எஸ். ஷங்கரநாராயணன்
சிநேகிதிகள் என்னைப் புதிய நபர்களிடம் அறிமுகப் படுத்துவதை நான் வரவேற்பதில்லை. அப்படியான சந்தர்ப்பங்கள் நடந்து விடுகின்றன. ”இது சாண்டி. காதுகேளாதவள்…” ஆனால் பெருமையாகவும் மரியாதையுடனும் என்னைப் பற்றி அவர்கள் சொன்னார்கள். (சரி. அவர்கள் கருணை மிகுந்தவர்களாக என் அருகே அடையாளம் பெறுகிறார்கள்!) புதியவரின் முகத்தில் சட்டெனப் பரவும் அதிர்ச்சியை ரசித்தேன். சுதாரித்த அவசர முறுவல். திரும்ப சகஜபாவனை… எதும் நடக்காதது போலவே நானும் தலையை மெல்லத் திருப்பி, அவர்கள்பக்கமான என் காதில் கேசத்தை ஒதுக்கி… எனது ரோஜாவண்ண ஒலிப்பானை அவர்கள் தவறாமல் பாராட்ட, என் சிநேகிதிகள் முகம் பூரித்தார்கள்.
விதவிதமான ஒலிப்பான்களைச் சேமிக்கலாம். காதணிகளுக்கு ஒலிப்பான்கள் விசேஷமானவையே. ஒரு விற்பனைப்பட்டியல். விதவிதமான ஒலிப்பான்கள். அவற்றின் அட்டகாச வண்ணங்கள். அழகழகான மேலுறைகள். கவர்ச்சிகரமான விளம்பர பந்தா. எல்லாமே நல்ல சாமான் என்று சொல்ல முடியுமா என்ன? நாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எஸ்தரின் அப்பா எக்கச்சக்க விலையில் அவளுக்கு ஒரு கைப்பை வாங்கித் தந்தார்.. நம்மகிட்டயும் அப்டி ஒண்ணு இருந்தா நல்லாதான் இருக்கும்… வசதி கிடையாது. அழகு என்றும் பந்தா என்றும் என்னத்தையாவது வாங்கித் தந்து பிள்ளைங்களைக் கெடுக்கிற ஐவேஜ் உள்ள அப்பாக்கள் அல்ல எங்க அப்பாக்கள். இப்ப… என் ஒலிப்பான் அழகாய் இருக்க, சிநேகிதவட்டம் வெறிக்கிறது!
வாஸ்தவத்தில், செவிடாக இருக்கிறது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. அந்தக் கார் விபத்து, அதில் பெருஞ்சத்தமாய்க் கிழிந்த என் செவிப்பறை… அதையடுத்த சில வருஷங்கள் திண்டாட்டமாய்த்தான் இருந்தது. ஆனால் நண்பிகள் மத்தியில் சிறப்பு கவனம்! என் சிநேகித வட்டத்தில் யாருமே காதுக்குறை உள்ளவர்கள் அல்ல, எனக்கே திடீர்னுதானே இப்டி ஆயிட்டது. எனக்குக் காது செவிடான அந்த வேளையில் அவர்கள் எல்லாருமே என்னைப் பார்க்க வந்து குவிந்தார்கள்…
நண்பர்களை எப்படி அடையாளம் சொல்லலாம்? ட்ரு, மது ஊற்றித்தரும் வேலை செய்கிறவள். கரோல், பெண்ணியவாதி. கிரெக், நீள நாக்குக்காரன்… செர்ரிக் குச்சியை நாக்கினால் முடிச்சு போட்டுக் காட்டுவான். நான்? நான் சாண்டி காது கேளாத பெண் – எனக்கு ஆட்சேபணையில்லை. குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்கிறாப் போல என்னிடம் தனியம்சங்களோ திறமையோ இல்லை. என்னிக்குமே இருந்தது கிடையாது.
மத்தவங்களில் இருந்து என்னை அது வித்தியாசப்படுத்தி விட்டது, என்பது மாத்திரம் அல்ல. இந்த ரோஜாநிற ஒலிப்பான், இது இல்லாவிட்டால், இப்போது என் வாழ்வில் நிகழ்ந்த அநேக சம்பவங்கள் நடந்தேயிராது. உதாரணத்துக்கு, கோலினுடன் நிகழ்ந்த சமாச்சாரங்கள்…
முதலில் அவனை வீட்டளவிலான ஒரு கொண்டாட்டத்தில் சந்தித்தேன். பெண்ணியவாதி கரோல் மூலம் அறிமுகமானோம் நாங்கள். காதோர முடியை ரெண்டு காதிலும் ஒதுக்கிக்கொண்டபடி நான் சற்று முன்குனிந்தேன். அந்த அதிர்ச்சி, சமாளித்த அவனது சகஜபாவம், இதையெல்லாம் நல்லாச் செய்தான் என்பதால் அல்ல, அவன் ஆளே அசத்தலாய் இருந்தான். ஒரு எதிர்பாராத ஆச்சர்யம், அதிலிருந்து மீண்ட அந்தப் புன்னகை, எல்லாமும் அழகாய் இருந்தது அப்போது.
கைகுலுக்கிக் கொண்டு, குடிக்க எதும் கிடைக்குமா என்று போனோம். விடுதியாவுமில்லாமல் வீடாகவும் இல்லாத அந்தச் சூழலில் கரோல் எங்கோ மறைந்துவிட்டாள். சிறிது கழித்து அவன் கேட்டான். ”பொதுவா உதட்டைப் பார்த்தே புரிஞ்சுக்குவியா, சைகை காட்டணுமா?”
”சைகைன்னில்ல, உதடசைவே தேவலதான்…” என்றேன் நான். ”ஆனா உன் உதட்டையே நான் பார்த்திட்டிருக்கறதுக்கு, அது ஒண்ணுதான் காரணம்னு நினைச்சிக்க வேண்டாம்!”
சிரித்துக் கொண்டான். நாங்கள் நிறையப் பேசினோம். எங்களை விருந்துக்கு அழைத்தவர் இசையை அதிகப்படுத்தி, விளக்குகளை மங்கலாக்கி கூடத்தை நாட்டிய அரங்கம் போல மாற்றினார். ஆக நான் முன்னிலும் முன்னிலும் அவனை நோக்கிக் குனியவேண்டி வந்தது. அந்த அரையிருட்டில் அவன் உதடு அசைவதை நான் பார்க்கணுமே. பார்த்தேனே.
நிகழ்ச்சி முடிந்து சம்பிரதாய விடைபெறுதல். தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டோம். அதற்கப்புறம் என்னை மறந்துருவான்னு நினைத்தால், அடுத்தவாரம் நானே நினைச்சுப் பார்க்கவில்லை, அவன் என்னைக் கூப்பிட்டான். நாங்கள் வெளியே போனோம். குறைவெளிச்சத்திலும் எனக்கு அவனையும் அவனுக்கு என்னையும் பிடித்திருந்தது. மேலும் உதடசைவுகள்!… ரெண்டே மாசம். தனிநாள் ஒதுக்கி நாங்கள் சந்திக்க ஆரம்பித்தோம்.
(விபத்துக்குப்பின் நான் சந்தித்த முதல் ஆள். இப்ப அதைப்பத்தி யோசிக்கிறேன்… உள்ளூற நான் அவனை முழுதும் விரும்பினேனா? அந்தப் பதட்டத்தில் கைக்கு எட்டியவன் அவன், என்ற அளவில்தானா? தெரியவில்லை. காது செவிடான அந்த முதல் சில வருடங்கள், அதன் கஷ்டங்கள், அந்த நினைப்புகளே வேணாம் என்றிருக்கிறது.)
அப்புறம் சில சில்லறைச் சங்கடங்கள், அசட்டுத்தனங்கள் நேர்ந்தன. எங்களது நாலாவது அந்தரங்க நாள். ஒரு பிரபலமான திரைப்படம் பார்க்க என்று என்னை அவன்வீட்டுக்குக் கூப்பிட்டான். ஓரளவு அவன் நோக்கமும் அதுவாக இருக்கலாம். ஆனால் படம் பார்த்தோம் என்றாலும், எனக்குப் பிடிக்காத ஒரு தப்புக் காரியத்தை, அது என்ன என்று தெரியாமலே அவன் செய்யத் துணிந்தான்.
விளக்கணைந்து, படம் ஆரம்பித்து, வசனங்கள் வரிகளாகவும் படத்தில் ஓடிக்கொண்டிருந்தன. பாதியில் எனக்கு படம்பார்ப்பதில் மனசைச் செலுத்த முடியாமல் போனது. கோலின் உணர்வுபூர்வமாய் இருந்தானோ? திடீரென ஒரு சோபாவாக அவன் மாறி, நான் அதில் உட்கார்ந்திருந்தாப் போலிருந்தது. என்னை அந்த சோபா அரவணைத்து முழுங்கிக் கொண்டாப் போல… தனியான அந்த இருளில் நான் மிதக்கிறேன். அஞ்சடி தள்ளி வெள்ளித்திரையில் துடிப்பாய் இயங்கும் வேறுலகம். அந்த வெளிச்சத்தில் இருந்து கண்ணைப் பிடுங்கிக் கொள்ள முடியவில்லை. விசித்திர அனுபவம். அப்போது கோலின் என்பக்கம் குனிந்து கிசுகிசுப்பாக சில அனுசரணை வார்த்தைகள், என் குறைபாடான இடது காதருகில் பேச ஆரம்பித்தான். கதகதப்பான ஒலியற்ற காற்று என் காதில் மோதியது.
அவனைப் புறந் தள்ளினேன். நான் செவிடு என்று என்னை அவன் சீண்டிவிட்டதாக உள்சீற்றமாய் இருந்தது. அதிலும் அந்த இருட்டில். காதும் கண்ணுமான ரெட்டைப் பொட்டை நிலை தாள முடியாமல் போனது.
அதுதான் எங்களிடையே முதல் விரிசல். உடனே நாங்கள் அந்தச் சிறிய பிரச்னையை உதறிவிட்டோம். அந்த மீதி இரவு. இருட்டிலும் அந்த உதடுகளை, என்னாலும் புரிந்துகொள்ள முடிகிறாப் போல, எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், என்றெல்லாம் ஆராய்ச்சிகள் நடந்தன.
கோலின் உணர்ந்துகொண்டான். மற்ற ஆளின் விநோத அம்சங்கள், காலம் நிர்ப்பந்தித்தவை, அவைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். சில சமயம் அவற்றினால் நிறைய வேடிக்கைகள், சுவாரஸ்யங்கள் கிடைக்கவும் செய்யலாம்! காலகாலமான விளையாட்டில் சில புதுமைகள். அறிந்த விளையாட்டு என்றாலும் இப்போது அதிக ஆர்வமூட்டும் அம்சங்கள், புதிய சவால்கள் அதில் கிடைக்கின்றன. அவன் நன்றாகவே விளையாடினான். அப்படித்தான் தோணியது.
எங்கள் சந்திப்பின் ஒரு வருடம், அவனது இருபத்திமூணாம் பிறந்த நாள். ரம்ஸ்டீன் கச்சேரிக்கு ரெண்டு நுழைவுச்சீட்டுகள் நான் வாங்கிக் கொடுத்தேன். ரம்ஸ்டீன் வாத்திய அதிர்வுகள்… அவனுக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். சீட்டுகளை நீட்டினேன். ஆனந்த அதிர்ச்சியுடன் சிரித்… சட்டென்று நிறுத்தினான். ”சாண்டி, நிச்சயமாத்தானா? ம், அதாவது… நீ… கச்சேரிய உன்னால ரசிக்க முடியுமா?” இடது காதுக்குப் பின் முடியை ஒதுக்கிக்கொண்டே புன்னகைத்தேன். ”மொத விஷயம், கச்சேரியை ரசிக்கத்தான் நான் வர்றேன்னு யார் சொன்னா? அந்தக் கொடூரமான அடிதடி, மண்டையை அதிரவைக்கிற இரைச்சல் எனக்கு என்னிக்குமே ஆவாது…”
”ஹா!”
”இன்னொண்ணு, சாதாரண இரைச்சலுக்கும் அதிகப்படியான பேரிரைச்சல்… அது எனக்குக் கேக்கும்! ஞாபகம் இருக்கில்ல? ஆக நாம ரெண்டு பேருமே கச்சேரி கேட்கலாம்!” பாவி என்ன அழகாக முறுவலிக்கிறான். எனது வலது காதுப்பக்கம் கேசத்தை ஒழுங்கு செய்கிறேன்.
அந்தநாள் திருப்தியாகவே கழிந்தது. நாடி நரம்பெங்கும் உற்சாகம் கொப்பளிக்க அவனை அதுவரை நான், அதுக்கு முன்பும், அதற்கப்புறமுங் கூட பார்த்ததேயில்லை. இத்தனைக்கும் இசைக்குழுவுக்குப் பக்கத்தில் கூட நாங்கள் இல்லை. முன்வரிசைக்கு துட்டு ஜாஸ்தி என்று நான் வாங்கியிருக்கவில்லை. இசை அவனை முழு ஈர்ப்பு செய்தாப் போலிருந்தது. அவன் காதுகள்… உள்ளே பரபரவென்று நுரைத்து வழியுமோ? என் கண்ணால் அதைப் பார்க்க முடியாது.
கொஞ்சம் அசூயை – ஏன் எனக்கு மாத்திரம் இப்டி ஆயிட்டது… உடனே அந்த நினைவுகளை உதற முயன்றேன்.
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவனது குதியாட்டம், கீச்சிடல்கள், இளிச்ச வாய், உயிர்கொண்டு நகர்வதான வண்ண வெளிச்சக் கற்றையில் மின்னிய அவனது வியர்வை. பலமாய் அதிர்கிற கிடார் தந்திகள், கூக்குரல்கள் எல்லாம் நன்றாய்த்தான் இருந்தன. தாள அதிரடியில் தரையே நடுங்கியது, ஆனால் அத்தனைக்கு அதை உணரக் கொள்ளவில்லை.
ஒரு ஒண்ணரை மாதம் கழிந்தது. என்னுடைய பிறந்தநாள். கோலின் எனக்கு ரெண்டு நுழைவுச் சீட்டுகள் பரிசளித்தான். டவுசர் பாக்கெட்டுக்குள் அவன் வைத்திருந்ததை அவன் சட்டையைக் கழற்றியதும் பார்த்தேன். பிரபல எழுத்தாளர் சந்திப்பும், அவரது படைப்பை அவரே வாசித்தலும், பிறகு நாம் அவரிடம் கையெழுத்து வாங்குதலுமான ஒரு ஏற்பாடு. எமிலி பார்ன்ஸ்! நான் அவளது அடிமை! ”அடுத்த வாரம்தான் நிகழ்ச்சி. இப்பவே குடுத்துட்டதுக்கு மன்னிச்சுக்க… ஆனால் அடுத்த வாரம் நாம இன்னொருதரம் உன் பிறந்தநாளைக் கொண்டாடலாமே!” அவன் கண்ணடித்தான்!
அசத்திவிட்டான் என்னை! நிகழ்ச்சிக்கு முந்தைய வாரத்தில் அவளது கதைகளை எல்லாம் மறுமுறை வாசித்துத்தள்ளினேன். அவளது நாலு புத்தகங்களில் எதில் கையெழுத்து வாங்கலாம் என்று திணறலாய் இருந்தது. ஒரு நபருக்கு ஒரு கையெழுத்து மாத்திரம் என்றது அறிவிப்பு. அவனையும் வரிசையில் நின்று எனது இன்னொரு புத்தகத்திலும் கையெழுத்து வாங்கித்தரச் சொன்னபோது சிரித்தான். அடியே என்ன இது குமரித்துள்ளல் துள்ளுறியே என்று கேலி செய்தான்… என்றாலும் சம்மதித்தான்.
நிகழ்ச்சிக்கு புத்தகக்கடைக்குச் சீக்கிரமே வந்துவிட்டோம். அலமாரிகளை ஒதுக்கி கடையின் ஒரு பகுதியில் நிகழ்ச்சி. அடைத்தாற் போலிருந்தது அந்த இடம். அடர்ந்த வனாந்திரத்தை மாயாஜாலம் பண்ணி யாரோ திடுதிப்பென்று மேலும் பெரிசாக்கி விட்டாப் போல. தாற்காலிக மேடை. முன்வரிசையில் பாதி நிரம்பிய நாற்காலி வரிசை, எழுத்தாளரின் தீவிரவாசகர் வட்டம்!
கோலின் என்னைக் கடைசி வரிசைக்குக் கூட்டிப்போனான்… என்ன இது? அவன் புன்னகையுடன் பின்னால் இருந்த ஒலிபெருக்கிகளைக் காட்டினான். ஆனால் முன்னால் உக்காந்துகிட்டா அவளது உதடசைவே போதுமே எனக்கு? – ”வாசிப்பதுன்னா அதுக்குதானா என்ன?” என்றான் அவன். ஆனால்… ”நீ அவளது பேச்சுக்கா, இல்லை புத்தகத்துக்கா வாசகி, சொல்லு? அவளோட எழுத்துக்கு அவளோட விளக்கம், அல்லது அவளது முகம்… உனக்குக் கேக்கணுமா, பாக்கணுமா?”
சரி என்று உட்கார்ந்து கொண்டேன். கையில் அவளது ரெண்டு புத்தகங்கள். அழகான மாலைப் பொழுது. எமிலி பார்ன்ஸ். கோலின்… நானும் கோலினும்! (எல்லாமே அருமையாய் அமைந்த நாள், இப்போதும் அதை நினைத்துக் கொள்கிறேன்.)
ஆறுமணிக்குக் கடைநிர்வாகி மேடைக்கு வர, குதியுயர்ந்த பச்சைக் காலணி ஒவ்வொரு எட்டுக்கும் க்ளிக்கியது. ”நல்வரவு, சீமான்களே சீமாட்டிகளே…” ஒலிபெருக்கி ஒன்றும் சுகமில்லை. அந்தக் கடையே இப்படி ஏற்பாடுகளுக்கு லாயக்கில்லை. ஆனா என்ன, எமிலிபத்தி கடை நிர்வாகி நிகழ்த்திய அறிமுக உரையின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் கண்டுகொண்டிருக்க முடியும். புருவம் உயர்த்தி என்னைப் பார்த்தபடியே கோலின் என் கைகளை வருடினான். நான் திருப்தியான புன்னகையுடன் அவனைப் பார்த்துத் தலையாட்டினேன்.
பிறகு எமிலி பேர்ன்ஸ் மேடைக்கு வந்தாள். எனக்கு முந்தைய வரிசைகள் எல்லாவற்றிலிருந்தும் பலமான கைதட்டல். எமிலி பணிந்து வணக்கம் சொன்னாள். சிறு புன்னகையுடன் நிர்வாகி நீட்டிய மைக்கை வாங்கிக் கொண்டாள். ”ஹலோ!” அவள் குரல் என் பின்னாலிருந்து கேட்டது, ஒலிபெருக்கியிலிருந்து. சிறிது மெளனம்விட்டு சற்றே வெட்கமான புன்னகையுடன், ”இந்த மாதிரி உரத்த வாசிப்புகளை நான் விரும்புவதில்லை…” என்றாள். மைக்கைக் கீழே வைத்தாள். நிமிர்ந்தாள். உதடுகள் அசைய ஆரம்பித்தன. சட்டென அது எனக்கு உறைக்கவில்லை. நான் எதிர்பாராத சம்பவங்களின் ஆச்சர்யத்தில் இருந்து மீளாதிருந்தேன்.
அவள் உதடுகளை கவனிக்க ஆரம்பித்தேன். கோலின் என்னைப் பார்த்தவன், கையை உயர்த்திக் காட்டினான். வேணாம், என்று கிசுகிசுத்தபடி அவனைத் தடுத்துவிட்டேன். எமிலியை மைக்கில் பேசும்படிச் சொல்லிவிடவேண்டும் என்று அவன் உக்கிரப் பட்டிருந்தான். நெற்றியில் சுருக்கங்கள். புருவம் நெறிபட்டிருந்தது. எனக்காக ஆவேசப்படுகிறான்!… ரம்ஸ்டீன் கச்சேரியில் அவனது மனவுணர்ச்சி எனக்கு அப்படியே படமாய்த் தெரிந்தது அப்போது. அவனது குதியாட்டம், கீச்சிடல்கள், இளிச்ச வாய், உயிர்கொண்டு நகர்வதான வண்ணவெளிச்சக் கற்றையில் மின்னிய அவனது வியர்வை… அவனைக் கையமர்த்தினேன். திடீரென்று எனக்குள் ஓர் ஆவேசம் – சந்தோஷப்படு, கும்மாளம் போடு, ஆடிப்பாடு, கூச்சல்போடு, சிரி! இன்னிக்கு என் பிறந்தநாள், அதன் பரிசைப் பெற்றிருக்கிறேன்… ஆனந்தக் கூத்தாடு.
”ஏன் தடுக்கறே?” என்றான் கோலின்.
”உதடசைவே போதும். அந்தக் குரலின் த்வனி… அதை உணர்ந்துவிடுவேன் நான்!”
”என்ன சொல்றே?”
”ஷ்…” எழுந்துகொண்டேன். முன்குனிந்தபடி பல முழங்கால்களைக் கடந்து மேடைக்குக் கிட்டே யாருக்கும் மறைக்காதபடி ஓரிடத்தில் நின்றுகொண்டேன். கோலின் தனது பிளாஸ்டிக் நாற்காலியில் சிறிது நேரம் இருந்தான். பின் மெல்ல பின்பக்கமாக வந்து என் இடுப்பை அணைத்துக்கொண்டான். திரும்பி உற்சாகமாய் அவனைப் பார்த்துப் புன்னகைத்தேன். வாஸ்தவமாகவே நான் உள்ளும் புறமும் பூரித்துக் கிடந்தேன்…
குறிப்பாக ஒன்று சொல்லணும். எமிலி பேர்ன்ஸ்சின் வாசிப்பு வித்தியாசமான அனுபவம். அவளது வார்த்தைகளுக்கு அவளால் உயிர் கொடுக்க முடிந்தது. என் கற்பனை வியூகத்துக்கும் அப்பாற்பட்ட புதிய தரிசனங்கள். அவள் உதடுகள் அசைந்தன. பிரிந்தன. மூடின. விலகின… சூட்சுமமான ஒரு துக்கவிக்கல், தெரிந்து கொண்டாடுகிற மகிழ்ச்சி, மெல்லிய வருத்தம்… அவளது நடையில் அத்தனையும் கிடைத்தன. அதுவரை இதையெல்லாம் நான் என் வாசிப்பில் அறிந்ததேயில்லை…
”உதடசைவை வைத்து எத்தனை துல்லியமாக உன்னால் த்வனியைச் சொல்ல முடியும்?” திரும்பி வரும்போது அவன் கேட்டான். பதில்சொல்லாமல் கையெழுத்து பெற்றுக்கொண்ட புத்தகத்துக்குக் குனிந்துகொண்டேன். ”அபத்தமான கேள்வி. குருடனிடம், நீ எப்பிடி கனவு ‘காணுவே?’-ன்றாப்போல!…” நான் வேகமாக முன்னால் போனேன். கோலின் கூடவே வந்தான். என் வீடுவரை, காரில்கூட நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.
—
காட்டுவெளி ஒன்றில் மரம் ஒன்று விழுகிறது, யாரொருவரும் அது விழுந்த சத்தத்தைக் கேட்கவில்லை. அது சத்தமாய் விழுந்ததா இல்லையா, என்று சந்தேகம் வருமா? ரெண்டு பேர் வாதம் பண்ணுகிறார்கள், ஒருத்தன் காதிலேயே அதை வாங்கிக் கொள்ளவில்லை, விஷயம் சுமுகமாகி விட்டதாகச் சொல்லிவிடலாமா?
—
புத்தக நிகழ்ச்சி முடிந்து சில வாரங்களுக்கு அப்புறம் எங்களுக்குள் முதல் முறையாகச் சண்டை வந்தது. ஒரு விருந்து, முன்னாலேயே திட்டம் போட்டதுதான், அதை விட்டுவிட்டு, அவனது இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளன் ஒருவனது முதல் படத்தை, அதன் பிரத்யேகத் திரையிடலில் பார்க்கப் போவதாக அவன் சொன்னான். ”என்ன பிசாத்து ஷோ அது? வீட்டோட, வெறும் நாலு பேருக்காக…” என்றேன் நான் ஆத்திரத்துடன். ”அதனாலென்ன, சரி, குறைந்தசெலவில் பட்ஜெட்படம் எடுக்கறது அவனுக்கு நல்லா வருது. நீ சினிமாவைக் கண்டியா, சிவாஜியக் கண்டியா…”
”அந்த மாதிரில்லாம், அந்த த்வனில என்னாண்ட பேச வேணாம்…”
அவனது அசாத்திய அமைதி, அதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. ”ம்” என்றான் அவன். ”சரி. என் உதடுலேர்ந்தே என் த்வனியை நீ கிரகிச்சிக்குவே, இல்லியா?” அவன் கிளம்பிப் போய்விட்டான், படத்துக்குத்தான்.
அதிலிருந்து எல்லாமே பின்னடைவுதான். ரெண்டு பேர்த்துக்குமே அது தெரிஞ்சாப்லதான் இருந்தது. அந்தக் கடைசி தர்க்கம் – அப்போது என்னைப் பார்த்து அவன் கூக்குரலிட்டான். அந்த ஆக்ரோஷமான சத்தம், எனக்கு அவன் பேசியது கேட்டது.
”நாம பிரிஞ்சிறலாம்!”
நான் எதுவும் பேசவில்லை. மெல்ல சுதாரித்து ”நிஜம்மாதானா?” என்கிறேன்.
”ஏன்?” என எகிறினான். ”ஹாஹா, என் உதடசைவுலேர்ந்து நான் விளையாடறேனா, நிஜம் பேசறேனான்னு உன்னால புரிஞ்சிக்க ஏலாதா!”
அவ்வளவுதான். நாங்கள் பிரிந்துவிட்டோம்.
அந்தக் கடைசிசில மாதங்களின் சில நல்ல பொழுதுகள் ஞாபகம் இருக்கவே செய்கின்றன… என் வளையலை அவன் அளைவதும், என் காதுமுடியை அவன் ஒதுக்கி விடுவதும்… ”நீ இப்டி ஒதுக்கி விட்டுக்கறது அழகா இருக்கு, இப்பல்லாம் ஏன் நீ செய்துக்கறதே இல்ல” என்றான். சில சமயம் அவன் கத்துகிற கத்தில் எனக்கு அவன் உதடைப் பார்க்கிற சோலியே தேவையில்லாது போனது, காது கேட்டது எல்லாமே. அதை அவனிடம் நான் பிரஸ்தாபிக்கவில்லை. எந்த அளவுக்குமேலான சத்தம் எனக்குக் கேட்கும் என்பதே அவனுக்குச் சரியாத் தெரியாது. நான் அவனைப்பற்றி என்ன மனசில் வைத்திருந்தேனோ அவனாக அவன் இல்லை என்பதையும் நான் அவனிடம் சொல்லவில்லை. அவன் என்னைத் திட்டவும் என்னிடம் கத்தவும் ஆரம்பித்தபின்தான் இப்படியெல்லாம் நான் யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.
உடனே முடிவெட்டிக் கொண்டேன். கட்டைகுட்டையாகத் தான் தலைமுடி வைத்துக் கொண்டிருக்கிறேன். பச்சை மினுங்கும் என் ஒலிப்பான் முன்னிலும் வெளித் தெரிகிறது இப்போது. புதிய நபர்களிடம் என்னை சிநேகிதிகள் இப்போது அறிமுகப் படுத்தினாலும் அது பிடித்திருக்கிறது, அவர்களின் அறிமுக மரியாதை. சில சமயம் பழக்கதோஷத்தில் என் கை காதுபக்கம் வந்துவிடுகிறது. ஒலிப்பான் இப்போது, நேர்ப்பார்வைக்கே தெரிகிறது.
சிநேகிதிகள் என்னாச்சி என்று கேட்டார்கள். இதெல்லாம் சகஜம், என்றேன் நான். தெரிய வேணாம்னு நினைச்ச சில விஷயங்கள், யாருக்குத் தெரிய வேணான்னு நினைச்சமோ, அவங்களுக்குத் தெரிஞ்சிருது… அதை ஏத்துக்க முடியாமப் போகுது. கோமணங் கட்டாத ஊர்ல கோமணங் கட்டியவன் கோமாளின்னு சொலவடை. வித்தியாசமா இருந்துறப்டாது… பேயைப் பாத்தேன்னு சொன்னியானா, ஏமாத்துக்காரின்றான். நீ நிஜமாவே ஒராளைக் காதலிக்கிறே, அவன் உடம்புக்கு மாத்திரமே ஆசைப்படறான். ஆனா பாரு, கேடுகெட்டவளா ‘நீ’ ஆயிர்றே. அவன் உதடு அசையற விதம், அதுலேயே அவன் பவிஷ¤ தெரியும்னு சொன்னா, நீ மோசமான சிநேகிதி. அதோட, ஆமாம், செவிட்டுக் கருமாந்திரம்!
—
TONE/YZ CHIN
ஒரு நகைச்சுவை ஞாபகம் வருகிறது – ”சார் நீங்க பக்கத்து ரூமுக்குப் போக முடியுமா? இந்தாளோட நான் ஒரு ரகசியம் பேசணும். இவருக்குக் காது கேட்காது.”
நடையை விட நுணுக்கமான விவரப் பதிவுகளாக, ஒரு திரைக்காட்சியின் விவரக் குறிப்புகளுடன் அமைக்கிறார் சின். வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறதை விட அவருக்கு என்று ஒரு கதைசொல்லும் கோணம் வைத்துக் கொள்கிறார். சில சுவாரஸ்ய முடிச்சுகளால் கதையை நிரப்பிக்கொண்டே வருகிறார். நிகழ்கால நினைவுகளாய் இடையில் வரும் பகுதிகளை நான் தனியே அடைப்புக்குறியில் தர முன்வந்தேன்.
வேடிக்கை என்னன்னா, ஒலிப்பான் ரோஜாவண்ணம், பச்சைமினுங்குது என்றெல்லாம் குறிப்புகள் தருகிறார் சின். பிறகு என்ன காது கேட்கவில்லை என்கிறார். காது கேட்கவில்லை என்றால் ஒலிப்பான் எதுக்கு, உதடசைவில் கிரகிக்கிற சிரமம் எதுக்கு, தெரியவில்லை.
பெரிய லட்சியம் எல்லாங் கிடையாது இந்தப் பெண்ணுக்கு. அவனும் மகாபுருஷன் அல்ல. இளமைக் கொட்டம் அடிக்கிறார்கள். தெரிஞ்சே அடிக்கிறார்கள். ரெண்டுபேர் குடும்பம் பற்றியும் ஒண்ணுந் தெரியவில்லை. கதைக்குத் தேவை இல்லைன்னு நினைச்சிருக்கலாம். ஆனால் குடும்ப அம்சம் கலவாத தனிமனிதத் தினவு, மேற்கத்திய முகம் அது. அது வந்திருக்கிறது கதையில். மலேஷிய எழுத்தாளர் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறாள். கிழக்கில் இருந்து மேற்கே போனவளின் சிந்தனை எடுப்பு. தனது சீனமலேஷியக் கதைகளைத் தானே திரும்ப ஆங்கிலத்தில் எழுதுகிறாள் சின்.
- கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி நிலையம் – 4
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 8
- கிடப்பில் போட வேண்டிய சூது சமுத்திரத் திட்டம்
- சிந்தனையில் மாற்றம் வேண்டும்
- வன்முறையே வழிகாட்டி நெறியா?
- காட்டில் விழுந்த மரம்
- பங்க்ச்சுவாலிட்டி
- “படித்ததும் புரிந்ததும்”.. (3) தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்
- எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் – 60
- காதல் நாற்பது – 40 எனக்காகக் காத்திருந்தாய் !
- அலேர்ஜியும் ஆஸ்மாவும்
- பாரதி காலப் பெண்ணியம்
- பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914- 09. 06.1981)
- ஜெயமோகனின் ஏழாம் உலகம்
- மேலும் சில விடை தெரியாத கேள்விகள்
- சொன்னாலும் சொல்லுவார்கள்- மலர் மன்னன் கட்டுரை
- கடிதம் (ராமர் சேதுவும் கண்ணகி சிலையும்)
- கடிதம்
- மாற்றுத்திரை குறும்படம்,ஆவணப்படம் திரையிடல்…
- பி எஸ் நரேந்திரன் கட்டுரையைப் படித்தபோது – மூக்கணாங்கயிறு கட்டிய டிராகன்தான் அமெரிக்கா
- செல்வி காருண்யா கருணாகரமூர்த்தி நடன அரங்கேற்றம்
- ‘நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள்
- மாலை பொழுதுகள்
- சிலைப்பதிவு
- இரவு நட்சத்திரங்கள்
- சுயநலம் !
- ஹேராம்.. என் கவிதைகள் சாகவேண்டும்
- மோடியின் மோடிவித்தைக்கும் அத்வானியின் அரசியல் நடவடிக்கைக்கும் தற்போது ராமர் அவசியம் தேவை!
- கண்ணில் தெரியுதொரு தோற்றம்
- கவிஞர் ரசூலின் கட்டுரையும் சர்ச்சையும்
- ஹெச்.ஜி.ரசூலுக்கு மறுபடியும் அநியாயம் – எழுத்தும் எதிர்வினையும் — ஒரு பார்வை
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 4
- நீயாவது அப்படிச் சொல்லாதே
- மாத்தா ஹரி – அத்தியாயம் 29
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 25