கண்ணகியும் திருவனந்தபுரம் மெயிலில் வந்த சேர நாட்டு இளம் பெண்ணும்.

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

ஞாநி


கண்ணகி சிலை அகற்றப்பட்டது தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் எழுந்த வேளையில் நான் திருவனந்தபுரத்தில் நண்பருடன் அங்கே கண்ணகி ஆற்றுக்கால் அம்மனாக அவதாரம் கொண்டிருக்கும் கோவிலின் வரலாறு பற்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. மதுரையை எாித்த ஆவேசம் தணிய கண்ணகி இளைப்பாறக் கால் பதித்த இடத்தில் அந்தக் கோவில் இருப்பதாக நம்பிக்கை.

அன்று இரவு திருவனந்தபுரம் மெயிலில் சென்னை திரும்புகையில், விடியற்காலை சுமார் இரண்டு மணிக்கு பெட்டிக்குள் இருந்த எதிர் வாிசை பெண்ணின் உரத்த குரல் என்னையும் பல சக பயணிகளையும் எழுப்பியது. அந்தப் பெண் பக்கத்து இருக்கையில் படுத்து இருந்த ஆணை கடுமையாக சாடிக் கொண்டிருந்தாள். அவன் தன்னை நோக்கிக் கையை நீட்டி சீண்டித் தொல்லை செய்ததை அவள் கண்டித்துக் கொண்டிருந்தாள். சக பயணிகளை தன் உதவிக்கு வரும்படி அந்தப் பெண் அழைக்கக் கூட இல்லை. வந்த உதவியை நிராகாிக்கவும் இல்லை. முறைகேடாக நடந்துகொண்ட பயணியை நடுவழியில் இறக்கிவிட்டுவிடலாம் என்று பெட்டியின் நடத்துநர் சொன்னதை அவள் ஏற்கவில்லை.அவனை உடனே போலீசிடம் ஒப்படைக்க வேண்டுமென்று வலியுறுத்தினாள். அப்போது சேலம் ரயிலடியில் வண்டி நின்றது. நடத்துநர் ஓடிச் சென்று ஒரு காவல் துறை துணை ஆய்வளரை அழைத்து வந்தார். அந்தக் காவலர் புகாரைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், இருவரும் அந்த ரயில் நிலையத்தில் இறங்கவேண்டுமென்றார். தன் முகவாி, முழு விவரங்களுடன் தான் எழுத்துப்பூர்வமாகப் புகார் கடிதம் தரும்போது, தானும் ஏன் பயணத்தை பாதியில் முறிக்கவேண்டும் என்று அந்தப் பெண் கேட்டதற்கு சாியான பதில் இல்லை. காவலர் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இறங்கிப் போய்விட்டார். அந்தப் பெண் நடத்துநாிடமிருந்து தவறு செய்த பயணியின் பெயர் விவரத்தைப் பெற்று புகார் கடிதம் எழுதி நடத்துநாிடம் அளித்தார். குற்றவாளி 18 வருட சர்வீஸ் உள்ள ராணுவ ‘வீரர் ‘. ( ரயிலில் ராணுவ சிப்பாய்கள் பெண்களிடம் அத்து மீறி இப்படி நடப்பது தனக்குத் தொிந்தே நான்காவது முறை என்று அந்தப் பெண் தொிவித்தார்.) ரயில்வே நிர்வாகத்தின் மூலம் புகாரை ராணுவத் தலைமையகத்துக்கு அனுப்புவதாக நடத்துனர் உறுதியளித்தார். இதுவரை வாய் திறக்காமல் மெளனமாக இருந்த குற்றவாளி, வேறு சில பய்ணிகளின் யோசனையின்போில், சட்டென்று அந்தப் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கி தன்னை எதுவும் செய்துவிடவேண்டாம் என்றான். கோபமடைந்த பெண், அருகிலிருந்த ஒரு செருப்பை எடுத்து அவன் தலையில் அடித்தாள். அவனிடம் எந்த சலனமும் இல்லை. கடைசி வரை அந்தப் பெண் தன் புகாரைத் திரும்பப் பெறவில்லை.

சென்னைக்கு ரயில் வந்து சேருகையில் சில சக தமிழ்ப் பயணிகள், அந்தப் பெண் மலையாளியாக இருக்கவேதான் இத்தனைத் துணிச்சலுடன் செயல்பட்டதாகத் தமக்குள் பேசிக் கொண்டார்கள். ‘ நம்ம பொண்ணுங்க சகிச்சுகிட்டு மெளனமா இருந்துடுவாங்க. இதெல்லாம் வெளியில சொன்னா நமக்குதான் அவமானம்னு நெனைப்பாங்க. நம்ம கல்ச்சரே வேறங்க ‘ என்றார் ஒருவர்.

ரயிலடியில் தமிழ் செய்தித்தாட்களை வாங்கிப் பிாித்தேன்.அனல் பறந்தது. கண்ணகி சிலை அகற்றப்பட்டது ‘தமிழருக்கு அவமானம்…. தமிழாின் தன்மானத்துக்கு இழுக்கு…. தமிழ் பண்பாட்டின் அடையாளத்தை அழிப்பதா ?… எங்குற்றான் என் தமிழன் இங்குற்ற இழிவுதனை எதிர்ப்பதற்குத் துணிவின்றி ?… ‘ என்று உணர்ச்சி பொங்கும் அறிக்கைகள்.

உண்மையில் கண்ணகி தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமா ? தமிழாின் தன்மானத்தின் வெளிப்பாடா ? நிச்சயமாக இல்லை.

கண்ணகி ஒரு பெண் என்கிற விதத்தில் எப்படிப்பட்டவளாக இருந்தாள் ? கணவன் கோவலன் தன்னைப் புறக்கணித்துவிட்டு மாதவியிடம் சென்றபோது எதிர்ப்பு காட்டாமல் மெளனமாக இருந்தாள். பொருள் இழந்தவனாகத் திரும்பி வந்த நிலையில், தன் காற் சிலம்பை கணவனுக்கு எடுத்துக் கொடுத்தாள்.சாதாரன வணிகனுக்கு இருக்கவேண்டிய எந்த புத்திசாலித்தனமும் இல்லாதவனாக கோவலன் நடந்துகொண்டு ஏமாற்றப்பட்டு , திருடன் என்று பழிக்குள்ளாகிக் கொல்லப்பட்டான். தனக்காக கனவனிடம் நீதி கேட்டுப் போராடாத கண்ணகி, தன்னை வஞ்சித்த கணவனுக்காக நீதி கேட்டு அவனுக்காக நீதி கேட்டு மன்னனிடம் போராடினாள். தன்அசட்டுக் கோபத்தில், ஒரு தவறும் -செய்யாத அப்பாவி மதுரை மக்களின் வீடுகளையும் ஊரையும் தன் ‘கற்புக் கனலால் ‘ எாித்தாள். ( முதல் பயங்கரவாதி. முதல் பெண் மனித வெடிகுண்டு என்று வேண்டுமானால் அவளை கொண்டாடிக் கொள்ளலாம்.). இவள் எப்படி மற்ற-தமிழ்ப் பெண்களுக்கான முன் உதாரணமாக இருக்க முடியும் ?

ஆனால் தமிழ்நாட்டில் கண்ணகியைக் காட்டிக் காட்டி நமது பெண் மக்களை மூளைச் சலவை செய்துவந்ததன் விளைவாகத்தான், ரயில்களில், பஸ்களில், பொது இடங்களில் ஏன் வீட்டுக்குள்ளும்தான்,எல்லா அவமானங்களையும் சீண்டல்களையும் மெளனமாக சகித்துக் கொள்கிற ‘கல்ச்சர் ‘ ஏற்பட்டிருக்கிறது. தனக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு மெளனமாக இருக்க வேண்டும். தன் வீட்டு ஆண்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மட்டும் தெருவில் வந்து போராடவேண்டும் என்று பெண்ணுக்கு போதிக்கிற கலாசாரம்தானே கண்னகி கலாசாரம் ?

பிறன் மனை விழையும் பிரமுகர்கள்,பல தார மணம் செய்யும் சான்றோர்கள் ஆகிய சில தமிழ் ஆண்களுக்குத்தான் கண்ணகி தேவை. அதாவது அவர்களுடைய பல திருமணங்களையும், சின்ன வீடுகளையும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் மெளனமாக சகித்துக் கொள்ளக்கூடிய கண்ணகிகளாக இருக்கக்கூடிய முதல் மனைவி தேவைப் படும் ஆண்கள்தான், கண்ணகியை தமிழ்ப் பெண்களுக்கு முன்மாதிாியாகக் காட்டமுடியும்.

பாண்டிய மன்னனிடம் நீதி கேட்க வந்தபோது கூட தன்னை இன்னாாின் மகள் என்று அறிமுகம் செய்துகொள்ளாமல், தன் புகுந்த வீட்டுப் பெருமையைச் சொல்லி இன்னாாின் மருமகள் என்று ‘ தமிழச்சிக்கேயுாிய பண்பாடுமாறாமல் ‘ கண்ணகி தன்னை அறிமுகம் செய்துகொண்டதைத் தன் அறிக்கையில் பாராட்டிப் புல்லாித்துப் போகிறார் கலைஞர் கருணாநிதி. இது எப்படி தமிழச்சி பண்பாடு ? இதுதானே மனு நீதி ? ஒரு பெண் திருமனத்துக்கு முன் தந்தையை சார்ந்தும், திருமனத்துக்குப் பின் கணவனைச் சார்ந்தும், பிறகு மகனைச் சார்ந்தும்தான் இருக்க வேண்டும் என்று விதித்த மனு நீதிப் படிதானே கண்ணகி புகுந்த வீட்டு அடையாளம் பேசுகிறாள் ? கண்ணகி மனு நீதி வழுவாத தமிழச்சி என்பதால்தானே அவளுக்கு பிஜேபி தலைவர் கடற்கரையில் கோவில் கட்டச் சொல்லுகிறார் ?

கண்ணகி தமிழ்ச் சமூகத்தின் ஆண் ஆதிக்கப் பண்பாட்டின் பிரதிநிதி. பெண்ணடிமைத்தனத்தின் முழு அடையாளம்.அதனால்தான் திராவிடர் இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சுயமாியாதை இயக்கம் அனைத்துக்கும் தாயும் தந்தையுமாக விளங்கிய பொியார் ஒருபோதும் கண்ணகியை பெண்களுக்கான முன்மாதிாியாக ஏற்றுக் கொள்ளவே இல்லை. காரணம் கண்ணகியின் கொள்கைதான்.கல்லானாலும் கணவன், புல்லானாலும் பொறுக்கியானாலும்புருஷன் என்று பெண்கள் அடிமைப்பட்டிருப்பதை பொியார் கண்டித்தார்.

எனவே கண்ணகியை தமிழ் பண்பாட்டின் அடையாளம் என்று சொல்லுவதுதான் தமிழரை , குறிப்பாக தமிழ்ப் பெண்களை அவமானப்படுத்துகிற, தொடர்ந்து அடிமைப்படுத்துகிற வேலை. காப்பியங்களின் இலக்கியச் சுவையை நுகர்வது வேறு. அவை புகட்டும் பிற்போக்குக் கருத்துக்களை சேர்த்து ஏற்றுக் கொள்வது ஆகாது.

கண்ணகி சிலையை அகற்றினவர்கள் மூட நம்பிக்கையாளர்கள், வேள்வி, யாகப் பிாியர்கள், அராஜக அரசியலில் நம்பிக்கையுள்ளவர்கள் என்பதனாலே, கண்ணகி சிலை என்பது ஒரு முற்போக்கான விஷயமாக மாறி விடாது.

உண்மையில் கண்ணகிக்கு சிலை வைத்ததே தவறான செயல். அந்தக் காரணத்துக்காக அதை அகற்றாமல், வேறு காரணங்களுக்காக அகற்றுவது இன்னொரு தவறான செயல். இந்தத் தவறுகள் பற்றிய விழிப்புணர்வு தமிழ் சமூகத்துக்கு வரும்வரை, திருவனந்தபுரம் ரயிலில் சேர நாட்டு இளம்பெண்களின் துணிச்சலைப் பாராட்டிவிட்டு சோழ, பாண்டிய, தொண்டை மண்டலப் பெண்களின் மெளனக் குரல் எப்போது ஒலிக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

***

Series Navigation

ஞாநி

ஞாநி