கடிதம் டிசம்பர் 2, 1004 – இந்து ஒற்றுமை – சில எண்ணங்கள்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

பாலா


இந்தியாவின் பாரம்பரியமிக்க ஒரு இந்து ஸ்தாபனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு இந்துக்களிடையே அதிக எதிர்ப்பு இல்லாததற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதுவும், நீதிமன்றத்தில் அரசு வக்கீல் மிகச் சாதாரணமாக ஒரு மடாதிபதியை ‘undeserving criminal ‘ என்றழைப்பதும், அவர் போலீஸ் காவலுக்கு அனுப்பப்படுவதும், சலுகைகள் மறுக்கப்பட்டு ஒரு சாதாரண குற்றவாளியைப் போல் அவர் நடத்தப்படுவதும், அவற்றுக்கு எந்த எதிர்குரலும் கேட்காததும், யாருமே எதிர்பார்க்காதது தான்!

இதற்கான பல காரணங்களில் முக்கியமானது, சங்கர மடத்தை, குறுகிய நோக்குடைய, ஒரு பார்ப்பனீயத்தின் சின்னமாகவே பலர் பார்க்கிறார்கள். இதில் உண்மையும் இருக்கிறது. இத்தனைக்கும் ஜெயேந்திரர், மற்ற மடாதிபதிகள் போல் அல்லாமல், சமூக மற்றும் மக்கள் நலத் திட்டங்களை சங்கர மடம் மூலம் செயல்படுத்தவும், தலித்துக்களுக்கு ஆதரவாக பேசவும், நடக்கவும் ஓரளவு முயன்றார் எனக் கூறலாம். இருப்பினும், இந்துக்களில் அனைத்து சாராரையும் சரிசமமாகக் கருதி, அவர்களை ஒன்றிணைத்து, இந்து மதத்தை வலுப்படுத்த மடமும், அதன் மடாதிபதிகளும் தவறி விட்டதன் விளைவே, ஜெயேந்திரர் கைதுக்குப் பின் இந்துக்களிடையே நிலவும் ஓர் ஆழ்ந்த மெளனமும், அனுதாபமின்மையும்.

இந்துக்களுக்கு எதிரானவர்கள், தமிழ்நாட்டில் இந்துக்களிடையே ஒற்றுமை குறைவு என்பதைத் மிகத் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்! இந்துக்களிடையே பிராந்தியம், மொழி, இனம், குலம் என்ற வகையில் பல வேறுபாடுகள் பல காலமாகவே (வளர்க்கப்பட்டும்!) நிலவியும் வருகிறது. இதில், மதச்சார்பற்ற (என்று கூறிக்கொள்ளும்!) அரசியல் கட்சிகள் குளிர் காய்கின்றன. இந்துக்கள் பொதுவாக ஒற்றுமையாக இருந்து செயல்படுவது, வினாயகர் ஊர்வலங்களிலும், கோயில் குடமுழுக்கு விழாக்களிலும் தான்! தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் இயல்பாக இந்துவாக இருக்கும் பலர், வெளியே தங்களை மதச்சார்பற்றவராகக் காட்டிக் கொள்வதில் அதிக ஆர்வமாக உள்ளது ஏன் என்பது விளங்கவில்லை!

இந்துக்களின் கட்சி என்றுணரப்படும் பிஜேபி-யில் கூட, கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்களில், பார்ப்பனர் அல்லாத இந்துக்களும், தலித்துக்களும் மிகக் குறைவே. இந்நிலை மாறி, அவர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்படுவது தான், இந்துக்களிடையே ஒற்றுமை தழைக்க வழி வகுக்கும். இக்கால கட்டத்தில், நம் நாட்டிற்கு மிக அவசியமானதும் கூட!!!

என்றென்றும் அன்புடன்,

பாலா

—-

balaji_ammu@yahoo.com

Series Navigation