கவனிக்கப்படாத கடவுளே!!!

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

பி முரளி கார்த்திக்


அன்பெனும் பகிர்தலில்

பொதிந்து கிடக்கும் அரிதான

பொக்கிஷம் வாழ்க்கை,

செலுத்த செலுத்த

துளிர்க்கும்

மலர்ச்செடியாய்!

தன்னலமற்ற

அரவணைப்பின் ஆறுதலில்
அறிமுகம் செய்யப்படுகின்றன

பேதங்களற்ற பிறப்பின்

நற்பெருமை……..

அமைதிக்கும், தனிமைக்கும்

அனுமதி தர மறுக்கும்

அயர்வற்ற வாழ்க்கையில்

இனிமையான இரண்டொரு வார்த்தைகள்

நெஞ்சினிக்கப்பேசிவிட்டால்

வறண்ட வாழ்க்கைதான்

சாரலென மாறாதோ…….!

துவண்ட வாழ்க்கைதான்

தூறலென தூறாதோ……!

பகட்டான வாழ்க்கையில்

உண்மையான அன்பை

விலைகொடுத்தும் பெறக்கிடைக்காத

வசதி படைத்த செல்வந்தரே

வறுமைக்கோட்டுக்கு கீழே

வாழ்க்கையை

வாழ்ந்து முடிக்கிறார்…….

காசு,பணம் கணக்கின்றி சேர்த்து

கோயில் குளம் சுற்றித்திரிவோர்க்கு

அடைய நினைக்கும் அமைதி

இயலாதோர்க்கு ஈகை செய்வதிலும்

அடுத்தவர் மீது அன்பு செலுத்துவதிலும்
வெட்ட வெளியினைப்போல்

கொட்டிக்கிடக்கிறதென்று

தெரிவதேனில்லை……..!

கானல் நீராய்

கையில் சிக்காத

காலச்சக்கரத்தில்

களைப்படைந்து போகும் போது

உற்சாகத்தையும்…….

கலையிழந்து போகும்போது

உத்வேகத்தையும் தரும்

அன்பெனும் உன்னத உணர்வு

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்

கடந்து சென்றும்

கவனிக்கப்படாத கடவுளே!!!

அரிதான மனிதப்பிறவியில்

எதையோ தொலைத்துவிட்ட

தேடல்களில்

பிறவிப்பயனீட்ட மறந்தவர்க்கு

ஞாபகமிருக்கட்டும்

பிறிதொரு ஜென்மம் நிச்சயமில்லை…….!

P.MURALI KARTHIK

Series Navigation

பி முரளி கார்த்திக்

பி முரளி கார்த்திக்