கடித இலக்கியம் – 5

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

வே.சபாநாயகம்



நாகராஜம்பட்டி
18-3-76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

ஒரு சகாப்தம் கழித்து எழுதுகிற உணர்ச்சி உண்டாகிறது.

சகோதரரின் கல்யாணத்துக்கு மாயவரம் வந்ததும், மத்தியில் உங்கள் ஊரில் இறங்கியதும், அந்த ஏரியில் குளித்ததும், பெருமாள் கோயில் பிரகாரமும், சோழ தேசத்துக் குடும்பம் ஒன்றின் மிக மேம்பாடான பண்புகளை அனுபவித்ததும்- நினைத்தால் ஒரு உன்னதமான கனவு போல் இருக்கின்றன.

மிகவும் கலகலப்பான உங்களுக்குக் கூட கல்லின் மௌனம் வந்து விட்டது, கடித விஷயங்களில் என் அதீதமான அலட்சிய சுபாவம் தந்த விரக்தியில், இல்லையா?

எப்போது நாம் சந்திக்கிறோமோ, எப்போது நாம் எழுதிக் கொள்கிறோமோ அப்பொழுதெல்லாம் பூமியை மறந்த சந்தோஷத்தில் நாம் திளைப்பதே போதுமானது. யாரும் எதற்கும் வருந்த வேண்டியதில்லை.

தங்களை ஒருமுறை அழைக்க வேண்டும். முன்பாவது என் வாழ்க்கையில் கொஞ்சம் நகர வாசனை இருந்தது. இப்பொழுது நான் இருக்கிற சூழலில் நீங்கள் உங்கள் அறியா இளம்பிராயத்தில் கூட பிரவேசித்தீர்களோ இல்லையோ! அப்பேர்ப்பட்ட குக்கிராம வாழ்க்கையில் இருக்கிறேன். எனினும் வாழ்வின் ஒவ்வொரு வழிப் போக்கும் அதிசயமான சுவையுடனேயே இருக்கிறது என்றுதான் காண்கிறேன்.

சொந்தப் பிரச்சினைகளும் கவலைகளும் சொல்லி முடியாது. இருப்பினும் என்ன என்கிற கேள்வியின் முன்னே சந்தோஷத்துடனேயே எழுந்து நிற்கிறோம்.

எழுதுகிற விஷயம் பற்றி நாளுக்குநாள் கற்க நேர்கிற அம்சங்கள், எழுதுவதை மேலும் மேலும் கட்டுப் படுத்துகின்றன. இப்பொழுதான் கருவிலிருக்கிற, நாபி வழி வந்த சத்து நரம்பு மண்டலம் கொண்டு கால் உதைக்கிற மாதிரி இருக்கிறது. ஆயிற்று இன்னும் கொஞ்ச காலம்………..(என்று யாருக்குச் சொல்கிறேன்? உங்களுக்கா? எனக்கா? ஏன் சொல்ல வேண்டும்?)

சமீபத்தில் விரும்பிச் செய்த எழுத்து வேலை, கண்ணதாசனுக்கு JK பற்றி ஒரு ‘குறிப்புகள் வடிவிலான’ கட்டுரை.

ஒண்ணரை வருஷங்களுக்கு முன்பு பி.எஸ்.கே என்று ‘சிதம்பரத்தின் மனைவி’ என்று அவர்கள் வைத்த தலைப்பில் ஒரு கதை குமுதத்தில் வந்தது. ‘குமுதத்திலும் நாம் நம்மை இழக்காமல் எழுதலாம் என்பதற்குக் குப்புசாமியின் கதை ஒரு மாதிரி’ என்று நண்பரொருவர் சொல்ல உஷாராகி விட்டேன். பைத்தியமா? மேலும் எழுதிச் சறுக்கி விழ?

அல்லாமலும், நாம் எழுதுவதைத்தான் எழுதுவோம் ஸ்வாமி, சும்மா எழுத்தைப் பற்றி வம்பளப்பு எதற்கு?

தங்கள் சிறுகதை எட்டாம் வகுப்புக்கோ என்னமோ, பாடமாக வைக்கப் பட்டிருப்பதை அறிந்த போது ஒருமுறை கடிதம் எழுத நினைத்தேன். மகிழ்ந்தேன். சில இடங்களில் தங்கள் சொற்கள் தமிழ் மயமாகி இருந்தது கண்டு இரங்கினேன். நான்
எட்டாம் வகுப்புப் புத்தகத்தைச் சொல்லித் தருவதற்கான பதவியில் உள்ள ஆசிரியனும் அல்லன். எனவே, அது சம்பந்தமாக மேலே எதுவும் நினைக்க முடியாமல் போயிற்று.

டயரி எழுதுகிறேன். எலிப்பொறியில் எலி விழுவது பற்றிய எங்கள் சம்பாஷணையை சில நாட்கள் குறிக்கிறேன். பொறியில் அகப்பட்டும், எலி தப்பித்துப் போய் எங்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. புறா வளர்க்கிறேன். சிபி, அபி, மது, மைதிலி என்று பெயர்கள்.

ஐந்து முறை சபரி மலை போய் வந்தாகிவிட்டது. ஒரு முறை சபரிமலைக்குப் போகும்போது தங்களை எட்டிப் பார்த்துவிட்டு ஓடியதும், ஓர் இரவு உங்கள் பள்ளி மைதானத்தில் நிலாவொளியில் கும்மாளம் போட்டதும் கவனம் வரும்போது கொஞ்சம் புன்சிரிப்பு உண்டாகும். அப்படியும் வாழ்ந்து பார்க்கிற போக்கு நமக்கே அல்லாவிட்டால் வேறு யாருக்குப் பொருந்தும்? நமக்கே என்பது, நமக்குத் தொழில் கவிதை என்பதில் உள்ள நமக்கே.

நான் என் போக்கில் போய்க் கொண்டிருக்கிறேன். வாழ்ந்த காலம் லாபம் தான் என்று காட்டும் கட்டம் பின்னால் வருகிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கடிதத்தில் எத்தனையோ விஷயங்கள் எழுதப்பட்டிருப்பினும், இதன் மொத்த நோக்கமும் தங்களை விசாரிப்பதே; தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று அறியும் ஆவலே.

உறவினர் பற்றி எல்லாம் எழுதுங்கள். உணர்வன பற்றியெல்லாம் எழுதுங்கள். நம்மை அறிந்த அனைவர்க்கும் நலம் விசாரித்து நல்வாழ்த்து கூறுங்கள்.

தங்கள்,

பி.ச.குப்புசாமி.

—— 0 ——

Series Navigation