கவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

தமிழ்மணவாளன்


கடந்த ஆண்டு இறுதியில் நிகழ்ந்த முக்கியமான இலக்கிய நிகழ்வு,

தமிழில் கவிஞர் வைரமுத்துக்கு சாகித்ய அகாதமி பரிசு அறிவிக்கப்பட்டது.

எந்தவொரு பரிசும், விருதும் பாராட்டுக்கும் விவாதத்திற்குமுரியவையே. ஆயினும்

அவ்விதமான விவாதப்புள்ளியைத் தொடும் நோக்கமேதும் இதையெழுதுவதில்

எனக்கில்லை. கவிஞர் வைரமுத்துக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் இதுகாறும் சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்களால் நிகழ்த்தப்

படாத பல நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய சாத்தியங்களை எண்ணிப்பார்க்கிறேன்.

அலங்கரித்த யானைகளில் ஊர்வலம் உட்பட !

இதுகுறித்து நண்பர்களோடு பேசிவிட்டு உறங்கச் சென்ற ஓர் இரவு கனவில் அவ்விதமான

கவியரங்கம் நடந்தது. நல்ல கனவை வெளியில் சொல்லலாம் தானே!

பிரமாண்டமான மேடையின் நடுவே போடப்பட்டிருந்த ஒற்றை நாற்காலியில்

கவிப்பேரரசு அமர்ந்திருந்தார். அவர்மீது பீய்ச்சப்பட்ட ஒளிக்கற்றை அவரை பளிச்சிடச்செய்து

பின் திரையில் ஓர் ஒளிவட்டத்தை உருவாக்கியது. பார்வையாளர்கள் வெளிச்சத்தை உள்

வாங்க வசதியாக இருட்டில் அம்ர்ந்திருந்தார்கள்.

கவியரங்கம் தொடங்கி வாழ்த்தினர். அவற்றுள் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன.

கவிப்பேரரசே!

உன்பேரை அகாதமியில்

உச்சரித்த போது தான்

தமிழ்த்தாய் மெல்ல

புரண்டு படுத்தாள்.

தில்லி சீமையில்

உன்பேரை அறிவித்த கணம் தான்

சென்னையில்

தமிழ் நங்கை விழி மலர்ந்தாள்.

சுவாசித்து

வெளியேறுவது கரியமில வாயுவாம்

யார் சொன்னது ?

உன்பக்கத்தில் நின்றாலே

உற்சாகம் பிறக்கிறதே..

‘ஆக்ஸிஜன் ‘ என்று நீ அறிவிக்க வேண்டும்.

அந்த மாலைப் பொழுது

அப்படியே நெஞ்சில் நிற்கிறது

செய்தி வந்த வேளை

வங்கக் கடலில் புயல் சின்னம்

வரலாறு காணாத

வைகை நதியில் பெருவெள்ளம்

உனக்கு நினைவிருக்கிறதா ?

தமிழுக்கு

சோறு போடுவதாய்ச்

சொன்னவன் நீ..

விருந்தே வைத்துவிட்டாய் இன்று

நீ வைத்த விருந்தை

உண்ட பிறகே மீதியை

உவப்புடன் தருகிறாள் எனக்கு.

உன் கவிராஜ்யத்தில்

வெறும்

கவி கூர்க்காவாக

இருப்பதையே பெருமையாய்க்

கருதுகிறேன்

ஏன் தெரியுமா ?

கூர்க்கா என்றாலும்

ஒரு வகையில்

கவிதைக் காவலன் தானே

அரங்கம் அதிந்த கைதட்டலில் விழிப்பு வர பல நல்ல வரிகளைத் தொடர்ந்து

கேட்கவியலாமல் போனது .

———————————————–

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation