கானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


கூடல் நகர் தபால் அலுவலகத்தில்தான் நாங்கள் போஸ்டல் ஆர்டர் வாங்கினோம். அப்படியே பழக்கம் ஆகிவிட்டது. மணிக்கு வீடு சாந்தி நகரில். பஸ் பிடித்து வருவான். நாங்கள் சேர்ந்தே வந்து வாங்குவோம்.

போஸ்டல் ஆர்டர் வாங்கியே அந்த குமாஸ்தா பரிச்சயம் ஆகிவிட்டார். தடித்த கண்ணாடி போட்ட ஒல்லி மனுஷன். காலரில் கர்ச்சீப் வைத்திருப்பார். பார்க்க ஆள் ஆன வயதைவிட வயோதிகராய்த் தெரிந்தார். பொடி போட்டு கர்ச்சீப்பால் மூக்கை தயிர் கடைவதைப் போல அபிநயித்தபடி அந்தக் காட்டம் உள்ளிறங்குவதைக் கண்மூடி அனுபவிப்பார். பின் நிமிர்ந்து ‘ ‘அடேடே வாங்க தம்பி. போஸ்டல் ஆர்டரா ? ‘ ‘ என்பார். அவருக்கு ஒருவேளை கல்யாண வயசில் பெண் இருக்கலாம் என்ற அனுமான அடிப்படையில் அவரை நாங்கள் பொறுத்துக் கொண்டோம். பணத்தை நாலு முறை எண்ணுவதும் காசுகளைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறதும் பிறகு மேஜையில் டாஸ் பண்ணி ணங்கென்று விழும் சத்தம் பார்ப்பதும்…

‘ ‘டேய் இந்த நாய் பார்க்கிற வேலைக்கு இவனுக்கு என்ன சம்பளம்ன்றே ? நம்மால இதைச் செய்ய முடியாதா மாப்ளே ? ‘ ‘ என்றான் சிவா ஒருநாள். கொஞ்சம் குடித்திருந்தான் அப்போது. ஆத்திரமாய் இருந்தான். பெரிசாய் விவகாரம் ஆகிவிடும் போலிருந்தது. உள்க்குமுறலுடன் வந்தவன் தபால் அலுவலக வாசலிலேயே எகிற ஆரம்பித்திருந்தான். ‘ ‘நீ உக்காருடா. நான் போய் வாங்கிட்டு வரேன் ‘ ‘ என்றேன் நான். மணி ‘ ‘வா மாப்ளே ‘ ‘ என அவனை இழுத்தான். சிவா திமிற மணி விடவில்லை. மணி நல்ல பாடியான ஆள். சிவா ஒல்லிப் பிச்சான். மணி அவனைக் கோழி அமுக்குவது போல அமுக்கி விட்டான்.

மூன்று பேரும் ஒன்றாய் எழுதிப் போட்டோம். எங்கள் மூவரில் மணியின் புகைப்படம் நன்றாய் இருந்தது. டை கட்டி ஸ்டூடியோ கோட் – ஓசி – போட்டுக் கொண்டிருந்தான். இவ்ள வசதி இருக்கிறவனுக்கு வேலை தேவையே இல்லை என்று தோன்றியது அதைப் பார்க்க. அதற்காக திருவோடு நீட்டியபடி பஞ்சை பனாதை மாதிரியும் போஸ் கொடுக்க முடியாது.

என் முகம் சுரத்தாக இல்லை. எப்போதுமே போட்டோ என்றாலே சிறிய உதறல்தான். அந்த நிமிடம் வரை ஆசுவாசமாய் இருந்தால் கூட ஸ்மைல் பிளீஸ், என அவன் கட்டளையிடும்போதுதான் திண்டாடிப் போகும். புகைப்படங்களில் யார் என்னைப் பார்த்தாலும் இரக்கப் படுவார்கள். மீசை வேறு இல்லை.

‘அதாம் பிரதர் உனக்கு மாத்திரம் கார்டு அனுப்பி யிருக்கான். எம் மூஞ்சியப் பாரு. மூஞ்சியா இது. விடியா மூஞ்சி சீய்… ‘ என்று சிவா காறித் துப்பினான்.

மூவரில் எனக்கு மட்டும் இன்டர்வியூ கார்டு வந்திருந்தது. இதுபற்றி எனக்கே ஆச்சரியம். எனெனில் மணிக்கு ஷார்ட்ஹேண்ட் லோயர் இருக்கிறது. பன்ச் கார்டு ஆபரேஷன் சர்ட்டிபிகேட் இருக்கிறது. PABX டெலிபோன் இன்டர்காம் பெட்டியில் பயிற்சி – லைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ – ஜர்னலிசம்… மணி என்னமாவது படித்துக் கொண்டே இருந்தான். அவங்கப்பா கெடுபிடி அப்பிடி. கிடுக்கிப் பிடி!

‘நான்… வேற அப்பாவுக்குப் பிறந்திருக்கலாம்டா… ‘ என மணி சோகமாய்ச் சொல்ல, சிவா வேடிக்கை பண்ணுகிறாப் போல, ‘எதுக்கும் உங்கம்மா கிட்ட கேட்டுக்க… ‘ என்றுவிட்டு, சாரி சொன்னான்.

‘மாப்ள வேலை கிடைச்சாச்சி. ஜமாய் ‘ என்றான் மணி. ரொம்ப சந்தோஷமாய் கை குலுக்கி இதைச் சொன்னான். ‘நம்ம செட்ல கோவிந்தராஜுக்கு மொதல்ல வேலை கெடச்சது. அடுத்து நீயா ? வெரி குட் ‘ என்றான்.

‘அதுக்குள்ள வேலை கிடைச்சாப்லியே முடிவு பண்ணிடாதீங்கப்பா… இன்னும் எவ்ளவோ இருக்கு ‘ என்றேன் நான். ஆனாலும் அவன் அப்படிச் சொன்னது எனக்கு சந்தோஷமாய் இருந்தது.

சிவா வீட்டுக்கு இருவரும் போனோம். சிவா துாங்கிக் கொண்டிருந்தான். மதியம் ஒரு மணிக்கு அவன் துாங்கிக் கொண்டிருந்தது ஆச்சரியமாய் இருந்தது.

சிவாவின் அப்பா சட்டை யில்லாமல் வாசலில் உட்கார்ந்திருந்தார். ‘சிவா ? ‘ என்று நான் கூப்பிட்டேன். சின்னப் பயல்கள் பந்து விளையாடும்போது நடுவே ‘மங்க்கி ‘ என ஒருவனை நிறுத்திக் கொள்வார்கள். அவன் கைக்கு எட்டாமல் பந்தை உயரே துாக்கிப் போடுவார்கள்… என் குரல் சிவாவின் அப்பாவைத் தாண்டி உள்ளே போய் சிவாவின் மடியில் விழும் என நான் நம்பினேன்.

‘சிவா ? ‘

‘சிவா துாங்கறான் ‘ என்றார் அவர். அப்படியே எங்களைத் திருப்பி யனுப்பிவிட அவர் விரும்பினார்.

மணி என்னைப் பார்த்தான். திரும்பிப் போக அவன் இஷ்டப் பட வில்லை. நல்ல வெயில். அவன் பஸ்சுக்குக் காசு இல்லாமல் சைக்கிளில் வந்திருந்தான். சிவாவை அவன் பார்க்க விரும்பினான். எனக்கும் அவனிடம்சொல்ல விஷயம் இருந்தது…

தவிரவும் நாங்கள் மூவரும் முடிந்தவரை சேர்ந்தே பொழுதைக் கழிக்க விரும்பினோம். தனிமை பயமாய் இருந்தது. சாப்பிட துாங்க… என தவிர்க்க முடியாத சமயம் மட்டுமே நாங்கள் வீடு திரும்பினோம். அப்பா அம்மாவின் முகத்தைப் பார்க்கவே பயமாய் இருந்தது. குறைந்த நேரமே வீட்டில் இருந்தாலும் அவர்களின் வசவும் அறிவிரைகளும் சகிக்க முடியவில்லை. எரிச்சலாயும் இரக்கமற்றதாயும் இருந்தது அவர்கள் எங்களை நடத்திய தோரணை.

‘என்ன ? ‘ – என்றார் சிவாவின் அப்பா, ஏண்டா இன்னும் நிக்கறீங்க என்ற தொனியில்.

‘சிவா…. ‘

‘அதான் சொன்னேன்ல… ‘

மணி என்னைப் பார்த்தான்.

‘சிவாவப் பார்க்கணும் சார் நாங்க ‘ என்றேன் நான். ஈசிசேரைப் பின்னுக்கு இழுத்தபடி அவர் பிறகு பேசாமல் வழிவிட்டார். ஒரு பெரிய ஆசுவாசத்துடன் நாங்கள் உள்ளே போனோம்.

ஓரளவு பெரிய வீடு அது. அவர்கள் சொந்த வீடு. எங்கள் மூவரில் சிவா வசதியானவன். வெயிலில் சுற்றி விட்டு பிரிஜ்ஜிலிருந்து ஐஸ்வாட்டர் எடுத்துக் குடிப்பான்.

குப்புறப் படுத்தபடி சிவா வாயைத் திறந்துகொண்டு துாங்கிக் கொண்டிருந்தான். லுங்கி நெகிழ்ந்திருந்தது. நல்ல வெயில். ஃபேன் ஐந்தில் சழன்று கொண்டிருந்தது. இடுப்பு முடிச்சு அவிழ்ந்து லுங்கி நுனி காற்றில் படபடவென்று துடித்தது.

‘சிவா ? ‘

‘எழுந்திரு சிவா. ஸ்ரீதருக்கு வேலை கெடைச்சிருக்கு… ‘

‘அப்பிடியா ? ‘ என்று சிவாவின் அப்பா எழுந்து வந்தார்.

‘இன்டர்வியூ ‘ என்றேன் நான் திரும்பி. இதைச் சொல்லும்போது மகிழ்ச்சியாய் உணர்ந்தேன். எந்தக் கம்பெனியில் என்று அவரது அடுத்த கேள்வியை எதிர்பார்த்தேன்.

‘இன்டர்வியூதானா ? ‘ என்றார் அவர். திரும்பி ஈசிசேருக்குப் போனார்.

‘சிவா ‘ என்றான் மணி.

‘எழுந்திருடா… ‘ என்று நான் ஓர் ஆத்திரத்துடன் அவனை உலுக்கினேன்.

‘சிவா ? ‘

‘ம் ‘

‘எழுந்திரு சிவா… ‘

‘ம் ‘

‘சிவா ? ‘ என நான் ஆத்திரத்துடன் உலுக்கினேன்.

‘செகண்ட் ஷோ ‘ என்றார் சிவாவின் அப்பா. தன் வாழ்வில் அவர் செகண்ட் ஷோ பார்த்ததே கிடையாது. டி.வி.யே இந்தக் காலத்திலும் பத்து மணிக்கு அணைத்து விடுவார்… துபாய் கம்பெனி ஒன்றில் அவர் இருந்தார். பத்து வருஷம் போல இருந்தார். திடாரென்று சம்பாதித்தது போதும் என்கிற எண்ணம் அவருக்கு எற்பட்டது. காரணம் தன் மகனின் வாழ்க்கை பற்றி அதுவரை அவர் கவலைப் படாதிருந்தார். மனைவி ஊரில் இருந்து போட்ட கடிதங்கள் அவரைக் கலவரப் படுத்தின.

சிவா எழுந்து உட்கார்ந்தான்.

‘என்னடா இந்தத் துாக்கம் துாங்கறே… ‘ என மணி சிரித்தான். ‘ம் ‘ என சிவா திரும்பிப் படுக்கு முன் –

மணி அவனைப் பிடித்துக் கொண்டான்.

‘சிவா, ஸ்ரீதருக்கு ‘

‘சரி ‘

‘என்ன சரி ? ‘

‘ம் ‘

‘சிவா ? ‘ என நான் ஆத்திரத்துடன் உலுக்கினேன்.

‘துாங்கனாத் துாங்கட்டுமே ‘ என்றார் சிவாவின் அப்பா. எங்களுக்கு அவனை விட்டுவிடுவதைத் தவிர வேறு வழி இல்லை போலிருந்த சமயம் ‘என்னடா ‘ என்றான் சிவா துாக்கம் கலைந்து.

—-

உடுப்பி ஹோட்டலில் மூவரும் சாப்பிட்டோம். மணிக்கு நல்ல பசி. அவன் பேசாமல் விறுவிறுவென்று சாப்பிட்டான். திடாரென்று நிறுத்தி ‘சிவா பணம் இருக்கில்ல ? ‘ என்று கேட்டான் மணி.

சிவா தலையாட்டியபடியே தண்ணீர் குடித்தான். இன்னொரு தம்ளர் குடித்தான். ‘என்ன வெயில் ‘ என்றான் சிவா.

‘என்னடா அவ்ள துாக்கம் உனக்கு ? ‘ என்றான் மணி.

‘எப்ப படுத்தே ‘ என்று நான் கேட்டேன்.

‘சினிமாவாடா ? ‘ என்று மணி கேட்டான்.

‘எங்களை விட்டுட்டு நீ மட்டும் ஜாலியாக் கிளம்பிட்டே… ‘

சிவா எதற்கும் பதில் சொல்லாமல் சிரித்தான். பின் வாயைத் துடைத்துக் கொண்டபடியே ‘எந்தக் கம்பெனிலடா இன்டர்வியு ? ‘ என்றான்.

மணி முந்திக் கொண்டு பதில் சொன்னான்.

‘நாம மூணு பேரும் போட்டமே… ஹிண்டுல வந்தது… ‘

‘ஓ அதுவா, அது ஓப்லெஸ் (hopeless) படுசுமாரான கம்பெனிடா. நான் விசாரிச்சிட்டேன் ‘ என்றான் சிவா.

‘எங்கப்பா கூட அதான் சொன்னார ‘ என்றான் மணி.

திடாரென்று அவர்கள் கூட்டு சேர்ந்து கொண்டாற் போலிருந்தது. நான் என்னை நிதானப் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு புன்னகையுடன் நான் சொன்னேன் இப்படி. ஏனெனில் வாதத்தில் அவர்களை முறியடிப்பது என் நோக்கமல்ல. நான் சொன்னேன். ‘ஆரம்பத்திலியே எட்டாயிரம் தர்றாளே… சின்னக் கம்பெனியாவா இருக்கும் ? ‘ என்று நான் கேட்டேன்.

‘இன்டர்வியூ கார்டு வெச்சிருக்கியா ? ‘

‘வேற என்ன சார் வேணும் ? ‘

‘காபி வேணுமாடா ‘

‘ரெண்டு காபிய ஷேர் பண்ணிக்கலாம் ‘

‘எடுத்திட்டு வரல இவனே ‘ என்றேன் நான்.

‘ஒன் இன்டர்வியூ நம்பர் என்ன ? ‘

‘ஞாபகம் இல்ல ‘

மணி ‘எத்தனை பேரை இன்டர்வியூவுக்குக் கூப்ட்டிருக்கானோ… ‘ என்றான்.

சிவா ‘அதைப் பத்தி என்ன. இவனுக்கு லக் இருந்தா எல்லாங் கிடைக்கும்… ‘ என்று எனக்கு ஆறுதலாய்ப் பேசினான்.

‘அவ்ளதான் ‘ என்றேன் நான் சிரித்தபடி. ‘பிச்சுமணியோட பெரியப்பா இல்ல… வந்திருக்கார்டா… ‘

‘எப்ப ? ‘ என்று சிவா திரும்பிப் பார்த்தான்.

‘முந்தா நேத்து மவுண்ட் ரோடுல பார்த்தேன்… ‘

‘போடா எனக்கு ஜோசியத்லல்லாம் நம்பிக்கை இல்லடா ‘ என்றான் மணி.

‘எனக்கும் நம்பிக்கை இல்லடா. இருந்தாலும் சும்மா போயிப் பார்ப்போமே ‘ என்றான் சிவா.

‘இடியட்ஸ். ஜோசியம் வெறும் ஹம்பக் ‘

‘அப்டிச் சொல்லாத மாப்ள. ஒரு தடவ என்ன ஆச்சின்றே… யாரோ ஒத்தன் இவருகிட்ட வந்திருக்கான். கிராமத்தான். வந்து கைய நீட்டிருக்கான். பார்த்து இவர் அசந்துட்டாரு. ஒரு வாரத்துல உனக்கு அதிர்ஷ்டம் அடிக்குதுப்பா… ‘

– என்னவோ வானிலை அறிக்கை போல இருக்கு. இன்னும் ரெண்டு நாளில் தமிழகத்தில் மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது…

‘கோர்ட்ல எதாவது கேஸ் இருக்கான்னு கேட்டிருக்காரு. இல்லைன்றிருக்கான். பணம் ஏதாவது பாக்கி வர வேண்டியிருக்கா. இல்லையே சாமின்னிருக்கான். அப்ப சரி. போ. போயி ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கு. போன்னிருக்கார்…. அவனுக்கு அரை மனசுதான். சரிங்க சாமி எவ்ளவு, ஜோசியத்துக்கு-ன்னிருக்கான். அட அதை விடுப்பா. பிரைஸ் அடிக்கட்டும் அப்பறமா வாங்கிக்கறேன்னுட்டாரு… ‘

‘விழுந்ததா ? ‘ என்றான் மணி ஆர்வப் பட்டு.

திடாரென அவன் ஜோசித்தில் நம்பிக்கைப்பட்டு, தான் விழுந்து விட்டான்!

‘ஆயிரம்! அவனுக்கு எப்பிடி இருந்திருக்கும் பாத்துக்க… ‘

‘போடா! அதெல்லாங் கதை. பெருமாள் கோவில்ல எவனாவது தீவட்டி துாக்கறாம் பாரு. அவன்ட்டபோயிச் சொல்லு ‘ – என்றான் சிவா.

‘அவன் திரும்ப வந்து ஜோசியனைப் பார்த்தானாமா ? ‘

‘ம். வந்து நமஸ்காரம் பண்ணி பணங் குடுத்துட்டுப் போனான்… ‘

‘எவ்வளவு ? ‘

‘நுாறு ‘

‘போடா அதெல்லாம் கப்ஸா ‘ என்றான் மணி.

‘பிராமிஸா… ‘

‘யார் சொன்னா ‘

‘அவரே! ‘

‘அவரே சொன்னாரா… ‘ என்று மணி விழுந்து விழுந்து சிரித்தான். அவன் இதை நம்பவில்லை. நம்பாட்டாப் போறான். இவன் நம்பினா என்ன நம்பாட்டி என்ன… எனக்கு ஆத்திரமாய் வந்தது

/தொ ட ர் கி ற து…

—-

எழுதியது 1999

நன்றி – எஸ் ஷ குறுநாவல்கள்/2 தொகுதி

வெளியீடு அலர்மேல்மங்கை சென்னை 83

டிசம்பர் 2004

storysankar@rediffmail.com

:

Series Navigation