ஓர்ஹான் பாமுக் – 1: பேச்சுரிமையின் பிரதிநிதி

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

பாம்பாட்டி சித்தன்



கடந்த காலத்தில், முப்பதாயிரம் “குர்த்” (Kurd) இன மக்களும் ஒரு மில்லியன் ஆர்மீனியர்களும் துருக்கியின் நிலப்பகுதிகளில் கொல்லப்பட்டார்கள். ஆனால் இன்று நம்மில் எவருக்கும் அதைப் பற்றி பேச துணிவில்லை.
—- ஓர்ஹான் பாமுக்
(பிப்ரவரி -2005ல் சுவிஸ் நாட்டுப்பத்திரிக்கையொன்றுக்கு அளித்த நேர்காணலில்)

துருக்கி நாட்டிற்கு முதல் நோபல் பரிசு, அதுவும் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பாமுக் பெற்றுத் தந்திருப்பது கொண்டாடத் தகுந்த விசயம்தான். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக எழுத்துத்துறையில் இயங்கி வரும் பாமுக்கின் கருத்துக்களும், எழுத்தின் கூறுகளும் சர்ச்சைக்குரியனவாகவே இருந்து வந்துள்ளன. அவர் மேலே சொன்ன கருத்துக்கு வரலாற்றிலிருந்து எடுத்தாளப்பட்ட கீழ்காணும் மூன்று பத்திகளை நீங்கள் படிப்பது தவிர்க்கவியலாததாகிறது.

இளம் துருக்கியர் இயக்கம்:
—————————

துருக்கி நாட்டை ஆண்டு வந்த ஒட்டமான் பேரரசு தனது இறுதிக் காலத்தில் வலிமை குறைந்து விளங்கியது. அந்த சமயம் ராணுவத்தில் இருந்த இளைஞர்கள் ஒன்றுகூடி வெற்றிகரமாக ஆட்சிக்கவிழ்ப்பு செய்து அரசைக் கைப்பற்றினர். அதன்பின் “இளம் துருக்கியர் இயக்கம்” என்று தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டு அவர்கள் ஈடுபட்ட செயல்கள் வரலாற்றில் படிந்த கறைகளாகவே எஞ்சுகின்றன. 1913 முதல் 1918 வரை இந்த இயக்கம் துருக்கியை தனது பிடியில் வைத்திருந்தது. அவர்கள் ஆட்சிக்காலம் “துருக்கியின் இருண்ட காலம்” எனலாம்.

குர்த் இன மக்கள்:
—————–
இரான், இராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளின் அண்டை நிலப்பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு சமீப காலமாகத்தான் “குர்திஸ்தான்” என்ற நாடு உருவாக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட எல்லா நாடுகளிலும் இன்றும் இந்த சிறுபான்மை இன மக்கள் வாழ்கிறார்கள். துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்த இவர்கள் மீது 1915 – 1917 கால கட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் கணக்கிடலங்காது. துப்பாக்கிச்சூடு, குர்த் கிராமங்கள் சூறையாடல், விடவாயுப் பிரயோகம், விமானத் தாக்குதல் என தொடர்ந்த தாக்குதல்களில் 30,000 குர்த் இன மக்கள் கொல்லப்பட்டனர். இளம் துருக்கியர் யக்கத்தால் நிகழ்த்தப்பட்ட இந்த இனப் படுகொலை துருக்கியின் மேல் படிந்துவிட்ட “தீராத களங்கமாகும்”.

ஆர்மீனியா:
————

முதலாம் உலகப்போரின் போது தன் எல்லைப் பிரதேசமான (அப்போதைய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த) ஆர்மீனிய நிலப்பரப்பின் மீது தாக்குதல் நடத்தி தனது கட்டினுள் கொண்டுவந்த இளம் துருக்கியர் இயக்கம் அங்கும் வெறியாட்டம் போட்டது. அதன் விளைவாக ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்கள் “இனப்படுகொலை” செய்யப்பட்டனர்.

உலகின் பெரும்பான்மையான நாடுகள் “இனப்படுகொலை” என்று இடித்துரைக்கும் மேற்சொன்ன நிகழ்வுகளை துருக்கி நாடு “உலகப்போரில் பலியானோரின் எண்ணிக்கை” எனத் திருத்துகிறது.

துருக்கியின் பாரம்பரியத்தையோ, அதன் குடியரசையோ அவமானப்படுத்தும் வகையில் பேசும் எவரும் “தேசத்துரோகி” என குற்றம் சுமத்தப்பட்டு ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை சிறை வைக்க துருக்கிய அரசு 2005ல் ஒரு சட்டம் பிறப்பித்தது.

படுகொலையான மக்கள் சிந்திய செங்குருதி நிலம் உறிஞ்சியது போக வாய்க்காலாய் வழிந்தோடி துருக்கியின் போஸ்போரஸ் நதியில் கலந்தோடச் செய்த துருக்கியின் பாரம்பரியத்தைத்தான் ஒர்ஹான் பார்முக்கின் நேர்காணல் (கட்டுரையின் துவக்க வரிகளில்) குறிப்பிடுகிறது.

பாமுக் மீதான வழக்குகள்:
————————–

பாமுக் மீது உடனடியாக குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2005 டிசம்பரில் நடந்த விசாரணை முடிவில் துருக்கியின் இராணுவத்தை அவமானப்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. இருப்பினும் “துருக்கியின் பாரம்பரியத்தை” விமர்சித்த குற்றச்சாட்டு விலக்கிக்கொள்ளப்படவில்லை. மேலும் இந்த வழக்கு நீடித்தது. இதனிடையே “ஐரோப்பிய ஒன்றியம்” இவருடைய விசாரணையில் கவனம் செலுத்த “பார்வையாளர் குழு” ஒன்றை துருக்கிக்கு அனுப்பியது. உலகின் பல்வேறு நாடுகள் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டன. தவிர, ஜோஸ் சரமாகோ, கேப்ரியேலா கார்சியா மார்க்குவேஸ், குந்தர் கிராஸ், உம்பர்தோ எக்கோ, கார்லோஸ் ப்யூன்டஸ், ஜான் அப்டைக், மாரியோ வர்கஸ் லோசா, யுவான் குவைத்திசோலோ ஆகிய பிரபலமான எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து பாமுக்கிற்கென எழுப்பிய குரலும் இதில் அடங்கும்.

இறுதியாக துருக்கிய நீதித்துறையமைச்சகத்திடம் ஒப்புதலுக்கென்று வந்த இவரது இரண்டாவது வழக்கிற்கு ஒப்புதல் அளிக்க அமைச்சகம் மறுத்துவிட்டது. எனவே இவர் மீதிருந்த இரண்டாவது வழக்கும் ஜனவரி 2006ல் கைவிடப்பட்டது.

வழக்கு குறித்த விமர்சனம்:
—————————

குர்திஷ் இனத்தில் யாசர் கெமால் (Yasar Kemal) என்னும் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர், தனது வாழ்நாளை குர்திஷ் மக்களுக்கென அர்ப்பணித்து, அவ்வினத்தின் சந்தோஷங்களையும், வேதனைகளையும் எழுத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது படைப்புகளுக்கு கிடைக்காத அங்கீகாரம் அவ்வின மக்களை குறித்து துருக்கியிலிருந்து விமர்சனங்களை எழுப்பியவருக்கு கிடைப்பது (நோபல் பரிசு வடிவில்) தகுதியானது தானா?

இன்னொரு கூற்று, கடந்த முப்பது வருடங்களாக எழுத்துலகில் இயங்கி வரும் பாமுக், ஏன் இத்தனை தாமதமாக குர்த் இன மக்களுக்காகவும், ஆர்மீனியர்களுக்காகவும் குரல் எழுப்பவேண்டும். இது தன்னை விளம்பரத்திற்காக முன்னிருத்தும் முயற்சியன்றி வேறென்ன?

இத்தகைய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில்,

“அரசியல் சார்ந்த விமர்சனங்களுக்காக வசைப்பெயரெடுத்தவன் நான். இத்தகைய விமர்சனங்களில் பெரும்பான்மையானவை, வெளிநாட்டுப் பத்திரிக்கை நேர்காணல்களின் பகுதிகள், துருக்கி தேசியவாத பத்திரிக்கையாளர்களால் வெட்கமின்றி திரிக்கப்பட்டு, அவைகளில், நான் இருப்பதைக்காட்டிலும் மிதமிஞ்சிய புரட்சியாளனாகவும் அரசியல் கோமாளியாகவும் சித்தரிக்கும் முயற்சியே.” என்கிறார் ஒர்ஹான் பாமுக்.


pampattisithan@gmail.com

Series Navigation