கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

வ.ந.கிரிதரன்


கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்’களில் சாருநிவேதிதாபற்றி வெளிவந்த எணணங்கள் எனக்கு ஆச்சரியத்தினை அளித்தன. இன்றைய தமிழிலக்கியச் சூழலில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்களென அவர் ஜெயமோகனுடன் சாருவைச் சேர்த்திருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையில் பரந்துபட்ட தமிழ் இலக்கிய உலகை இவ்விதம் தமிழ்ச் சினிமா பாணியில் குறுக்குவது அல்லது பொதுமைப்படுத்துவது நவீனத் தமிழ் இலக்கிய உலகுக்கு வளம் சேர்க்கும் படைப்பாளிகளின் பங்களிப்பினைக் கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடுமெனக் கருதுகின்றேன். இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் ஜெயமோகனும் முக்கியமானவர்களில் ஒருவரே. இன்னுமொரு எழுத்தாளரான ஆபிதீனின் படைப்புகளை இலக்கியத் திருட்டுச் செய்த ஒருவரை, அது பற்றி இன்னும் வாயே திறக்காமலிருக்குமொருவரை இன்றையத் தமிழிலக்கியத் தேரை எடுத்துச் செல்லுமொருவராக என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. மேலும் தமிழ் இலக்கிய உலகுக்கு நாவல், சிறுகதை, குறுநாவல், விமரிசனமென பலம் சேர்த்த ஜெயமோகன் போன்ற ஒருவருடன் சாருவை என்னால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.

நேசகுமாரே சாருவின் எழுத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது இவ்விதம் சொல்கின்றார்: ‘ஆனால், சாரு நிவேதிதாவின் எழுத்து அப்படியல்ல. எழுத்து ஒன்றரைநிமிடம்தான் நினைவில் நிற்கும். ஆனால், சாருநிவேதிதா நம்முள்ளே தங்கிவிடுவார்’. ஒன்றரை நிமிடமே நிற்கக் கூடிய எழுத்தினைப் படைக்குமொருவரை எவ்விதம் நேசகுமார் ‘இன்றைய தமிழிலக்கியத் தேரை இழுத்துச் செல்லும் பெரும் சக்கரங்களில்’ ஒன்றாக இனம் காணுகின்றார்? இதன் மூலம் நேசகுமார் சாருநிவேதிதாவை அவரது இலக்கியப் படைப்பினூடு அல்லாமல் அவரது தனிப்பட்ட ஆளுமையின் மூலமே விரும்புவதாகத் தெரிகிறது. சாருவின் இன்னுமொரு விசிறியாக நண்பரிருக்கிறாரா? சாருவின் நிலைத்து நிற்கக் கூடிய படைப்புகளேதாவதிருப்பின் அவரை இன்றைய தமிழ் இலக்கிய உலகின் தூண்களில் ஒருவராகக் கருத முடியும். நண்பர் நேசகுமார் அவர்கள் சாருவின் படைப்புகளினூடு அணுகி இவ்விதம் தன் கருத்துகளை முன் வைத்திருந்தாரென்றால் அதனையேற்றுக் கொள்ள முடியலாம்.

மேலும் மேற்படி கட்டுரையில் ‘சாரு பற்றி குற்றச்சாட்டுகள் நிறைய உண்டு. தம்மூர் முஸ்லிம் அன்பர் ஒருவர் தமது சமுதாயத்தை மையமாக வைத்து எழுதியிருந்த கதையை தம் பெயரில் அனுப்பிவிட்டார் என்று ஒரு பெரும் படையே பிளாக்கியரிசம், அப்பட்ட காப்பி, நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் என்றெல்லாம் நெடுநாளாக அவருக்கு எதிராக ஒரு பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்து செய்து வருகிறது.’ என்று நேசகுமார் கூறுவது இன்னும் ஆச்சரியத்தையே அளிக்கிறது. மேற்படி கூற்றானது சாருவின் மேல் ஒரு கூட்டமே பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்துப் பிரச்சாரம் செய்து வருவது போன்றதொரு தோற்றத்தை வாசகர் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. முதலில் சாருநிவேதிதா குமுதத்தில் ஆபிதீனின் கதையொன்றினை மையமகாக வைத்து எழுதிய ‘கொடிமரக்கப்பல்’ இடையில் நிறுத்தப்பட்ட விடயம் எல்லாருமறிந்த விடயம்தான். இது பற்றிய எழுத்தாளர் நாகூர் ரூமியின் தமிழோவியக் கட்டுரையின் சில பகுதிகளை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகவிருக்கும். அதிலவர் பின்வருமாறு குறிப்பிடுவார்:

‘சாரு நிவேதிதா பற்றி இதுவரை நான்தான் எழுதவில்லை. அதுவும் ஒரு மரியாதை கருதித்தான். ஆனால் இதற்கு மேல் மௌனம் காப்பது என் நண்பனும் ஒரு நல்ல படைப்பாளியுமாகிய ஆபிதீனுக்கு செய்யும் துரோகமாகிவிடலாம் என்று தோன்றுவதால், எனக்குத் தெரிந்தவற்றில் சிலதையாவது எனது வலையில் பதிவு செய்துவிடுதல் நல்லது என்று நினைக்கிறேன்……ஆபிதீன் பல திறமைகள் கொண்டவர். நன்றாக வரைவார். பார்ப்பவர்களையெல்லாம் அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்குள் தத்ரூபமாக வரைந்துவிடுவார். அவரது கையெழுத்து, டி.எஸ்.ஸி.யு. இணைமதி எழுத்துருவில் ஐந்து புள்ளிகளில் உள்ளிட்டு எடுத்த ‘ப்ரிண்ட் அவுட்’ மாதிரி இருக்கும். நன்றாகப் பாடுவார். வளமான குரல். அற்புதமாக எழுதுவார். ஆனால் அவரின் இந்த எந்த திறமையின் மீதும் அவருக்கு நம்பிக்கையோ, வளர்க்க வேண்டுமென்ற முனைப்போ கிடையாது. (இப்போ கொஞ்ச காலமாகத்தான் எழுத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.) ஆனாலும் அவர் டைரி டைரியாக பொடி எழுத்தில் நிறைய எழுதி வைத்திருந்தார். எனக்குக்கூட அது அவ்வளவு விரிவாகத் தெரியாது. அந்த டைரிகளையெல்லாம் அவர் சாருவிடம் கொடுத்து ‘என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். சாரு ரொம்ப நேர்மையாக அதில் ஒன்றைப் படியெடுத்து, நாவலாகக் கொண்டுவரலாம் என்று கடும் முயற்சி செய்திருக்கிறார். (இதைப்பற்றியெல்லாம் விரிவாக சமீபத்தில் வெளிவந்த ஆபிதீனின் இடம் சிறுகதைத் தொகுப்பிலும் ஆபிதீனின் வலைத்தளத்திலும் காணலாம்.)…. திடீரென்று இந்தியா டுடேயில் “ச·பர்” என்று ஒரு சிறுகதை சாரு பெயரில் வெளியானது. அதைப் படித்தவுடன் நான் அதிர்ந்தேன். காரணம் அது ஆபிதீனின் கதை. அந்தக் கதைக்கு அடிக்குறிப்புகள் கொடுத்தவனே நான்தான்! அந்தக் கதையை இலக்கியச் சிந்தனைக்கான சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுத்து இரா.முருகன் பரிசு வேறு வழங்கியிருந்தார்! அதைத் தொடர்ந்து குமுதத்தில் “தஸ்தகீர் : நெய்தல் நிலக் குறிப்புகள்” என்ற பெயரில் ஒரு குறுநாவல் வெளியானது. சாரு பெயரில். அது ஆபிதீன் கொடுத்த டைரியில் இருந்த ஆபிதீனுடைய சொந்த அனுபவத்தின் ஒரு பகுதி! ஆபிதீனுக்கே கதை வெளி வந்தபிறகுதான் இது தெரிந்தது. அதுவும் ஊர்க்காரர்கள் சொல்லி! ஒரு வார்த்தை, இப்படிச் செய்யப் போவதாக சாரு சொல்லியிருந்தால் ஆபிதீன் நிச்சயம் மௌனம் காத்திருப்பார். நட்பு அப்படி. ஆனால் சாரு அப்படிச் செய்யவில்லை. அதைவிட மோசம் என்னவெனில், வருத்தமுற்று ஆபிதீன் எழுதிய எந்த கடிதத்துக்கும் பதிலும் போடவில்லை. குமுதத்துக்கு நானும், கவிஞர் ஜ·பருல்லாவும் ஆபிதீனும் கடிதம் எழுதினோம். பயனில்லை. …… இரண்டு பேரின் பெயர்களையும் போட்டுத்தான் சாரு கதையை முதலில் போட்டிக்கு குமுதத்துக்கு அனுப்பினாராம். ஆனால் ஒருவர் பெயர் மட்டும்தான் இருக்கலாம் என்று குமுதம் சொன்னதால், பணக்கஷ்டம் அப்போது கடுமையாக இருந்ததால், தன்னுடைய பெயரில் அதை வெளியிட்டாராம். பணம்தான் குறிக்கோள் என்றால், ஆபிதீன் பெயரிலேயே அதைப் பிரசுரித்து விட்டு, அதற்கான பணத்தை மட்டும் அவர் பெற்றிருக்கலாமே என்று என் மனதில் தோன்றிய கேள்வியை நான் அப்போது அவரிடம் கேட்கவில்லை….’

மேற்படி சாருவின் இலக்கியத் திருட்டு பற்றி இன்றைய தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களெல்லாரும் மெளனமாகவிருந்ததன் மூலம், சாருவின் மெளனத்தைக் போதுமான அளவில் கண்டிக்கத் தவறியதன் மூலம், ஓரளவுக்குச் சாருவின் திருட்டுக்கு ஒத்தாசையாகவிருந்து விட்டார்களென்றே நான் கருதுகின்றேன். அத்துடன் சக எழுத்தாளருவருக்கு உரியமுரையில் தரவேண்டிய ஆதரவுக் கரங்களை நீட்டவில்லையென்றும் கருதுகின்றேன். ஆபிதீனும் இந்த விடயத்தில் காட்டவேண்டிய நியாயமான கேள்விக்குரலைப் போதிய அளவுககுக் காட்டவில்லையென்றும் மேலும் நான் கருதுகின்றேன். பணத்திற்காக சாரு இவ்விதம் செய்திருந்தால் ஆபிதின் அவர்கள் இவ்விடயத்தில் நீதிமன்றம் வரையில் சென்று இலக்கியத் திருட்டுக்காக நியாயமான நட்ட ஈட்டினைக் கோரியிருப்பதன் மூலம் சாரு தன் தவறினையுணர்ந்து மன்னிப்புக் கேட்க வைத்திருக்க முடியம். ஏன் செய்யவில்லையென்று விளங்கவில்லை?

மேற்படி கட்டுரையின் முடிவில் நேசகுமார் ‘இந்தக் குற்றச்சாட்டுகளெல்லாம் உண்மையாயிருந்தாலும் சாருவின் முக்கியத்துவம் குறையப்போவதில்லை. இலக்கிய உலகின் சுழற்சியில், வளர்ச்சியில் – இதுவும் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வென்றே நினைக்கின்றேன். இந்த சர்ச்சைகளும் தமிழிலக்கிய வளர்ச்சியின் சரித்திரம் எதிர்காலத்தில் எழுதப் படும்போது முக்கிய இடம்பிடிக்கும்’ என்று கூறுவார். ‘இந்தக் குற்றச்சாட்டுகளெல்லாம் உண்மையாயிருந்தாலும்..’ என்று எழுதுவதன் மூலம் நேசகுமாருக்கு இது விடயத்தில் சந்தேகமிருப்பதாகத் தெரிகிறது. ஆபிதின், நாகூர் ரூமி, சாருநிவேதிதாவின் முன்னாள் மனைவியான அமரந்தா போன்றோரெல்லாம் இதுவரையில் ஆதாரங்களுடன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரையில் சாருநிவேதிதா தன் பக்கத்தில் நியாயமிருந்தால் ஏன் பதிலளிக்கவில்லை. அத்தகையதொரு பதில் வரும்வரையில் இந்தப் பிரச்சினையும் அவ்வப்போது தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து கொண்டேயிருக்கும். சாருவின் மீதான களங்கமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதனை நியாயப்படுத்த முனைந்தால் எதிர்காலத்தில் எழுத்துத் திறமை மிகுந்த, படைப்புத் திறமை குறைந்தவர்களெல்லாம் ஏனைய படைப்பாளிகளின் படைப்புகளைத் திருடி எழுதும் சூழல் பெருகிவிடும். அதுமட்டுமல்ல உண்மையான படைப்பாளியொருவரின் உழைப்பினை நாம் உதாசீனம் செய்தவர்களாகவுமிருந்து விடுவோம். இந்த விடயத்தில் சாருநிவேதிதா நடந்தவற்றைத் தெளிவாக விளக்கி, தவறுகள் நடந்திருந்தால் அவற்றிற்கான நியாயமான பொறுப்பினையேற்று, தன் சுயபடைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளிலொருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். இதனையவர் செய்வாரென எதிர்பார்ப்போம்.

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்