கல்லை மட்டும் கண்டால்

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

உஷாதீபன்


அந்த இடத்தில் அவர் இல்லை. அந்தக் கல்தான் இருந்தது. எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் அமர்ந்திருந்தான் இவன். சற்றுத் தள்ளியிருந்த கடைக்கு டீ குடிக்கப் போயிருந்தார்கள் ஓட்டுநரும், நடத்துனரும். எப்பொழுது கிளம்பும் என்று அங்கிருந்த யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. வந்த நேரம்தான், போன நேரம்தான். “முன்னமாதிரியா இருக்கு டிராஃபிக்கு? உயிர்களக் காப்பாத்துறதுக்கு உயிரக் கையில பிடிச்சிட்டு ஓட்ட வேண்டிர்க்கு. முதலாளிமார்க என்னடான்னா வசூலக் ;கொண்டான்னு நெருக்குறாக…இத்தன டிரிப்பு அடிச்சாகணும்னு கட்டாயப் படுத்துறாக…டைம் கீப் அப் பண்ண எவனால முடியுது…? டைம் கீப்பர் இங்க இருந்தார்னா நமக்கு இன்னைக்கு பேட்டா கட்டுதான்…” ஓட்டுநரின் சலிப்பை விட அவரது ஆங்கிலம்தான் இவனைக் கவனப்படுத்தியது. தாய்மொழியைவிட அது புழக்கத்தில் சீக்கிரம் மனதில் பதிந்து போகிறதோ? அல்லது படித்த ஓட்டுநரோ என்னவோ? மக்கள் பயன்பாட்டில் எது அதிகமோ அதுவே நின்று போகிறது. சகஜமாகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்பதை விட கலெக்டர் ஆபீஸ் பழகிப் போய்த்தானே கிடக்கிறது? ஆனாலும் ல கரம் ழ கரம் கூட வராதவர்கள் சகஜமாய் ஆங்கிலம் பேசுவதையும் பேச முனைவதையும் நினைத்து வெட்கப்படத்தான் வேண்டும். வெகு நேரம் காத்துக் கிடந்துதான் அந்தப் பேருந்து வந்தது. ரெண்டு வண்டியில் மாறிப் போகச் சங்கடப் பட்டுக்கொண்டு, இதானால் ஒரேயடியாய்க் கழியும். வண்டி மாறுவதில் துட்டும் இழுத்துக்கொண்டு போகிறதே? டூ வீலர் வைத்துக் கொண்டிருப்பவனுக்கும் பஸ்ஸில் செல்பவனுக்கும் இன்று ஒரே மாதிரிதான் செலவு ஆகிறதோ என்று தோன்றியது. அதில் நேரம் மிச்சமாகும். இதில் அது இல்லை. ஆனால் அதில் ஆபத்து உண்டு. இதில் அது தவிர்க்கப்படுகிறது. இருந்தாலும் ரெண்டு வண்டி மாறிப் போக ஏனோ மனது வரமாட்டேன் என்கிறது. ஒரு சாதாரண மனுஷன் அந்தக் – 2 – காசி;ருந்தால் நெஞ்சுக்கு இதமாய் ஒரு டீ குடித்துக் கொள்ளலாமே என்று நினைப்பது சகஜம்தானே? அதை பஸ்காரனுக்கு ஏன் அழ வேண்டும்? கொஞ்ச நேரம் வீணாய்ப் போனால் போகிறது. இங்கென்ன கவர்னர் உத்தியோகமா பாழாகிறது? வண்டியில் அமர்ந்திருந்த பலரையும் பார்த்தபோது இப்படித்தான் தோன்றியது. அதென்னவோ இப்படியெல்லாம்தான் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. இந்த எல்கையை விட்டு ஏனோ தாண்டவே முடியவில்லை. பிறந்த பிறப்பும் வளர்ந்த வளர்ப்பும் என்று சொல்வார்கள். அதுதான் தன்னை இப்படியெல்லாம் அலைக்கழிக்கிறதோ என்னவோ…! அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு பேர் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள்? ஐம்ப தோ நூறோ கிடைக்கக் கூடிய அதைக் கொண்டுதான் ஜீவிக்க வேண்டும் என்று எத்தனை பிடிவாதமாய் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்? எந்த அளவுக்கு உழைப்பின் மீதும், உழைப்பதின் மீதும் நம்பிக்கை இருந்தால் இப்படிச் செயல்படுவார்கள்? ஓரமாய் நீளக்கக் கட்டிவிடப்பட்டிருந்த ப்ளாட்பாரத்தையும், அதில் வரிசையாகக் கையில் தூக்குச் சட்டியுடனும், மட்டப் பலகை, ப+ச்சு, சட்டிகளுடனும் அமர்ந்திருப்பவர்களையே பார்த்தான் இவன். அருகிலேயே பத்துப் பன்னிரெண்டு பெண்கள். அவர்களும் பொழுது விடிய வேலைக்குச் செல்பவர்கள். கதிரறுக்க, கதிரடிக்க என்று. தினசரி அவர்களை இவனும் பார்த்துக் கொண்டிருக்கிறான். தினசரி என்றால் ஏறக்குறைய பத்துப் பதினைந்து ஆண்டுகளாய் என்று சொல்லலாம். அவர்களின் வாழ்க்கைத்தரம் அப்படியேதான் இருக்கிறது. எந்த மாற்றமும் இருப்பதாய்த் தெரியவில்லை. என்னவென்று சொல்வது? எதைச் சொல்வது? எதைவிடுவது? ஆரம்பித்தால் எங்கெங்கோ போய் நிற்கும். வண்டி தாமதமாகும் என்று தெரிந்துதான் கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வந்திருந்தான். “எங்க போனாலும் ஒரு பொஸ்தகம் கைல…இஷ்டத்துக்குக் கண்டதையும் படிக்க வேண்டியது. ஏறுக்கு மாறாப் பேச வேண்டியது. வேறென்ன வேலை…” – ஒரு சராசரிப் பெண்ணின் வழக்கமான அர்ச்சனை. ரேவதி என்பது அவள் பெயர். “நா புஸ்தகம் எடுத்திட்டுப் போறது உனக்குக் கஷ்டமா இருக்கா? அது இருக்கிறதுனாலதான் ஓரளவுக்கு நா வாழ்க்கையை நிம்மதியாக் கழிச்சிட்டிருக்கேன்…அதத் தெரிஞ்சிக்கோ…” “அப்படி யார்தான் உங்க நிம்மதியக் கெடுக்கிறாங்களோ இங்க…புதுசா இருக்கு உங்க வியாக்கியானம்…” – 3 – “யார் வாழ்க்கையையும் யாரும் கெடுத்திட முடியாது. எல்லாமே அவனவன் தனக்குத்தானே பண்ணிக்கிறதுதான்…தன் பொழுதுகள எப்படி வரையறுத்துக்கணும்னு அவனவனேதான் தீர்மானிக்கணும்…” “நல்லா தீர்மானிங்க…அப்டியே கொஞ்சம் வீட்டுப் பொழுதுகளயும் தீர்மானிச்சிட்டுப் போங்க…சென்ட்ரல் மார்க்கெட் போய் காய் வாங்கிட்டு வந்து போடுங்க…இன்னிக்குப் பொழுதத் தீர்மானிச்ச மாதிரி இருக்கும்…” அவளின் நகைச்சுவை கலந்த கோபம் இவனை ரசிக்கத்தான் பண்ணியது. கையில் பையோடுதான் கிளம்பியிருந்தான். அவளின் கேட்புக்கு முன்னமேயே அதற்காக இவன் கிளம்பியதுதான். ஆனால் அவள் போகச் சொன்ன தூரம்தான் இவனை சலிக்க வைத்தது. அங்கென்றால் அங்குதான் போய் வாங்க வேண்டும் அவளுக்கு. என்னவோ அங்கு அள்ளிக் கொடுக்கிற மாதிரி. “அங்கன்னா பாதி விலைதான் இருக்கும். எடையும் கூட இருக்குமாக்கும். போயிட்டு வாங்க…” “பஸ் காசு, சுமந்திட்டு வர்ற கஷ்டம்…இதெல்லாம் கணக்கில்லையா…?” “வாரத்துல ஒரு நாள்…அதுக்குக் கூடக் கஷ்டமா…?” அதற்கு மேல் பேசக் கூடாது. சண்டையில்தான் போய் முடியும். மனிதன் வாழ்க்கையில் எங்கு சகிப்புத்தன்மையைப் பழகிக் கொள்கிறான் என்றால் அலுவலகத்திலும் வீட்டிலும்தான். அந்தப் பழக்கத்தையும் அனுபவத்தையும் வைத்துத்தான் வெளியிலுள்ளவர்களையும், பிற உறவுகளையும் ஈடுகட்டப் பக்குவப் படுகிறான். சத்தியமான உண்மை ஐயா…! சதா புத்தகம் படிப்பதைப் பற்றி எப்பொழுதேனும் சலித்துக்கொள்வாளே தவிர அதை அடிக்கடி வாங்குவதைப் பற்றி அவள் என்றுமே சலித்துக் கொண்டதேயில்லை. அதுதான் இவனுக்கு ஆச்சரியம். சம்பாதிக்கிறான், வாங்குகிறான் என்று இருக்கிறாளோ? அல்லது அப்படிப் பல்வேறு புத்தகங்களை வாங்கிப் படிப்பதில் அவளுக்கும் ஏதோவொரு வகையில் ஒப்புதல் இருக்கிறதா? இன்றுவரை புரியாத புதிர்தான். சும்மா நிற்கும் ஒரு ஐந்து நிமிடமாயினும் கையில் ஒரு புத்தகமிருந்தால் சந்தோஷம்தான். அது ஒரு தோழன். ஆப்த நண்பன். அதோடு பேசும், விவாதிக்கும் பொழுதுகள் இதமானவை. சிந்தனையைத் தூண்டிவிட்டு, விரிவடையச் செய்பவை. – 4 – மனிதனை அமைதியானவனாக, சளசளப்பற்றவனாக, சிறந்த விவேகியாக மாற்றும் அபார சக்தி அதற்கு உண்டு. புத்தகத்தை நினைக்கும்பொழுது அதன் தொடர்புடையவர்களும் நினைவுக்கு வருவது சகஜம்தானே? அப்படித்தான் அவரும் இவன் ஞாபகத்துக்குள் வந்தார் அந்த இடத்திற்கு வந்தவுடன். அங்கே அவர் இல்லை. அந்தக் கல் மட்டும்தான் இருந்தது. அதில் அமர்ந்து அவர் படிக்கும் காட்சி கண் முன்னே… அந்தக் குட்டிப் பேருந்து நிலையத்தில் பலரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும், வெட்டியாய் ஆர்ப்பரித்துக் கொண்டும், புகைத்துக் கொண்டும், இருந்து கொண்டிருக்கையில் ஒருவர் மட்டும் இவை எதையும் சட்டை செய்யாமல் தீர்க்கமாகப் படித்துக் கொண்டிருக்கிறார் என்றால் தன்னைப் போன்ற ஒருவரால் அவர் கவனப் படுவது என்பது நிகழக் கூடிய ஒன்றுதானே? அவருக்கென்றே போட்ட கல் போல் இருந்தது அது. தினசரி அவரை அங்கே பார்த்திருக்கிறான் இவன். நடைப் பயிற்சி முடித்து விட்டுத் திரும்பும்போது. வந்த களைப்புத் தீர அங்கே கொஞ்ச நேரம் நிற்பான். செய்திப் போஸ்டர்களை ஆர அமர அலசுவான். வழிந்து கொண்டிருக்கும் வியர்வை ஆறக் காத்திருப்பான். அவர் படித்துக் கொண்டிருப்பார். பக்கத்து டீக் கடைப் பேப்பர்தான் அது. ஒவ்வொரு தாளாக எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்து கொள்வார். அந்த டீக்கடையின் ஏற்புடன் கூடிய நிரந்தர வாசகர் அவர். படிப்பதிலே அப்படி ஒரு நிதானம். நுனிப்புல் மேய்வதல்ல அது. செய்தி செய்தியாய் அலசுவது. ஒன்று முடித்து ஒன்று மாற்றிக் கொள்வது. வெறும் நாலு முழ வேட்டி. வெற்றுடம்பில் மாலையாய்க் கிடக்கும் ஒரு துண்டு. இதுதான் அவர் உடை. அவர் மேல் தனக்கு ஏன் இத்தனை ஈர்ப்பு? புரியவில்லைதான். பிறகு ஒரு நாள் சட்டென்றுதான் உதித்தது. அவர் தன் அப்பாவின் ஜாடை என்று. தன் அப்பாவுக்கும் அதுதானே கடைசி வரை உடையாய் இருந்தது. அவர் வைத்திருந்த ஒரேயொரு கதர்ச் சட்டை இன்னும் கூட அப்பாவின் மணத்தோடு பெட்டியில். ஒரேயொரு வித்தியாசம். அப்பாவுக்கு மீசையில்லை. இவருக்கும் அது இல்லாமல் இருந்தால் இன்னும் அச்சு அசல்தான். ஆழ்ந்த படிப்பு. சூழல் மறந்த படிப்பு. எத்தனை பஸ், எத்தனை ஜனம், வருகிறது, போகிறது…எதுவும் அவரை அசைக்கவில்லையே…! -5 – அப்பாவும் அப்படித்தான். எந்தப் புத்தகமானாலும் அட்டை டூ அட்டைதான். இண்டு இடுக்கு விடமாட்டார். முடித்துவிட்டு ‘இந்தா…’ என்று வீசிப் போட்டு விட்டு சாய்ந்து விடுவார். யாருக்கு இந்தா சொன்னார் என்று தெரியாது. பொதுப்படையான வார்த்தை அது. ஆனால் அது தனக்காகச் சொல்லப்பட்டது என்று அம்மா எடுத்துக் கொள்வாள். வீட்டில் மற்றவர்கள் படிப்பது பிறகுதான். அப்பா அனுபவிக்கும் ஒரே சந்தோஷம் அதுதான். அதில் யாரும் குறுக்கிடுவதில்லை. வேலை முடித்து மதியம் ஓய்வுக்கு வருகையில் அவருக்கு ஒரு புத்தகம் வேண்டும். வாராவாரம் வாங்க வசதியில்லை. பக்கத்து வீடுகளில் சொல்லி அம்மா இரவல் வாங்கி வைத்திருப்பாள். ஒரு வாரம் அல்லது ரெண்டு வாரம் முந்தியதாகத்தான் இருக்கும். படுத்து ரெஸ்ட் எடுப்பது என்பது பிறகுதான். ஆசை ஆசையாய்ப் புரட்டுவார் அப்பா. மொத்தமாக என்னென்ன வந்திருக்கிறது என்று முதலில் ஒரு பார்வை. ஏரியல் சர்வே. பிறகு ஒவ்வொன்றாக ஆரம்பிப்பார். “அது இருக்கட்டும்…திருப்பிக் கொடுத்துறாதே…தொடரை இன்னொருதரம் படிக்க வேண்டிர்க்கு…என்னமா எழுதறான் மனுஷன்….!” அப்பா ஜெயகாந்தனை விழுந்து விழுந்து ரசித்த காலம் அது. “பக்கம் 47-ல் ஒரு துணுக்குச் செய்தி போட்டிருக்காம்பாரு…ஏதோவொரு கிராமத்துக்குப் பேரு ‘சோம்பேறி’யாம். கன்னியாகுமரி மாவட்டத்துல இருக்காம்…” என்பார். செய்தி சொல்வது கூடப் பெரிதில்லை. அதன் பக்கத்தைச் சொல்லிச் சொல்வதுதான் அதிசயம். அபார ஞாபக சக்தி அப்பாவுக்கு. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை வீட்டில் எல்லோரும் குல தெய்வ வழிபாட்டிற்காக ஊருக்குச் சென்றிருந்தபோது கோயிலில் வைத்து அப்பா ஸ்வாமிபேரில் சாம வேதத்தில் பதிகம் பாடியது மறக்க முடியாதது. என்னவொரு அபார ஞானம்! வரி பிறழாமல், வார்த்தை பிசகாமல், ஆஉறாஉற…..உறாஉறாஉற….என்று ராகமிட்டு ஏற்ற இறக்கத்தோடு அப்பா பாடியபோது கூடப் பாடப் புகுந்த சித்தப்பாமார்கள் கூட வரிகளை மறந்துவிட்டு அப்பாவின் வாயைப் பார்த்து வாயசைத்துக் கொண்டிருந்த காட்சி இன்னும் நினைவில் அப்படியே! சுற்றிலும் நின்ற ஊர்க்காரர்கள் அந்த ஸ்வர ராக லயத்தில் மூழ்கி முக்குளித்துத் திளைத்து நின்ற போது, புறப்பட்டு வந்த பலன் கிட்டியது அன்று. கழுத்தில் மாலையோடு தேஜஸாய் நின்ற அப்பாவை, அந்தக் கோயிலின் அர்ச்சகரே வந்து சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரித்தபோது, கூடி நின்ற கூட்டம் சிலிர்த்துத்தான் போனது. – 6 – அப்படித்தான் ஞாபகப்படுத்தினார் இவரும். எங்கே? உறாங்…அந்த நூலகத்தில்;…சட்டென்று ஞாபகம் வந்து விட்டது இவனுக்கு. “மதகுருன்னு ஒரு நாவல். க.நா.சு. மொழி பெயர்த்தது. தெரியும்ல…க.நா.சுப்ரமணியம்னு பேரு…ரெண்டு வால்ய+ம்…அத எடுத்துப் படிங்க…இலக்கியம் விரும்புறவங்க அதெல்லாம் கட்டாயம் படிக்கணும்…” அந்தப் புத்தகத்தை இவன் எடுத்தான். நூலகத்துக்கு வந்து கருக்கழியாமல், புத்தம் புதிதாக, யாருமே அதுவரை தொடவில்லை என்று தெரிந்தது. “இந்த மாதிரிப் புத்தகமெல்லாம் யாருக்கும் தெரியாது. எங்கள மாதிரி பழய ஆட்கள் யாராவது சொன்னாத்தான் உண்டு. அருமை புரிஞ்சிக்கணும்…நா சொல்றேன்…மிஸ் பண்ணிடாதீங்க…” அது போல் எத்தனையோ அறிமுகப் படுத்தினார் அவர். இவையெல்லாம் நூலகத்திற்கு வருகிறதா என்று ஆச்சரியமாய் இருந்தது இவனுக்கு. தினசரி குறிப்பிட்ட நேரத்துக்கு ஆஜராகிவிடுவார் அவர். ஒரு கை வைத்த காடா பனியன் அணிந்திருப்பார் அந்நேரத்தில். கழுத்தில் துண்டோடு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவர் பாட்டுக்குப் போய்க் கொண்டிருப்பார். பல சமயங்களில் அந்த நூலகர் அவரைக் காவல் வைத்துவிட்டு வெளியே சென்று விடுவதைக் கவனித்திருக்கிறான் இவன். “உங்க பேர் என்ன?” என்றார் ஒரு நாள் அதிசயமாக. ஜானகிராமன் என்றான் இவன். “பலே…தி.ஜா.ராவா…? அவருதெல்லாம் படிச்சிருக்கீங்களா…? விட்டிராதீங்க…அத்தனையும் படிக்கணுமாக்கும்…தி.ஜ.ரங்கநாதன்னு கூட ஒருத்தர் இருக்கார்…அவருது கூடக் கிடைச்சா படிங்க…இங்க இருக்கிற மாதிரித் தெரில எனக்கு…” என்றார். புத்தகங்கள் கொண்டு வருபவர்களிடம், “பொறுங்க…வந்திடுவாங்க…” என்றோ, “போயிட்டு மத்தியானம் கொண்டு வாங்களேன்..” என்றோ சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு பெண்மணிதான் அங்கே நூலகர். இவர் இப்படித் தவறாமல் அங்கே பிரசன்னிப்பது அவர்களுக்கு வசதியாய்ப் போயிற்று. அங்கேயே புத்தகம் எடுத்துப் படிக்க அனுமதியில்லைதான். ஆனால் அவருக்கு உண்டு அந்தச் சலுகை. அவரின் காவலுக்குக் கிடைத்த பெருமை அது. ஒரு வேளை அம்மாதிரிப் படித்துத் தள்ளவென்றே அந்தக் காவலை ஏற்றுக் கொண்டாரோ என்னவோ? – 7 – பேருந்தில் அமர்ந்தவாறே அந்த இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் இவன். இப்பொழுது அங்கே வேறு யாரோ ஒருவர் அமர்ந்திருந்தார். பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத ஒருவர் அமர்ந்திருப்பதாய் உணர்ந்தான் இவன். வாயில் ரெட்டை விரல்களை நெட்டுக்க வைத்து “புளிச்” “புளிச்”செனத் துப்பிக் கொண்டிருந்தார் அவ்வப்போது. அந்தப் பேச்சுச் சத்தம் அப்போது இவன் கவனத்தைக் கலைத்தது. “ஆமாண்ணே…நிறுத்திப்புட்டேன்…வியாபாரம் கெடுது…அதான்…” “ஏண்டா கூறு கெட்டவனே…டீக்கடைக்கே ஆதாரம் நிய+ஸ் பேப்பர்தான்…அத வாங்;கிப் போட்டாத்தான் நாலு பேரு படிக்க வர்ற சாக்குல அப்டியே டீயக் குடிச்சிட்டுப் போவான்…நீ அதயே நிறுத்திப்போட்டேங்கிற…? வியாவாரம் ரொம்பத் தூக்குதாக்கும்…?காலைலயும், சாயங்காலமும்னு வாங்குராண்டா எல்லா எடத்துலயும்…?” “அதில்லண்ணே…சமயத்துல ரொம்ப மோசமாயிடுதண்ணே…நேத்தெல்லாம் பார்த்தீங்கன்னா…பெரிய அடிதடி போல பெருகிடுச்சி…தேவையில்லாத வெட்டிப் பேச்சு, அது இதுன்னு வளர்ந்திடுதண்ணே…பயமாயிருக்கு…அதான்…கொஞ்ச நாளைக்குப் பார்ப்பம்னுட்டு…” பேருந்து போய்க் கொண்டிருந்தபோது வழியில் தென்படும் டீக்கடைகளில் இவன் கண்கள் அவரைத் தேட ஆரம்பித்தன. எங்கு உட்கார்ந்திருக்கிறாரோ? எவ்வளவு தூரம் இதற்காகப் போயிருக்கிறாரோ? அப்படி ஆர அமர உட்கார்ந்து சாவகாசமாய்ப் படிக்க இனி அவருக்கு எந்த இடம் அமையப் போகிறது? – எண்ணியவாறே போய்க் கொண்டிருந்தான் இவன். அப்பாவை ஞாபகப்படுத்தும் அவரை அன்று முழுக்கக் கண்கொண்டு பார்க்காதது வருத்தமாய்த்தான் இருந்தது. ஒரு வாரம் கழிந்த பொழுதில் அவரை அன்று அந்த நூலகத்தில் சந்திக்கத்தான் செய்தான் இவன். முதலில் காலையில் பேப்பரை எங்கு படிக்கிறீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றியது. நூலகம் திறக்கும் முன்பே வந்திருந்தார் அவர். வேறு வேலையாய் அவ்வழி சென்ற இவன் கண்ணில் அவர் பட்டுவிட, “என்னங்கய்யா…இவ்வளவு சீக்கிரம்?” என்றான். பக்கத்தில் ஒரு சாக்கு மூட்டை இருப்பது தெரிந்தது. சுவற்றில் சாத்தி வைக்கப் பட்டிருந்த அதைப் பார்த்து என்ன அது என்றான் அவரிடம். – 8 – அப்பொழுதுதான் வந்திருப்பார் போலும்…மூச்சு வாங்கியது அவருக்கு. ஒரு வேளை தூக்கி வந்திருப்பாரோ? அவரையே பார்த்தவாறு நின்றான். “ஒண்ணுமில்லே தம்பி…இந்த மூட்டை நிறையப் புக்ஸ் இருக்கு…இந்த லைப்ரரிக்குக் கொடுத்திடலாம்னு…” – சுருக்கமாய்ச் சொன்னதுபோல் இருந்தது. என்ன மனச் சங்கடமோ…” பார்த்தவாறே நின்ற இவன் கேட்டான்;. “என்னது? இவ்வளவும் புஸ்தகங்களா? உங்களுடையதா ஐயா…ஏன்..இப்டி…?” “என்னத்தைச் சொல்றது தம்பி…அருமை தெரியாத பசங்க…எடுத்து வீசைக்குப் போட்ருவேன்னாங்க…எனக்கே தெரியாமச் செய்திடுவாங்க போலிருக்கு…அதுக்கு எம்பொண்டாட்டியும் தலையாட்டுறா…அதான் …” – அவர் குரலில் பெருத்த சோகம் இருப்பதாய்த் தோன்றியது இவனுக்கு. “இதை ;வீசைக்குப் போடுறதும், நா தூங்குற போது என் தலைல கல்லைத் தூக்கிப் போடுறதும் ரெண்டும் ஒண்ணுதான்னுட்டுத் தூக்கிட்டு வந்திட்டேன்…” அவர் கண்கள் கலங்கியது போலத்; தோன்றியது. இப்படியான ஒரு எதிர்ப்பு உள்ள ஒரு இடத்தில் அவரின் நிலை என்னவாக இருக்குமோ? என்று சிந்திக்கத் தலைப்பட்டான் இவன். அவரின் நீண்ட அமைதி இவனை அந்தச் சிந்தனைக்கு இழுத்துக் கொண்டு போனது. “இங்கயாவது நாலு பேர் படிப்பாங்க…படிக்கத்தானே இருக்கு பொஸ்தகங்கள்…எடைக்குப் போட்டுக் காசு வாங்கவா…? ஆனா என்னன்னா…நிறையப் புஸ்தகம் பழசாப் போயிடுச்சி…பைன்ட் பண்ணினாத்தான் கையில வச்சுப் படிக்க முடியும்…அதுக்கும் எங்கிட்டக் காசிருந்தா செய்து கொடுத்திடுவேன்…அதான் சந்தேகமாயிருக்கு எடுத்துக்குவாங்களோ மாட்டாங்களோன்னு…நன்கொடையாக் கொடுத்தா வேணான்னு சொல்வாங்களா என்ன? மத்த புத்தகங்களைப் பைன்ட்டுக்குக் கொடுக்கிறபோது இதையும் சேர்த்துக் கொடுங்கம்மான்னு கேட்டுக்க வேண்டிதான்…எது எப்டியானாலும் இத எடைக்குப் போடுறதுக்கு மட்டும் விடறாப்ல இல்ல…அதான் ஒரே முடிவா தூக்கிட்டு வந்திட்டேன்…இங்க சேர்ப்பிச்சிட்டுத்தான் நகர்றது….. அவர் சொல்வதைக் கேட்டவாறே அங்கிருந்து நகர முடியாதவனாய், அவருக்கு ஆறுதலாயாவது இருக்கட்டுமே என்று அப்படியே நின்று கொண்டிருந்தான் இவன்.

Series Navigation