கரை மேல் பிறக்க வைத்தார்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

வந்தியத்தேவன்இலங்கை கடற்படை சுட்டு இந்திய மீனவர்கள் பலியான சம்பவம் குறித்து வலைப்பதிவுகளில் விவாதங்கள் நடந்து வருகின்றது. இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை திண்ணை வாசகர்கள் முன் வைக்கின்றேன்.

அரசியல் முடிவுகள் அனைத்துமே பிற்காலத்தில் நன்மை பயக்குமென்று கூறிவிட முடியாது. அதுவும் இந்தியா போன்ற வலுவான ஜனநாயக நாட்டில் முடிவுகளின் பலன்களை “அரசியல்வாதிகளின் நோக்கங்கள்” மட்டுமே தீர்மானிப்பதில்லை.

11, டிசம்பர் 1971: கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஷ் ஆக்கியதன் பலனை இன்னமும் பாகிஸ்தானின் காஷ்மீர் ஊடுருவல் மூலம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம். சரி இந்தியாவால் சுதந்திரம் பெற்ற பங்களாதேஷாவது நம்மோடு நட்பு பாராட்டுகின்றதா என்றால் அதுவும் இல்லை. பங்களாதேஷ் தேசியவாதிகளின் கட்சியின் (Bangaladesh Nationalist Party) தலைவரான பேகம் காலீதா ஜியா, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ஊடுருவும் தீவிரவாதிகளை “சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என்று புகழாரம் சூட்டுகின்றார். பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கூட இந்திய இறையாண்மைக்கு காஷ்மீரில் குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதிகளை அவ்வாறே விளிப்பார். இதைத்தான் தலைவலி போய் திருகு வலி தேடிக் கொள்வதென்பார்கள். இருப்பினும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் இருந்தவரை பங்களாதேஷோடு இருதரப்பு உறவுகள் நன்றாகத்தான் இருந்தன. நாம் டின் பிகா (Tin Bigha) என்னுமிடத்தை பங்களாதேஷிற்கு குத்தகைத் தாரை வார்த்தோம். டின் பிகாவுக்கும் இப்பிரச்சினைக்கும் என்ன தொடர்பென்பதை விரைவில் தொடுகின்றேன்.

28 ஜூன் 1974: கச்சத்தீவை இந்திரா இலங்கைக்குத் தாரை வார்த்து கொடுத்தார். இந்திராவின் கூற்றுப்படி கச்சத்தீவு ஒரு “யுத்த தந்திரப்படி முக்கியமில்லாத வெறும் பாறை”. ஆனால் அப்பாறையைச் சுற்றி Tiger Prawns எனப்படும் இறால் மீன்கள் அதிகம். இராமேஸ்வரம் மற்றும் இதர கரைகளிலிருந்து தமிழக மீனவர்களை இப்பாறை தொடர்ந்து ஈர்த்தது. 1974’ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் தலைமுறை வழக்கப்படி (traditional rights) மீன் பிடிக்கும் உரிமையையும், புனித அந்தோணியார் விழாவில் கலந்து கொள்ள அனுமதியும் பெற்றார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் 5’வது ஷரத்து சொல்கின்றது: “இந்திய மீனவர்களும், பக்தர்களும் கச்சத்தீவிற்கு தாராளமாக விரும்பும் போது செல்ல இதன்மூலம் வழிவகை செய்யப்படுகின்றது. இதற்காக இலங்கையிலிருந்து பயண ஆவணங்களோ விசாவோ வாங்க வேண்டிய அவசியமில்லை.

6’வது ஷரத்து: இந்தியா மற்றும் இலங்கையின் கலங்கள் தலைமுறைகளாக இருந்து வரும் வழக்கப்படி இருவருக்கும் சொந்தமான கடற்பரப்பில் தொடர்ந்து இயங்கி வரும்.

கச்சத்தீவினை தானம் கொடுத்தவுடன் இந்தியாவிற்கு இலங்கையின் அன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட விடயங்களிலேயே (அதுவும் தற்காலிகமாகவே) இருந்தது வந்தது. இன்றைய தமிழக/இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு இந்திராவின் கச்சத்தீவு முடிவே தொடக்கமென்றாலும், 1974 ஒப்பந்தம்தான் தெளிவாக இருக்கின்றதே? அதன் ஷரத்துகளை தீவிரமாக செயல்படுத்துவதின் மூலம் பிரச்சினைக்கே முற்றுப் புள்ளி வைக்கலாமே? இந்தியாவும், இலங்கையும் 1974’ம் ஒப்பந்தத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டன. கச்சத்தீவு பிரச்சினையில் மேற்கூறிய டின் பிகா சம்பவத்தை இணணத்து பின்னர் காண்போம்.

இலங்கை கடற்படை இந்திய மீனவர்களைக் தாக்குகின்றது என்பது பிரச்சினையின் ஒரு பகுதி. 1983’லிருந்து 2002 வரை மொத்தம் 112 இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று ஹிந்துவின் இணையதளம் (Frontline) கூறுகின்றது.

3 & 5 மார்ச் 2003: பெசாலை மற்றும் நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கைவாழ் தமிழ் மீனவர்கள், கச்சத்தீவினுக்கருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 154 இந்திய மீனவர்களைத் தாக்கி 21 படகுகளைக் கைப்பற்றினார்கள். தாக்கியவர்கள் வேறு யாருமில்லை. மண்டபம் மற்றும் நாகப்பட்டினத்தில் அகதிகளாய் 19 வருடங்கள் இருந்துவிட்டு, புலிகள் + இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டவுடன் மீண்டும் மீன் பிடிப்பை தொடங்கியவர்கள். இப்போது அவர்கள் போட்டியாய் நினைத்தது தமிழக மீனவர்களை. இலங்கை இராணுவம் தாக்குகின்றது என்றால் “அதன்” நோக்கங்களை யாரும் கற்பிதம் செய்து கொள்ள முடியும். ஆனால் முன்னாள் இரத்த சொந்தங்கள் தாக்குவதை நியாயம் செய்ய முடியுமா?

கடற்பாதுகாப்பு என்பது இந்திய கடற்படையும், கடற்கரை பாதுகாப்புப் படையும் (Indian Coast Guard) இணைந்து, இயைந்து செயல்படுத்தும் பணியாகும். இப்படைகளை இயக்கும் கமாண்டர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. ரோந்திற்கு செல்லும்போது, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை கடற்படை நுழைந்தால், வலைப்பதிவுகளில் கூறப்படுவது போல “தன்னிச்சையாய்” செயல்பட முடியாது என்பது கசப்பான ஜனநாயக உண்மை. இந்திய அரசின் வெளிப்படையான “உத்தரவின்றி” இராணுவமோ, விமானப்படையோ, கடற்படையோ, கடற்பாதுகாப்புப் படையோ ஏனைய மத்திய பாதுகாப்புப் படைகளோ ஒன்றுமே செய்யாது. தன்னிச்சையாக முடிவெடுக்க இந்தியாவின் படைகளுக்கு ஜனநாயகமில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே அப்படைகளின் சிறப்பு. அவர்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என்று வலைப்பதிபவர்கள் கூறுவது அபத்தம். ஜனநாயக முறையில் நடுவண் அரசின் கட்டளைக்கு அடிபணியுமே தவிர, தன்னிச்சையாய்/யதேச்சாதிகாரமாய் முடிவுகளை செயல்படுத்தும் பாஸிஸ அமைப்பல்ல இந்திய கடற்படை.

மேலுல் சாதாரண இந்தியப் படகுகள் இலங்கை எல்லைக்குள் போகவில்லை. அவை Trawlers எனப்படும் ஆழ்கடல் விசைப்படகுகள். மேலும் இராமேஸ்வரத்திலிருந்து 18 கிமீ தூரத்திலிருக்கும் கச்சத்தீவிற்கு சாதாரண மோட்டார் பொருத்திய படகுகளைவிட ஆழ்கடல் விசைப் படகுகளே அதிகம் செல்லுகின்றன. அவ்வகை விசைப்படகுகள் செய்வது “மீன் கொள்ளை” (poaching) என்று இலங்கை மீனவர்கள் கருதுகின்றார்கள்.

இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையை இவ்விரு நாடுகளில் (குறிப்பாக இலங்கையில்) நடக்கும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள், நிகழ்வுகள் நடந்த காலகட்டங்களைக் கொண்டு ஆராயலாம்.

மேற்கூறிய கூறியபடி 1974’ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதன் பின்னர் அதே ஒப்பந்தத்தில் 5 மற்றும் 6 வது ஷரத்துகளின் மூலம் இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவினருகில் மீன் பிடிக்க முழு உரிமை வழங்கப்பட்டது.

1983’ல் இலங்கையில் தொடங்கிய சிவில் யுத்தம் ஒரு முக்கியமான திருப்புமுனை. பா(ல்)க் ஜலசந்தியில் மற்றும் பா(ல்)க் நீரினையில் மீன் பிடிக்கும் இரு நாட்டு மீனவர்களும் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக இலங்கை மீனவர்கள் சிங்கள அரசின் பாதுகாப்பு குறித்த ஏகப்பட்ட கட்டுபாடுகளுக்கும், கெடுபிடிகளுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் புலம் பெயர்ந்து தமிழகக் கடற்கரைகளில் (இராமேஸ்வரம், மண்டபம்) தஞ்சம் புகுந்தனர். இருப்பினும் 1974 முதல் 1983 வரை இருநாட்டு மீனவர்களும் சுமுகமாக, இருவரது கடற்பகுதிகளிலும் மீன் பிடித்துக் கொண்டுதான் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரச்சினையை மேலும் ஆராயுமுன்னர் சில தகவல்கள். கரையிலிருப்பதைப் போல கடலிலும் ஒரு நாட்டிற்குண்டான ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைப் பார்ப்போம்:

Territorial Sea: கரையிலிருந்து 12 கடல் மைல்களுக்கு மிகாமல்
Contiguous Zone: கரையிலிருந்து 24 கடல் மைல்கள் மிகாமல்
exclusive economic zone: கரையிலிருந்து 200 கடல் மைல்கள் மிகாமல்

இந்த எல்லைகளைப் பற்றியும், குறிப்பிட்ட எல்லைகளில் ஒரு நாட்டிற்கு உண்டான உரிமைகளைப் பற்றியும், விதிகள் மீறப்படும் போது எவ்வாறு பிரச்சினை தீர்ப்பது போன்ற விடயங்களை விரிவாக ஐநா சபையின் இணையதளத்தில் படிக்கலாம். குறிப்பாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்பட வேண்டியது Territorial Sea. கரையிலிருந்து 12 கடல் மைல் (13.8 மைல்/22.22 கிமீ) வரை முழு உரிமை ஒரு நாட்டிற்கு உண்டு. பிரச்சினை என்னவென்றால் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் territorial sea 7 கிமீ (3.8 கடல்மைல்) தூரம்தான். எனவே தத்த்தமது கடலெல்லைகளைத் துல்லியமாக பிரித்துக்கொள்ள இந்தியாவும் இலங்கையும் சில ஒப்பந்தங்களைச் செய்துகொண்டன.

தென்னிந்திய மீனவர் குமுகாயங்களின் தலைவரான வி. விவேகாநந்தன் (V.Vivekanandan, South Indian Federation of Fishermen Societies (SIFFS), Trivandrum) இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து விரிவாக ஆய்வு செய்திருக்கின்றார். அவர் Release of Innocent Fishermen (ARIF) என்ற அமைப்பின் கன்வீனராகவும் இருக்கின்றார்.

SIFFS என்பது ஒரு அரசு சாராத நிறுவனமாகும் (NGO). மொத்தம் 21 நபர்களை (16 மீனவர்கள் உட்பட) அழைத்துக் கொண்டு இலங்கைக்கு மே’ 2004 நல்லெண்ண தூது சென்றார். அவரது பயண அனுபவங்கள் ஏறத்தாழ என்னுடைய கருத்துகளை ஒத்துப்போயின.

1983 இலங்கை சிவில் யுத்தம் ஆரம்பித்த பிறகு இலங்கை மீனவர்கள் ஒருபுறம் இந்திய கடற்கரைகளுக்கு புலம் பெயர, இந்திய மீனவர்கள் இலங்கை கடறெல்லைக்குள் நுழைந்தால் அந்நாட்டின் இராணுவம் சுடுவதும் ஆரம்பமாகியது. இந்த காலக்கட்டத்தில் இந்திய ஆழ்கடல் விசைப்படகுகள் (Trawlers) இலங்கை கடற்பகுதியில், இலங்கை மீனவர்களின் போட்டியின்றி மீன் பிடிக்கத் தொடங்கின. ஆழ்கடல் விசைப்படகுகள் பெயருக்கேற்றபடி ஆழமில்லாத (Shallow) கடலில் மீன் பிடிக்க உதவாது. இந்திய கடலெல்லையிலிருந்து இவ்வகை ஆழ்கடல் விசைப்படகுகள் மீன் பிடிக்க வேண்டுமென்றால் கரையிலிருந்து குறைந்தபட்சம் 3 கடல் மைல் தூரமாவது செல்லவேண்டும். இது சாதாரண கட்டுமரங்கள், மோட்டார் பொருத்திய படகுகள் கொண்ட மீனவர்கள் பிழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்த ஒப்பந்தம். இராமேஸ்வரத்திலிருந்து 3 கடல்மைல் கடந்து, ஆழமிகுந்த இடத்தில் மீன் பிடிக்க டிராலர்கள் முயன்றால் அவை இலங்கையின் கடலெல்லைக்குள் தான் செல்ல வேண்டும்.

பிறகென்ன? இலங்கை மீனவர்கள் (1983’ற்கு பிறகு) ஏற்படுத்திய வெற்றிடத்தை இந்திய டிராலர்கள் நிறைக்கத் தொடங்கின. தெற்கு இராமேஸ்வரத்திலிருந்து வடக்கே நாகப்பட்டினம் வரை 4,000 டிராலர்கள் இக்காலக்கட்டத்தே களமிறங்கின என்று விவேகாநந்தன் தெரிவிக்கின்றார். மேலும் இராமேஸ்வரத்திலிருந்து மட்டும் 1000 படகுகள் இலங்கை கடலெல்லைகளை நம்பியே இயங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றார்.

2002’ல் இலங்கை அரசாங்கம் புலிகளோடு செய்துகொண்ட சமாதான ஒப்பந்தப்படி இலங்கை மீனவர்களின் வாழ்வில் ஒரு புதிய விடிவெள்ளி தோன்றியது. மெல்ல மெல்ல தமது து(ம)றந்த வாழ்வினை தேடியெடுக்க பெயர்ந்த புலத்தை விட்டு, தாயகம் சென்றடைந்து தமது இயல்பு வாழ்க்கையான மீன்பிடி தொழிலுக்கு சென்றார்கள். இராமேஸ்வரத்திலும், மண்டபத்திலும் புலம் பெயர்ந்த இலங்கை மீனவர்களுக்கு நாம் செய்த நன்றிக்கடனாக கச்சத்தீவினிக்கருகில் மீன் பிடிக்க நம்மை அவர்கள் அனுமதிப்பார்கள் என்ற இந்திய டிராலர் மீனவர்கள் நம்பியது நல்லெண்ணப் பிரயாணத்தில் மறைந்து போனது. இந்திய மீனவர்கள் பெசாலையைச் சேர்ந்த இலங்கை மீனவர்களைச் சந்தித்தபோது அவர்கள் கூறியது “இந்திய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செய்வது கடற்கற்பழிப்பு (rape of the sea)”. தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுதானே.

அரசு சாராத நிறுவனம் SIFFS ஏற்பாடு செய்த நல்லெண்ணப் பயணத்திற்கு, தமிழ்நாட்டு அரசு Tamilnadu Fisheries அப்சர்வர் கூட அனுப்பமுடியவில்லை. ஏனென்றால் யார் போவது, வெளிநாட்டு பயணத்திற்கு வேண்டிய அனுமதி எவ்வாறு பெறுவது என்ற ரெட் டேபிஸம்.

24’ம் தேதி இக்குழு மன்னாரை அடைந்தது. அங்கே குழுமியிருந்து வரவேற்றவர் திரு. விசுவலிங்கம் (மாவட்ட கலெக்டர் அந்தஸ்து), திரு. ரெவரெண்ட். ராயப்பு ஜோசப் (பிஷப், யாழ்ப்பாணம்), தந்தை தேவராஜா, லெப்டினெண்ட் காலுஹெட்டி (இலங்கை கடற்படை) உட்பட்ட பல முக்கிய நபர்கள். லோக்கல் பிபிஸியும் ஆஜர்.

இதிலிருந்தே தெரியவில்லையா? இலங்கை தனது மீனவர் பிரச்சினைக்கு கொடுக்கும் மதிப்பும் இந்தியாவில்/தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளும் கொடுக்கும் மதிப்பும்? விவேகாநந்தன் தெளிவாகக் குறிப்பிடுகின்றார் இந்தியாவில் இல்லாதபடி “இலங்கையிலுள்ள உள்ளூர் நிறுவனங்கள் மீனவர்களின் பிரச்சினைக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்தன…; மீனவ சங்கங்களுக்கும் அரசு கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தன…”.

இலங்கையில் தற்போது இந்தியாவிலுள்ள அளவு போல அதிக ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில்லை. தனதெல்லை தாண்டி வந்து இந்திய டிராலர்கள் மீன் பிடிக்கும் போது தமது வலைகள் அறுந்து போவதை இலங்கை மீனவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. அன்றைக்கு சோறு போட்டதற்காக இன்றைக்கு வயிற்றில் அடிப்பதை அவர்கள் ஒருபோதும் ஒத்துக் கொள்ளப்போவதேயில்லை.இது நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து.

இன்றைய இலங்கை கடற்படை எல்லை கடந்த இந்திய மீனவர்களை சுடுவதை ஒருக்காலும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. வேண்டுமானால் அவர்கள் கைது செய்யட்டும். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கெட்டும்.

ஆனால் எல்லை கடப்பது, அதுவும் மரைன் டெக்னாலஜி சாதனங்களுடன் கூடிய ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் செய்வது சட்டப்படி குற்றம் என்ற பொதுப்புத்தி நமது மீனவர்களுக்கு வேண்டும்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புலிகளின் கடத்தல் தொழிலில் உதவினார்கள் என்பதற்காக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுகின்றார்கள் என்பது திரிப்பு என்று கூறுபவர்கள் தங்களின் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளலாம் உண்மை எதுவென்று. இப்பதிவு இந்திய மீனவர்களை எதிர்த்து என்று கூடத் திரிப்பு செய்யப்படலாம் என்பதையும் நான் அறிந்தே இருக்கின்றேன்.

1983’க்கு முன்னால் பெசாலையில் ஒரு நாளில் 20 லாரி லோட் செய்யுமளவிற்கு இருந்த மீன்பிடி இன்று (2004’ல்) 2-3 லாரிகளுக்கே தள்ளாடுகின்றது. ஏன்? அவர்கள் கூறுவது இந்திய டிராலர்கள் செய்யும் “கடற் கற்பழிப்பு”. வடமராட்சி மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களோடு நடந்த சண்டையில் மரித்தார். நெகோம்போவில் மீனவர்கள் நல்லெண்ண சந்திப்பில் “இது போன்ற எத்தனையோ விடயங்களை இந்திய மீனவர்கள் (கடலெல்லை கடக்காமல்) கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டிருந்தால் தடுத்திருக்கலாம்”, என்றார்கள்.

இந்திய மீனவர்கள்தான் இன்றைய பிரச்சினைக்குக் காரணமா?

இராமேஸ்வரத்தின் கடற்கரையை டிராலர்கள் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அதன் படுகை ஆழமில்லாத கற்படுகை. எனவே இலங்கை எல்லைக்குள்தான் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். அங்கே கிடைக்கும் Tiger Prawns விடுத்து Yellow Fin Tuna பிடிக்கலாமென்றால் அதற்கு இலங்கை மீனவரிடம் போட்டி போட வேண்டும். வருடத்திற்கு சராசரியாக 28 லட்சம் டன் மீன்களை இந்தியா செய்யும் அறுவடையில், டிராலர்கள் மூலம் கிடைப்பது ஏறக்குறைய 50%. இவ்வகை டிராலர்களுக்கு டீஸல் விலை உயர்வு, இறால் விலை வீழ்ச்சி, கடற்கரையிலிருந்து மூன்று கடல்மைல் அப்பால்தான் மீன்பிடிக்க வேண்டும், பருவ காலக் கட்டளைகள் (இராமேஸ்வரம், புதுக்கோட்டை, ஜகதாம்பட்டினம், கோட்டைப்பட்டினம் டிராலர்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலேயே மீன்பிடிக்க வேண்டும்; 15 ஏப்பிரல் முதல் ஆறு வார காலத்திற்கு டிராலர்கள் தமிழக அரசுக் கட்டளைப்படி மீன் பிடிக்க முடியாது) இவற்றையெல்லாம் தாண்டி வருமானம் பார்த்து வயிற்றைக் கழுவ வேண்டிய கட்டாயம். இராமேஸ்வரம் – நாகப்பட்டிணம் ஏரியாவில் மட்டுமே 1983-2004 வரை சுமார் 4,000 டிராலர்கள் முளைத்து விட்டன. முதலீடு சுமார் 120 கோடி இந்திய மதிப்பில். இதில் பாதி இந்திய மீனவர்கள் கடனாய் வாங்கியது. இலங்கையோடு இந்திய மீனவர் பிரச்சினை தொடர்ந்தால் (இருதரப்பும் சுனாமியால் பாதிக்கப்பட்டது போக) நிலைமை மேலும் கடுமையாக மோசமடையும். இந்திய அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தன்னார்வ நிறுவனமோ, ஏனைய ஸ்தாபனங்களோ ஆய்வறிக்கைகள் மட்டுமே தர முடியும்.

கடலைப்பற்றி அறிந்தவர்கள், வியக்கும் முக்கியமான விடயம் “அதன் பிரும்மாண்டம்”. அலைகளின் சலனமில்லாத ஆழ்கடலின் பிரும்மாண்டத்தில் ஆஜானுபாகுவான விமானந்தாங்கிக் கப்பல் கூட கொசுவாகத் தெரியும். கடல்நீரில் தோன்றி மறையும் வீக்கங்கள் (Swellings) அந்த பிரும்மாண்டத்தை இன்னும் பெரிதுபடுத்திக் காட்டும். மீனவர்கள் கடலை வெறும் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக படைக்கப்பட்டதாய் நினைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கடல் ஒரு தாய், கடவுள், மாதா என்று பலவகைகளில் உருவகப்படுத்தி மகிழ்வார்கள். நாள் முழுதும் அலைந்து நினைத்த அளவு மீன் கிட்டாவிட்டாலும் கடலைச் சபிக்க மாட்டார்கள். தனது கடலெல்லைக்குள் மற்றவர் நுழைவதை “வன்புணர்வு” என்று இலங்கை மீனவர்கள் கருதுவது அதீதமான உணர்வு வெளிப்பாடல்ல. இதே காரணத்தால்தான் இந்தியாவிற்குள்ளும் மீனவ குப்பங்களிடையே சண்டை மூள்கின்றது. எனவே இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை “மேலாண்மை” திறத்துடன் மட்டும் அணுக முடியாது. உணர்வுப்பூர்வமாகவும் அணுக வேண்டும். இப்பிரச்சினைக்கு ஒரு உடனடி தீர்வு கிடையவே கிடையாது.

இதனை நன்கு புரிந்து கொண்ட SIFFS தனது முதலாவது நல்லெண்ணப் பயணமாக இந்திய மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றது. மீனவர்களும் மனம் விட்டு தமது பிரச்சினைகளை அலசினார்கள். பொதுவாக இந்திய மீனவர்கள், இலங்கை மீனவர்களின் எல்லை கடந்து மீன் பிடிக்கும் பிரச்சினையில் வெளிப்படுத்திய உணர்ச்சிக் குமுறலைக் கண்டு ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். “கடற் கொள்ளை”, “கடற் கற்பழிப்பு” போன்ற சொற் பிரயோகங்களைக் கண்டு விக்கித்துப் போனார்கள்.

இலங்கை மீனவர்கள் திட்டவட்டமாகக் கூறியது இதுதான் “இன்னும் 3 மாதத்திற்குள் எந்த இந்திய டிராலர்களும் இலங்கை கடற்பிரதேசத்திற்கு வரக்கூடாது”. இது குறித்து இலங்கை சென்ற இந்திய மீனவர்களால் (சக மீனவர்களைக் கலந்தாலோசிக்காமல்) மட்டும் உடனடியாக ஒத்துக் கொள்ளவும் முடியாது.

மேலும் இந்திய டிராலர்களால் இன்னொரு அபாயமும் உண்டு. அது இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து விடுவது. வாரத்திற்கு மூன்று நாள் இராமேஸ்வரத்திலிருந்து எப்படியும் இலங்கை கடற்பரப்பில் வரும் டிராலர்களால் பலமுறை இலங்கை மீனவர்களின் வலைகள் அறுந்து போனது இன்னொரு பிரச்சினையாக எழுப்பப்பட்டது. பெசாலைக்கு அருகிலுள்ள வங்காளபாடு கிராமத்தில் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்திய படகையும் நமது மீனவர்கள் பார்த்தார்கள். தமிழக அரசின் உத்தரவான ஆறு வாரங்கள் டிராலர்கள் மீன் பிடிக்கக்கூடாது என்பதைக் கூட இலங்கை மீனவர்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை. பலர் டிராலர்களுக்குப் பயந்து கடல் பக்கமே போகாமல் கூட இருப்பதாய் குமுறியிருக்கின்றார்கள். இந்த நல்லெண்ணப் பயணத்திற்கு யோசனை தெரிவித்த திரு. அடைக்கலநாதன் MP’யையும் நமது மீனவர்கள் சந்தித்தார்கள். இமாதிரி முன்னோடி முயற்சிகளை நமது அரசியல்வாதிகள் செய்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை.

மேலும் டிராலர்கள் பயன்படுத்தும் வலைகளான pair trawl, “mixture” net, “chank” net and “roller” net போன்றவை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதுடன், இலங்கை மீனவர்களின் வயிற்றில் அடிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பிரச்சினைக்குரிய அவ்வகை வலைகளை தாங்களாவே பயன்படுத்துவதில்லை என்ற முடிவை இராமேஸ்வரம் மீனவர்கள் கூறினார்கள்.

டிராலர்களை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களே. இருப்பினும் அவற்றை இயக்குபவர்கள் பெரும்பாலும் குத்தகைக்கு எடுத்த, அல்லது வேலைக்கமர்த்தப்பட்ட ஏழை மீனவர்களே. இவர்கள் மீது இலங்கைப் பரப்பில் சென்று மீன் பிடிக்க வேண்டிய பணி கட்டாயமாக்கப்படுகின்றது. இருதலைக் கொள்ளியெறும்பு நிலைதான் இவ்வகை மீனவர்களுக்கு. இதனால் நாகப்பட்டினத்தில் 50 டிராலர்களை விற்று விட்டதாகவும் செய்தியுண்டு. நாகூர் மீனவர்களோ டிராலர் பிஸினஸே வேண்டாமென்று Yellow Fin Tuna பிடிப்பதில் இப்போது மும்முரமாக இருக்கின்றார்கள்.

இந்திய அரசாங்கம் முன் வந்து இவ்வகை டிராலர்களை நியாயமான விலைக்கு வாங்கினால் விற்பதற்கு பலரும் தயராக இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. குறைந்தபட்சம் வாங்கிய கடனை அடைத்தாலே போதுமென்று பலரும் நினைக்கின்றார்கள்.இராமேஸ்வரத்தில் டிராலர்கள் எண்ணிக்கை 500 ஆக உயந்தபோதே பல சங்கங்கள் மூலம் கடும் எதிர்ப்பை சில மீனவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் போய்விட இன்றைக்கு எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது பிரச்சினையை மேலும் பெரிதாக்கியது. டிராலர்கள் புள்ளி விவரம் வரும்பதிவில்.

இலங்கை மீனவர் பிரச்சினையின் தீர்வுகளாக முன்வைப்பது:

1. இராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கரையிலிருந்து மூன்று கடல் மைல்கள் எல்லைக்குள் வரக்கூடாது
2. நாகப்பட்டினம் மீனவர்கள் 7 கடல் மைல்கள் எல்லைக்குள் வரக்கூடாது
3. ஏற்கெனவே கூறியபடி நான்கு வகை டிராலர் வலைகளை யாருமே பயன்படுத்தக் கூடாது
4. கடலெல்லையைக் கடக்கும் படகுகளை மீண்டும் மீன் பிடிக்காதபடி இந்தியாவே தண்டிக்க வேண்டும்
5. வட-இலங்கை மீனவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் புழங்கும் கடலெல்லை ஏனைய மீனவர்களை விட வெகு குறைவு. எனவே அப்பகுதியில் இந்திய படகுகளின் ஊடுருவல் கூடவே கூடாது
6. இலங்கை அரசின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக வடமராட்சி மீனவர்கள் குறைவான பகுதியில் மீன் பிடிப்பதால், இந்திய டிராலர்கள் நுழையக் கூடாது
7. மூன்று மாத கால அவகாசத்தில் அனைத்து இந்திய டிராலர்களும் இலங்கையில் கடலெல்லைக்குள் எங்குமே நுழையக் கூடாது. சுருங்கக் கூறின் அனைத்து இந்திய டிராலர்களையும் முடக்கவேண்டும்

பின்னர் நடந்த குழு கலந்துரையாடலில் இரு தரப்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்துக்கள்:

1. இலங்கையில் டிராலர்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டதால் (செய்தியை உறுதி செய்ய முடியவில்லை), இந்திய மீனவர்களும் வருங்காலத்தில் டிராலர்களை கைவிட வேண்டும். இதற்கான கால அவகாசம் முடிவாகவில்லை. (மூன்று மாதம் பின்னர் மீண்டும் கால வரையறைப் பற்றி பேசவேண்டுமென்று எடுத்த முடிவு என்னாகியது என்றும் தெரியவில்லை)
2. பா(ல்)க் வளைகுடாவிலிருந்து 3 கடல் மைல் தொலைவு, யாழ்ப்பாணம்/வடமராட்சியிலிருந்து 7 கடல் மைல்கள் தொலைவு விதியை இந்திய மீனவர்கள் ஏற்றுக் கொண்டனர்
3. நான்கு வகை டிராலர் வலைகளும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்திய மீனவர்கள் உறுதி மொழி கொடுத்தார்கள்.
4. விதிகளை மீறும் படகுகள் மீது இந்தியா/மீனவ சங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கும். இலங்கை மீனவர்கள் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடாது
5. இரு நாடுகளிலும் சிறைப்பட்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக விடுதலை பெற இருதரப்பும் மும்முரமாக ஈடுபடும்

நல்லுறவு பயணத்தின் தொடர்ச்சியாய் இலங்கை மீனவர்கள் இந்தியா வந்தார்களா என்று தெரியவில்லை.

இலங்கை-இந்திய மீனவர்களின் உண்மையான பிணக்குகளின் பல்வேறு கூறுகளை மேற்சொன்ன பதிவுகளில் பார்த்திருப்பீர்கள். இப்பதிவில் சில நடைமுறைத் தீர்வுகளைப் பார்ப்போம்.

இலங்கை மீனவர்கள் ஒருபோதும் இந்திய டிராலர்களை எல்லை மீற அனுமதிக்கப்போவதில்லை. எனவே இந்திய மீனவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட காலவரைக்குள் டிராலர்களை விட்டு விட்டு பிழைக்க வேறாதாவது வழி தேடவேண்டும். இந்திய டிராலர்கள் மற்றும் இலங்கை அடையும் பாதிப்பின் புள்ளிவிபரங்கள் (நன்றி: விவேகானந்தன்):

மாவட்டம் (டிராலர் மையம்): ராமநாதபுரம் (இராமேஸ்வரம், மண்டபம்)
டிராலர் எண்ணிக்கை: 1,700
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 900
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: தலை மன்னார் மற்றும் டெ(ல்)ப்ட் தீவு (Delft Island)
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: மிக அதிகம்

மாவட்டம் (டிராலர் மையம்): புதுக்கோட்டை (கோட்டைப்பட்டினம், ஜகதாப்பட்டினம்)
டிராலர் எண்ணிக்கை: 1000
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 1000
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: டெ(ல்)ப்ட் தீவு (Delft island) முதல் யாழ்ப்பாண குடாவுக்குள்
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: அதிகம்

மாவட்டம் (டிராலர் மையம்): நாகப்பட்டினம் (கோடிக்கரை மற்றும் வடக்கு வாங்காள விரிகுடா)
டிராலர் எண்ணிக்கை: 1300
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 600
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: பாக் நீரினையும், அப்பாலும்; யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: மீடியம் அல்லது குறைவு (அவ்வப்போது ஊடுருவுவதால்)

ஆக மொத்தம் 4,000 இந்திய டிராலர்களில் சுமார் 2,500 இலங்கை கடலெல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதாக திரு. விவேகானந்தன் தெரிவிக்கின்றார். இந்த 2,500 டிராலர்களை எவ்வாறு கைவிடுவது? அரசாங்கமே முன்வந்து இந்த டிராலர்களை நியாய விலையில் வாங்க வேண்டும். மீன் வளத்துறை மூலம், தேவைப்பட்டால் உலக வங்கியின் உதவியுடன் இத்திட்டத்தைச் சீராக செயல்படுத்த முடியும். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் புனர் வாழ்வுத் திட்டங்களையும் தீட்ட வேண்டும்.

இறால் பண்ணைகள் அமைத்துத் தருவது, ஏரி/குளங்களில் மீன்வளத்தைப் பெருக்குவது போன்று எத்தனையோ, நடைமுறையில் இருக்கும் தொழில்களில் இம்மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, மறுவாழ்வு தர முடியும். சுனாமியின் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மீனவ சமுதாயத்தைக் கருணையோடு இந்திய அரசாங்கம் மீண்டும் அணைத்துக் கொள்ளும் தருணமிது.

இத்திட்டங்களை செயல்முறைப்படுத்த குறித்த காலவரையை நிர்ணயிக்க வேண்டும். பின்னர் இச்செயல்திட்டம் குறித்து இலங்கை அரசு மற்றும் மீனவர்களுக்கு தெரியப்படுத்தினால், திட்டம் முடியும்வரை எல்லை கடக்கும் டிராலர்கள் மீது அவர்களுக்கும் பார்வைகள் புதிதுபடும்.

இந்திய டிராலர்கள் தெரிந்தே எல்லை கடந்தால் தயங்காது கடுமையான நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டும். திட்டம் முடியும் வரை எந்த வித புது டிராலர்களுக்கும் லைசன்ஸ் கொடுக்கப்படக் கூடாது.

தமிழக அரசு மீனவர் பாதுகாப்புக்காக 2004’ல் பல முடிவுகள் எடுத்தது. 1. மீனவருக்கு அடையாள அட்டைகளை வழங்கி மீன் பிடிக்கும் போது கட்டாயம் அவற்றை வைத்திருக்க வேண்டும் 2. படகின் சொந்தக்காரர்கள் தமது படகுகளுக்கு இந்திய கடற்பாதுகாப்புப் படையின் விதிகளுக்குட்பட்டு ப்ளோரோசெண்ட் பெயிண்ட் அடிக்க வேண்டும். 3. தவறுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் முதல் லைசென்ஸ் ரத்து போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் 4. இந்திய கடற் பாதுகாப்புப்படையின் நிர்வாகத்தில் 5 ரோந்துப் படகுகள் பாதுகாப்புப் பணியில் இயங்கும்… போன்றவையே அவை.

இம்முடிவுகள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இந்திய மீன்வளத்துறை உடனடியாக இம்முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும்.

இலங்கை கடற்படை சுடுவதற்கான காரணமாய் நிருபமா கூறியதை பின்னூட்டத்தில் அறியத் தந்த பத்ரிக்கு நன்றி. 1997’லேயே Intelligence and Counter Piracy Operations Centre இலங்கை கடற்பரப்பை மிகவும் அபாயகரமானது என்று சர்ட்டிபிகேட் தந்திருக்கின்றது. அமெரிக்க நிறுவனமான Centre for Strategic and International Studies, இலங்கையின் கடற்படையைச் சேர்ந்த கலங்களில் 30 – 50% கடற்புலிகள் அழித்து விட்டிருக்கலாம் என்று யூகிக்கின்றது. இந்திய மீனவர்கள் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவினர்/உதவுகின்றனர் என்று நம்பும் இலங்கை கடற்படை, எல்லை கடந்து அடையாளம் காண இயலாத மீன் பிடிப்படகுகளை சுடுவதற்கான காரணங்களை நீங்களே கற்பிதம் செய்து கொள்ள முடியும்.

இருப்பினும் Art 73 of the UN Law of the Sea’படி இலங்கை கடற்படை, எல்லை கடப்பவர்களை சுடுதல் சட்ட மீறுதலாகும். தேவைப்பட்டால், சுடுதல் தொடருமானால், இந்திய அரசு இலங்கைக்கு தனது தூதுவர்/வெளியுறவு அமைச்சகம் மூலம் கடுமையான கண்டனங்களை முன்வைப்பதுடன், ஐநா’விற்கே கூட புகார் செய்யலாம். பதிலுக்கு இந்திய கடற்பாதுகாப்பு படையை விட்டு இலங்கை மீனவர்களை (எல்லை கடந்தவர்களை) சுடச் சொல்லுவது ஜனநாயக மரபுகளுக்கே இழுக்கு.

இந்நிலையில் இப்பிரச்சினையை தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் மாறி மாறி அமர்ந்திருக்கும் திராவிடக் கட்சிகள் எவ்வாறு கையாண்டன?

ஆகஸ்ட் 15 1991: கச்சத்தீவினை மீட்பேன் – செல்வி ஜெயலலிதா சூளுரை.

ஏப்ரல் 29, 2000: இலங்கை இந்திய நல்லுறவுகளுக்காக தமிழக மீனவர்களை (நாகப்பட்டிணம் அருகில் அக்காரப்பட்டைச் சேர்ந்த குமார், முனுசாமி மற்றும் ஐய்யப்பன் ஏப்பிரல் 29 காலை பத்து மணி அளவில் கோடிக்கரையில் தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டனர்) இலங்கை ராணுவம் கொல்லுவதை அனுமதிக்க முடியாது. எதிர்காலத்தில் இலங்கை கடற்படை இத்தகைய அநியாயத்தைச் செய்ய முடியாதவாறு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலைஞர் கருணாநிதி.

முதல்வர்கள் தவிர்த்து வைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்ற தலைவர்களும் சுள்ளென்று இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு எதிரான கருத்துகளைப் பதிய தவறவில்லை. மத்தியில் காங்கிரஸோ, பிஜேபியோ இருந்தாலும், தமிழக அரசியல் (திராவிடத்) தலைவர்கள், மீனவர்கள் குறித்தான கருத்துகளைத் தீவிரமாக (வெறுமனே) பேசியும், எழுதியும் மட்டுமே வந்திருக்கின்றார்கள். ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு நிலையான முடிவெடுத்து அதைச் செயல்படுத்த மத்திய அரசுக்குப் போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை என்பது வருத்தம் தரும் விடயம்.
பேராசிரியர் சூர்யநாராயணன் என்பவர் இன்னொரு தீர்வை முன்வைக்கின்றார் (Conflict Over Fisheries In the Palk Bay Region (Lancer, New Delhi, 2005) Prof V Suryanarayan). அதாவது இழந்த கச்சத்தீவை மீண்டும் எழுதிக் கொடுக்க இலங்கை ஒப்பாது. அதனால் கச்சத்தீவை நிரந்தரக் குத்தகைக்கு (lease in perpetuity) இந்தியா இலங்கையிடமிருந்து பெறவேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்ததால் தமிழ்நாட்டிற்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டது என்ற கடுமையான விமர்சனத்தை வைக்கும் அவர், நிரந்தர குத்தகைதான் தகுந்த தீர்வு என்று சொல்கின்றார். இந்தியா பங்களாதேஷிற்கு இவ்வாறுதான் டின் பிகாவை குத்தகைக்கு விட்டது என்பதையும் சுட்டிக் காண்பிக்கின்றார்.

கச்சத்தீவினை குத்தகைக்கு எடுத்த பின்னர் இந்தியாவும், இலங்கையும் ஒரு கூட்டு கடற்தளத்தை அமைத்து கடற்புலிகள், ஆய்தம்/போதை மருந்து கடத்துபவர்கள் போன்றோரிடமிருந்து இருநாடுகளையும் காக்க வேண்டுமென்றும் சொல்கின்றார்.ஆனால் இலங்கை அவ்வாறு செய்ய முன்வருமா?

ஆனால் புல் கூட முளைக்காத நிலமாக கச்சத்தீவு இருந்தாலும் பல்வேறு அரசியல் காரணிகளால் இலங்கையால் நமக்கு குத்தகைக்குத் தரமுடியாது. இந்தியா டின் பிகாவைக் கொடுத்தபோது பங்களாதேஷ் (இந்திய நண்பரான) முஜிபுர் ரஹ்மான் வசமிருந்தது. இன்றைய சூழலில் இந்தியா-இலங்கை உறவு அவ்வாறு சுமுகமானதாகக் கருத முடியாது. சேது சமுத்திர திட்டம் குறித்து இலங்கைக்கு இந்தியாவின் மீது நல்ல விமர்சனம் கிடையாது என்பது கொசுறுச் செய்தி. தமிழ் தேசியம் பேசும் அல்லது தீவிர இடதுசாரி தமிழகத்து ஆசாமிகளாவது சூர்யநாராயணனின் தீர்விற்கு ஆதரவு அளிப்பார்களா? சந்தேகம்தான். போலி அரசியல் வெளிப்பாடுகள் கட்டுடையும் தருணமிது.

26 செப்டம்பர் 05’ல் லங்காநியூஸ்பேப்பரில் சூர்யநாராயணன் தீர்வு பற்றி செய்தி வெளியானதும் இலங்கை வாழ் மக்கள் (தமிழர் உட்பட) “இலங்கை தனது இறையாண்மையை இந்தியாவிற்கு விற்கக்கூடாது” என்ற கருத்தையே பிரதிபலித்தனர்.

எனக்கென்னவோ தோன்றுவது இதுதான். நாளையே இலங்கையில் சிவில் யுத்தம் மீண்டும் வெடிக்கலாம். இலங்கை மீனவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு புலம் பெயரலாம். அப்போது முன்னே நடந்தது போல் அவர்களும், இவர்களும் இணைந்து ஒரே இடத்தில் (இந்திய/இலங்கை எல்லைகள் உட்பட) மீன் பிடிக்கலாம். ஆனால் இப்போதைய சூழலில் பலவருடங்களாக மீன் பிடித்தொழிலில் நம்மை விட அதிகம் நசிந்த காரணத்தாலும், உள்ளூரில் (இலங்கையில்) டிராலர்களை அனுமதிக்காததாலும், சுனாமியில் நம்மை விட அதிகம் அடி வாங்கியதாலும், நமது பொருளாதாரம் டிராலர் விடுத்த மாற்று வழிகளை இலங்கையை விட எளிதாக செயல்முறைப்படுத்த முடியுமென்ற நம்பிக்கையாலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகத்தின் மீதுள்ள பற்றாலும், இந்திய மீனவ சகோதரர்கள் இப்பிரச்சினைக்கு உண்மையிலேயே முற்றுப் புள்ளி வைக்க விரும்பினால் கொஞ்சம் இலங்கை மீனவர்களுக்காக விட்டுக் கொடுத்துதான் போகவேண்டும்.

இது இன்றைய சுகங்கள் எனக்குத் தந்த சொகுசில் தட்டச்சு செய்யப்பட்ட பதிவல்ல. சிறிதே கடல் அனுபவம் எனக்குத் தந்த பாடங்களின் பதிவு! வாசகர்களின் பொறுமைக்கும், ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி !!!

www.vanthiyathevan.blogspot.com
tsambandam@gmail.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்