ஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

மோனிகா


‘When I first started trying to make pictures I was particularly interested in using art as an instrument of social change. As far as I was concerned at the time, which was in the mid 30s, aesthetic technique was simply the means that enabled the artist to communicate his message — which as I saw it then was always essentially social if not political. ‘

1920லிருந்து முப்பது வரை ஒரு பெருவாரியான ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் தொகை கிராமப் புறங்களிலிருந்து நியூயார்க், சிக்காகோ மற்றும் வாசிங்டன் போன்ற வடக்கத்திய நகரங்களுக்கு குடி பெயர்ந்தது. மார்ட்டின் லூதர் கிங்கின் தென்மாவட்டப் பிரசாரங்களும் ஒன்று கூடிய இனவாத எதிர்ப்பும் நகர்ப்புறங்களில் அவர்களுக்கு ஒரு ஊன்றுதலை ஏற்படுத்த வழிவகுத்தது. இக்காலகட்டம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் படைப்பாற்றலுக்கான ஒரு மறுமலர்ச்சிக் காலம் (harlem renaissance) ஆகும். நியூயார்க்கில் உருவான இந்த இயக்கம் முதலில் ‘புதிய நீக்ரோக்களின் இயக்கம் ‘ என்று அழைக்கப்பட்டது. மற்ற எந்த இலக்கியம் கலை சார்ந்த இயக்கங்களைக்காட்டிலும் இவை ஆப்பிரிக்க மக்களின் கலாசாரத்தையும், மரபுகளையும் நினைவு கூர்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒரு கலைக்கண்ணாடியாக வடிவெடுத்தது. 1925ம் ஆண்டு சமூகவியலறிஞரும் விமர்சகருமான ஆலன் லெராய் லாக் தன்னுடைய ‘புதிய நீக்ரோ ‘ என்ற புத்தகத்தில் இக்காலகட்டம் ‘ஒரு விழிப்புணர்ச்சி கால கட்டம் ‘ என்று வர்ணித்தார். அமெரிக்க சமூகத்தின் நடப்புகளுடன் சேர்ந்த கருப்பின நகர ஊடாடல்கள் 1920களில் ஒரு கருப்பின பகுத்தறிவுவாத இயக்கத்திற்கு வழிகோலின. லாக்கைப் போலவே உலகளாவிய நீக்ரோ வளர்ச்சி குழுமம் (Universal Negro Improvement Association) என்ற அமைப்பை உருவாக்கிய மார்க்கஸ் கார்வேயும் ஸோாரா நீல் கர்ஸ்டன் ( மானுடவியலாளர்), நெல்லா லார்ஸன்(புதின எழுத்தாளர்), லாங்ஸ்

டன் க்யூக்ஸ்( கவிஞர்) போன்ற எழுத்தாளர்கள் முக்கியமானவர்கள். கலைஞர்களில் லூயி ஆம்ஸ்ட்ராங், ட்யூக் எலிங்க்டன் போன்ற ஜாஸ் இசைக்கலைஞர்களையும், வில்லியம் ஜான்ஸன், ஜாகப் லாரன்ஸ், எட்வார்ட் பர்ரா, ரொமேர் பியர்டன் போன்ற ஓவியர்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். அப்பொலோ நாடக அரங்கமும் அப்போது உருவாக்கப் பட்டதுதான். தற்போது 1960களுக்குப் பிறகு தொய்வடைந்த அந்த அரங்கு ஒரு அறக்கட்டளை நிறுவனமாக செயல் பட்டபோதும் வருடத்திற்கு ஒன்றரை மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

Harlem மறுமலர்ச்சியின் முக்கிய ஓவியர்களில் ஒருவரான ரொமேர் பியர்டன் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் தனது ஓவியங்களில் நிறுத்தியவர். ஜாஸ் இசையை அடிப்படையாகக் கொண்டு பற்பல ஓவியங்களை உருவாக்கியவர். அவர் தனது கலை வடிவங்களில் க்யூபிஸம், கொலாச் எனப்படும் காகிதங்களையும் பொருட்களையும் வெட்டி ஒட்டும் கலை, புகைப்படங்களை கத்தரித்து இணைப்பது போன்ற முறைகளைக் கையாண்டார். அதுமட்டுமல்லாமல் கருப்பின ஓவியர்களைப் பற்றி தொடர்ந்து உரைகளையும் நிகழ்த்தி வந்தார். 1938ல் ஓவிய மாணவர்களின் கூட்டமைப்பில் படித்த இருவருடங்களைத் தவிர்த்து அவர் சுயமாக ஓவியம் பயின்றவர் எனலாம். கணிதப் பட்டதாரியான அவர் பாரிஸிலுள்ள சார்போனில் தத்துவமும், கலை வரலாறும் பயின்றார்.

1914ம் ஆண்டு வடக்கு கரோலினாவில் பிறந்த அவர் Harlem-இல் வளர்ந்ததால் அங்குள்ள கருப்பின மக்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். பிறகு பாரிஸுக்கு படிக்கச் சென்ற பியர்டன் அங்கு வெர்மியர், ரெம்ப்ராண்ட் போன்றவர்களது ஓவியங்களை காணும் வாய்ப்பைப் பெற்றதுடன் நவீனத்துவ ஓவியரான பியட் போந்திரியானின் நட்பையும் பெற்றார். ஆனாலும் தனக்குள் வேரூன்றிப் போன ஜாஸ் இசையும் ஆப்பிரிக்க- அமெரிக்க பிம்பங்களும் அவரை அவற்றின் பால் ஈடுபாடு கொள்ளச் செய்தன.

1940ல் பியர்டன் Harlem-இன் 125வது தெருவில் தனது கலைகூடத்தை அமைத்தார். அங்கு 306ம் எண் வீட்டில் தங்கி ‘306 குழுமம் ‘ என்னும் ஓவியக் குழுமத்தை அமைத்தார். எல்லா நேரங்களிலும் பியர்டனின் வீட்டில், குழந்தைகள், இளைஞர்கள், ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அது பார்ப்பதற்கு ஒரு பொதுமக்கள் கூடம் போல் காட்சியளிக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். தனது ‘தொடர் கட்டடங்கள் (The Block) ‘ என்கிற ஓவியத்தில் ஒரு கிருத்துவ தேவாலயம், ஒரு முடிதிருத்தகம் மற்றும் மளிகைக்கடையை அடுத்து அடுத்து வரைந்த அவர் Harlem-இன் கலாச்சாரத்தின் ஒரு கண்ணோட்டமாக இக் காட்சியை நம் முன் வைக்கிறார். 1930 ஜார்ச் க்ராஸ்ச்சிடம் ஓவியம் பயின்ற பியர்டன் அவரது சமூக அரசியல் பார்வையின்பால் கவரப்பட்டார். அவரது க்யூபிஸ ஓவியங்களும் பெரும்பாலும் தாதாயிஸ புகைப்பட ஒட்டுதல் கலையை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டன.

பியர்டனின் ஓவியங்களை பெருமளவு ஆக்கிரமித்தது ஜாஸ் இசையும் ப்ளுஸ் எனப்படும் இசையும். ஜாஸின் ரிதத்துக்கும் ராகத்தும் ஏற்றவாறு தன்னுடைய கொலாச் காகிதங்களின் வடிவமும், தோற்றமும் அமையுமாறு தேர்ந்தெடுத்து ஒட்டுவார் அவர். ‘ஊதாரி மைந்தன் (Prodigal Son) ‘ எனப்படும் தனது ஓவியம் ப்ளூஸ் இசையினால் கவரப்பட்டு உருவானதே என்பது அவரது கூற்று. தாழ்த்தப்பட்டவர்கள், அமெரிக்க சமூகத்தின் வறுமைக்கோட்டில் உள்ளவர்கள் போன்றவர்களால் அதிக அளவில் போற்றப்படும் ப்ளூஸ் இசையைப் பற்றி கூறும்போது ‘ இத்தகைய துயரங்களை சந்திக்கின்ற போதும் நாம் எல்லா நிலைமையிலும் நமது சந்தோசத்தை நம்மில் இருத்திக் கொள்ள வேண்டும். அதைத்தான் ப்ளூஸ் சொல்கிறது, அதைத்தான் நானும் வாழ்தலுக்கான ஒரு கோட்பாடாக உணர்கிறேன் ‘ என்கிறார்.

மேற்கத்தைய கலாச்சாரமும் கலையுமே மிகவும் மேன்மையானது. இங்குள்ள கலாச்சாரமும் நாகரிகமும் மற்ற இடங்களைவிடவும் அறிவுத்தளத்தில் முதிர்ந்தவை என்று கூறிக்கொள்கிறார்கள் ஐரோப்பிய கலா வர்த்தகர்க்கள். இல்லாததொரு கலாச்சார அடையாளத்தைத் தேடி முடிவில்லாததொரு பயணத்தில் ஈடுபட்டுவருகிறது அமெரிக்கா. இவர்களுக்கு மத்தியில் ஆசிய ஆப்பிரிக்க கலாச்சாரங்களும் கலை வடிவங்களும் ‘ கிராமியக்கலை அல்லது நாட்டார்கலை (folk art) ‘ என்று முத்திரை குத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான தர நிர்மாணம் செய்பவர்கள் யாவர் ? மூன்றாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட நமது சிற்பங்கள் இன்றைய நவீன சிற்பங்களை ஒத்துப் போவது எப்படி என்று பல கேள்விகள் நம் முன் எழுகின்றன. இந்நிலையில் கலையின் எல்லையற்ற பன்முகத்தன்மையை ஆப்பிரிக்க அமெரிக்க கலாச்சார வெளிப்பாடுகளின் மூலம் நிறுவிய ரொமேர் பியர்டன் மற்றும் இதர Harlem மறுமலர்ச்சிக் கலைஞர்களின் பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

—-

monikhaa@yahoo.com

Series Navigation