ஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

மோனிகா


‘The essence of sculpture is for me the perception of space, the continuum of our existence. ‘ – Isamu Noguchi

நியூயார்க்கின் விட்னி மியூஸியத்தின் நான்காவது மாடி நுழைந்த உடனேயே நம்மை ஒரு சிற்பக்காட்டிற்குள் இழுத்துச் செல்கிறது. இந்த காடு பல வருட வரலாற்றை பிரதிபலிக்கும் பிம்பம். இங்கு மரங்கள்போல் நடப்பட்டிருக்கும் சிற்பங்கள் வரலாற்றின் முக்கியமான ஒரு நூற்றாண்டை வாழ்ந்து முடித்த கலைஞனால் செதுக்கப்பட்டவை. 1904 முதல் 1988 வரை வாழ்ந்த இஸாமு நகூச்சியின் வாழ்க்கையில் இரண்டு உலகப் போர்கள், ஜப்பானிய அமெரிக்க கலாச்சாரத் தாக்கம், அமெரிக்காவின் தென் மாவட்டங்களில் நடந்த இனக்கலவரங்கள் என எண்ணிலங்காத சோதனைக் காலங்கள் அடக்கம்.

1904ம் ஆண்டு நவம்பர் பதினேழாவது நாள் (நான் இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்நாளுக்கு நூறாண்டுகளுக்கு முன்பு!) லியோன் கில்மர் என்ற அமெரிக்க எழுத்தாளருக்கும் யோனேஜிரோ நகூச்சி என்னும் ஜப்பானிய கவிஞருக்கும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரத்தில் பிறந்தவர் இஸாமு. இவரது பெற்றோர் திருமணமாகி சில நாட்களுக்கெல்லாம் பிரிந்துவிடவே மகனை ஜப்பானிலிருந்து நியூயார்க்கிற்கு அனுப்பிவிட்டார் கில்மர். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கர் என்ற அடையாளம் மகனுக்கு பெருமையைத்தரக்கூடும் என்பது அவரது அபிப்பிராயம். முதலில் தாயாரின் பெயரை தன் பெயருடன் கொண்டிருந்த இஸாமு பிறகு தந்தையாரின் பெயரை தன் பெயருடன் சேர்த்துக் கொண்டார். நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கத் தொடங்கிய இஸாமுவை அவரது தாயார் மாலை வேளைகளில் லியனார்டோ டாவின்ஸி கலைப் பள்ளியில் சிற்பம் கற்றுக் கொள்ளுமாறு தூண்டினார். அதன் பிறகு சிற்பக் கலையின்பால் ஈடுபாடு கொண்டு தனது மருத்துவப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தனது சிற்பக்கூடத்தை நிர்மாணித்துக் கொண்டார் இஸாமு.

1927ம் ஆண்டு குகன் ஹெயிம் நிதியைப் பெற்ற இஸாமு பாரிஸுக்குப் பயணமானதுடன் அங்கு பணி புரிந்து கொண்டிருந்த ப்ராங்க்யூஸியுடன் ஆறு மாதங்களுக்கு காலைநேரங்களில் மூன்றிலிருந்து ஆறுமணிநேரம் உதவியாளராகப் பணியாற்றினார். மாலைகளில் ஸ்டுவார்ட் டேவிஸ், அலெக்ஸாண்டர் கால்டர் போன்றவர்களுடன் சேர்ந்து பழகியும் அகாதமி கலரோஸியில் ஓவியங்கள் வரைந்தும் வந்தார்.

Paris Abstraction, c.1928, black & white gouache on newsprint>

1930களில் மெருகேறிய இஸாமுவின் சிற்பக்கலை அதுவரை செல்வந்தர்களின் உருவங்களை செதுக்கியதிலிருந்து மாறுபட்டு அக் காலகட்டத்தை சார்ந்த ஒரு சமூக அக்கறையோடு செயல்படத்துவங்கியது. 1933ல் அவர் உருவாக்கிய “விளையாட்டு மலை (Play mountain)” என்கிற சிற்பத்துக்கான கச்சாப் பொருளாக பூமியையே பயன்படுத்திக் கொண்டார்.. அது அப்போதை நியூயார்க் பூங்கா கலை நியமிப்புத்துறையால் புறக்கணிக்கப்பட்டு பிறகு பத்து வருடங்களுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1930ல் மார்த்தா கிரஹாமினுடைய நாட்டியத்திற்கு மேடை நிர்மாணம் செய்து கொடுத்தார். 1941ம் ஆண்டு பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பிறகு இஸாமு தனது நண்பரும் ஓவியரும் ஆன அர்ஷைல் கார்க்கியுடன் சேர்ந்து கொண்டு காரில் கலிபோர்னியாவிற்குப் பயணமானார்.

Remembrance, 1944, mahogany

Study model of stage set for Martha Graham ‘s Night Journey, 1947. Photo by Rudolph Burckhardt

“நினைவுகள்” எனப்படும் இந்த சிற்பம் இஸாமுவின் உயிர் புறத்தோற்ற (biomorphic) சிற்பங்களுள் ஒன்றாகும். 1927-28 ஆண்டுகளில் சர்ரியலிஸ்டுகளின் பாதிப்பைப் பெற்ற இஸாமு ப்ராங்கியூஸியின் அரூபச் சிற்பங்களின்பால் ஈர்க்கப்பட்டும் இருந்தமையால் இவற்றின் ஒன்று கூடிய உருவாக்கமாக இத்தகைய பின்னிப் பிணையும் சிற்பங்களை உருவாக்கினார். தான் மனதில் வரித்துக் கொண்ட ஒருவத்தை முதலில் ஒரு தாளில் வரைந்து பார்த்துக் கொண்ட பின்னர் அதன் சிறியதொரு மாதிரி(model)யை அட்டைகள் கொண்டு செய்து பார்ப்பார். அதன் பிறகு மரம், அலுமினியம், வெங்கலம், கருங்கல் எதாவது ஒன்றில் அதைச் செதுக்கி இவ்வுருவத்தை உருவாக்குவது அவரது மரபு. இவை தனித்தனி வடிவங்களின் இணைப்புகளாகும். ஆனாலும் எதாவது இணைப்பானை (பசை, ஆணி, கயிறு போன்றவை) பயன்படுத்தி இவற்றை ஒட்டுவதில் இஸாமுவுக்கு உடன்பாடு இல்லை. பதிலாக அவற்றினுள்ளேயே ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ளும் பதிவுகளை ஏற்படுத்தினார் அவர். இந்த முறை நியூயார்க்கில் பெறும் வரவேற்பை பெற்றது. மேற்கண்ட சிற்பத்தை உற்று நோக்கினால் உங்களுக்கு டாலியின் வழிந்தோடுகின்ற நேரம் நினைவுக்கு வரலாம். இஸாமுவின் அணைத்து சிற்பங்களிலும் நிற்காமல் ஓடுகின்ற ஒரு திரவ நிலைப் பொருளாக ஆனால் முழுமையாக உருவகிக்கப்பட்ட ஒரு பிம்பம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இது கால்டரின் அசையும் சிற்பங்களைப் போன்றதொரு பிரம்மைக்கு நம்மை கொண்டு செல்கிறது. பிற்காலத்தில் தனது நாற்காலி, மேசை வடிவமைப்புக்கும் இத்தகைய உயிர் புறத் தோற்ற உருவங்களை பயன்படுத்திக் கொண்டார் இஸாமு.

Table for A. Conger Goodyear, 1939, rosewood.

1927ல் இஸாமுவுக்கு பொறியியலாளரும், கட்டடக்கலை நிபுணருமான பக்மினிஸ்டர் புல்லர் என்கிற அறிஞரின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் ஏற்பட்ட ஈர்ப்பினால் திரிகோண வடிவங்களின் மீது ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய இஸாமு கடைசி வரை தனது சிற்பங்களில் அவற்றைக் கையாண்டார் எனலாம்.

Horace E. Dodge Fountain at Philip A. Hart Plaza, Detroit Civic Center, 1972-79, stainless steel

ஜப்பானியக் கலையின் எளிமையும், ஐரோப்பிய சர்ரியலிஸமும், நவீனத்துவமும் சேர்ந்த ஒரு அரிய கலை வடிவம் இஸாமுவினுடையது. இவரது குருவான ப்ராங்க்யூஸியின் பாதிப்பினால் இவரது சிற்பங்களும் ஒரு கிராமிய / பழங்குடி கலாச்சாரத்தின் கூறுகளைக் கொண்டமைந்துவிட்டன. இத்தகைய கூறுகள் இவரது கோட்டுத்தன்மையுடைய சிற்ப வடிவங்களில் உயிர் சேர்ப்பதற்கு பெரிதும் வழி வகுத்துக் கொடுத்தன என்று சொன்னால் மிகையாகாது.

எதிலும் எளிதில் ஒரு கலைப் பொருளைக் கண்டெடுப்பது கலைஞனின் கண். ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு யதார்த்தம், காலத்தின் சுழற்சி, யுகங்களாய்க் கழியும் அனுபவப் பாதைகள்.. .. இவற்றினூடே பயணிக்கும் கலைஞன் ஒரு முற்றிய கனியைப்போல் ஆகிவிடுகிறான். நிறைகுடமாய் தள்ளாடித் ததும்புகையில் அவனது சுருக்கங்களூடே இந்த உலகமே ஒரு எளிமையான வடிவமாய் நிற்கிறது. இக்கனியோ தரையைச் சென்றடையும் முன்னரே பல செடிகளுக்கு வித்திட்டுச் செல்கிறது. அவ்வாறு ஹென்றி மூர், ப்ராங்க்யூசி போன்றவர்கள் வித்திட்டுச் சென்ற கலைஞன் இஸாமு நகூச்சி. அவரைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. அடுத்த வாரம் பார்ப்போம்..

—-

monikha@yahoo.com

Series Navigation