கடித இலக்கியம் – 41

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

வே.சபாநாயகம்(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் – 41

திருப்பத்தூர்.வ.ஆ.
19-3-90

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தண்டபாணியின் தந்தி உங்களுக்குக் கிடைத்து, அதன் மூலம் அந்த வாரம் JK வரவில்லை என்று அறிந்து கொண்டிருப்பீர்கள். இன்றுதான் அவருக்கு, இனிமேல் நீங்கள் என்றைக்கும் வரலாம் – வருகிற தேதியை ஊர்ஜிதப்படுத்துங்கள் என்று ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். நாளை அவரோடு போனிலும் பேசுவேன். தங்களுக்கும் தகவல் உரிய நேரத்தில் வரும். இந்த முறை நீங்கள் அவசியம் வர முயலுங்கள். தங்களுக்குப் பேரன் பிறந்ததற்கு, தாங்கள் எங்களுக்குத் தரும் treat ஆக இதைக் கருதுங்கள்.

– இடையில் எனக்கும் பல வேலைகள் உள்ளன. எங்கள் A.E.O வுடன் ஒர் இறுதி யுத்தத்துக்குத் தயாராகாவிட்டால் என்னைத் தாழ்வு மனப்பான்மை சூழ்ந்து விடும். ஆனாலும் அதை ஏப்ரல் மாதம் மூன்றாவது சனிக்கிழமை வரை ஒத்திவைக்க
முடியும். அதற்குள் , JK வுக்கு விடுத்த அழைப்பையும், தங்களைச் சந்திப்பதையும் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் தாங்கள் என்னுடைய இன்னொரு தகவலை எதிர்பாருங்கள்.

22 – 3 – 90

20ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு JK வோடு போனில் பேசினேன். அன்றுதான் அவருக்கு என் கடிதம் கிடைத்திருந்ததாகையால், நிதானமாக யோசனை செய்து தெரிவிப்பதாகக் கூறினார். அநேகமாக நான் உங்களுக்குப்
போன் மூலமாகத்தான் தகவல் தர முடியும் என்று நினைக்கிறேன். அவசியம் வருக. நிற்க, உங்களுக்கு நான் எழுதுகிற கடிதங்களில் ஒரு சுதந்திரத் தன்மையை உணர்கிறேன். மனக் கூச்சங்களிலிருந்து மட்டும் விடுபட்ட சுதந்திரம் அன்று இது. காலத் தின் தளைகளிலிருந்தும் விடுபட்ட சுதந்திரம் இது. ஓர் ஐந்து நிமிஷ நேரத்தின் எண்ண அலைகளை விடவும் (அதாவது குறைந்த பட்சம் ஓர் ‘அர்ஜெண்ட்’ டான கடிதம் எழுத ஆகும் நேரம்) அவகாசம் அதிகம் கிடைத்த – நாட்கணக்கிலும் வாரக்கணக்கிலும் கூட – எண்ணங்களின் சுதந்திரமான வெளியீடுகளாக உங்களுக்கு எழுதுகிற கடிதங்களைக் கருதுகிறேன். சுயதம்பட்டத்தின் குரல் ஒன்றுமட்டும் இதில் கேட்கக் கூடாது – அப்பொழுது சுதந்திரம் மதிப்பிழந்து போகிறது என்கிற அழுத்த மான புரியுணர்வு எனக்கு உண்டு.

என் கடிதங்கள் அதிக பட்சம், நான் எதையாவது, யாரையாவது அதிகமாகப் புகழ்கிறேன் என்கிற குறை உடையனவாக இருக்கக் கூடும். காணாத சத்தியத்தைக் கண்டவர்க்கு, அதைத் தொழுவதிலும் வழிபடுவதிலும் கட்டுப்பாடு எதற்கு? எனவே அந்தக் குற்றச்சாட்டை, நான் உணர்ந்தே ஏற்கிறேன்.

புகழ்கிறவர்கள் எல்லாம் மனதாரப் புகழ்கிறார்களோ? புகழ்ச்சிகள் எல்லாம் பொய்யையும் அறியாமையையும் கலக்காதவைதானோ? என் புகழுரைகளில் பொய்மையும் இல்லை; பிறரொடு ஒப்பிடுகையில் எனக்குப் பெரிய அறியாமையும் ஏதும் இல்லை. ஆனால் ஆர்வமும் ஆசையும் காதலும் அன்பும் தவிப்பும் அதிகம் இருக்கின் றன. அதனால் உண்டான ஆத்ம வேகமும் அதிகமாக இருக்கிறது. எனவே, உலகின் அளவுகோல்கள் என்னும் ஆகாயத்தைக் கடந்த அப்புறத்திலிருந்து நான் எழுதுகிறேன் என்று கருதுவீர்கள் என்று நம்புகிறேன்.

எனவே எனது கடித தாமதங்களையும் கந்தரகோளங்களையும் புரிந்துகொள் வீர்கள் என்றும் நம்புகிறேன்.

————————————————————————————————— 28 – 3 – 90

JK விடமிருந்து தகவல் வந்து விட்டது. 6-4-90 வெள்ளி இரவு 12.00மணிக்கு சென்னையிலிருந்து அவர் பஸ்ஸில் தோழர்கள் புடைசூழப் புறப்பட்டு, 7-3-90 சனிக் கிழமை அதிகாலை 5.30 மணிக்குத் திருப்பத்தூர் பஸ் ஸ்டேண்டில் வந்து இறங்கு
கிறார். அதற்குள் பட்டுக்கோட்டையிலிருந்தும் கோவையிலிருந்தும் ஈரோட்டிலிருந் தும் ஆரணியிலிருந்தும் தோழர்கள் திருப்பத்துர் வந்து சேர்கின்றனர்; தாங்களும்! திருப்பத்தூர் பஸ் ஸ்டேண்டிலிருந்து அப்படியே புறப்படுகிறோம். நான் முன்பு வசித்த நாகராஜம்பட்டி கிராமத்துக்கு நேர் கிழக்கே உள்ள குரும்பேரி என்னும் கிராமத்துக்கும் கிழக்கெ, ஜவ்வாது மலை அடிவாரத்தில் நண்பர் ஒருவரின் “கொல்லைக் கொட்டாய்’ ஒன்றும் களம் ஒன்றும் மாட்டுக் கொட்டகை ஒன்றும் காலியாக்கப் பட்டு, நாம் தங்குவதற்குத் தயாராக வைத்திருக்கும். தாங்கள் ஒரு புதிய காட்சியைக் காண்பீர்கள். மற்றவை குறித்து இப்போது நான் குறிப்பிடுவது நயமற்றதும்
பாங்கற்றதும் ஆகும்.

தாங்கள் இந்தமுறை அவசியம் வந்து விடுங்கள். இத்தகைய ஒரு காட்சியைக் காண ஏற்பாடு செய்ய அடுத்த வருஷம் எனக்கு வலிமையிருக்குமோ என அஞ்சுகிறேன். இது தங்களுக்கு, நாம் எல்லாம் கலந்து கொள்ளும் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையைக் கொண்ட, பிற சந்திப்புகளுக்கெல்லாம் புறம்பான, free ஆன ஒரு சந்திப்பாக, அனுபவமாக இருக்கும் என்கிற நம்பிக்கையினால், இவ்வழைப்பை எத்தனை முறை வற்புறுத்தி எழுதவும் விரும்புகிறேன்.

– இந்த வருகை, குறைந்த பட்சம் ஒரு நல்ல புத்தகத்தைப் படித்தது
போன்ற மனநிறைவையாவது அளிக்கும் என்று நம்புகிறேன்.

8-4-90 அன்று ஞாயிறு, பங்குனி உத்திரம். எங்கள் தெருவும், தெருவில் உள்ள தண்டபாணிசாமி கோயிலும் – பெரியப்பாவும் மு.வ வும் அந்தி வேளையில்
லாந்தர் விளக்கில் தமிழ் பயின்ற ஸ்தலம் – பங்குனி உத்திரத்தை முன்னிட்டுக்
கோலாகலமாய் இருக்கும்.

கலைமகளுக்குக் குறுநாவலை அனுப்பி விட்டீர்கள் என்று நம்புகிறேன்.

தாங்கள் இக்கடிதம் கிடைத்த உடனே ஒரு பதில் எழுதிப் போட்டு, தங்கள்
வருகை பற்றிய எங்கள் உத்தேசத் திட்டத்தை வகுத்துக் கொள்ள உதவுங்கள்.

அனைவர்க்கும் எங்கள் அன்பும் நன்றியும் கூறுங்கள்.

– தங்கள், பி.ச.குப்புசாமி.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்