ஓட்டிற்காக ஒதுக்கீடு

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

புதுவை சரவணன்


உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதென்ற மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கின் முடிவை எதிர்த்து வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆதரவளிக்காத நிலையில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வருவது ஒரு ஆச்சரியமான நிகழ்வே. டில்லி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் போராட்டத்தால் ராணுவ டாக்டர்களை வரவழைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு( ஒ.பி.சி) அறிவிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராடுவது சரிதானா?
நம் நாட்டில் இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. சாதி அடிப்படையில் பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு சமமாக உயரவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் அரிஜனங்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது நியாயமானது. அவசியமானது. ஆனால் இப்போது தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக அரசியல்வாதிகள் இட ஒதுக்கீட்டை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அரசியல்வாதிகளின் வாக்குவங்கி அரசியலின் விளைவாக இன்று நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இட ஒதுக்கீடு வழங்குவதற்காக OC, OBC, SC, ST என்று பல்வேறு சாதிகளை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. OC பிரிவில் அதாவது பொதுப்பட்டியலில் பிராமணர்களைத் தவிர வாக்கு வங்கி அரசியலுக்காக பல சாதியினரை சேர்த்துள்ளனர். தமிழகத்தில் சைவ வேளாளர், ரெட்டியார்கள், செட்டியார், ஆறுநாட்டு வேளாளர் போன்ற பல சாதியினர் பொதுப்பட்டியலில் உள்ளனர். இந்த சாதியினருக்கும் இட ஒதுக்கீடு சலுகைகளை அனுபவித்து வரும் தலித்துக்கள், பழங்குடியினர், மீனவர்கள் போன்ற சில பிரிவினரைத் தவிர மற்ற சாதியினருக்கும் சமுக ரீதியில் எந்த வேறுபாடும் இல்லை. இன்னும் சொல்லபோனால் பொதுப்பட்டியலில் உள்ள பல சாதியினரைவிட இட ஒதுக்கீடு சலுகை பெறும் பல சாதியினர் நல்ல அந்தஸ்துடனேயே இருக்கின்றனர்.
தமிழகத்தில் ஆறுநாட்டு வேளாளர் என்ற ஒரு சாதி இருக்கிறது. இந்த சாதியினர் திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், முசிறி தாலுக்காவில் சில கிராமங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் கோவில்பட்டியிலும் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களின் மொத்த எண்ணிக்கையே ஒரு லட்சத்தை தாண்டாது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கூலி வேலை செய்பவர்கள். ஆனால் இந்த சாதி பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் 10 ம் வகுப்பு, 12ம் வகுப்பிற்கு மேல் படிப்பவர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். எல்லோரும் உயர் கல்வி படித்து டாக்டர், சாப்ட்வேர் இன்ஜினியர் என்று முன்னேறிக் கொண்டிருக்கும்போது இந்த சமுதாய இளைஞர்கள் 1,000, 2,000 சம்பளத்திற்கு மளிகை கடைகளிலும், ஜவுளி கடைகளிலும் தங்களின் எதிர்காலத்தை தொலைத்து நிற்கிறார்கள். இவர்கள் மைனாரிட்டியாக இருப்பதால் யாரும் கண்டு கொள்வதில்லை. சுயநிதி கல்லூரிகள் இப்போது அதிகமாகி இருந்தாலும் பணம் இருந்தால்தான் அங்கு படிக்க முடியும்.
இட ஒதுக்கீடு சமூக நீதிக்காக மட்டுமே என்பது உண்மையானால் தலித்துக்களுக்கும், பழங்குடியினருக்கும் மட்டுமே ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கும் கொடுக்க விரும்பினால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். அப்படி வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். சில குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்கு வங்கியை குறிவைத்துதான் இப்போது இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. சாதி ஓட்டுகளை நம்பி அரசியல் நடத்தும் லாலுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், டாக்டர் ராமதாஸ் போன்றவர்களும் காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகளில் சாதி பலத்தில் காலத்தை ஓட்டி கொண்டிருப்பவர்களுமே இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். எந்த அரசியல் கட்சியும், எந்த ஒரு அமைப்பும் போராட்டத்தை தூண்டாமலேயே இவ்வளவு பெரிய நடப்பதிலிருந்து மாணவ சமுதாயத்தின் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது.
இட ஒதுக்கீட்டால் ஒருவருக்கு எவ்வளவு லாபம் வேண்டுமானாலும் கிடைக்கட்டும். ஆனால் யாருக்கும் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது ஒரு அரசின் கடமை. அதுதான் உண்மையான சமூக நீதி.

புதுவை சரவணன்
musaravanan@gmail.com

Series Navigation