கடிதம் -07-12-2004

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

பிறைநதிபுரத்தான்


ஒருவர் தேவதாசி முறைப்பற்றி எந்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது என்று எதிர்கேள்வி கேட்டிருந்தார். வேதங்களை மட்டும் இந்து மதம் அடிப்படையாக கொண்டிருந்தால் ஆதாரம் என்னவென்று சுட்டிக்காட்டி விடலாம் – ஆனால், சனாதான மதமாயிற்றே – குகையிலிருந்து மட்டும் ஆதாரங்களும் அறிவிப்பும் வரவேண்டிய அவசியமும் இல்லை – கட்டுப்பாடுமில்லை – அருள்வாக்குகள் கழிவறையிலிருந்து வரலாம் – உபன்யாசங்கள் ஜெயில் கம்பிகளுக்கு பின்னாலிருந்து வரலாம் –

சமூக எழுச்சியினால் ஏற்பட்ட மாற்றம் காரணமாக புனித நூல் போட்டவர்கள் மட்டும்தான் அருள்வாக்கு சொல்லலாம் என்ற ‘வேத-புராண- ஸ்மிருதி அறிவியல்களின் ‘ ஆதார அடிப்படையிலான (!) ‘ஏகபோக உரிமை ‘ ஓரளவு பறிக்கக்கப்பட்டு, ‘புனித நூல் ‘ அணிந்தவர்கள் மட்டுமல்ல, முதியவர்கள் – கன்னி கழியாதவர்கள் – பால்குடிக்கும் வாண்டுகள் கூட அருள்வாக்கு தரலாம் என்று ஒரளவுக்கு பரவலாக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் நடமாடும் தெய்வங்களாகவும்- அவதார புருஷர்களாகவும், அவர்களின் மொழிகள் ‘தெய்வக்குரல்களாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம் ‘ – சனாதன மதத்தில் இதெல்லாம் சகஜம். அதனால், பரந்த இந்து மதத்தின் எந்தெந்த கூறுகள் ‘கோவில் விபச்சாரத்தை ‘ ஊக்குவித்தது என்று கூறுவது கடினம். அப்படியே ஆதாரங்களோடு ‘பொளந்து கட்டினாலும் ‘ அதை எதிர்த்து, ‘வேதத்தில் அவ்வாறு கூறப்படவில்லை – புராணங்களில் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கலாம் – ஒரு வேளை ஸ்மிருதிகள் அதை கண்டிக்காவிட்டாலும் – நவீன நடமாடும் தெய்வங்கள் கூடாதென்று சொல்லியிருப்பதாக RSS பாணியிலே ‘நழுவிக்கொள்ளலாம் ‘. சனாதான மதத்தில் அதற்கான தற்காப்பு ஒட்டைகள் நிறைய இருக்கிறது. RSS காரர்களுக்கு ஓட்டைகள் மட்டும் அத்துப்படி – ஒளிந்துகொள்ள வசதியாக.

பேதம் பேசும் இந்து வேதங்கள், மற்றும் பிரம்ம புராணம், கருட புராணம், போன்ற புரானங்கள் தெளிவாக சொல்லிவிட்டது கனவனை இழந்த மனைவிகள் கனவனின் சிதையை எரிக்கும் கரிகட்டையாக வேண்டும் அல்லது உலக வாழ்வை துறந்து 1930 களில் வாரனாசியில் பிராமன விதவைகள் வேலைக்காரிகளாகவும், பிச்சைகாரிகளாகவும் மீதி ஆயுள்காலத்தை கழித்தனரே அவ்வாறு வாழ வேண்டும் என்று – இது உண்மை இல்லையாம்.

உயிர்வாழ ஆசைப்பட்டு கட்டாய சதியிலிருந்து தப்பித்து ஓட முயன்ற ‘ரூப் கன்வர்களை ‘ பிடித்து எரியும் நெருப்பில் தள்ளிவிட்டு ‘சதி மாதா கீ ஜே ‘ என்று துள்ளி கூச்சல் போட்ட கலாச்சார காவல் ‘கோமாளி ‘க்கு – கனவன் இறந்தாலும் விதவைகள் கண்ணியத்தோடு வாழவேண்டியவர்கள் என்பதை உணர்த்திய இஸ்லாம் கேலிக்கூத்தாக தெரிகிறது. நடைமுறைக்கு ஒவ்வாத – பெயரளவிற்கு மட்டும் கொள்கையை தராமல், சொன்னதை செயல்படுத்தி – 1500 ஆண்டுகளுக்கு முன்பே, விதவையை மணமுடித்து, வாழ்ந்து காட்டிய முகம்மது நபி (ஸல்) பற்றியும் – நபி (ஸல்) அவர்களின் மறைவிற்கு பின் அவர்களின் மணைவிகள் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதை கேலி பண்ணுகிறார் .

குதிரையை வெட்டி வீழ்த்தி அசுவமேத யாகம் நடத்தி – வெட்டி வீழ்த்தப்பட்ட குதிரையோடு பிராமனர்களின் வழிகாட்டுதலோடு ஓரிரவை கழித்த மன்னர் தசரதனின் ‘மனைவிகளில் ‘ ஒருவரான அன்னை கெளசல்யைக்கு பிறந்த இராம பகவான் (ஆதாரம்: வால்மீகி ராமாயணம்) – அயோத்தியில்தான் – அதுவும் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் அவதரித்தார் என்று கூறி – கர சேவை என்ற பெயரில் காலிகளால் இடித்து தள்ளப்பட்ட பள்ளிவாசல் வழக்கு பற்றி பேசும்போது ‘அறிவியல் மற்றும் மானுட ஆதாரங்களின் அடிப்படையிலான நீதி மன்ற தீர்ப்பு எங்களை கட்டுப்படுத்தாது – இராமர் அவதரித்த இடம் அயோத்திதான் என்பது பெரும்பான்மை மக்களின் மத நம்பிக்கை அடிப்படையிலானது ‘ என்று அடம்பிடிக்கின்ற கும்பலை சேர்ந்த ‘காவி ‘ கோமாளி, கள்ளத்தனமாக கைபர் போலன் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பற்றி சுட்டிக்காட்டும்போது மட்டும் அகழ்வாராய்ச்சிகளும் மானுட பரினாம அறிவியலும் கூறுகிற உண்மையை (!) அதாவது ‘தான் ஒண்ட வந்த பிடாரியல்ல ‘ என்பதற்கு பரினாம அறிவியல் பூர்வமான ஆதாரம் (!) இருப்பதாககதை விடுகிறார்.

அறிவியலுக்கும் RSSக்கும் ஏழாம் பொருத்தம்.

சப்பை கட்டுக்கு சானக்யத்தனம் என்று நாமகரணம் சூட்டி சங்பரிவாரின் சொத்தாக ஆக்கியவர்களுக்கு – பதில் – சப்பைகட்டு இரண்டுக்கும் வேறுபாடு தெரியவில்லை (புராணத்துக்கும் வரலாறுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்). சப்பைக்கட்டுக்கு சமீபகால உதாரணம்: மக்கள் (!) விரும்புவதாக ஜெயேந்திரரின் ஆசியோடு – ஜெயலலிதா மத சீர்திருத்தம் கொண்டு வந்தார் – அதை சங்பரிவாரின் எடுபிடிகள் அனைவரும் தொண்டைக்கிழிய கத்தி சப்பைக்கட்டு ‘மத ‘ ஆதாரங்களோடு வரவேற்றனர். ‘எதேச்சதிகாரா சீர்திருத்தங்களை ‘ எதிர்த்து சாமான்ய மக்கள் வாக்களித்ததும், வாயை மூடிக்கொண்டு வாபஸும் வாங்கினர். ஆதரவு சப்பை கட்டிய அதே எடுபிடிகள் வாபஸ் வாங்குவதற்கும் மெளனமாக சப்பைக்கட்டியது.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற ‘சங்க ‘ பஜனையெல்ல்லாம் சுத்த ‘ஹம்பக் ‘. ஒரே குற்றத்தை புரிந்த இருவரில் ஒருவனுக்கு ‘சிகைச்சேதம் ‘ மற்றவனுக்கு ‘சிரச்சேதம் ‘ என்கிற மனுவை பூசிக்கும் இவர்களை பொறுத்தவரை தண்டனையை-வெகுமதியையும் நிர்ணயிக்கும் இரண்டே இரண்டு தகுதிகள்: தோலும் (நிறம்) மற்றும் (புனித) நூலும்தான். திருவாளர் சொல்கிறார் தேசம் முழுவதும் உள்ள ஆறு-குளம்-கல்-மண்-மரம் செடி கொடி ஏன் மிருகங்கள் கூட புனிதத்தன்மை நிறைந்ததாம் – மக்களை ஏமாற்ற இப்படியெல்லாம் பஜனை பாடிக்கொண்டே – தேசத்தில் வாழும் ‘அவாள்கள் ‘ தவிர அனைவரும் புனிதமற்றவர்கள் என்று நடைமுறையில் காண்பிப்பார்கள்.

காந்தியை தன் இயக்கத்தை சார்ந்தவர்கள் கொலைசெய்யவில்லை என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புளுகிக்கொண்டேயிருக்கிறார்கள். இவர்களுக்கு, இந்தியாவை கூறுபோட்ட இரட்டை சகோதர்களில் ஒருவரான ஜின்னா பிரிவினைவாதி- பயங்கரவாதி – ஆனால் சவர்கார் மட்டும் வீரர் – தேச பக்தர். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ‘ஜின்னா ஒரு முஸ்லீம் சவர்கார் – சவர்கார் ஒரு ஹிந்து ஜின்னா ‘. இருவரும் இந்தியாவை துளைத்த இரட்டைக்குழல் துப்பாக்கி. ஆனால், சவர்க்கார் என்ற குழல், இந்தியாவை துளைத்ததோடு மட்டும் நில்லாமல் காந்தியின் உயிரையும் பறித்தது. நாதுராம் கோட்ஷேவே ‘கைத்தடியோடும் – காக்கி டவுசரோடும் ‘ உயிர்தெழுந்து வந்து அப்பாவியான நான் ‘சவர்காரின் ‘ தூண்டுதலினால்தான் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றேன் என்ற உண்மையை சொன்னால் கூட அதை நம்பாமல் புதிதாக வரலாறு திரிப்பார்கள்.

சங்பரிவாரத்தினர் இஸ்லாத்தை எதிரியாக கருத முக்கியமான காரணம்: இந்தியாவில் – வைதீக ஆதிக்கத்தை எதிர்த்த கபீர் – நானக் – துக்காராம் – சைதன்யர் – போன்ற கலக சீர்திருத்த காரர்களின் எழுச்சிக்கும் அதன் விளைவான சமூக விழிப்பிற்கும், இஸ்லாமிய முகலாயர்களின் இந்திய படையெடுப்பு ஏற்படுத்தியிருந்த சமூக பாதிப்புக்கள் முக்கியமான காரணமாக அமைந்திருந்தன. அப்பொழுது ஏற்பட்ட ஆறாத வடு – வலியின் காரணமாகத்தான் – இஸ்லாத்தையும் இந்திய முஸ்லிம்களையும் இந்துத்வவாதிகள் இன்னும் எதிர்க்கிறார்கள்.

வர்னாஷிரமத்தை அடிப்படையாக கொண்டு – ஆரியர்களின் கை வண்ணத்தில் உருவான ‘பாரத தர்மங்களோடு ‘ இஸ்லாமிய கொள்கைகள் ஒத்துப்போவதாக காண்பிக்க அல்லது உரையாட முடிவதற்கான புள்ளிகளை தேடியதாக – தேடுவதாக கூறுவது இஸ்லாத்தை ‘இந்துமதத்தின் ‘ ஒரு கிளையாக சித்தரித்து – காவி நிறம் பூசி – இந்துமயமாக்கி – இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று முத்திரை குத்தும் ‘வெட்டி ‘ முயற்சியாக நான் கருதுகிறேன்.

சூர்யாவின் கடிதத்துக்கு பதில்:

இந்தியாவில் இருக்கின்ற பள்ளிவாசல்கள் எங்களுடையது என்று இடித்துவிட்டு கோவில் கட்ட துடிக்கும் கொடியவர்கள் மத்தியில் – வஹாபி இயக்கத்தினரால் தர்காக்கள் அவமதிக்கப்படுவது பற்றி கவலைப்பட்டு – நொந்து – நூலாகி – மனம் வெந்து ‘மத நல்லினக்கத்தின் சின்னங்களான தர்ஹாக்கள் இன்று அவமதிக்கப்படுகின்றன ‘ என்று நன்பர் சூர்யா கடந்த வார திண்ணையில் அங்கலாய்த்திருந்தார்.

சாதி நல்லினக்கத்தின் சின்னங்களாக கோவில்கள் விளங்காமல் – ஒரு சாதியினர் பிற சாதியினரை உள்ளே நுழையவிடாமல் – பிற்படுத்தப்பட்ட சாதியினர் உயர் சாதியினருடனும், தாழ்த்தப்பட்ட சாதியினர் – பிற்படுத்தப்பட்ட சாதியினருடனும் – போராடி – தர்னா செய்து சாமி தரிசனம் செய்வதையும் தேர் வடம் பிடித்து இழுப்பதையும் – திருப்பதி வைனவ கோவிலை கைப்பற்ற காஞ்சி பெரியவர் முயற்சிப்பதாக வைனவ பெரியார்கள் WARNING கொடுத்ததையும் – மகாமகத்தின் போது நீராடுவதில் காஞ்சி பெரியவருக்கும் – ஆதினத்துக்கும் உரிமைப்பிரச்சினை ஏற்பட்டதை யெல்லாம் கண்டு கலங்கிய சூர்யா ‘இந்து மதத்தில் சாதி நல்லிணக்கம் இல்லாமல் போய்விட்டதே ‘ என்று எழுதியிருக்கவெண்டும். அதை விட்டுவிட்டு, வகாபி இயக்கத்தை தாக்கியிருக்கிறார்.

இந்து மதத்தின் அனைத்து சாதியினரும் பாகுபாடு இன்றி தர்காவில் அனுமதிக்கப்படுவது சூர்யாவுக்கு ஆச்சரியமாக தெரியலாம் – ஆனால் அந்த வரவேற்பின் பின்னனியில் உள்ள காசு பறிக்கும் சூட்சுமம் – பாத்திஹா – ஸ்பெஷல் பாத்திஹா (பூஜை – ஸ்பெஷல் பூஜையின் இஸ்லாமிய அவதாரம்) என்ற பெயரில் அங்கே நடக்கும் தில்லு முல்லுகள் – கோவில்களில் நடக்கும் தில்லு முல்லுகளுக்கு எந்த விதத்திலும் சற்றும் குறைந்ததில்லை. இஸ்லாத்தில் தர்கா மற்றும் சமாதிகள் வணக்கத்தலமாக பயன்படுத்த அனுமதியில்லை. தமிழக தர்காக்கள் எல்லாம் ‘வணக்க தலம் ‘ என்ற பெயரில் போலியான முக்தியும் – மோட்சமும் விற்கப்படும் வியாபார தலங்களாகத்தான் காணப்படுகிறது.

தர்காவில் உள்ள பூசாரி குல்லா அணிந்திருப்பார் (குல்லா- முண்டாசு மற்றும் தாடிகளின் அளவிற்கு ஏற்ப அர்ச்சனைக்கான தட்சினை fees அதிகரிக்கும்). கோவில்களில் உள்ள உயர்சாதி பூசாரிகள் தாழ்த்தப்பட்ட பக்தர்களை மட்டும் – தீட்டு, அபச்சாரம் என்று ஒதுக்கி வைப்பதுபோல் (காணிக்கையை-தட்சினையை அல்ல) அல்லாமல் – முஸ்லிம் பூசாரி பக்தர்களை உரசி அமர்வார் – இந்து-முஸ்லிம் பாகுபாடு இல்லாமல் அனைத்து ‘அறிவு சூன்ய ‘ பக்தகோடிகளை தொடுவார் – இதை மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்பவர்களை என்னெவென்று அழைப்பது என்றே தெரியவில்லை.

கந்தூரி – சந்தனக்கூடு போன்ற வைபவங்களில் இந்துக்கள் கலந்துக்கொள்ளக்கூடாது என்று நிச்சயாமாக எந்த தர்காவிலும் சொல்லவும் இல்லை – சொல்லவும் மாட்டார்கள். வருமானம் தருகிற எவரையும் வரவேண்டாம் என்று பூசாரியோ அல்லது ஹஜ்ரத்தோ அல்லது தர்கா நிர்வாகமோ தடுக்காது. அதனால், இந்துக்கள் தடுக்கப்படுகிறார்கள் விரட்டப்படுகிறார்கள் என்பதெல்லாம் வடிகட்டிய (RSSத்தனமான) பொய். வஹ்ஹாபி இயக்கம் ஏற்படுத்தியிருக்கும் விழிப்புணர்வால், தர்காக்களில் முஸ்லிம்களின் கூட்டம் குறைய ஆரம்பித்த இக்காலகட்டத்தில் – தர்கா நிர்வாகத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஹிந்து பக்தர்கள்தான் (!).

சமீபகாலமாக வஹ்ஹாபிகளின் வசைமொழி தாங்கியே அனைத்து தர்காக்களும் இருப்பதை கண்டு துடிக்கும் (!) நீங்கள் ‘இந்துக்களே நாகூருக்கு போகாதே ‘ என்ற இசைமொழிகள் இந்து முன்னனியினரால் சந்து-பொந்துகளில் எழுதப்பட்டிருப்பதையும் கண்டு வீறுகொண்டு துடித்து தடுத்திருத்திருப்பீர்கள் என்றே நிணைக்கிறேன்.

இறையில்லமான பள்ளிவாசலில் சடங்கு – மெளலுது – பாத்திஹா என்று சடங்குகள் நடத்தி சாமான்யனை மொட்டையடித்து தொந்தி வளர்க்கும், எந்தக்காரியமும் நடைபெற அனுமதியில்லாதால் ‘சட்டை பாக்கெட் ‘ துவண்டுபோன சுயநலவாத இஸ்லாமிய புரோகிதர்களின் வருமானம் பெருக்கும் ‘பிஸினஸ்களில் ‘ ஒன்றுதான் தான் சமாதி வழிபாடும் தர்கா மாயையும்.

குணங்குடியார், உமறுப்புலவர் போன்ற இஸ்லாமிய ஞானிகள் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஞானிகள் என்பதற்கு தங்களின் வரையறை என்ன என்று தெரியவில்லை. ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு ‘ என்ற முதுமொழி அறிந்திருப்பீர்கள். அளவுக்கும் தகுதிக்கும் அதிகமாக – அருகதையற்றவர்களையெல்லாம் புகழும் தாராள மனப்பாங்குதான் வளர்ந்திருக்கிறது.

‘அவர்கள் மதத்தில் அதைவிட மூடத்தனமும், சாதி வெறியும், இனவெறியும் உள்ளதைப்பற்றி பேசினால் ஆவேசப்பட்டு இஸ்லாமிய புனிதம் பற்றி பேசுவார்கள் ‘ – மூடத்தனம் என்று நீங்கள் குறிப்பிட்ட தர்கா சமாதி வழிபாடுகளை, அங்கே ‘புனிதமுள்ளதாகவும் சக்தியுள்ளதாகவும் ‘ கூறி விற்கப்படும் மந்திரித்த நூல்கள், ஓலைகள், தாயத்துகள், தகடுகளின் விற்பனையை விமர்சித்து மக்களிடையே தெளிவை ஏற்படுத்திய வஹ்ஹாபி இயக்கத்தை ‘லோகஸ்டுகள் ‘ என்று அழைத்தவரின் கட்டுரை உங்களுக்கு அருமையானதாக தெரிகிறது.

ஜோதிடத்தின் இஸ்லாமிய கண்டுபிடிப்பான ‘பால் கிதாபு ‘, குறுகிய காலத்தில் செல்வந்தராகா ‘பூரியான் பாத்திஹா ‘ (லட்சுமி பூஜை போல), பீடைகளை ஒழிப்பதற்காக ‘ஒடுக்கத்தி புதன் ‘ போன்ற சடங்குகளின் பெயரில் புரோகிதர்களால் மக்கள் மொட்டையடிக்கப்படுவதை தடுத்த வஹ்ஹாபி இயக்கம்தான் உங்களை போன்றவர்களுக்கு தீவிரவாத இயக்கமாக தெரிகிறது.

இஸ்லாத்திற்கு ‘பச்சை ‘ நிறம் என்ற வர்ணம்பூசப்பட்டு – ‘பிறை ‘யை இஸ்லாமிய சின்னமாக்கியதில் சூஃபிகளும் – தர்காவாதிகளும் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றனர். காவி ஆடையணிந்த இந்து துறவிகள் -ரிஷிகள் இவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டிக்கொள்வதற்காக – ஃசூபிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பச்சை நிறம்தான் இஸ்லாமிய நிறம் என்று நம்பிக்கை கொண்ட ‘காவி கோமாளிகளுக்கு ‘ பச்சை நிறத்தை கண்டாலே அலர்ஜி. நிறம், பிறை போன்ற குறியீடுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதமான சம்பந்தமேயில்லை.

சாதி வெறி- இனவெறிக்கு ஆதரவாக குர் ஆனிலோ அல்லது நபிமொழியில் (ஹதீஸ்) எந்த ஆதாரமும் கிடையாது. இஸ்லாமிய அடிப்படைக்கு முரனான – முஸ்லிம் பெயர்தாங்கிய சாதி – இன வெறியர்களும் குழப்பவாதிகளும் கலகக்காரர்களும், வஹ்ஹாபி இயக்கத்தின் மூலம் தெளிவு பெற்று இறைவேதத்தையும் – நபிமொழியையும் மட்டும் பின்பற்றி உண்மையான இஸ்லாமியர்களாக வாழ ஆரம்பித்துவிட்டனர்.

நிறைவாக, இஸ்லாம் புனிதமானது என்று முஸ்லிம்கள் கருதுகிறார்களோ இல்லையோ; ஆனால் முஸ்லிம்கள் அனைவரும் சமமானவர்கள் என்று கூறிக்கொள்ள முடியும். அது போல, இந்துக்கள் அனைவரும் தங்களை சமமானவர்கள் என்று கூறிக்கொள்ள முடியுமா ? நானும் இந்துதான் என்று கூறி கிருபா நிதியோ – பங்காரு லட்சுமனனோ ‘பூநூல் ‘ அணிந்துக்கொள்ள முடியுமா ? சங் பரிவாரம் விடுமா ? சற்று சிந்தித்து பாருங்கள்.

பிறைநதிபுரத்தான்

say_tn@hotmail.com

(நீக்கங்கள் உண்டு)

Series Navigation

பிறைநதிபுரத்தான்

பிறைநதிபுரத்தான்