கவிக்கட்டு 38-மனிதனைத் தேடி

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

சத்தி சக்திதாசன்


மந்திகளின் தோப்பின் நடுவே
மடையர்களின் கும்பலினுள்ளே
மரியாதையை அறியாதவர் முன்னே
நான் மட்டும் ஏன் அலைகிறேன் ?
மனிதனைத் தேடி

இல்லம் முழுவதும் பொருளையும்
இதயம் முழுதும் இருளையும்
இரைக்க இரைக்கச் சுமந்து
இறுதிவரை நடக்கும் உலகில்
நான் மட்டும் ஏன் வீணாக ?
மனிதனைத் தேடி

பொய்யர்களின் கூடாரத்தில்
பெருச்சாளிகளின் மனதோடு
பொய் வாழ்க்கை வாழ்ந்திடும்
போலியான உலகத்தில் ஏனோ
கேலிகளைத் தாங்கிக்கொண்டே நான்
மனிதனைத் தேடி

பேச்சுக்கு மட்டும் சுதந்திரம்
பேருக்கு மட்டும் மனித்துவம்
பேய்கள் கூட நடுங்கும் கொடியவர்
போகுமிடமெல்லாம் கலகம்
போதாத காலம் இதில் நான் ஏனோ ?
மனிதனைத் தேடி

பிறக்கும் போதுமில்லாதவர்
இறக்கும் போதுமில்லாதவர்
இடையில் மட்டும் இறுமாப்பு
இருத்திக் கொள்ளார் சிந்தையில்
இங்கே நான் வீணாய் ஏன் ?
மனிதனைத் தேடி

வேண்டாம் இனி ஒரு பிறப்பு என
வேண்டும் மனம் எனக்கு வந்தது
வேண்டிய மட்டும் செல்வம் பெற்று
வேதனை உலகில் நீச்சலிட்டு
உருளும் உலகில் இனி நான்
தேடமாட்டேன் மனிதனையே
தோற்றம் அவன் கொள்வது வெறும்
ஏட்டுக் கதைகளிலேயே !

****

நீயே ஆனால் !

சத்தி சக்திதாசன்

என் மனமெங்கும் ஒளிவீசும் விளக்கு நீயே ஆனால்
என்றும் என் உலகில் இருளில்லை அறியாயோ

தாகத்தில் தவிக்கும் போது தணிக்கும் நீர் நீயே ஆனால்
தங்கமே நான் தாகம் அற்று போவதையும் அறியாயோ

பாதையில் நடக்கும் பயணத்தின் இலக்கு நீயே ஆனால்
பாவையே என் ஊரின் பெயர் ஆனந்த நகரமன்றோ

வானத்தில் வலம் வரும் கருமேகங்கள் நீயே ஆனால்
வண்ணக்கிளியே உன்னை மழையாக்கும் குளிர்மை நானே

பூங்காவில் வீசும் தென்றல் கண்மணியே நீயே ஆனால்
புத்தெழிலோடு நீ ஆரத்தழுவும் வண்ண மலர்கள் நானே

உள்ளத்தின் ஓரத்திலே கசியும் காதல் உணர்வு நீயே ஆனால்
ஊர்வசியே அந்த உணர்வு கொடுக்கும் இனிமை நானே

****

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்