ப்பாளர் தன்னுடைய அரசிற்கு உரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.

5. இந்திய அரசு தனது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் மேற்படி கோரிக்கைகளைப் பரிசீலிக்க யுகாப்புரிமைக் குழுமம்ரு ஒன்றை நியமித்துள்ளது.

தமிழ்ப் படைப்புகள் பிற மொழிகளில் அதிக கவனம் பெற்று வரும் காலகட்டம் இது. தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளில் மொழி பெயர்க்கவும் உலகத் தரத்தில் பிரசுரிக்கவும் தமிழர்களின் உலகளாவிய வலைப்பின்னல் உருவாகி வருகிறது. நம் படைப்புகளை உலகிற்கு எடுத்துச் செல்ல வெள்ளையர்களின் கடாட்சத்தை நாம் நம்பியிருந்த காலம் மலையேறிவிட்டது. தமிழ்த் திரைப்படத் துறையும் தொலைக் காட்சிகளும் தமிழ்ப் படைப்புகளை நோக்கி தம் கவனத்தைத் திருப்பும் சூழல் உருவாகி வருகிறது. இந்த மாறிவரும் சூழலில் தமிழ் எழுத்தாளன் பயன்பெற வேண்டுமெனில் காப்புரிமை பற்றிய பிரக்ஞையை அவர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிற மொழியினர் நம் படைப்புகளின் காப்புரிமையை மதிக்க வேண்டுமெனில் அவர்களது காப்புரிமையை நாமும் மதிக்க வேண்டியது அவசியம். இணையத்தின் யுகத்தில் ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளரையோ ஆஸ்திரேலியப் பழங்குடி எழுத்தாளரையோ தொடர்பு கொண்டு உரிமை பெறுவது பெரிய விஜயமல்ல. நமது புத்தகச் சந்தையின் நிலையையும் காப்புரிமைத் தொகையைக் கொடுப்பதில் பொருளாதாரச் சட்டதிட்டங்களால் ஏற்படும் தடைகளையும் எடுத்துக் கூறினால் பெரும்பான்மையான அயல் மொழி எழுத்தாளர்கள் (இலவசமாகவே) உரிமை தர மறுப்பதில்லை. உலகின் ஆக முதிய வாழும்மொழியில் தம் படைப்புகள் மொழியாக்கம் செய்யப்படுவதில் அவர்கள் பெருமையே கொள்கின்றனர். இவ்வாறு அனுமதி பெற்ற நூல்களும் தமிழில் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் இந்திரன் யுஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்ரு (1982) என்ற ஆப்பிரிக்கக் கவிஞர்களின் தொகுதி ஒன்றை தமிழாக்கம் செய்து வெளியிட்டபோது International Copyright Centre (Newyork) என்ற அமைப்பு மூலமாக உரிமை பெற்றே வெளியிட்டுள்ளார். க்ரியா பல மொழிபெயர்ப்பு நூல்களை உரிய அனுமதி பெற்று வெளியிட்டுள்ளது. காலம் பதிப்பகம் (கனடா) சினுவா ஆச்சிபியின் யுசிதைவுகள்ரு நூலை உரிய அனுமதி பெற்று மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இன்னும் பல உதாரணங்களைக் குறிப்பிட முடியும். எனவே உரிமை பெற்று வெளியிட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொஞ்சம் உழைப்பும் எழுத்தாளரின் உரிமையை மதிக்கும் பண்பும் போதுமானதாக உள்ளது என்பதே யதார்த்த நிலை.

காப்புரிமை மீறல் என்பது ஒரு பொருளாதாரக் குற்றம் மட்டுமல்ல அது ஒரு மனித உரிமை மீறலும்கூட. ஏனெனில் காப்புரிமை என்பது தார்மீக ரீதியாக சொத்துரிமையைவிட நியாயமானது. சொத்துரிமையின் அடிப்படை ஒரு இடத்தை யார் முதலில் குடியேறி கைப்பற்றியது என்பதிலேயே உள்ளது. காப்புரிமை ஒருவர் தாமே உருவாக்கிய படைப்பின் மீது கொள்ளும் உரிமையாகும். காப்புரிமை ஒரு குழந்தையின் மீது பெற்றோருக்கு இருக்கும் உரிமையோடு ஒப்புமை உடையது. எனவேதான் சொத்துரிமையை மறுக்கும் மார்க்சியம்கூட காப்புரிமையை மதிக்கிறது.

படைப்பின் மீது மட்டுமல்ல. நாம் உருவாக்கும் கருத்துகளின் மீதும் நமக்கு அறிவுடைமை உரிமை (intellectual property right) உண்டு. ஒரு கட்டுரை எழுதும்போது கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் மேற்கோள் காட்டுவதும் அடிக்குறிப்பு போடுவதும் இந்த உரிமையை மதிப்பதாகும்.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஒலித்த இந்தத் தீர்க்கமான குரலைக் கேளுங்கள்:

தமிழ் நூலாசிரியர் படுங் கஷ்டங்களை ஈசனே தீர்த்துவைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ்நாட்டில் தக்க மதிப்பில்லை . . . தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் ஒரு சிலர் தோன்றியிருக்கிறார்கள்; இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஷனங்கள் புதிய வழியில் ஒரு நூலைக் காணும் போது அதில் ரஸ மனுபவிக்க வழியில்லை . . . ‘பிரமாணஸ்தர்கள்’ தமிழ் நூல்களிலே புதுமையும் வியப்பும் காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத்துடனிருக்கிறார்கள். ஆகவே, நூலாசிரியர், தமக்குத் தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட வழியில்லாமல், வேறு தொழில் செய்யப்போய் விடுகிறார்கள். காலம் சென்ற ராஷமையர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார். அவருக்குத் தகுந்த சம்மானமில்லை. ஆதலால், அவர் அந்தத் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு போக இடமில்லாமல், ஆரம்பத்திலேயே கைவிட்டு, இங்கிலீஷ் மாதப்பத்திரிகை நடத்தப் போய்விட்டார்.

(நூலாசிரியர் பாடு, பாரதியார் கட்டுரைகள்)

பாரதி நூலாசிரியர் மீது கரிசனம் கொண்டு பிரசுரத் தொழில் பற்றி ஆதங்கத்துடன் எழுதிய நிலைமை மாற வேண்டும். மாறி வருகிறது. பதிப்பாளரும் எழுத்தாளரும் வாசகரும் பரஸ்பர உரிமைகளை மதித்து ஒன்றிணைந்து இயங்கும் சூழல் உருவாக வேண்டும். ‘தமிழ்ச் சூழலின் அவலம்’ பற்றி ஏற்பட்டு வரும் மாற்றங்களை அங்கீகரிக்காமல் பழக்க தோஜத்தில் புலம்பிக் கொண்டிருப்பவர் களுக்கு ஓய்வு கொடுத்து அனுப்பும் காலத்தை நோக்கிப் பயணப்பட வேண்டியது மிக அவசியம்.

(இக்கட்டுரையின் உருவாக்கத்தில் உதவிய ஆ.இரா.வேங்கடாசலபதி, ப.மதிவாணன் ஆகியோருக்கு நன்றி)

(கண்ணன், காலச்சுவடு இதழின் ஆசிரியர்)

Series Navigation