கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள்

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்யும்போது பெரும்பாலான ஆய்வாளர்கள் கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகள், இலக்கியம் உள்ளிட்ட நிறுவப்பட்ட ஆவணங்களை முதல் தரவுகளாக மேற்கொள்வது வழக்கம். ஆனால் நவீன பண்பாட்டு மானுடவியல் ஆய்வுலகமோ இந்த ஆய்வுமுறைக்கு மாற்றாக வாய்மொழி வரலாறுகளின் துணைகொண்டு புதிய உண்மைகளைத் தேடுதல் செய்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வோடும் உணர்ச்சியோடும் கலந்துவிட்ட நம்பிக்கைகள் தலைமுறை தலைமுறைகளாக எழுதப்படாத வாய்மொழி வரலாறுகளாக சொல்லப்பட்டு வந்துள்ளன. பிற்காலத்தில் அவை அப்படியே எழுத்து வடிவில் பதிப்பிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட வாய்மொழி வரலாற்றில் மிக முக்கியமாக இடம் பெறுவது இயல்புக்கு மாறாக நடைபெற்றதாக கூறப்படும் யதார்த்தம் மீறிய வியத்தகு சம்பவங்களாகும். இதனை அற்புதங்கள் என்றும் சொல்வதுண்டு. பொதுவாக இஸ்லாமிய வரலாறுகளில் இத்தகை யதான இயற்கையின் இயல்பான தன்மைக்கும், மனிதனின் இயல்பான தன்மைக்கும் மிஞ்சி யதாக அதீத ஆற்றல் வாய்ந்த சம்பவங்கள் பல உள்ளன. இறைஆற்றலின் வெளிப்பாடுகளாக முஸ்லிம்களின் புனிதநூலான குர்ஆனிலும், நபிமார்களின் வாழ்க்கை யிலும் இச்சம்பவங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு.
குர்ஆனில் இடம் பெறும் மூசாநபியின் அஸா என்னும் கைத்தடி நிகழ்த்திய அதிசயங் களைக் குறிப்பிடலாம். மூசா நபி அந்த கைத்தடியை நிலத்தில் எறிந்தபோது மலம் பாம்பாக மாறியது. மிகப்பெரிய பாம்பாக உருவெடுத்து மந்திரவாதிகளின் பாம்புகளை விழுங்கியது. பாலைவனத்தில் தாகம் தணிக்க பாறையில் ஓங்கி அடித்தபோது அதிலிருந்து பனிரெண்டு நீரூற்றுகள் கிளம்பின. பிர்அவுன் கூட்டம் துரத்தியபோது அஸாவை செங்கடல்மீது வைத்த போது கடல் பிளந்து பாதை உருவாகியது. மூசாநபி கூட்டத்தை உயிர் பிழைக்க வைத்தது. அதே மணல்திட்டு பாதையில் துரத்திய பிர்அவுன் கூட்டத்தை கடல் திரும்பவும் மூடி அழித்தது. ஈஸாநபி இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்தார். வெண்குஷ்ட பிணியாளர், பிறவிக்குருடர்களை தனது கரத்தால் தொட்டு சுகப்படுத்தினார். களிமண்ணால் பட்சி உருவத்தை செய்து அதில் ஊதி உயிருள்ள பட்சியாக மாற்றினார். இபுராகீம் நபியை எரியும் நெருப்பில் வீசியபோது அந்த நெருப்புக்குண்டமே குளிர்பொய்கையாய் மாறியது. இஸ்மாயில் நபியின் கழுத்து பலிபீடத்தில் வைத்து அறுக்க அறுக்க அறுபடாமல் கத்தி அதிசயம் செய்தது.
கடலில் தூக்கி வீசப்பட்டபோது மீன்விழுங்கி மீனின் வயிற்றில் யூணஸ் நபி வாழ நேர்ந்தது. நபிசுலைமான் போர் புரிய திரட்டிய ராணுவத்தில் மனிதர்கள், ஜின்கள், பட்சிகள் இருந்துள்ளனர். எறும்புடன் நபி சுலைமான் பேசுகிறார். ஸபா நாட்டின் மக்களை பல்கீஸ் என்ற இளவரசி ஆட்சி புரியும் செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பதற்கு முன்பாக வெகு தொலைவிலுள்ள அவரது சிம்மாசனத்தை ஜின்களில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்துவிடுகிறார். இவையனைத்தும் குர்ஆனில் இடம் பெறும் நபிமார்கள் வாழ்வில் நிகழும் அற்புதங்களாகும்.
இமாம் கஸ்ஸாலி இஹ்யா உலூமித்தீன் நூலின் அக்லா குன்னபி பகுதியில் நபிமுகமது நிகழ்த்திய அற்புதங்களை கூறியுள்ளார். இது புறவாழ்வு மற்றும் அகவாழ்வு அற்புதங் களாக விளக்கப்படுகின்றன.
உஹது யுத்தத்தில் ஹஜ்ரத் கதாதா அவர்களின் கண்விழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே வந்துவிட்டது. நபிமுகமது அவர்கள் அவ்விழிகளை அந்த இடத்தில் எடுத்துவைத்து தடவிவிட்டார்கள். அந்த ஸகாபி குணமடைந்துவிட்டார். இதுபோன்றே ஒருபெண் தனது குழந்தையை நபி முகமது விடம் கொண்டுவந்து, என்னுடைய இக்குழந்தை புத்தி சுவாதீனமானமில்லாமல் இருக்கிறது என்றார். நபியவர்கள் குழந்தையின் நெஞ்சை தடவிவிடவே குழந்தை வாந்தி எடுத்தது. அதன்பிறகு சுவாதீனம் பெற்றது.
நபிமுகமது அதிசயங்களிலெல்லாம் பேரதிசயம் அல்லா அருளிய புனித நூலான குர்ஆனே என்ற வாசகத்தை இன்னும் சூழ்ந்து உற்று நோக்கலாம். எழுதப் படிக்கத் தெரியாத சூழலில் (பதூயீன் அரபு பழங்குடி மக்கள்) வாழ்ந்தபோது ஒலி வடிவிலும், பின் எழுத்துவடிவிலும் உருவான குர்ஆன் அறிவுரைகளும் கோட்பாடுகளுமே முஸ்லிம் உம்மத்தை உரு வாக்கியதின் பின்னணியை உணர்த்தும் பெருபங்கினை ஆற்றிய விதமாக குர்ஆனின் அதிசயத்தன்மையை நோக்கலாம்.
உலகின் முதல் மனிதராக கருதப்படுகிற ஆதம் நபியைப் படைப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாவின் சன்னிதானத்தில் ஒளியாக படைக்கப்பட்டிருந்தேன் என்ப தான நபிமுகமதின் வாக்கில் பாரம்பர்யத் தோற்றம் சார்ந்த விசித்திரம் தென்படுகிறது. தங்கத்தால் உருக்கி வார்க்கப் பட்ட காளைமாட்டுச் சிலையொன்று பேசியதாக நபி மூசா அவர்களின் சரித்திரத்தில் காண்பதுபோல ஹூபுல் சிலைக் குள் முஸ்பிர் என்ற இப்லீஸ் நுழைந்து செய்த பிரச்சாரத் திற்கு எதிராக நபி நூஹ்வின் காலத்தில் இஸ்லாத்தை தழு விய முகீன் என்னும் ஜின்னை ஏவி குறைவுகளின் அவை யில் சத்தியத்தை நிலைநாட்ட நபிமுகமது பேசவைத்த அதிசயத்தையும் குறிப்பிடலாம்.
நபிமுகமது மிகராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் செல்வதற்கு முன்பு மார்பு பிளக்கப்பட்டு உள்உறுப்புகள் சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே புராக் என்னும் கோவேறு கழுதையைவிட பெரியதுமான வெள்ளைநிற மின்னல்வேக மிருகவாகனத்தில் இவ்விண்ணுலகப் பயணம் நடைபெற்றுள்ளதாக ஹதீஸ் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் தொன்மவியல் விசித்திரங்கள் ஒரு குறியீட்டு மொழியாடலாக முஸ்லிம்களின் புனிதநூலான குர்ஆன் வசனங்கள் பலவற்றில் வெளிப்பட்டுள்ளன.
ஏழு நபர்கள் ஈமானை பாதுகாக்க மலைக்குகையில் நுழைந்தனர். எதிரிகளிடமிருந்து காப்பாற்ற இறைவன் குகை யின் வாசலை அடைத்து அவர்களை அங்கேயே முன்னூறு வருடம் தூங்கச் செய்தான். ஒருபுறமாக தூங்கினால் விலாப் புறத்தை பூமி தின்றுவிடும் ஆதலால் வலதாகவும் இடதாக வும் புரட்டி புரட்டி தூங்கச் செய்தான். அவர்களோடு வந்த நாய் தனது முன்கால்களை நீட்டி விரித்தபடி அவர்களோடு தூங்கியது. பின்னர் கண்விழித்து நகரங்களுக்குச் சென்றனர். (அல் கபு- குகை அத்தியாயம் 18, வசனங்கள் 71-19)

இஸ்ரவேலர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர் யார் என்பது தெரியவில்லை. உண்மை தெரிவதற்காக ஒரு மாட்டை அறுத்து அதன் நாக்கைக் கொண்டு கொலை செய்யப்பட்ட பிரேதத்தின் மீது அடித் தால் அது உயிர்பெற்று கொலை செய்தவர் யார் என்பதை சொல்லிவிடும் என்று இறைவன் அறிவித்தான். அதன்படி இஸ்ரவேலர்கள் செய்ய பிரேதம் உயிர்பெற்று கொலை செய்தவரை காட்டிக்கொடுத்தது. (அல் பகறா-அத்தமாடு அத்தியாயம் 2, வசனங்கள் 72,73)

இறந்தோரை எப்படி உயிர்ப்பிக்கிறாய் எனக் கேட்க நான்கு பறவைகளை துண்டுதுண்டாய் வெட்டி அவற்றை நான்கு மலையுச்சிகளில் வைத்துவிட்டு மீண்டும் அப்பறவைகளை அழைக்குமாறு சொன்னான். அவை உயிர்பெற்று வந்தன. (அல்பகறா-அத்தமாடு, அத்தியாயம் 2, வசனம் 260)

எந்த ஒரு மனிதருமே தீண்டாமல், அல்லாவின் ஆகுக என்ற சொல்லால் மட்டுமே அன்னை மர்யத்திற்கு கர்ப்பம் ஏற்பட்டு ஈஸாநபியை ஈன்றெடுக்கும் சம்பவம் குர்ஆனில் இடம் பெறுகிறது. (இப்ரானின் சந்ததிகள் அத்தியாயம் 3, வசனங்கள் 45-47) மற்றும் மர்யம் அத்தியாயம் 19, வசனங் கள் 16-24). மரணம், உயிர்ப்பித்தல், பிறப்பு என்பதான கருத் தாக்கங்களை விளக்கப்படுத்தும் மேற்குறிப்பிட்ட வசனங் களில் அல்லாஹ்வின் ஆற்றலை நிரூபணம் செய்வதற்கான தர்க்கங்களைக் கொண்ட மொழியாடல்களாக இருக்கின்றன. குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் எழுதும் அறிஞர்களும் ஹதீஸ் கலையில் இத்தகையதான தொன்ம மொழியை கையாளுவதை கவனிக்கலாம்.
அல்லாவின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தவர் கள் என்று எண்ணாதீர்கள். அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் கீழ்கண்டவாறு விளக்குகிறார். அவர்களின் உயிர்கள் பச்சைநிறத்துப் பறவைகளின் உருவத்தில் அர்ஷில் தொங்க விடப்பட்ட கூண்டில் உள்ளது. அது சுவர்க்கத்தில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்றுபின் அக்கூண்டில் வந்து தஞ்சமடையும்.
மேலும் இறந்த ஒரு உடலை அடக்கம் செய்யும்போது கறுப்புநிற, நீலநிறக் கண்களுடைய இரு வானவர்கள் அவரி டம் வருவார்கள். ஒருவர் முன்கர். இன்னொருவர் நகீர் என்பதான மொழியாகவும் அது உள்ளது. குர் ஆனின் மற்று மொருவசனம் யானைப்படைகளை அழித்தொழித்த சிறு களிமண் உருண்டைகளைப் பற்றிப் பேசுகிறது.
யானைகளுடன் வந்த படையை அல்லாஹ் என்ன செய் தான் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லையா? அவர் களது சூழ்ச்சியை முறியடிக்க அவன் பறவைக்கூட்டத்தை அனுப்பிவைக்க அந்தப் பறவைகள் அவர்கள்மீது களிமண் உருண்டைகளை வீசி எறிந்தன அல்லவா? அதனால் அவர் கள் மாடுமேய்ந்த செடிகளைப்போல ஆகிவிடவில்லையா?

இறை அற்புதத்தன்மையை வெளிப்படுத்த குறியீட்டு மொழியாடல்களான இந்த வசனத்திற்கு இஸ்லாமிய அறிஞர் அஸ்கர்அலி இன்ஜினியர் வரலாற்றியல் அர்த்தத்தை வழங்குகிறார்.
அப்ரஹா மன்னன் மக்கா வில் உள்ள அரேபியர்களின் ஆலயத்தை அழிக்க யானைப் படைகளை அனுப்புகிறான். வரும்வழியில் அப்ரஹாவின் படையினரிடையே அம்மை நோய் பரவியதால் சேதம் ஏதும் விளைவிக்காமல் அப் படை பின்வாங்கி செல்லும் படி ஆயிற்று. அபாபீல் வீசிய சிறு களி மண் உருண்டைகள் நோயின் காரணமாக உடலில் தோன்றிய அம்மைநோய் கொப்புளங்களுக்கு குறியீடாகி விடுகிறது என்கிறார். இவ்வாறு குர்ஆனோடும் நபிமார் களின் வாழ்க்கையோடும் தொடர்புடைய அதிசய சம்பவங் கள் முஅஜிஸாத்து என்று அழைக்கப்படுகின்றன. மனித இயல்பு, உலக இயல்புக்கு மாறாக நடைபெறும் நிகழ்வு களாக இவை உள்ளன. ஒரு யதார்த்தக் கருத்தியலை வெளிப் படுத்த முயலும் புனைவு மொழியாடல்களாகக்கூட இவற்றைக் கருதலாம்.
மெய்ஞானிகள், சூபிகள் என்றழைக்கப்படும் வலியுல் லாக்களின் வாழ்க்கையிலும் இத்தகைய சம்பவங்களைப் போன்றே நிறைய நிகழ்வுகள் நடைபெற்றதாக வாய்மொழி வரலாறுகள் கூறுகின்றன. வலிமார்களின் வாழ்க்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவங்களுக்கு கராமாத்துகள் என்று பெயர். வலி என்றால் பிரதிநிதி, வலி யுல்லாஹ் என்றால் அல்லாவின் பிரதிநிதி, இயற்கைக்கு மாற்றமான, மனித அறிவுக்குப் புலப்படாத மனிதர்கள் திகைப்படையும் வண்ணம் இறைநேசர்கள் நிகழ்த்தும் புதுமைச் செயல்களாக இவை இருக்கின்றன.
சூபிஞானிகளின் வாழ்க்கையில் நடைபெற்றதாகக் கூறப் படும் இத்தகைய வாய்மொழி வரலாறுகளை சிலர் மறுத்து வெறும் கட்டுக்கதைகள் என்றும், ஆதாரமே இல்லாத வெறும் புனைவுகள் என்றும் விமர்சனம் செய்கின்றனர். இவர்களின் கூற்றுக்கிணங்கி இந்த வாய்மொழி வரலாறு களை நாம் முற்றிலும் கட்டுக்கதைகள் என்று நிராகரித்துவிட முடியாது. ஏனென்றால் இவை காலங்காலமாக இஸ்லாமிய மக்களால், அவர்தம் மொழியால் பேசப்பட்டு வருபவை. குர்ஆன் கூறும் நபிமார்களின் முஅஜிஸாத்துகளை நம்பிக்கை கொண்டிருத்தலின் தொடர்ச்சியாக கராமாத்துகள் மீது இஸ்லாமிய மக்களின் பெரும்பகுதியினர் நம்பிக்கையும் கொண்டுள்ளனர். எனவே இச்சூழலில் இக்கராமாத்துகள் மூலமாக வெளிப்படும் உண்மைகளை புதியதொரு அணுகு முறையில் நாம் ஆய்ந்தறிய வேண்டியுள்ளது.
ஈராக் நாட்டில் கஸ்பியன் கடலுக்கு தெற்கிலுள்ள தபரிஸ் தான் மாநிலத்தின் ஜீலான் நகரில் பிறந்தவர் முகியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்றஇஸ்லாமிய சமயஞானி. இவர் (கி.பி.1077- 1165) 91 ஆண்டுகாலம் உலகியல் வாழ்வை நிகழ்த்தியவர். 18ம் வயதில் பகுதாதிற்கு புறப்பட்ட ஆண்டகை 30 ஆண்டுகள் கல்விமுயற்சிகளிலும் கடுந் தவப் பெருக்குகளிலும் ஈடுபடுத்திக் கொண்டார் .
சூபித்துவத்தின் பாட்டையில் நிகழ்த்திய முகியத்தீன் ஆண் டகையின் பெரும்பயணம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. பாக்காது நாட்டின் தலை சிறந்த கலைக்கூடங்களில் மார்க்க கலைகளை கற்ற முகியத்தீன் அப்துல்காதிர் ஜீலானி நிகழ்த்திய சொற்பொழிவுகள் புகழ்பெற்ற உரை களாகத் திகழ்கின்றன. பிற்காலத்தில் முஹயித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நிகழ்த்திய அற்புதங்கள், வாழ்வின் நிகழ்வு களாக சொல் மற்றும் செயல்களில் அமையப் பெற்றுள்ளன. தமிழ்ச்சூழலில் இக்கராமாத்துகள் குறித்து அப்துற்றஹீம் தனது ஆக்கங்களிலும் விரிவாக ஏழுதியுள்ளார். நயினா முகம் மது ஆலீம் சாகிபவர்களிடம் உரை வாங்கி பக்கீர் மதாருப் புலவர் இயற்றிய முகியத்தீன் மாலை பாடல்களிலும் கராமாத்துகள் விவரிக்கப்படுகிறது.
முகியத்தீன் அப்துல்காதிர் அவர்கள் தாய் வயிற்றிலிருக் கும் நாளில் நடந்த காரணம், துகிலுடுத்திப் பிறந்த காரணம், மரணித்த மடமானுக்கு உயிர்கொடுத்தது, அசூயையான கரத்தை சுகமாக்கியது, திருடனை ஞானியாய் மாற்றியது, 12 வருஷம் போன கப்பலை திரையிலழைத்தது, ஜின்னை கூலிலடைத்தது என எண்ணற்ற கராமாத்துகள் இந்த நூலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் மேற்குப் பிரதேசங்களில் ஒன்றான ராஜஸ் தான் மாநிலத்தின் அஜ்மீரில் அடங்கப்பெற்றுள்ள ஹஜ்ரத் குவாஜா முகீனுத்தீன் சிஸ்தி கி.பி1192ல் இந்திய மண் ணுக்கு தனது சீடர்கள் குழுமத்தோடு வந்தவர் இஸ்லாத்தின் மூலம் சமத்துவம், மனத்தூய்மை, அன்பு, மக்கள் சேவை கருத்தாக் கங்களை நடைமுறைப்படுத்தியவர். மவ்லவி டி.ஏப்.ரஹ் மத்துல்லா அலி ஸாஹிபு பாகவி அவர்கள் சிஸ்தியின் ஜீவிய சரிதையை எழுதியுள்ளார். இது சென்னை, திருவல்லிக் கேணி ஹாஜி எம்.ஐ.ஷாஹூல் ஹமீது அவர்களால் 1963ல் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்தி நிகழ்த்திய கராமாத்துகளும் இந்நூலின் ஒருபகுதியாக தொகுக்கப்பட்டுள்ளன.
அஜ்மீர்மன்னன் நியமித்த அஜய்பால் என்ற மந்திரவாதி குவாஜாமுகீனுதீன் சிஸ்தியை பணியவைப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுகிறான். மிருகச்சாலா என்றொரு மான் தோல் ஆசனம் அவனிடமிருந்தது. அதை மந்திரம் சொல்லி எறிய தலையில் படாமல் அந்தரத்தில் பறந்து வந்தது. அதில் அவன் அமர்ந்து ஆகாயத்தில் பறக்கிறான். அதை எதிர் கொள்ள குவாஜா முகீனுதீன் சிஸ்தி தமது பாதக்குறடாகிய கால்கட்டையைக் கழற்றி ஏவி விட அதுவும் ஆகாயத்தில் அந்தரமாக பறந்து சென்று அந்த மாயமான் தோல்மீது அமர்ந்து அழுத்தியது. மான்தோல் ஆசனம் மடங்கி தரையில் விழுந்தது. தொடர்ந்து பாதக்குறடு அஜய்பாலின் தலையில் தாக்க தரையில் வீழ்கிறான். சிஸ்தியின் ஞானஆற்றலை கண்ணுற்ற அஜய்பால் அவரிடம் கருணைக்காட்டச் சொல்லி முஸ்லிமாகிறான். அஜ்மீரின் ராய்பத்தூரா எனப்பட்ட பிரித்விராஜ் மன்னனுக்கு எதிரான ஒரு சாதுவான பக்கீரின் கலகங்களாக இக்கராமாத்துகளில் பலவற்றை மதிப்பிடலாம்.
தமிழக மக்களால் நாகூர் ஆண்டவர் என புகழப்படும் மீறான் சாகிபு ஆண்டவர் என்னும் அப்துல்காதிறு ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம், வடஇந்திய எல்லையான மாணிக் கப்பூரில் தோன்றியவர். கிபி 1490ல் 68 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அவர் தனது இறுதி 28ஆண்டுகளில் தமிழகத்தின் நாகூரில் தங்கியிருந்து சேவை புரிந்து மரணித்தப் பின் அங்கேயே அடங்கப்பட்டிருக்கிறார். நாகூர் தர்கா என்ற பெயரில் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமாக அது நிகழ்கிறது. பல்சமயத்தினரும் பங்கு கொள்ளும் தர்கா நிகழ் வுகள் மாறுபட்ட நல்லிணக்க இழைகளைக் கொண்டுள்ளது.
(அடுத்த பக்கத்தில்)

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்

கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள் (முடிவு பகுதி)

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

ஹெச்.ஜி.ரசூல்


நாகூரின் பெரும்புலவர் வா.குலாம்காதிறு நாவலர் ஷாகுல்ஹமீது மீது நாயகத்தின் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து 1902ல் முதன்முதலாக அச்சுவடிவில் வெளிக் கொண்டு வருகிறார். அற்புதப் புதையல் எனப் பொருள் படும் கன்ஜுல் கராமாத்து பெயரிலான அந்த நூல் 131 அத்தி யாயங்களையும், 576 பக்கங்களையும் கொண்ட மிகப் பெரிய நூலாகும். பிறப்புக்கு முன்னும், பிறப்பிற்கு பிறகும், உயிர் வாழ்ந்த காலங்களிலும், இறப்புக்கு முன்னும், இறப்பிற்குப் பிறகும் நாயகம் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைப் பேசும் நூலாக இது உள்ளது. சம்பவ விளக்கங்களும், வருணனை வார்த்தைகளும் கொண்ட இந்த மூலநூலிலிருந்து முக்கியப் பகுதிகளை பிழிந்தெடுத்து சுருக்கமாக்கி ரவீந்தர் என்ற திரை வசனகர்த்தாவான புனைபெயருடைய செய்யது ஹாஜா முகையதீன் 1963ல் கன்ஜுல் கராமாத்து கருணைக்கடல் என்ற தலைப்பில் வெளியிடுகிறார்.
மீறான் சாகிபு ஆண்டகை அவர்களின் அற்புதங்கள் பொதிந்துள்ள தமிழ்ப் புராணங்களும், பிரபந்தங்களும் அனந்தமுண்டு. இவற்றுள் அநேகம் பெரும்புலவர் பெருந் தகை தறுகா மகாவித்துவான் வா.குலாம்காதிறு நாவலர் அவர்களாலே வெளிக்கொணரப்பட்டன. கன்ஜுல் கரா மாத்து என்னும் கிரந்தம் அப்புராண பிரபந்தங்களில் நின்றே பெயர்த்துக் கொணரப்பட்டது. அது எல்லோராலும் எளிமை யில் உணரத்தக்க வசனகாவியமாக அமைந்துள்ளது. அதனை வடிகட்டித் திரட்டியதே இந்த கருணைக்கடல் என்ற அற்புதப்புத்தகம் என்பதாக அந்நூலின் முன்னுரையில் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர் வா.கு.மு.ஆரிபு நாவலனார் குறிப்பிடுகிறார்.
ஓசையைக் கொண்டு சொல் பிறந்தது. ஒவ்வொரு சொல் லிலும் முஹம்மது என்ற பதமே மறைந்திருப்பதாக சீக்கிய மதத்தலைவா குருநானக் அவர்கள் ஓர் கணக்கில் சொல்லியி ருக்கிறார்கள். எல்லா மொழியின் எழுத்துக்கும் ஒவ்வொரு தனி இலக்கணமுண்டு. இதை அரபியில் அப்ஜத் கணக்கு என் கிறார்கள். இக்கணக்குப்படி முஹம்மது என்ற சொல்லின் மொத்த இலக்கம் 92. இந்நூலில் அவர்களது அருளும் பொலி வும் அடங்கி இருக்கவேண்டும் என்று இதை 92 அத்தியாயங் களாக எழுதினேன் என்பதாக இந்நூலை சுருக்கி செய்யது ஹாஜா முகையிதீன் குறிப்பிடுகிறார்.
ஷாகுல் ஹமீது நாயகம் மரணத்திற்கு பிறகு நிகழ்த்திய கரா மாத்துகளில் ஒன்றாக இதைக் கூறலாம். நாயகமவர்கள் சமாதி யினது தலைமாட்டில் மூங்கில் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந் தன. அருகிலுள்ள அரசு அதிகாரி தன்வீட்டு வேலைக்கு மூங் கில்கள் கிடைக்காததால் நாயகமவர்களது தலைமாட்டில் வளர்ந்து நின்ற மூங்கில்களை வெட்டிக் கொண்டு வரும்படி உத்தரவு போட்டான். நாயகத்தின் பேரர்கள் தடுத்தும் கேட்க வில்லை. பல்லக்கில் வந்தவர்கள் மூங்கிலை வெட்டிய போது நாயகத்தின் சமாதியிலிருந்து ஒரு ஓலைச்சுருள் புறப் பட்டு பறந்து சென்று அந்த அதிகாரி சென்ற பல்லக்கில் விழுந்தது. அதை அவன் எடுத்துப் பார்த்தபோது ஓலைச் சுருள் கூரியவாளாக மாறி அவனுடைய கழுத்தை வெட்டி யது. ரத்தம் பல்லக்கிலிருந்து வழிய பல்லக்குத் தூக்கிகள் பயந்து திரும்பினர்.
மன்னர்கள் அடிபணிதல், உயிர்மீட்பு, நோய்தவிர்ப்பு அறி வின் ஆற்றலை வெளிப்படுத்துதல், கொடியவர்க்கு எதிரான போராட்டம், ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவும் பண்பு என் பதான பல கருத்தாடல்களை இந்த கராமாத்துகளின் அடித் தள கட்டமைப்பு மாற்று அறவியல்களாக கொண்டுள்ளன. இவ்வாறாக வாய்மொழி கதையாடல்கள் அல்லது கராமாத்துகள் அல்லது பழமரபு வழக்காறுகள் என்பவை ஓரு உட்கருத்தை வெளிப்படுத்தும் வரலாற்றுமொழியாக அமை கிறது. இதன் அமைப்பை கட்டவிழ்த்து நுண்கூறுகளை ஆய்ந்து பார்த்தால் உள்ளடக்கம் உண்மை சார்ந்ததாகவும், வெளிப்பாட்டுமுறை அதிசயம் சார்ந்ததாகவும் இருக்கும்.
இத்தகையான வாய்மொழிக் கதையாடல்கள் வெற்றிட மாகக் கிடக்கும் வாழ்க்கையின் உண்மைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிற கராமாத்துகள் என்னும் அற்புதச் செயல்களின் மூலமாக சில சொல்லப்படாத உண்மைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. இப் பின்னணியில் கன்னியாகுமரி மாவட் டம், நாகர்கோவிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்த தக்கலை என்னும் ஊரில் அடங்கப்பட்டுள்ள சூபி ஞானி ஒரு வரின் தர்கா உள்ளது. பீரப்பா என்று அன்புடன் அழைக்கப் படும் பீர்முகமது சாகிபு வலியுல்லாவின் பிறப்பு, வளர்ப்பு, புறவாழ்க்கை, அகவாழ்க்கை மற்றும் வரலாறு பற்றிய முழுச்செய்திகளும் இதுவரையில் முறையாக கிடைக்கப் பெறவில்லை. ஆங்காங்கே சில குறிப்புகள் மட்டும் உள் ளன. ஆனால் பீரப்பாவின் வாழ்க்கைத் தொடர்பான வாய் மொழி வரலாறுகள் தக்கலை பகுதி முஸ்லிம்கள் மத்தியி லும் ஏராளம் நிலவுகின்றன. செவ்வல் மாநகரம் எம்.ஏ. நெயினா முகமது பாவலரால் 31.7.14ல் தொகுக்கப்பட்டது. 70களில் மவ்லவி டி.ஹாமீம் அலிம் சாகிப் அவர்களின் உரைக்குறிப்புகளிலும் மக்கள் வழக்கிலுள்ளதுமான சில வாய்மொழி வரலாறுகள் இங்கு பயன்படுத்தப்பட்டுள் ளன. இந்நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சில அர்த்தத் தேடல்களை நாம் நிகழ்த்தலாம்.
வாய்மொழி வரலாறு-1
மகான் பீர்முகமது சாகிபு அவர் கள் வாழ்ந்து வந்த காலத்தில் அவரை, இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி தெரியாதவரென்றும், தொழா தவரென்றும் சிலர் பழிசொல்லி தூற்றினர். இந்நிலையை தெளிவு படுத்தவும், மக்களை குழப்பத்திலி ருந்து மீட்கும் பொருட்டும் அப் போது மார்க்க மேதையாக எல்லோ ராலும் அறியப்பட்ட காயல்பட்ட ணத்தைச் சார்ந்த ஹலரத்து சதக்கத் துல்லா அப்பா அவர்களுக்கு திருமுக பாசுரமெழுதி இப்பிரச்சினையை தீர்க்க வருமாறு அழைத்தனர். சதக்கத்துல்லா அப்பா புறப்பட்டுவருவது பீரப்பாவிற்கு தெரிந்ததும் காயல்பட்டணத்திலிருந்து என்னைக்காண ஒரு வர் வருகிறார். நம்மால் இயன்றதை அவருக்கு செய்ய வேண்டும், சீக்கிரம் சமைத்துவிடு என்று தன் துணைவியாரிடம் கூறுகிறார். அதற்கு அவர்கள் வீட்டில் ஒருபிடி அரிசியு மில்லை என்ன செய்வது என்று கேட்க, பீரப்பா வீட்டில் தான் அரிசியில்லை, தெருவில் மண்ணுமா இல்லை? நாலு பிடி மண்ணையள்ளி ஒரு பானையிலிட்டு தண்ணீர் வார்த்து அடுப்பெரிய விடு. ஒரு சட்டியில் சப்பாத்திக் கள்ளிகளை துண்டுகளாக அறுத்து தண்ணீர் ஊற்றி வேக வை என்று கூறி னார். பீரப்பா சொன்னதை அப்படியே செய்து அடுப்பெ ரித்துக் கொண்டிருந்தார்கள். பீரப்பாவோ தறிக்குழியில் இறங்கி துணி நெய்து கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் ஹலரத்து சதக்கத்துல்லா அப்பா அவர்கள் பீரப்பாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அங்கு வந்து பீரப்பாவைப் பார்த்து நீங்கள் இந்த ஊரில் ஒரு முஸ்லிமாக இருந்தும் அல்லாவைத் தொழாமலும், பள்ளிக்குப் போகா மலும் இருக்கிறீர்களே இது சரியா என்று கேட்க, பீரப்பாவோ சதக்கத்துல்லா அப்பாவை பார்த்து தம்பி ஐந்துவேளையும் இந்தப் பள்ளியில் தொழுவது சிறப்பா அல்லது மக்காவி லுள்ள கஃபத்துல்லாவில் தொழுவது சிறப்பா, நான் தொழு ததை நீங்கள் பார்க்க வேண்டுமானால் இதோ நான் நிற்கின்ற காக்குழியைப் பாருங்கள் என்றார்கள். ஹலரத்தவர்கள் காக் குழியை உற்றுப் பார்த்தபோது அங்கே கஃபா தெரிந்தது. அங்கே இமாமாக நின்று பீரப்பா தொழுவித்துக் கொண்டிருந் தார்கள். சதகத்துல்லா மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.
பின்னர் பீரப்பா சதக்கத்துல்லா அப்பாவை சாப்பிட வீட்டிற்குள் அழைத்து வந்தார்கள். அடுப்பிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட பானையிலுள்ளதையும், சட்டியிலுள்ளதை யும் எடுத்து வைத்திட இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர். பசியாறுங்கள் தம்பி ஏன்று சொல்லியும் சதக்கத்துல்லா அப்பா சாப்பிடாமல் இருந்தார்கள். பீரப்பாவோ என்ன தம்பி சோறுண்ணச் சொன்னால் சும்மா இருக்கிறீர்கள்? மண் ணும் கள்ளியுமாக இருக்கிறதோ? அல்லா குத்த இலாவை உணர்ந்து அவன் பாதையை பற்றிப் பிடித்தவர்களுக்கு அவன் கொடுத்திருக்கும் அதிசய ஆற்றலை பார்த்தீர்களா என்று கூறி அவர்கள் முன்னிருந்த சாப் பாட்டை தன் கையால் தொட்டு, மண்ணையும் கள்ளியையும், நெய்ச்சோறும் கறியுமாக்கி அள்ளி யள்ளி சதக்கத்துல்லா அப்பா அவர் களின் வாயில் ஊட்டினார்கள்.
தெளிவுகள்:
மேற்சொல்லப்பட்ட வாய்மொழி வரலாற்று சம்பவ நிகழ்வு என்பது மேற்தள கட்டமைப்பாகவும் அதில் உட்பொதிந்துக் கிடக்கும் கருத்தியல் அடித்தள கட்டமைப்பாகவும் அமையப் பெற்றுள்ளது. இதில் உட்பொதிந்து கிடக்கும் கருத்தியல் களை அல்லது உண்மையின்
நுண்அலகுகளை நாம் கீழ் கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.
பீரப்பாவும், சதக்கத்துல்லா அப்பாவும் சமகாலத்தை சேர்ந்தவர்கள். பீரப்பா மூத்தவராகவும், சதக்கத்துல்லா அப்பா இளையவராகவும் சுட்டிக் காட்டப்படுகின்றனர். இதற்கான துணைவிளக்கத்தை அவர்கள் தம் வரலாற்று கால கட்டத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளலாம். சதக்கத் துல்லா அப்பாவின் காலம் 1632 – 1705 ஆகும். பீரப்பா காலம் குறித்து சரியான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை. எனி னும் திருநெறிநீதம் நூலில் குருநபி ஹிஜ்ரத்தாகி குவலகத்தா யிரத்தின் இருபத்துரண்டாமாண்டிலியம்பிடும் ரபியுலாஹிர் கருமமென்றிருபதன்று காரணவெள்ளிநாளில், திருநெறி நீதம்பாட திருவருள் பெருகத்தானே என்று குறிப்பிடுவதால் ஹிஜ்ரி 1022ல் இந்நூல் உருவானதாக அறியலாம். எனவே ஏறத்தாழ கி.பி.1570-1670க்கும் இடைப்பட்டதாகக்கூட பீரப் பாவின் காலத்தை வரையறுக்கலாம். இதனடிப்படை யில் வயதில் முதிர்ந்த பீரப்பாவை, இளையவரான சதக்கத் துல்லா அப்பா சந்தித்திருக்க வாய்ப்புள்ளதாக அறியலாம்.
(2) சதக்கத்துல்லா அப்பாவிடம் தறி நெய்யும் காக்குழியில் கஃபதுல்லாவை காண்பித்து அங்கே இமாமாக தொழுகை நடத்தியதாக வரும் பகுதி பிற இஸ்லாமிய மார்க்கஞானி களைவிட ஆற்றலிலும் மார்க்கஞானத்திலும் சிறந்தவர் பீரப்பா என்னும் நிலையை உணர்த்த முற்பட்ட குறியீடாக வும் எடுத்துக் கொள்ளலாம்.
(3) தென்திருவிதாங்கூரின், பத்மநாபபுரம் அரண்மனை பட்டு நெசவு தேவைகளுக்கு இப்பகுதி நெசவாளர்கள் நெய்து கொடுப்பதான செய்தி உண்டு. எனவே அன்றைய முஸ்லிம் குடும்பங்கள் மேற்கொண்ட நெசவுத் தொழி லோடு பீரப்பா வாழ்க்கை நடத்தியிருக்கக்கூடும் என்பதற் கான அத்தாட்சியாக காக்குழி பற்றிய படிமம் இடம் பெற்றிருப்பதாக கருதலாம்.
(4) உலகியல் வாழ்வில் ஏளிமையாகவும், ஏழ்மையோ டும் பீரப்பா வாழ்ந்தார்கள் என்பதற்கான கூறுகளை, சோறாக்க ஒருபடி அரிசியில்லை என பெறப்பட்ட கூற்றின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். பீரப்பாவின் ஞானப் புகழ்ச்சிப் பாடல்கள் பல இடங்களில் வறுமை, துன்பம், தீங்கு என அனைத்திலிருந்தும் விடுபட இறைவனை இறைஞ்சிப் பாடுவதைப் பார்க்க லாம். (பொல்லாகுபிர்களும் வருங் குற்றமும்), பொருந்தா பிணிதுன்பம் பல ஆபத் தும், நில்லா வறுமையும் மனச்சலிப்பும், நினைப்பும் மறப் பும் வந்தெய்திடாமல் (பாடல் எண்: 102) புவிக்குள் பசித்தவர்க்கென்று ஈயாதலுத்தரையும் ஏன் படைத்தாய் எம்மிறைவனே (பாடல்:9) ஏழை யடியார்க்கு இரங்கும் அல்லல்லாவே எங்கள் வேளை யறிந்துதவும் மேலோனே (பாடல்:475) இதுபோன்ற பல பாடல்வரிக் குறிப்புகளைக் கூறலாம்.
(5) பீரப்பாவின் அகவாழ்க்கை அதாவது மணஉறவு குடும்ப உறவு பற்றிய தகவல்கள் எதுவுமில்லை. ஆனால் ஆனைமலைக்கு அருகில் பீர்மேடு என்னும் மலைப்பகுதி யில் இறைதியானம் என்ற வகையில் பீரப்பா தவம் புரிந்தார் என்பதற்கான செவிவழிச் செய்திகள் உண்டு. இதற்கான துணை ஆதாரமாக பீரப்பா பாடிய முகியத்தீன் ஆண்டவர் மீதான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஞானக்குறம் பாடல் தொகுப்பின் மலைவளம், நாட்டுவளம், வாசல் வளம் உள் ளிட்ட பகுதிகளை குறிப்பிடலாம். ஏனெனில் ஒருவித வாழ் வனுபவமும் உணர்தலின் புரிதலின் அடிப்படையிலேயே இப்பாடல்கள் உருவாகியிருக்கக்கூடும். ஞானப்புகழ்ச்சி யின் மலைமேடு சிறிது- எங்கள் மனமேடு பெரிது (பாடல்: 126) பாதங்கள் மேலுங்கீழுமாய் பத்து நூறாயிரமாண்டு ஓதித் தவம் செய்தாலும் போதாதாம் அன்றுகந்ததுக்கே (பாடல் :29) என்பது போன்ற குறியீடுகள் இடம் பெறுவதைக் கவனத்திற் கொள்ளலாம்.
இந்நிலையில் இல்லறத்தை மறுத்து துறவறத்தை பீரப்பா வலியுறுத்தினார், இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமானது என்று ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் இல்லறத்தை நிராகரிக்கச் சொன்னதற்கான ஆதாரங்கள் எதையும் பீரப்பாவின் பாடல்களிலிருந்து எடுத்துக்காட்ட முடியாது. பீரப்பாவின் துணைவியார் சதக்கத்துல்லா அப்பா விற்கு சமைத்து வைத்தார்கள் என்ற வாய்மொழி வரலாற்றுச் செய்தியை மறுப்போரும் உண்டு என்றாலும், இஸ்லாம் பேசும் குடும்ப வாழ்க்கையை பீரப்பா மறுக்கவில்லை என் பதற்கான ஆதாரமாகவும் இதைக் கருதலாம். உடலியல் ஞானம்,ஆண்பெண் உறவு பற்றிய படிமங்கள் சிலவும், ஆன் மீக தத்துவார்த்த விளக்கச் சொல்லாடல்களாகவும் பீரப் பாவின் ஞானரத்தின் குறவஞ்சியிலும் இடம் பெறுகிறது.
மேலும் பீரப்பா பீர்மேட்டில் தவம்புரிந்தார் என்ற செய்தி யின் மூலமாக அக்காலத்தில் இறையைப் பற்றியும், மனித குலம் மீட்சி பெறுதல் குறித்த ஞானத்தையும் பெற பீரப்பா தனிமையை விரும்பி தனித்து சிந்தித்து தவம்புரிந்து வாழ்ந் திருக்கக்கூடும். இது துறவறம் சார்ந்த விஷயமல்ல. தனிமை சார்ந்த விஷயம். நபிமுகமது தன் வாழ்க்கையில் நபித்துவம் பெற்றதும், இறைத்தூது (வஹி) ஜிப்ரீல் வழி நபி முகமது வுக்கு கிடைத்ததும் ஹிரா மலைக்குகையில் தனித்திருந்த போது தான் என்பது இவ்வேளையில் நினைவுகூரத்தக்கது.
வாய்மொழி வரலாறு – 2
பீரப்பாவின் ஞானத்தை சோதிக்க திருவிதாங்கூர் மன்னன் அரச சபைக்கு பீரப்பாவை அழைத்து வரச் செய்கிறான். அறிஞர்கள் நிறைந்திருந்த அந்த அவையில் மன்னன் நீரில் மீன் இருக்குமா என்று பீரப்பாவிடம் ஒரு கேள்வி கேட்கிறான். ஆம், நீரில் மீன் இருக்கும் என்று பதில் கூறு கிறார். உடனே ஏளனத்தோடு மன்னன் சிப்பந்தியை அழைத்து தென்னை மரத்திலுள்ள தேங்காயைப் பறிக்கச் சொல்கிறான் பறித்த தேங்காயை உரித்து உடைத்து உள்ளே காட்ட சொன்னபோது அதிசயமாய் தேங்காயின் அந்த இளநீரில் மீன் துள்ளியது.
வாய்மொழி வரலாறு-3
முத்துசாமி தம்பிரானின் சமஸ்தானத்தில் இளவரசராக ஒரு வார காலத்தில் பட்டம்சூட்டப்பட வேண்டிய அரசகுமாரன் திடீரென்று காய்ச்சல், ஜன்னி வந்து பாதிக்கப்பட்டு எல்லா ராஜ வைத்தியங்களும் பலனளிக்காமல் இறந்து போகிறான். குலசோழிய பார்ப்பனர்களாலும் எதுவும் செய்யமுடிய வில்லை. சமஸ்தானமே துயரத்தில் ஆழ்ந்த சமயம் ஞானி பீரப்பா அழைக்கப்பட்டு அரண்மனைக்குச் செல்கிறார். அங்கே அரசகுமாரன் இறந்துகிடந்த அறைக்குள் சென்று கதவுகளைச் சாத்திவிட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் இளவரசனை உயிரோடு எழுப்பி கூட்டி வருகிறார்.
வாய்மொழி வரலாறு-4
பத்மநாபபுரம் கோட்டை கட்டிக் கொண்டிருக்கும் சமயம் அவ்வழியாக சென்ற பீரப்பாவை கோட்டையிலுள்ள சிலர் கேலி செய்ததின் விளைவாக கோட்டை கட்ட முடியாமல் ஆகிப்போகிறது. கற்சுவரை கட்டும்பொருட்டு ஒரு கல்லை வைத்தால் மறுகல் தகர்ந்து விழுந்துவிடுகிறது. பிறகு கோட்டையிலுள்ளவர்கள் தங்கள் தவறை உணர, மன்னனும் பீரப்பாவிடம் வந்து வேண்டிக் கொண்டதன் விளைவாக பீரப்பா தன் திருக்கரங்களால் கல்லெடுத்து வைத்தபின்னரே அக்கோட்டை கட்டப்பட முடிந்தது.
வாய்மொழிவரலாறு – 5
அதிகாலையில் அடர்ந்த காட்டிற்குள் சென்று அருவி நீருக் கருகே உட்கார்ந்த பீரப்பா தனது கைவிரல்களைத் தொண் டையின் உள்ளேவிட்டு குடல் முழுவதையும் வெளியே எடுத்தார்கள். அதனை ஒரு கல்லில் வைத்து துணியைத் துவைப்பதைப்போல் துவைத்து எடுத்து மீண்டும் அதை விழுங்கினார்கள். பின் உடல் முழுவதையும் கழுவிக் கொண்டார்கள். ஓங்கிய மரத்தின் உயர்ந்த கிளையொன்றை அவர்கள் உற்றுநோக்கவே அது வளைந்து தாழ்ந்தது. அப்பா அவர்கள் தங்கள் பாதங்களின் விரல்களினால் கிளையைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தலைகீழாய் தொங்கினார்கள்.
வாய்மொழி வரலாறு – 6
ஆனைமலைச்சாரலில் தவமிருந்த பீரப்பாவின் முன்னே அவரது சீடர்கள் யோகி ஒருவரை அழைத்துவந்தனர். அவர் கூறினார் பக்கத்து பொதிகை மலையிலிருந்து வெளியிடம் வர ஆயிரம் பேருக்குமேல் தலைவராய் இருக்கும் குருவிடம் அனுமதிகேட்டேன். அவர்கள் ஒரு குளிகையினைத் தந்து வாயில் போடச் சொல்லி பசி, தாகம், களைப்பு தெரியாமல் இருக்கும். பறவைகளைப் போன்று ஆகாயத்தில் பறந்து நினைத்த இடம் செல்லலாம். மாலை பூசைக்குமுன் சென்று வா என உத்தரவு தந்தார். ஆனால் இந்த இடத்தில் வரும் போது வாயில்கிடந்த குளிகை தவறி விழுந்துவிட்டது மாலை பூசைக்கு செல்லாவிடில் பாவம் கிடைக்கும் என்றார். நின்ற அவர் பீரப்பா உபதேசம் செய்தபோது கலிமா சொல்லி முஸ்லிமாகிவிடுகிறார். என் கூட்டத்தினரிடமும் குருவிட மும் உங்களைப் பற்றி நான் எடுத்துகூறுவேன் பொதிகை மலைக்கு எப்படி செல்வது என்று கேட்டபோது பீரப்பா கீழே குனிந்து ஒருசிறு கல்லினை எடுத்து வாயில் போட்டுக் கொள் முந்திய குளிகையைவிடச் சிறந்தது நினைத்த இடத் திற்கு சென்று சேரலாம் என்று கூறுகிறார். பீரப்பாவைப்பற்றி கேட்டு அதிசயப்பட்ட பொதிகைமலையின் குரு பிறகொரு நாள் பீரப்பாவை சந்திக்க வருகிறார். ஞானம் சம்பந்தமான ரகசியங்களை தெளிவாக பீரப்பா எடுத்துக்கூற அதனால் கவரப்பட்டு கலிமாவை மொழிந்து பீரப்பாவின் முன் முஸ் லிமாக மாறுகிறார். என் பெயர் பீர்முகம்மது, உம்முடைய பெயர் எகீன் முகம்மது. நீரே இன்று முதல் எனது முதல் கலீபா ஆவீர் என்று அறிவிக்கிறார்கள். இன்றும் தக்கலை தர்காவில் எகீன் முகமது சாகிபுவினுடையது என்பது இந்த ஊர்மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகவும் இருக்கிறது.
தெளிவுகள்:
இந்த வாய்மொழி வரலாறுகளின் வழியாக சமஸ்தானத்து மன்னன்,மந்திரிகள், புரோகித பார்ப்பனர்கள் ஆகியவர் களைவிட பீரப்பா ஆற்றலிலும் அறிவிலும் உயர்ந்தவர் என்ப தற்கான குறிப்பு உணர்த்தப்படுகிறது. அடித்தட்டு மக்களை வரிகளாலும் உயர்ஜாதி வெறியாலும், கொடுந்தண்டனை களாலும் நசுக்கிக் கொண்டிருந்த சமஸ்தான மன்னர்களை எதிர்த்து நிற்கிற ஆற்றலை பீரப்பா பெற்றிருந்தார் என்பதா கவும் அறிந்து கொள்ளலாம்.இதற்கு ஆதாரமான குறிப்பாக காலங்காலமாக இம்மக்களால் பாடப்படுகிற சாகிப்பைத் என்னும் பீரப்பா பற்றிய புகழ்ப்பாடலின் 16வது பாடல் வரிகளை சொல்லலாம்.
விரோதிகளான காபிர்கள் அக்கிரமங்கொண்டு சிறைப் படுத்த முயன்றபோது, அதனை முறியடித்து வெற்றி பெற்ற நமது பெருமைக்குரிய பீர்முஹம்மது நாதர் அவர்கள். (வதப்ஈன்லிஹப்ஸில் காபிரீனவ பக்றுனா, பீர்முகமது ஸாகிபுல் காமினில்வலி) இதற்கு பீரப்பாவின் அறிவாற்றல், ஞானத்திறன், சரக்கலை மருத்துவ அறிவு போன்றவை பயன் பட்டிருக்கக்கூடும். ஒன்றை மற்றொன்றாகவோ, ஒரு பொருளை மற்றொரு பொருளாகவோ, பொருளே இல்லாத வெற்றிடத்தில் ஏதேனும் ஒரு பொருள் உள்ளது போன்றோ கருதவைக்கும் ரசவாதக் கலைசார்ந்த புராதன உளவியல் விஞ்ஞானத்தின் கூறுகளும் தவநிலையும் யோகப் பயிற்சி யின் அம்சங்களும், இந்து சமயத்தினரும் பீரப்பாவின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமான நிகழ்வுகளும் இதனுள்ளே உட்பொதிந்து கிடப்பதை கவனிக்கலாம்.
குர்ஆனிய வசனங்களுக்கும் விளக்கம் சொல்கின்ற தப்ஸீர், நபிமுகமதுவின் சொல்செயல்களை விளக்கும் ஹதீஸ் பிக்ஹு இஸ்லாமிய சட்டங்கள், குர்ஆனை இனிமை யாக பல இசை வடிவங்களில் வெளிப்படுத்தும் கிராஅத், உசூல், இலக்கணம், தர்க்கசாஸ்திரம் என பலவித கலை நுட்பங்கள் இஸ்லாமிய கலாசாரத்தில் உண்டு.
இரும்பைத் தங்கம்போலாக்கும் கீமியா, பிறர்கண்ணுக்கு தெரியாமல் மறைந்துவிடும் ஹீமியா, மறைபொருளை அறி விக்கும் சீமியா, பல உருவத்தோற்றம் கொள்ளும் ரீமியா ஆகிய நான்கு கலைகள் பற்றிய பதிவுகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அவயங்களின் துடிப்புகளால் அறியக் கூடிய துடிசாஸ்திரம் தாதுவின் குணக்குறிகள் அறிதல், கன வின் பலன்கள் புரிதல் சரஓட்டம், நாடி சாஸ்திரம், மூலிகை மருத்துவம், வைத்தியக்கலைகளிலும் விளங்கினர். இந்தப் பின்னணியினூடேதான் சூபிகளின் கராமாத்துகள் எனும் அற்புதங்களை மீள்வாசிப்பு செய்ய வேண்டும். எனவே சிலர்கூறுவதுபோல் கராமாத்துகள் என்னும் வாய் மொழி கதையாடல்களை வெறும் கட்டுக்கதைகளென நிரா கரிக்க வேண்டியதில்லை. அந்த அதிசய கதையாடல்களுக்கு மதிப்பளித்து அவற்றில் உயிரும் உணர்வுமாய் கலந்திருக்கும் நுண்ணிய அளவிலான பண்பாட்டியல் உண்மைகளைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அப்போதுதான் ஆன்மீகத் தின் அர்த்தங்கள் வாழ்வியல் சார்ந்து புதிய தளங்களில் விரிவடையும்.
நன்றி
புதுவிசை காலாண்டிதழ்
மார்ச் 2010

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்