கனடாவில் புதுப்பிக்கப்படும் பழைய கனநீர் அணுமின் நிலையங்கள்

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


‘தற்போது இயங்கிவரும் பழைய அணுமின் நிலையங்கள் 1960-1970 ஆண்டுகளில் மின்சாரம் பரிமாறத் தொடங்கியவை. சுமார் 30 ஆண்டு எல்லை வரை பாதுகாப்பாக இயங்க டிசைன் செய்யப்பட்டதால், அவற்றின் ஆயுட் கால முடிவுகள் நெருங்கிக் கொண்டு வருகின்றன. முதுமை அடையும் அந்த நிலையங்கள் புதுமை அடைய நிதி இல்லாவிட்டால், அவை நிரந்தரமாய் நிறுத்தப்பட வேண்டும். நிதி இருப்பின் அவற்றின் முக்கிய அங்கங்கள் புதுப்பிக்கப்பட்டு அவற்றின் ஆயுட் காலம் இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் நீடிக்கப்படலாம். ‘

டங்கன் ஹாத்ரோன் [Duncan Hawthrone, CEO, Bruce Power Corporation (2001)]

‘ஓய்வு நிலையில் முடக்கமான புரூஸ் யூனிட்டைப் புதுப்பித்து, புத்துயிர் அளித்து இயங்க வைத்தது, எங்கள் மாபெரும் சாவாலான சாதனை என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறோம். அந்த துணிச்சலான வேலையின் விளைவு நாங்கள் எதிர்காலத்தை புதிய ஒளியில் உறுதியாகக் காண, மிக்க அனுபவ வலுப்பெற்று வெளிவந்தது! ‘

டங்கன் ஹாத்ரோன் [மார்ச் 2004]

முன்னுரை: இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் உலக மக்களின் முக்கிய தேவைகள் இரண்டு. முதலாவது சுத்தமான குடிநீர். அடுத்தது சூழ்வெளியைப் பாழாக்காமல் உற்பத்தி செய்யும் மின்சக்தி. சூழ்வெளியைப் பாழாக்காமல் அணு மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும். தற்போது உலகில் 31 நாடுகள் 440 வாணிபத்துறை அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்குவதோடு, இன்னும் புதிதாக 30 அணுமின் நிலையங்களைக் கட்டிக் கொண்டும் வருகின்றன. அடுத்து 30 புதிய நிலையங்கள் கட்டுவதற்குத் திட்டங்களும், டிசைன்களும் உருவாகி வருகின்றன. 2002 ஆண்டு அணுமின்சக்தி உற்பத்தி 2574 பில்லியன் யூனிட்டுகள் (KWh) என்று அறியப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் அணு மின்சக்தி ஆற்றத்தின் பெருக்கம் [298 TWh (Tera Watt hours =1 Million MWh)] ஆக உயர்ந்திருக்கிறது. 2004 ஆண்டு முடிவில் உற்பத்தியாகும் 360,000 மெகாவாட் ஆற்றலானது, தற்போது உலகின் 16% தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஆக இதுவரை அணுமின்சக்தி உற்பத்தித் துறையில் 11,000 உலை ஆண்டு [11,000 Reactor Years] அனுபவத்தை உலக நாடுகள் அனைத்தும் பெற்றுக் கொண்டு முற்போக்கு அடைந்துள்ளன. அதே சமயத்தில் உலக மின்சக்தித் தேவையில் 16% பங்கை பரிமாறிக் கொண்டிருக்கும் அணுசக்தி நிலையங்களில் சில வாலிப வயதைத் தாண்டி முதுமைப் பருவத்தை எட்டி வருகின்றன. வயது முதிர்ந்த நிலையங்கள் நிறுத்தமாகிப் புதுப்பிக்கப் பட்டால் மீண்டும் 20 அல்லது 25 ஆண்டுகள் சிறப்பாக இயங்கிவர வாய்ப்புள்ளது. அமெரிக்காவிலும், கனடாவிலும் அவ்விதம் புதுப்பிக்கப்படும் நிலையங்கள் அநேகம். இக்கட்டுரை கனடாவில் புதுப்பிக்கப்படும் சில கனநீர் அணுமின் நிலையங்களைப் பற்றி விளக்கம் தருகிறது.

வட அமெரிக்காவிலே மிகப் பெரிய அணுசக்தி உற்பத்திக் களமாக இருந்து வருகிறது, கனடாவின் புரூஸ் அணு மின்சக்தித் தளம். ஐம்பெரும் ஏரிகளில் ஒன்றான ஹூரன் ஏரிக்கரையில் [Huron Lake] புரூஸ்அமைக்கப் பட்டுள்ளது. ஒரே இடத்தில் சுமார் 7000 MWe ஆற்றல் பரிமாறத் தகுதியுள்ள, காண்டு எனப்படும் [CANDU (Canadian Deuterium Uranium)] எட்டுக் கனநீர் அணுமின்சக்தி நிலையங்கள் 1977 ஆண்டு முதல் மின்சாரத்தை அனுப்பி வருகின்றன. புரூஸ் A நிலையத்தில் 4 தனித்தனி யூனிட்டுகள் [4×900=3600 MWe] மின்சாரத்தை 1977-1979 ஆண்டுகளிலும், புரூஸ் B நிலையத்தில் 4 தனித்தனி யூனிட்டுகள் [4×915=3660 MWe] 1984-1987 ஆண்டுகளிலும் பரிமாறத் தொடங்கின. முதற் பிறவி நிலைய நான்கு யூனிட்டுகள் 1970 ஆண்டு டிசைன் நியதிகளையும், இரண்டாம் பிறவி நிலைய நான்கு யூனிட்டுகள் 1980 ஆண்டு டிசைன் நியதிகளையும் பின்பற்றிக் கனடாவின் அணுவியற் பொறித்துறை நிறுவகத்தால் [Atomic Energy Canada Ltd (AECL)] படைக்கப் பட்டவை. அந்த அணு மின்சக்தி நிலையங்கள் 2001 ஆண்டுவரை அண்டாரியோ மாநில வாரியத்தின் [Ontario Hydro, (Later) Ontario Power Generation] உரிமையில் இயங்கி வந்தன. 2001 ஆம் ஆண்டில் புரூஸ் பவர் கார்பொரேஷன் [Bruce Power Corporation] இரண்டு நிலையங்களின் இயக்க உரிமையை 2018 ஆண்டுவரை குத்தகை ஒப்பந்தத்துக்கு [Lease Agreement] வாங்கிக் கொண்டது.

கனநீர் அணுமின் உலைகளின் பிரச்சனைகள்

கனடாவின் முதல் அணுமின் நிலையத்தை 1962-1963 ஆண்டில் முதலாக வாங்கிய நாடு இந்தியா! கனடாவின் டிசைனாகிய கனநீர் அணுமின் உலைகள் [Pressurized Heavy Water Reactors (PHWR)] உலகில் பல நாடுகளில் இப்போது இயங்கி வருகின்றன. கனடா, இந்தியா, பாகிஸ்தான், சைனா, அர்ஜன்டைனா, ருமேனியா ஆகிய நாடுகளில் 1960 ஆண்டு முதல் மின்சாரம் பரிமாறி வருகின்றன. கனநீர் அணுமின் உலைகளின் முக்கிய சிறப்பு அம்சங்கள் இரண்டு. உலகின் பிற நாடுகளில் இயங்கும் கொதிநீர் அணு உலை [Boiling Water Reactor (BWR)], அழுத்தநீர் அணு உலை [Pressurized Water Reactor (PWR)] ஆகியவற்றுக்குத் தேவையான ‘அழுத்த உலைக்கலன் ‘ [Pressure Vessel] போன்று விலைமிக்க இரும்புக் கலன் கனநீர் உலைக்குத் தேவை யில்லை! இரண்டாவது அவற்றில் பயன்படும் எரிக்கோலுக்கு வேண்டிய விலைமிக்கச் செறிவு யுரேனியம் [3%-5% Enriched Uranium], கனநீர் அணுமின் உலைகளுக்குத் தேவை யில்லை! இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்தும் கனநீர் அணு உலைகளின் எரிக்கோல் தயாரிப்பு முறை எளியதால், அணுவியல் எருவின் விலை மிகவும் மலிவாகி விடுகிறது!

அதே சமயத்தில் கனநீர் அணுமின் உலைகளில் உள்ள பிரச்சனைகள் இரண்டு. மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியாகவும் பயன்படும் ‘பொன்னீர் ‘ [Liquid Gold] எனப்படும் கனநீர் விலை உயர்ந்தது! ஆனால் அணு உலையில் ஓடும் கனநீர் கதிரியக்கம் கொண்ட டிரிடியம் [Beta emitting Tritium] கலப்படமாகி மானிட உள்ளுடம்பு அங்கங்களுக்கு இன்னல் [Hazards to Human Internal Organs] தரவல்லது! கனநீர் கசிந்து வெளியேறினால், களத்திலிருந்தும், காற்றிலிருந்தும் கனநீர் மீட்கப்பட வேண்டும். அணுமின் உலைகளின் இயக்கத்தின் தேவைக்குக் கனநீர் ஒருமுறைச் செலவானாலும், இழப்புநீர் அடிக்கடி உலையில் நிரப்பப்பட வேண்டும். அடுத்த பிரச்சனை, அணு உலையில் எரிக்கோல்களைத் தாங்கி, வெப்பம் கடத்திச் செல்லும் முன்னூறுக்கும் மேற்பட்ட ஸிர்கோனியக் கலவையில் செய்யப்பட்ட அழுத்தக் குழல்கள் [Zircolay Pressure Tubes (360-480)]. ஸிர்கோனியக் கலவை அழுத்தக் குழல்களின் சராசரி ஆயுள் வயது சுமார் 20 ஆண்டுகள். அழுத்தக் குழல்கள் நீரோட்டத்தாலும், எரிக்கோல் நகர்ச்சியாலும், நியூட்ரான் தாக்குதலாலும் நாளடைவில் பழுதடை கின்றன. நீரோட்டத்தால் உராய்வுத் தடங்களும் [Erosion Problems], எரிக்கோல் எடையால் வளைவுப் பழுதுகளும் [Bending of Tubes], எரிக்கோல் நகர்ச்சியால் உராய்வுக் கீறல்களும் தோன்றி [Frictional Scratching], நியூட்ரான் தாக்குதலால் கனிவான உலோகம் கடினமாகி [Ductility to Brittleness] அழுத்தக் குழல்களின் ஆயுளைக் குறைக்கின்றன!

அனைத்து அணுமின்சக்தி நிலையங்களிலும் [BWR, PWR, PHWR], 25 ஆண்டுகளுக்கு மேல் நீராவிக் கொதிகலன்கள் [Steam Generators] பழுதாகி மாற்றப்பட வேண்டியுள்ளன. நாலடித் தடிப்புள்ள அணுமின் உலை காங்கிரீட் அரணுக்கு உள்ளே அமைக்கப்படும், நீராவிக் கொதி கலன்களை வெளியே எடுத்து மாற்றுவதற்கு அரணில் இடவசதிகள் அமைக்கப்பட வேண்டும். கோட்டை அரண் கொண்ட பழைய முதற்பிறவி அணுமின் உலைகளில் இப்பழுதுகள் எதிர்பார்க்கப் படாததால், 1960 ஆண்டுகளில் காங்கிரீட் அரண்களில் துளைகள் அமைக்கப் படவில்லை! உலகின் புதிய அணுமின் உலைகள், இந்தியா டிசைன் செய்யும் புதியஅணுமின் உலைகளில் அரண்கள் நீராவிக் கொதிகலன் நீக்கத்திற்கும், நுழைவுக்கும் ஏதுவான வசதிகள் அரணில் செய்யப் பட்டுள்ளன.

புதியவை பழையவை ஆயின! பழையவை புதியவை ஆயின!

புரூஸ் A நிலையத்தில் 1995 அக்டோபரில் யூனிட்-1 அழுத்தக் குழல்கள் புதுப்பிக்கப்படவும், 1997 டிசம்பரில் யூனிட்-2 கொதிகலன் பிரச்சனையாலும் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தமாயின. மற்ற இரண்டு யூனிட்டுகள் யூனிட்-4 1998 ஜனவரில், யூனிட்-3 ஏப்ரலில் கொதிகலன் பராபரிப்புக்காக நிறுத்தப் பட்டன. புரூஸ் பவர் கம்பேனி 2001 ஆண்டில் குத்தகைக்கு எடுக்கும் போது, புரூஸ் B நிலையத்தின் நான்கு யூனிட்டுகள் மட்டுமே மின்சாரம் பரிமாறி வந்தன! புரூஸ் B யூனிட்டுகளின் இயக்க லாபத்தில் பெரும் பகுதியை ஓய்வில் இருக்கும் முதல் நான்கு யூனிட்டுகளில் ஒவ்வொன்றை எடுத்துப் புதுப்பித்து மீட்சி செய்ய, புரூஸ் பவர் கம்பேனி திட்டங்களைத் தயாரித்தது. இறுதியில் (1998) ஓய்வு நிலைக்குத் தள்ளப்பட்ட யூனிட்-3, யூனிட்-4 அணுமின் உலைகள் முதலில் மீட்சி நிலையடைய புதுப்பிக்கப் பட்டன. அத்திட்டங்கள் வெற்றியாகி 720 மில்லியன் டாலர் நிதிச் செலவில் யூனிட்-4 புதியதாகி 2003 அக்டோபரிலும், யூனிட்-3 புதியதாகி 2004 ஜனவரியிலும் மின்சாரம் பரிமாறத் தொடங்கின. 2001 ஆம் ஆண்டில் நான்கு யூனிட்டுகள் 3200 MWe ஆற்றல் பரிமாறி வந்தன. 2004 ஆரம்பத்தில் மேலும் இரண்டு யூனிட்டுகள் (1500 MWe) இணைந்து மொத்தம் 4700 MWe ஆற்றல் அனுப்பி வருகின்றன!

2004 ஆரம்பத்தில் புரூஸ் A முதலிரண்டு யூனிட்டுகளைச் செப்பணிட புரூஸ் பவர் கம்பெனித் திட்டமிட்டது. முதலிரண்டு யூனிட்டுகளை மீட்சி இயக்க நிலைக்குக் கொண்டு வருவதில் பெரும் சிக்கல்களும், பல இடையூறுகளும் இருந்தன. யூனிட்-3 யூனிட்-4 இரண்டையும் செம்மை யாக்குவதில் பிரச்சனைகள் மிகையாக இல்லாததால் 3 ஆண்டுகளில் அவற்றை மீட்க முடிந்தது. புரூஸ் A முதலிரண்டு யூனிட்டுகள் ஒவ்வொன்றிலும் உலைக் கலனின் [Reactor Vessel (Calandria)] 480 அழுத்தக் குழல்கள் புதுப்பிக்கப்பட வேண்டி யிருந்ததோடு, நான்கு நீராவி ஜனனிகளும் [Steam Generators] மாற்ற வேண்டிய கட்டாயமாகி விட்டது. கதிர்வீசும் பழைய அழுத்தக் குழல்களை எடுத்துப் புதைப்பதிலும், புதிய குழல்களை அமைத்து இணைப்பதிலும் AECL, OPG, Bruce Power ஆகிய முப்பெரும் கம்பெனிகள் பயிற்சியும், முன் அனுபவமும் பெற்றவை. ஆனால் கதிர்வீசும் நீராவி ஜனனிகளை நீக்குவதும், புதிய நீராவிக் கொதிகலன்களை அரண் கோட்டைக்குள் புகுத்துவதும் இதுவே முதல் அனுபவமாக இருக்கிறதால், பிரச்சனைகள் எழும்போது தீர்த்துக் கொள்ள வேண்டிய திருக்கும். அடுத்த சிக்கல், காங்கிரீட் அரணில் நீராவி ஜனனியை நீக்கத் துளைகள் முன்பே போடப் படாததால், கோட்டைக் காங்கிரீட்டை யந்திரத் துளைக் கருவிகளால் இடிக்கும் கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது!

புரூஸ் A இறுதி இரண்டு யூனிட்டுகள் புதுப்பிக்கப்பட்டன

1998 ஆம் ஆண்டில் யூனிட்-3, யூனிட்-4 இரண்டும் நிதிவளம் குன்றியதால் OPG ஆல் பராமரிக்க முடியாது, ஓய்வு நிலையில் முடக்க மாயின! 2001 இல் குத்தகை எடுத்த புரூஸ் பவர் இரண்டு வருடம் கடிமையாக உழைத்து முதன்முதலில் யூனிட் 4 புதுப்பிக்கப்பட்டு அக்டோபர் 2003 இல் மின்சாரம் பரிமாறத் துவங்கியது. அடுத்து 2004 ஜனவரியில் யூனிட்-3 புதுப்பிக்கப்பட்டு மின்சக்தி பரிமாறியது. முக்கியமாக அணு உலைப் பாதுகாப்பு, நிலையத் தீயணைப்புப் பாதுகாப்பு, நிலநடுக்கப் பாதுகாப்பு ஆகியவற்றில் செம்மையும், புதுமையும் சேர்க்கப்பட்டன. அடுத்து புதிதாக இரண்டாவது ஆட்சிக் கட்டுப்பாடு மையம் [New Secondary Control Area], பின்னுதவி அபாய மின்சார உற்பத்தி ஏற்பாடு [Back-up Emergency Power System] அமைக்கப் பட்டன. அந்த வெற்றி விழாவில் புரூஸ் பவர் அதிபதி டங்கன் ஹாத்ரோன் கூறியது, ‘ஓய்வு நிலையில் முடக்கமான புரூஸ் யூனிட்டைப் புதுப்பித்து, புத்துயிர் அளித்து இயங்க வைத்தது, எங்கள் மாபெரும் சாவாலான சாதனை என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறோம். அந்த துணிச்சலான வேலையின் விளைவு நாங்கள் எதிர்காலத்தை புதிய ஒளியில் உறுதியாகக் காண, மிக்க அனுபவ வலுப்பெற்று வெளிவந்தது! ‘ யூனிட்-3, -4 இரண்டும் முழுத் தகுதி ஆற்றலில் மின்சாரம் பரிமாறும் போது, சுமார் 500,000 இல்லங்களுக்கு ஒளியூட்டி அனைத்து தேவைகளுக்கும் ஆற்றல் அளிக்கும்.

புரூஸ் A முதலிரு யூனிட்டுகளில் புதுப்பிக்கப்படும் சாதனங்கள்

பராமரிப்புக் குழுவினரில் ஒரு குழு அணு உலையின் 480 அழுத்தக் குழல்களை முதலில் நீக்க இராப் பகலாகப் பணிபுரியும். அதே சமயத்தில் ஒரு குழு 480 புதிய அழுத்தக் குழல்களைத் தயார் செய்து, அணு உலைக் குழல்களின் உள்ளே நுழைத்து உருட்டிவிடப் [Pressure Tube Assembly & Rolling] பயிற்சி எடுக்கும். கதிர்வீசும் பழைய குழல்கள் பாதுகாப்பாக கவச உறைகளில் இடப்பட்டு பூதளக் குழிகளில் புதைக்கப்படும். ஓய்வில் உள்ள பழைய உலையில் ஏற்கனவே தீய்ந்த எரிக்கோல்கள் நீக்கப்பட்டு விட்டதால், புதிய அழுத்தக் குழல்கள் உருட்டப்படும் போது, பராமரிப்புப் பணியாளிகள் மீது கதிரியக்கம் தாக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே கதிரியக்க எரிக்கோல்கள் அகற்றப்பட்டு விட்டதால் அணு உலை ஒன்றின் அழுத்தக் குழல்களைப் புதுப்பிக்க சுமார் 12 முதல் 15 மாதங்கள் ஆகலாம். ஒரு குழுவினர் அரண் கோட்டையில் துளை போடும் போது, அடுத்த குழு புதிய நீராவி ஜனனியை உள் நுழைக்க ஏற்பாடு செய்து, பயிற்சி முறைகளில் ஈடுபடும். மேலும் துருப்பிடித்துக் கதிர்வீசும் சாதனங்கள், பைப்புகள் யாவும் நீக்கப்பட்டு புதியவை இணைக்கப்படும்.

அடுத்து முக்கியமாகத் திட்டமிடும் மக்கள் பாதுகாப்புப் பணி, சூழ்மண்டல உளவாய்வு [Environmental Assessment] எனப்படுவது. கனடாவின் சூழ்மண்டல உளவாய்வுச் சட்டத்தின்படி [Canadian Environmental Assessment Act] புதிய அணு உலை அழுத்தக் குழல்களில் புதிய எரிக்கோல்களைப் புகுத்தி, உலை இயக்கத்தைத் துவக்குவதற்கு முன்பு, 2004 முதல் 2043 ஆண்டு வரை நிகழப் போகும் மாறுதல்களை விளக்கிப் பொது மக்கள் முன்பாக பல ஊர்களில் தர்க்க வாதங்கள் நடத்தப்பட்டுக் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் அமைத்தோ அல்லது குறைபாடுகள் நிவர்த்தியோ செய்யப்பட வேண்டும்.

கனநீர் அணுமின் உலைக்குப் புதிய யுரேனிய எரிக்கட்டு தயாரிப்பு

பழைய அணுமின் உலைகள் புதுமை யாவதுடன், ஆற்றல் மிக்க புதிய எரிக்கட்டுகளைப் [Fuel Bundles] பயன்படுத்தி, மின்சக்தி ஆற்றலை மிகையாக்கிடத் திட்டம் வகுக்கப்பட்டது. எரிக்கட்டுகள் தயாரிக்கப்பட்டு தற்போது இயங்கும் அணுமின் உலைகளில் சோதிக்கப்பட்டு வருகின்றன. பழைய எரிக்கட்டு 37 சிறு குழல்கள் [Pencils] கொண்டது. புதிய எரிக்கட்டு 43 சிறு குழல்களைப் பெற்றது. பழைய மாதிரி எரிக்கட்டுகளில் வெறும் இயற்கை யுரேனிய டையாக்ஸைடு வில்லைகள் [Uranium Dioxide Pellets] பயன்படுத்தப் பட்டன. புதிய எரிக்கோல்களில் அணுப்பிளவாகும் யுரேனியம்-235 இன் செறிவு, 0.7% இயற்கை அளவிலிருந்து 1% ஆக மிகையாக்கப்படும். புரூஸ் யூனிட் அணு உலை ஒன்றில் 480×13=6240 எரிக்கட்டுகள் புகுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பிளவு யுரேனியம்-235, 0.3% அதிகமாக்குவதால், 100 MWe ஆற்றல் உற்பத்தி அதிகமாகிறது. புதிய எரிக்கட்டுகள் பயன்படுத்தும் போது, இயங்கிக் கொண்டுள்ள புரூஸ் ஆறு யூனிட்டுகளின் மொத்த உற்பத்தி 600 MWe மின்சார ஆற்றல் மிகையாக அனுப்பப்படும்.

‘கான்பிலெக்ஸ் ‘ [Canflex] என்னும் பெயர் பெற்ற செறிவு எரிக்கட்டுகள் ‘தணிந்த நீரின்மைப் பெருக்கம் ‘ [Low Void Reactivity Fuel (LVRF)] கொண்டவை. அப்படி என்றால் என்ன வென்று ஒருவர் கேட்கலாம். சூடான எருக்கட்டுகள் கொண்டுள்ள அணு உலை அழுத்தக் குழல்களில் வெப்பக் கடத்தி நீரில்லாமல் போனால், நியூட்ரான்களின் பெருக்கம் மீறாது, தானாகவே தணிந்து குறையும் பண்புடையது புதிய கான்பிலெக்ஸ் எரு! மேலும் புதிய செறிவு எரிக்கட்டு பயன்பாடும் பொது மக்களின் சூழ்மண்ட உளவாய்வுத் தர்க்கங்களுக்கு விடப்படும். அப்போது அந்த புதிய எருவால் சூழ்வெளி, நிலவளம், நீர்வளம், அடித்தள நீரோட்டம், உயிரினம், பயிரினம், மீன்வளம் போன்றவை பாதிப்படையாது என்று உறுதி அளிக்கப்பட வேண்டும்.

இந்தியர் அணுமின்சக்தி பற்றி அறிய வேண்டியது என்ன ?

கனடாவின் காண்டு அணுமின் உலைகளின் டிசைன், கட்டுமான உரிமைகளை [CANDU Reactor Vessels, Pressure Tubes, Nuclear Fuel Bundles Design & Fabrication Rights] இந்தியாவில் அவற்றைத் தயாரிக்க 1960 ஆண்டுகளில் சிக்கனத் தொகைக்குத் துணிச்சலோடு டாக்டர் ஹோமி பாபா வாங்கினார். அதன் விளைவு பாரதம் தற்போது தானாகவே மாபெரும் இரட்டை 540 MWe ஆற்றல் கனநீர் அணுமின் நிலையத்தை தாராப்பூரில் நிறுவி இயக்கும் வலுவைத் தந்துள்ளது! கனடா பழைய புரூஸ், பிக்கரிங் அணுமின் உலைகளைப் புதுப்பித்துப் புத்துயிர் அளித்த வழிகளைப் பாரதமும் கடைப்பிடிக்கும் காலம் வந்துவிட்டது. ராஜஸ்தான், கல்பாக்க அணுமின் உலைகளின் அழுத்தக் குழல்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயங்கி வருவதைக் குறைகூறி வரும் இந்தியர், வெளி உலகத்தில் என்ன நிகழ்கிறது என்று வீட்டுப் பலகணியைத் திறந்து உற்று நோக்க வேண்டும்.

கனடாவில் புரூஸ், பிக்கரிங், டார்லிங்டன் அணுசக்தி நிலையங்கள் அண்டாரியோ மாநிலத்தின் 20% ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. புரூஸ் அணுசக்தித் தளத்தில் மட்டும் 3000 பேர் பணியாற்றி 4700 மெகாவாட் ஆற்றலை அனுப்பி வருகிறார்கள். இந்திய இல்லங்களின் விளக்குகள் ஒளிமங்காமல் உயிர் கொடுக்கும் அணுமின் நிலையங்கள், பேரணை நீர்மட்டத்தால் ஓடும் நீர்ச்சக்தி நிலையங்கள் அனுதினமும் கண்காணிக்கப்பட வேண்டும். அணுசக்தியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தி மின்சக்தி பரிமாறுவதை எள்ளி நகையாடி எதிர்க்கும் இந்தியர், ஜப்பான் போன்ற ஆசிய முற்போக்கு நாட்டை சற்று கூர்ந்து நோக்க வேண்டும். 1945 ஆண்டில் இரண்டு அணுகுண்டுகள் ஹிரோஷிமா, நாகசாக்கியில் வெடித்து, பல்லாயிரக் கணக்கான மக்களும், அவரது பரம்பரைகளும் கதிரியக்கப் பொழிவுகளால் பேரின்னல் அடைந்தார்கள். ஆனால் ஞானம் பெற்ற ஜப்பானில் இப்போது நடப்பதென்ன ? உலகிலே எல்லாவற்றிலும் மிகப் பெரிய ஏழு கொதிநீர் அணு உலைகள் கொண்ட அசுர அணுமின் நிலையத்தை நிறுவி, ஜப்பான் தன் மக்களுக்குப் பாதுகாப்பாக மின்சாரம் பரிமாறி வருகிறது!

****

தகவல்:

1. Bruce A Restart, Bruce County Environmental Assessment, Bruce Power Report [Dec 2004]

2. Bruce Power Community Update [March 2004]

3. President & CEO Report, Bruce Power [www.brucepower.com (2004)]

4. Cameco (Uranium) Corporation Report (www.cameco.com/investor_relations/quarterly/2005-ql/) [March 31 2005]

5. New Fuel Project, Bruce County Environmental Assessment Report [July 2004]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 4, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா