காந்தியின் உடலரசியல்

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

ஜமாலன்


காந்தியின் உடலரசியல்

“சந்நியாசம் ஏற்காமல் ஆதி சங்கரன் அத்வைதம் பேசியிருக்க முடியாது. துறவறம் ஏற்காமல் புத்தன் சாத்தியமில்லை. நிர்வாணத்தைக் கொண்டாடாமல் மகாவீரர் அகிம்சையை முன் நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை விட்டெறியாமல் காந்தி மகாத்மாவாகியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை அணியாமல் அம்பேத்கர் ஜாதி நிறவனத்திற்கு எதிராக போராடியிருக்க முடியாது. கலாச்சாரத்தில் ஒதுக்கப்பட்ட கருப்பு நிறத்தை கொண்டாடாமல் பெரிரியம் சாத்தியமில்லை.” எனத் தொடங்கும் ராமாநுஜத்தின் காந்தியின் உடலரசியல் என்கிற குறுநூல் 39-பக்கங்களில் காந்தியை உடலரசியல் அடிப்படையில் மறுவாசிப்பு செய்கிறது. மிகவும் புதிதான பல தகவல்களை ஆய்வு செய்து கருத்தியல் கட்டுக்கோப்புடன் ஒரு சிறந்த பின்காலணீய ஆய்வுநூலாக காந்தியை தர்க்கரீதியான தளத்தில் முன்வைக்கிறது இந்நூல். காந்தியின் அரசில் போராட்டம் துவங்கி அவரது சுயபரிசோதணையான பிரம்மச்சர்யம்வரை தனது உடலையே ஒரு சோதனைக்களமாக மாற்றிக்கொண்ட ஒரு மகாத்மாவை இந்திய அரசியல் பிண்ணனியல் ஆய்வு செய்து முன்வைக்கிறது இந்நூல்.

காந்தி தனது உடலை 1. கலாச்சார தளத்தில் பொதுவானதாகவும் 2. சுயபரிசோதணை என்கிற பிரம்மச்சர்யத்தில் தனியானதாகவும் ஆட்படுத்திக் கொண்ட கதையை அவரது எழுத்துக்களின் ஆதாரத்துடன் விவரிக்கிறார் ராமாநுஜம். காலணீய எதிர்ப்புப்போரில் கோல்வால்கர் எப்படி காந்திய சிந்தனைகளிலிருந்து முரண்படுகிறார். காந்தி எவ்வாறு பார்ப்பனீய இந்துமத மேலாண்மைக்கு எதிரானவராக பார்க்கப்பட்டார் போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை விவாதிக்கிறது. குறிப்பாக 1857-ற்கு பிறகு காலணீயமும் இந்திய பார்ப்பனீய உயர் சாதியும் சேர்ந்து இந்து பார்ப்பனீய மேலாண்மையை கட்டமைத்த கதையைக் கூறுகிறது. இதனை காந்தி எப்படி பார்த்தார் எதற்காக நிராகரித்தார் என்பதை தர்க்கரீதியாக நிறுவுகிறது இந்நூல்.

1. ஆரிய திராவிட கலாச்சாரப் பாகுபாட்டின்வழி பார்ப்பனீய மேலாண்மை நிறுவப்படுதல்.
2. காந்தியன் உண்ணாவிரதம் எப்படி இந்தியப் பெண்-மைய அரசியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

3. கோல்வார்கரால் முன்வைக்கப்பட்ட மேற்கத்திய கருத்தடிப்படையிலான ஆண்-மைய இந்துத்துவம் தனி மரபாகவும் இதற்கு எதிராக காந்தியின் பெண்-மைய கூட்டு மரபையும் முன் வைத்ததை விளக்குகிறது. இது முற்றிலும் ஒரு புதிய கருத்தாக்கமாகும்.

4. ஆண்-மைய தேசியம் மற்றும் பெண்-மைய தேசியம் என்று இந்திய தேசியம் பற்றி புதிய கருத்தாடல் விளக்கப்பட்டுள்ளது.

நுட்பமாக காந்தியின் அரசியல் முக்கியத்துவத்தை ஆய்வு செய்து காந்தி முன்வைத்த “நிலவுடமையின் உன்னத தாய்” என்கிற கலாச்சாரக் கட்டுமானத்தை விளக்கி, அத்தாயை அடைய அவர் மேற்கொண்ட பிரம்ச்சர்யமும் அது தற்போது சாத்தியமற்ற நிலையில் அதற்கு மாற்றாக முன்வைக்கப்டும் சாதத் ஹசன் மண்டோவின் “மம்மி” என்கிற தாய் பற்றிய கோட்பாட்டு அடிப்படைகளையும் முன்வைக்கிறது இந்நூல். ராமாநுஜத்தால் சாதத் ஹசன் மண்டோவின் சிறுகதைகள் கட்டுரைகள் மற்றும் குறிப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு நூலாக ஏற்கனவே வெளிவந்துள்ளன.

காந்தி இயற்கைக்கு முரணான கலாச்சாரத்தாயாக நிலபிரபுத்துவத்தின் உன்னத தாயை முன்வைத்து அதற்காக தனது உடலையே அரசியலாக மாற்றிக் கொண்டதை நுட்பமான மலைப்பூட்டும் ஆய்வுத்தர்க்கத்துடன் முன்வைக்கிறது இந்நூல். காந்திபற்றிய இந்த மறுவாசிப்பு இன்றை அரசியல் சூழலில் முக்கியத்தவம் வாய்ந்த ஒன்று.

இந்நூலின் சிலபகுதிகளை மட்டும் எடுத்தக்காட்டும் அளவிற்கு முக்கியத்துவம் உள்ளவை/அற்றவை என்று பிரிக்கவியலா வண்ணம் வார்த்தைகள் சிந்தனைகள் கட்டக்கோப்புடன் செறிவான எழுத்துநடையில் எழுதப்பட்டள்ளது. ஒவ்வொரு வரிகளும் ஒரு புதிய செய்தியுடன் சிந்தனைத் தெறிப்புடன் உள்ளது. சிறிய நூலிற்குள் மிகப்பெரிய செய்திகளை சொல்லிச் செல்லும் இந்நூல் வாசிப்பாளனை புதிய உலகிற்கு அழைத்துச் சென்று அவனது சிந்தனையை அடுத்த தளத்திற்கு நகர்த்துகிறது.

உடல்அரசியல் என்பது ஒரு உடல் எப்படி அதிகார அமைப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையம் அதிலிருந்து அவ்வுடலை எப்படி மீட்டெடுப்பது அல்லது தப்பிச் செல்வது என்பதையும் பேசுபொருளாக கொண்ட அரசியலே ஆகும். உடலை கட்டமைத்துள்ள அனைத்து துகள்கள் பற்றிய ஆய்வாகவும் அவற்றை தகர்த்து அதிகாரமற்ற வெளியாக உடலை இயல்பானதாக கட்டமைப்பது அல்லது இயல்நிலை என்கிற இயக்கநிலையில் வைத்துக் கொள்வதுமே ஆகும். இதுவே, எனது உடல் அரசியல் பற்றிய வரையறை அல்லது புரிதல். காந்தி தனது உடலை அத்தகைய இயல் அல்லது இயக்க நிலைக்கு கொண்டு செல்ல முயன்ற அவரது அரசியலை பேசுகிறது இந்நூல்.

-ஜமாலன்

காந்தியின் உடலரசியல் – பிரம்மச்சர்யமும் காலணீய எதிர்ப்பும்.
– ராமாநுஜம்.
முதற்பதிப்பு செப். 2007.

வெளியீடு
கருப்புப் பிரதிகள்
B-74, பப்பு மஸ்தான் தர்ஹா,
லாயிட்ஜ் சாலை, சென்னை – 5
மின்னஞ்சல்: karuppu2004@rediffmail.com Call No: 9444272500
விலை: ரூ 20.

Series Navigation

ஜமாலன்

ஜமாலன்