கர்நாடகத்தில் மலர்ந்த கமலம்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

ஜடாயு



“The day when the lotus bloomed” என்று செய்தித்தாள்களின் முதல் பக்கங்களும், எம்.ஜி ரோடில் உள்ள தட்டிகளும் அறிவித்தபோது உடனடியாக என் மனதில் மின்னியது தாகூரின் கீதாஞ்சலி பாடல் தான் –

On the day when the lotus bloomed, alas, my mind was straying, and I knew it not.

My basket was empty and the flower remained unheeded. Only now and again a sadness fell upon me, and I started up from my dream and felt a sweet trace of a strange fragrance in the south wind.

தென் திசைக் காற்றின் மணம்! தென்னகத்தில் தாமரை மலர்கிறது என்று பாஜக தலைவர்கள் குறிப்பிட்டது ஏனோ நினைவுக்கு வந்தது.

ஆனால் இது தாகூரின் கவிதை சொர்க்கம் அல்ல. ஒன்றரை மாதமாக தினமொரு ஹேஷ்யமும், மணிக்கொரு மாறாட்டமும், குடும்ப, வாரிசு, ஜோதிட அரசியல்களின் முடிச்சுகளுமாக குழம்பித் தவித்த சேற்றில் ஒருவழியாக முக்கி முனகியாவது தாமரையோ அல்லியோ ஏதோவொரு மலர் மலர்ந்துவிட்டது என்பதில் மாநில மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம் என்பது தான் உண்மை.

இந்த ஒன்றரை மாத காலத்தில் அரசியல் நாடகத்தின் பல காட்சிகள் அரங்கேறின. தேவகவுடாவும், குமாரசாமியும் சொன்னபடி பாஜகவுக்கு அரசுரிமையைத் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்று பாஜக தலைவர்கள் ஊர் ஊராகச் சென்று நம்பிக்கைத் துரோகப் படல காட்சிகளை அரங்கேற்ற, அதே நேரத்தில் செக்யுலரிசத்திற்காக ஏமாற்றுவதும், வாக்குத்தவறுவதும் எல்லாம் அரக்க பா.ஜ.கவிடம் போகாமல் நாட்டைக் காப்பாற்றுதற்குத் தான் என்று புலம்ப ஆரம்பித்தார் குமாரசாமி. சரியாக 20 மாதங்கள் முன் ஆசார செக்யுலர் ஜனதா தளம் மதவாத பாஜகவுடன் கூட்டு வைப்பது அபசாரமில்லையோ என்று கேட்டதற்கு “செக்யுலரிசமா? அது என்ன என்று எங்கள் கட்சிக் காரர்கள் உட்பட எல்லாரையும் கேட்டுப் பார்த்தேன், ஒருத்தனுக்கும் அதற்கு அர்த்தம் கூடத் தெரியவில்லை. அதைக் காரணம் சொல்லி வலிய வந்த ராஜ்ய லஷ்மியை எட்டி உதைப்பதா??” என்று அசர வைத்த அதே குமாரசாமி!

பாஜகவை நிராகரித்ததை நம்பிக்கை நிரூபணமாக்கி சிறுபான்மை ஓட்டுக்களை தூண்டில் போட நினைத்த ஜனதா தளம், எடியூரப்பாவுக்கு வீரசைவ மடத்தலைவர்கள் அனைவரும் ஒருமித்த ஆதரவு அளிப்பதைக் கண்டு “இது ஒரு ஒக்கலிகர் முதல்வராவதைத் தடுக்கச் செய்யப் படும் சதி” என்று முத்திரை குத்தப் படுமோ என்று அஞ்சி நடுங்கி அடுத்த வாரத்திலேயே அந்தர் பல்டி அடித்தது! இந்தக் கூத்துக்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் காரர்கள் என்னதான் இவர்கள் மறுபடிக் குலாவிக் கொண்டு கவர்னரிடம் போய் நின்றாலும், சோனியா நாயக மத்திய அரசு ஜனநாயகத்தை எட்டி உதைத்து என்னவாவது செய்து சட்டசபையைக் கலைத்து விடும் என்று எண்ணிய எண்ணத்திலும் மண் விழுந்தது.

இப்படியாக தாமரை மலர்ந்து விட்டது. எடியூரப்பா பதவியேற்பு நிகழ்ச்சியிலேயே ஜனதாதள, பாஜக பிணக்குகள் வெளித் தெரியத் தொடங்கியிருக்கின்றன. இருப்பினும், குறைந்தபட்ச கூட்டணி தர்மம், உடனடி தேர்தலைச் சந்திக்க விரும்பாத கட்சிக்காரர்கள் இவைகள் இந்த அரசு அதன் முழு கால அளவு வரை நீடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

ஒருவிதத்தில் இது ஜனநாயகத்தின் வெற்றி என்றும், சாதுர்ய (pragmatic) அரசியல் மற்றும் அரசாட்சி தரும் (governing) அரசியல், போலித்தனமான, துவேஷம் வளர்க்கும் கொள்கை அரசியலைப் பின்னுக்குத் தள்ளி வருவதை நிரூபித்து வரும் இன்னொரு இந்திய நிகழ்வு என்றும் தான் மதிப்பிட வேண்டும். வளர்ந்து வரும் மாநிலமான கர்நாடகம் ஆட்சியாளர்களைத் தான் தேடுகிறதே அன்றி அடித்துக் கொண்டு அலறும் அரசியல் பூச்சாண்டிகளை அல்ல. தென்னிந்தியாவில் முதல் பாஜக அரசு அமைந்து அந்தக் கட்சியின் தலைவர் முதல்வராவது ஒரு குறிப்பிடத் தக்க அரசியல் நிகழ்வு தான். பதினைந்து ஆண்டுகளாக அடிமட்ட அளவில் கட்சியைக் கட்டமைத்து, வியூகங்கள் வகுத்து, சமரசங்கள் செய்து, படிப்படியாக தேர்தல் வெற்றிகள் அடைந்து இந்த நிலைக்கு பாஜக வந்திருக்கிறது. அதற்கு மேல் இதில் பயப்படும்படியாக ஒன்றும் இல்லை.

ஆனால் கர்நாடகத்தின் சில அறிவுஜீவிகளும், சிந்தனையாளர்களும் அப்படி நினைத்ததாகத் தெரியவில்லை. அதற்கு முன்பு நடந்த எல்லா அரசியல் அவலட்சணங்களையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பாஜக அரசு உருவாகிவிடும் என்ற சாத்தியக் கூறு உருவான உடனேயே, கூட்டமாகக் கூடி, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கவர்னரிடம் போய் “கர்நாடகத்தின் அரசியல் இழுபறி மிக மோசமாகி விட்டது, உடனடியாக சட்டசபையைக் கலையுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர். ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியும், ஜனநாயக உணர்வும் கூட இல்லையோ என்று சந்தேகம் தோன்றும் வகையில், யு.ஆர்.அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்னாட் உள்ளிட்ட ஞானபீட படைப்பாளிகள் தேவகவுடாவை விட மோசமாக நடந்து கொண்டது அவர்கள் மீது மக்கள் கொண்டிருந்த மதிப்பைக் கண்டிப்பாகக் குறைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அரசு அமையும் நாளில் “கர்நாடகத்தை இன்னொரு குஜராத் மாதிரி ஆக்கிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கிறார் யூ.ஆர்.ஏ. அனைத்து கிராமங்களிலும் தடையறாத மின்சாரம், தொழில் வர்த்தகம் முதலீடு, வளர்ச்சி வாய்ப்புக்கள் இவற்றில் முதலிடம் என்று நடைபோடும் குஜராத் மாதிரி கர்நாடகம் ஆகாதா என்று ஏங்கும் சாதாரண கன்னட குடிமகனின் உணர்வுகள் அவர் போன்ற அறிவுஜீவுகளுக்கு இருக்காதோ என்னவோ?


http://jataayu.blogspot.com/

jataayu.b@gmail.com

Series Navigation