ஒரு நாள் உணவை…

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

ரெ.கார்த்திகேசுஅன்றிரவு எனக்கு உணவுப் பிரச்சினை அத்தனை பூதாகாரமாக உருவெடுக்கும் என நான் நினைக்கவில்லை. அன்று மாலை மனைவி “இன்னைக்கு சாப்பிட ஏதாச்சும் கடையில வாங்கிக்கிறிங்களா!” என்று கேட்ட போது கணினியில் எதையோ படித்துக் கொண்டிருந்தவன் கவனமில்லாமல் “சரி” என்று சொல்லிவிட்டேன்.

இரவு உணவு என்பது எனக்குப் பெரிய பிரச்சினையே அல்ல. பெரும்பாலான இரவுகளில் அது என் மனைவியின் விருப்பத்தைப் பொறுத்தது. மகளும் மருமகனும் இன்று சாப்பிட வருகிறார்கள் என்றால் தோசை, இட்டலி, புட்டு, நூடல்ஸ் (ஏன் இதற்கு இன்னும் தமிழ்ச் சொல் இல்லை?) என்று சமைத்து விடுவார். எல்லாரும் உட்கார்ந்து மகிழ்ச்சியாகச் சாப்பிடுவோம். பேச்சு சுவாரஸ்யத்தில் என்ன உணவு உள்ளுக்குப் போகிறது எனக்கூடத் தெரியாது.

வாரத்தில் பல நாட்கள் மகளும் மருமகனும் ஜோகிங் போய், அல்லது ஜிம் போய் அல்லது யோகா போய் வெளியே சாப்பிட்டுவிட்டு அவர்களின் ஃபிளாட்டுக்குப் போய்விடுவார்கள். அப்படி அவர்கள் வராத நாட்களில் எங்கள் இருவருக்கு மட்டும்தான் என்றாலும் சாப்பாட்டு மேசையில் ஏதாவது ஒன்று முளைத்திருக்கும். உப்புமா, நேற்றைக்கு மிகுந்த போன ரொட்டியைத் துண்டுகளாக்கி வெங்காயம் இட்டுப் பிரட்டல் இப்படி ஒன்று. சில நாட்கள் வெளியில் சென்று சீனர் சைவச் சாப்பாடு வாங்கி உண்பதும் உண்டு (அந்த சீனர் சைவரா என்று தெரியாது. ஆனால் அவர் சாப்பாடு எல்லாச் சைவப் புனிதங்களையும் காப்பாற்றும்).

பல இரவுகளில் கேம்பெல்லின் தக்காளி சூப்பை மைக்ரோவேவில் வைத்து சுடவைத்துச் சாப்பிட்டுக் கொள்ளுவோம். அவை ஆரவாரமற்ற அமைதியான இரவுகள். டிவிக்கு முன் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, கவனமாக மாத்திரைகளை எண்ணிச் சாப்பிட்டுவிட்டு விரைவில் தூங்கப்போய்விடுவோம். பாருங்கள், நாங்கள் ஓய்வு பெற்ற முதிய பருவத்தினர். உணவில் பெரும் அக்கறை இல்லை. எங்கள் வாழ்வில் பேரப்பிள்ளைகளை விட்டால் வேறு கிளர்ச்சிகள் கிடையாது.

பல வாரங்களுக்கு முன்னால் எங்கள் குளுகோர் பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் (தமிழன்பீர்! இது என் பிழையன்று! கோயிலுக்கு அப்படித்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்) தலைவர் என் வீடு தேடி வந்து, கோயிலில் பொங்கல் வைக்கும் போட்டி நடைபெறுவதாகவும் அதற்கு என் துணைவியார் ஒரு நீதிபதியாக இருந்து பணியாற்றவேண்டும் என்றும் அதற்கு நான் என் மனைவியிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கோயில் தலைவர் சாமி மிக நல்ல மனிதர். என் அன்புக்குரியவர். ஆகவே மனைவியிடம் சென்று பரிந்துரையாற்றினேன். என் மனைவியோ பக்தி சிகாமணி. ஆகவே ஓடோடி வந்து தலைவரை வணங்கி,
“மன்னவர் பணியென்றாகில் நும் பணி மறுப்பனோ யான்?” என்ற தோரணையில் “இதுக்கு நீங்க இவ்வளவு தூரம் வரணுமா? போன் பண்ணினா நானே வந்திருப்பேனே!” என்று கூறிச் சம்மதம் கூறி காப்பியும் கொடுக்க முன்வந்தார். சாமி பணிவோடு மறுத்து விட்டார். “அம்மா, நான் டயாபிட்டிஸ்காரன். என் வீட்டுச் சாப்பாட்டைத் தவிர வெளியில் சாப்பிட்றதில்லை. கோயில்ல கூட நான் பிரசாதம் சாப்பிட்றதில்ல!” என்று சொல்லிப் போனார். கோயிலில் பிரசாதம் சாப்பிடாத கோயில் தலைவர் அகண்ட மலேசிய இந்து சமுதாயத்தில் இவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இது நடந்து சில நாட்களில் நானும் மனைவியும் எங்கள் இயல்புக்கேற்ப அதைப் பட்டென்று மறந்து போனோம். இன்றைக்கு ஐந்து மணிக்கு சாமி போன் செய்தார். “என்னம்மா, ஐந்து மணிக்கு போட்டி ஆரம்பிக்கணுமே!” என்றார். அப்போதுதான் போட்டி நடப்பது இன்று என்பது எங்கள் இருவருக்குமே நினைவுக்கு வந்தது. ஆகவே மனைவி அவசரமாகச் சேலை கட்டிக் கொண்டு கோயிலுக்குக் கிளம்பி விட்டார். அப்போதுதான் சாப்பாட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி சொன்னது. எனக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. கணினியில் கண்பதித்தவாறு “சரி” என்று சொல்லிவிட்டேன்.

ஆறரை மணிக்கு கணினி விஷயங்கள் சோர்வு தட்டியபோது போய்ச் சாப்பாடு வாங்கிவர வேண்டும் என்ற நினைவு எழுந்தது. ஒரே ஒரு ஆளுக்கு ஒரே ஒரு வேளை சாப்பாட்டுக்காக காரை எடுத்துக் கொண்டு போய் என்ன வாங்குவது என்ற சோர்வும் வந்தது. பெரும்பாலும் குடும்பத்துக்கு வாங்கி வருவதுதான் வழக்கம். அப்போது உணவுத் தேர்வுக்காக நான் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. யாராவது ஒருவர் – பெரும்பாலும் மனைவிதான் – என்ன வாங்க வேண்டும் என முடிவு செய்து எனக்கு அறிவிப்பார்கள்.

எங்கள் பகுதியில் உணவுக்கும் அதன் பன்முகத்தன்மைக்கும் குறைவில்லை. பினாங்குத் தீவு மலேசிய உணவின் சொர்க்கம் என்று புகழப்பட்டுள்ளது. இந்திய உணவு, மலாய் உணவு, சீன உணவு, மேற்கத்திய உணவு எல்லாம் கூப்பிடு தூரத்தில் கிடைக்கும். பினாங்கின் இந்திய முஸ்லிம்கள் பழைய சமையல் மரபுகளிலிருந்து புதிய உணவுப் பொருள்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். புரோட்டா இங்கு உருமாறி “ரொட்டிச் சானாய்” ஆகியிருக்கிறது. சீனர்கள் மரபு வழி நூடல்ஸ் இவர்கள் கையில் “மீ கோரெங்” (பிரட்டிய நூடல்ஸ்) ஆகியிருக்கிறது. இந்தியர்களின் சாதம், கறி முதலியவற்றைக் கூட வெவ்வேறு வண்ணங்களில், கணவாய் உட்படப் பலவித கடல் பிராணிகளையும், புறா உட்படப் பறவைகளையும், பன்றி தவிர்த்த நான்கு கால் ஜந்துகளையும் உணவாக்கி “நாசி கண்டார்” ஆக்கியிருக்கிறார்கள். உரிய இடத்துக்குப் போனால் சீனர் கடைகளில் பன்றியும் கிடைக்கும். “பாக் குத் தே” மிகப் பிரபலம்.

ஆனால் எனக்கேன் அந்தக் கதை? இந்த மாமிசச் சமுதாயத்தில் எங்கள் குடும்பத்தில் அனைவரும் சைவ உணவு உட்கொண்டு பழகிவிட்டோம். இத்தனைக்கும் என் மனைவி ஒருவர்தான் குடும்ப வழிச் சைவம். நான், என் மருமகன் ஆகியோர் பிற்காலச் சைவர்கள். அதாவது எங்கள் காலத்தில் மேற்சொன்ன பிராணி வகைகள் அனைத்தும் தின்று பழகியும், பிற்காலத்தில் சுய விருப்பத்தின் பேரில் சைவர்கள் ஆகினோம். ஆகவே இன்று என் தேடல் சைவ உணவு உலகத்திற்குள்தான்.

அதுவும் அத்தனை எளிதாகவா இருக்கிறது? சைவத்திலும் இங்கு பல வகை உண்டு. சுத்தமான தோசை, இட்டலி, சப்பாத்தி வகையறாக்கள் உண்டு. சாதாரணமாக மேற்சொன்ன இந்திய முஸ்லிம் (மலாய்க்காரர்கள் இவர்களை “மாமாக்” என்று அழைக்கிறார்கள். ஆனால் இவர்கள் அவர்களை “மாப்பிள்ளைக்” என அழைப்பதில்லை) கடைகளில் கூட தோசையும் இட்டலியும் சப்பாத்தியும் சைவமாக வாங்கலாம். தனிப் பாண்டங்களில் சமைத்து தனிக் கரண்டிகள் பயன்படுத்தி சட்னி சாம்பார் என ஆசாரமாகக் கொடுப்பார்கள்.

சீனர் நூடல்ஸ் கடைகளில் மாமிசம் கலக்காத மீ, பீஹூன் ஆகியவை கேட்டு வாங்கலாம். நிறையக் கீரைகள் சேர்த்து, கேரட், பீன்ஸ், வெள்ளரிக்காய் போட்டுக் கொடுப்பார்கள். கவனம்: இங்கு பாத்திரங்களும் கரண்டிகளும் ஆசாரமாகக் கையாளப்படுவதில்லை. ஆகவே ஆசாரிகள் இங்கு சாப்பிடக் கூடாது. ஆனால் எனக்கு அப்படிக் கலப்பது பற்றிய மனத்தடைகள் ஒன்றும் இல்லையாதலால் ஜம்மென்று அங்கு உட்கார்ந்து, பன்றிக் கொழுப்பில் பிரட்டிய மீ சாப்பிடும் சீனரின் பக்கத்தில் உட்கார்ந்து சைவ மீ சாப்பிட்டு வருவேன்.

இங்கு ஒரு பழக்கம். கடைகளில் அல்லது மரத்தடி ஒட்டுக் கடைகளில் இப்படி சீனர் அல்லது மலாய்க்காரர் பக்கத்தில் நீங்கள் போய் உட்கார்ந்தால் அவர்கள் சாப்பிடும் உணவைக் காட்டி “மக்கான், மக்கான்” (சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள்) என்பார்கள். அது ஒரு மரியாதைக் குறியீடே தவிர அழைப்பு அல்ல. நீங்கள் “தாப்பா, மக்கான்” (பரவாயில்லை, சாப்பிடுங்கள்) என்று சொல்லிவிட்டு உங்கள் உணவைச் சாப்பிட வேண்டும். இந்த மரபில் தோய்ந்தவர்கள் பக்கத்தில் பன்றி சாப்பிடும் சீனர் சாப்பிடச் சொல்லும் பொழுது “சீச்சீ, நான் பன்றியெல்லாம் சாப்பிடுவதில்லை என்று சொல்லி அவரைப் புண்படுத்தக் கூடாது. “கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”.

இன்னொரு சைவ உணவு உண்டு. அது சீனர் சைவ உணவு. பெரும்பாலும் பவுத்த மத அன்பர்களால் நடத்தப்படும் உணவகங்கள். மஞ்சள் ஆடை அணிந்த பவுத்த துறவிகளை இங்குக் கூட்டம் கூட்டமாகக் காணலாம். இங்கு சீனர்கள் உண்ணும் உணவு வகைகள் அனைத்தும் மரக்கறிகளால் ஆக்கப்பட்டு அவற்றின் அசல் பெயர்களால் பரிமாறப்படும். ஆகவே இங்கு கோழி, ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி, முட்டை, நெத்திலிக் கருவாடு அனைத்தும் உண்டு. அனைத்தும் சோயா பீன்ஸ் மற்ற மாவு வகையாறாக்களில் செய்யப்பட்டவை. மிகச் சுவையானவை. ஆசாரமானவை. சிலர் பூண்டும் வெங்காயமும் கூடச் சேர்த்துக் கொள்வதில்லை. மிக அன்பாகவும் சாத்துவிகமாகவும் உணவு பரிமாறப்படும்.

ஆனால் என் தமிழ் நாட்டு/ இந்திய விருந்தினர்கள் யாருக்கும் இந்த உணவு பிடிப்பதில்லை. பிடிப்பதில்லை என்ன? பேரைக் கேட்ட உடனேயே விரைந்து மறுத்து விடுவார்கள். உணவில் சாகசம் காட்டுவதில் இந்திய இந்தியர்கள் மிகப் பிற்போக்கானவர்கள் அல்லவா?

இந்த வரிசையில் சைவ பிட்சாவும் சைவ பர்கரும் கூட உண்டு. ஹோட் டாக் கூட உண்டு என்று கேள்விப்படுகிறேன். இதுவரை என் கண்ணில் பட்டதில்லை.

ஆகவே என் பிரச்சினை இப்போது விளங்கியிருக்கும். மனைவி பக்கத்தில் இல்லாத தனிமை என்னை வெகுவாகப் பாதித்தது. இருந்தால் டக்கென்று ஒன்றைச் சொல்லி “வாங்கி வாருங்கள்” என்று விரட்டியிருப்பார். நான் மறு பேச்சில்லாமல் காரெடுத்து, காரில் சுதா ரகுநாதன், ஹரிஹரன், ஜிக்கி, ஷீலா மஜீத், சுடிர்மான், கைலி மினோக், லூயி ஆர்ம்ஸ்றோங் எனக் காலத்தாலும் மொழியாலும் வகையாலும் பன்முகத்தன்மை கொண்ட என் இசையைக் கேட்டவாறு சென்று கொண்டு மென்று நின்றிருப்பேன். இப்போது நான் தனியனானேன்.

முடிவெடுக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு காரணம் பசி. நான் ஏழரை மணிக்குச் சாப்பிடுபவன். ஏழு மணிக்கு என் உடல் கடிகாரம் “கவுண்ட் டவுன்” ஆரம்பிக்கும். இப்போது மணி ஏழு.

சில வரையறைகளைச் செய்து கொண்டேன். முதலில் உணவு தேடிப் போகும் இடம் அருகில் இருக்க வேண்டும். இரண்டு கிலோமீட்டர் விட்டத்துக்குள் இருக்க வேண்டும். இரண்டாவது பார்க்கிங் பிரச்சினை இருக்கக் கூடாது. இப்பொதெல்லாம் சட்டவிரோத பார்க்கிங் செய்தால் பண்டார் ராயாக்கார்கள் (நகர நிர்வாகம்) கடும் அபராதம் விதிக்கிறார்கள். மூன்று வெள்ளி உணவுக்காக முப்பது வெள்ளி அபராதம் அழ முடியாது. காவலர் டிக்கெட் வைத்துப் போய்விட்டால் வாங்கிய உணவும் அன்று செரிக்காது. மூன்றாவது கூட்டமில்லாத கடையாக இருக்க வேண்டும். கூட்டம் பிடிப்பதில்லை என்பது ஒன்று. ஆனால் கூட்டத்தில் யாராவது தெரிந்தவர் இருந்து விட்டால், “என்ன இந்தப்பக்கம்?” என்று ஆரம்பித்து ஹிண்டிராஃப்காரர்கள் செய்தது பற்றி நான் என்ன நினைக்கிறேன் எனக் கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் ஹிண்டிராஃப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 10-15 நிமிடம் பேசுவார்கள். சிலர் நம் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே பேசுவதால் அகலவும் முடிவதில்லை. ஆகவே கூட்டம் தவிர்! நான்காவதாக விரைந்து செய்யப்படும் உணவாக இருக்க வேண்டும். 10 நிமிடத்தில் தின்று முடிக்கும் ஒரு உணவுப் பொட்டலத்துக்காக அரை மணி நேரம் காத்திருத்தல் கால விரையம்.

இந்த வரையறைகள் செய்துகொண்டவுடன் புகை மூட்டத்தினூடே கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. இரண்டு கிலோமீட்டர் விட்டத்துக்குள் இருக்கும் கடை என்றால் ஐலண்ட் கிளேட்ஸ் என்னும் வீடமைப்புப் பகுதியைச் சொல்லலாம். பெரும்பாலும் சீனர்கள் குடியிருக்கும் அங்கே உள்ள மத்திய கடைவீடுகள் வரிசையில் மூன்று மூலைக்கடைகள் உணவு விற்கும் ஒட்டுக் கடைகளாக மாற்றப்பட்டிருந்தன. இரவில் மட்டும்தான் திறக்கும். பார்க் பண்ண நிறைய இடம் இருக்கும்.

வேறு இடங்கள் உள்ளன. ஆனால் இரவு நேரத்தில் வாகன நெரிசல் இருக்கும். ஆகவே ஐலண்ட் கிளேட்ஸ்தான் என முடிவாயிற்று. ஆனால் நான் ஐலண்ட் கிளேட்ஸ் கடை வரிசைக்கு உணவு வாங்கப் போய் ஓராண்டுக்கு மேலிருக்கும். அங்கே பெரும்பாலும் சீனர் உணவுதான் கிடைக்கும். ஆனால் மாமாக் கடைகள் இரண்டு மூன்று இருந்தன. ரொட்டிச் சானாய், நாசி கண்டார், மீ கோரெங் (பிரட்டிய மீ/நூடல்ஸ்) வாங்கலாம். இருப்பவற்றுள் இன்றைக்குப் பிடித்தாக இருந்தது மீ கோரெங்தான்.

இந்த முடிவுகள் எடுத்தானதும் சுறுசுறுப்பாகச் செயல் பட்டேன். உடை எதுவும் விசேஷமாக அணியத் தேவையில்லை. போட்டிருந்த பெர்மூடா அரைக்கால் சிலுவார் மேல் டீ ஷர்ட் போட்டுக் கொண்டால் போதும். அங்கே உணவருந்த வரும் சீனர்கள் அனைவரும் அப்படித்தான் போட்டிருப்பார்கள். சீனப் பெண்கள் மிகச் சுருக்கமாக அரைக்கால் பேண்ட்ஸ் போட்டிருப்பார்கள். தங்க நிற மஞ்சள் தொடைகள் உள்ளவர்கள் அப்படிப் போடலாம். நம் பெண்கள் போட முடியுமா என்ன? ஆனால் நம் பெண்களும் இப்போது அப்படிப் போடுகிறார்கள்.

மலாய் ஆண்கள் பெரும்பாலும் அரைக்கால் பேண்ட்ஸ் போட மாட்டார்கள். அங்கங்களை அநாவசியமாகக் காட்டக் கூடாது என்பது அவர்கள் மார்க்கம் கற்றுக் கொடுக்கும் பாடம். மலாய்ப் பெண்கள் உடலை மூடிய ஆடைகளை அணிந்து வருவார்கள். இப்போது நவீனமாக டீ ஷர்ட்டும் ஜீன்சும் போட்டு வருபவர்கள் அதிகம். சில சமயம் நெஞ்சைப் பிதுக்கிய டீ ஷர்டாகவும் பிருஷ்டம் பிதுக்கிய ஜீன்சுமாக இருக்கும். ஆனால் தலையை மூடிய துடோங் அணியத் தவறுவதில்லை.

என் எதிர்பார்ப்பெல்லாம் உணவின் மீது இருந்ததால் இவையெல்லாம் பொருட்டில்லை.

காரை எடுத்து அந்தக் கடைவீதிப் பக்கம் அடைந்தேன். வீதியை அடைத்துக் கொண்டு ஏராளமான கார்கள் இருந்தன. இதை எதிர்பார்க்கவில்லை. முன்பெல்லாம் இவ்வளவு நெருக்கடி இருக்காது. ஒரு சுற்று வந்ததும் ஏன் எனப் புரிந்தது.

முன்பிருந்த மூன்று மூலைக் கடைகளோடு நான்காவது மூலையிலும் ஒரு கடை உணவுக் கடையாக மாற்றப்பட்டிருந்தது. எல்லாம் புதுக்கடைகள். டக் ரைஸ், சிக்கன் ரைஸ், ஹொக்கியன் மீ, சார் கொய்தியாவ், யொங் தவ் ஃபூ, தே தாரிக், புபோர் கச்சாங்… சீன உணவுக்காக இன்னொரு மினி சொர்க்கம் அங்கு கட்டப்பட்டிருந்தது. நெருங்கிப் போய்ப் பார்த்தால் நான் தேடுபவை கிடைக்கும். ஒட்டுக் கடைகளுக்குள் மீ கோரெங் போடும் மாமாக் கண்டிப்பாக இருப்பார்.

சுற்றிச் சுற்றி வந்தேன். பார்க்கிங் கிடைக்கவில்லை. பல கார்கள் சட்ட விரோதமாக நடைபாதையில் ஏறி நின்றன. அங்கே ஓர் இடம் இருந்தது. தவிர்க்க முடியாமல் நானும் ஏற்றினேன். ஏற்றினால் என்ன? இந்த நாட்டில் யார் நடக்கிறார்கள் நடைபாதையில்? எல்லாருக்கும் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. ஆகவே நடைபாதையில் கார் நிறுத்தலாம். அதனால் அசவுகரியப் படுபவர்கள் அநேகமாக இருக்க முடியாது.

பளிச்சென்ற விளக்குகளுடன் பிரகாசமாக இருந்த அந்தப் புதிய கடைக்குச் சென்றேன். நெருக்கமான மேசைகளில் நிறையப் பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கேஸ் அடுப்புகளின் தணலில் இரும்புச் சட்டிகளில் மீ வகையறாக்கள் கொதித்துக் கொண்டிருந்தன. அவ்வப்போது தெளிக்கப்படும் குளிர் நீரில் சட்டிகளிலிருந்து புகை குப்பென்று எழுந்தது. சிகரெட் புகைப்பவர்கள் நுரையீரல் புற்று நோயை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

கடை உள்ளில் பல சிறிய கடைகள். கடைக்கு வெளியே உள்ள சிறிய காம்பவுண்டுக்குள் திறந்த வெளியில் மரத்தடியில் சில தள்ளுவண்டிக் கடைகள் இருந்தன. அதில் மாமாக் மீ கோரேங் கடை இருந்தது. இளைஞர் ஒருவர் தலை நிமிர நேரமில்லாமல் மீயைப் பிரட்டியவாறு இருந்தார். மதிய வயதுக்காரர் ஒருவர் தட்டைகளை விநியோகிப்பதில் மும்முரமாக இருந்தார்.

அந்த விநியோகிப்பாளரை நோக்கிப் போனேன். தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தார். “எனக்கு ஒரு….” என்று ஆரம்பித்தேன்.

அவர் முகம் மலர்ந்தது. “சார் நீங்களா? வாங்க, வாங்க…!” என்றார். பல்தெரியச் சிரித்தார்.

தயங்கினேன். என்னை இவருக்கு எப்படி தெரிந்திருக்கும்? ஆள் மாறாட்டமாக இருக்க வேண்டும்.

“என்ன உங்களுக்கு….?”

“என்ன சார்! சாரத் தெரியாம இருக்குமா? போன வாரம் கூட தமிழ் நேசன்ல உங்க கதயப் படிச்சேன் சார்… சுனாமியப் பத்தின கத. அற்புதம் சார்! ஒரு நிமிஷம் சார், உக்காருங்க…” ஓடிச் சென்று தட்டைகளை எடுத்துக் கேட்டவர்களுக்குப் பரிமாறப் போய்விட்டார்.

ஆள் மாறாட்டம் இல்லை. சுனாமி பற்றித் தமிழில் தமிழ் நேசனில் கதை எழுதிய இன்னொரு மனிதர் இந்த உலகத்தில் எந்த மூலையிலும் இருக்க வாய்ப்பில்லை. உட்கார இடம் தேடினேன். எல்லா நாற்காலிகளிலும் ஆட்கள் இருந்தார்கள். அவர் ஒரு முக்காலியைத் தூக்கி வந்து ஓரமாகப் போட்டார். “உக்காருங்க சார்” என மீண்டும் உபசரித்தார். முன்னே மேசை இல்லாமல் தனியனாக ஆடும் முக்காலியில் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி அமர்ந்தேன்.

“என்ன சாப்பிட்றிங்க?”

“சைவமா ஒரு மீ கோரெங். பொங்குஸ் (பொட்டலம்)” என்றேன்.

“ஒரப்பு போடலாமா?”

“போடலாம்”

“கனி, சைவ மீ கோரெங் பெடாஸ். பொங்குஸ். ஐயாவுக்கு நல்லா போடு. ஐயா பெரிய எழுத்தாளர்!” என்றார். அவர் பக்கத்தில் நின்றிருந்த இரண்டு தமிழர்கள் என்னை ஆர்வமாகப் பார்த்து முகம் திருப்பிக் கொண்டர்கள். எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

“என்ன உங்களுக்குத் தெரியும்னு நான் எதிர்பார்க்கல” என்றேன்.

“நான் பெரிய வாசகன் சார். பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எல்லாம் எழுதுவேன். பெருங்குளம் மைதீன்கிற பேர்ல வரும்” என்றார்.

“அப்படியா?” என்று சிரத்தை காட்டினேன். பின் இன்னொரு சுற்றுப் போய் மீத்தட்டைகள் விநியோகம் செய்து ஆர்டர் எடுத்துக் கொடுத்துவிட்டு மீண்டும் என் பக்கம் வந்தார்.

“உங்களால ஒரு காரியம் ஆகணும் சார்!” என்றார். இது முன்பும் நடந்திருக்கிறது. எழுத்தாளன் என்று தெரிந்தவுடன் ‘நான் ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன். அதைக் கொஞ்சம் திருத்திக் கொடுங்க!’ என்று ஆரம்பித்து விடுவார்கள். அந்தப் பயத்தோடு “என்ன சொல்லுங்க!” என்றேன்.

“இந்த மஜ்லிஸ் பண்டாராயா (நகர சபை) ஆளுங்க ரொம்ப தொந்திரவு பண்றாங்க!”

விஷயம் முற்றிலும் வேறாக இருந்தது. “என்ன தொந்திரவு?”

“அதான் இங்க கடை போடக் கூடாதுன்னு…”

சுற்றி முற்றிப் பார்த்தேன். கடைகளில் வியாபாரம் ஜே ஜே என்று நடந்து கொண்டிருந்தது. “ஏனப்படிச் சொல்றாங்க? இது வியாபாரத்துக்கு உள்ள இடம்மாதிரிதான தெரியுது?” என்றேன் கொஞ்சம் குழம்பி.

“வியாபாரம் கடைக்குள்ளதான் நடக்கணுமாம். இந்த வண்டி கடைக்கு வெளியே காம்பவுண்டில திறந்த வெளியில இருக்கு பாருங்க!” என்றார்.

ஆமாம். இந்த வித்தியாசம் எனக்குப் புலப்பட்டிருக்க வழியில்லை. ஆனால் இன்னும் பலரும் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள். சீனர்கள், ஒரு மலாய்க்காரர் பர்கர் போட்டு விற்கிறார். “அப்ப எப்படி இவங்கெல்லாம் போட்டிருக்காங்க! நீங்க அனுமதி கேட்டுத்தானே இங்க போட்டிங்க?” என்று கேட்டேன்.

“வியாபாரத்துக்கு லைசன்ஸ் இருக்குங்க! ஆனா அது தள்ளுவண்டி வியாபாரம். இந்த இடத்தில நிரந்தரமா வைக்க அனுமதி இல்ல. இந்த கடைக்குச் சொந்தக்காரர்தான் இங்க இந்த வண்டியப் போட்டு வியாபாரம் போட்டுக்கச் சொல்லி எங்க கிட்ட இருந்து வாடகை வாங்கிக்கிறார்”

“அப்ப பண்டார் ராயாக்காரங்களுக்கு அவர்தான பதில் சொல்லணும்!”

“அவரு எங்களக் கைகாட்டி விட்டுட்டுப் பேசாம இருக்கார்!”

“அப்ப இந்த பக்கத்திலிருக்கிற சீனர்கள், மலாய்க்காரருக்கும் அதே கதிதானா?”

“தெரியலிங்க! அவங்க ரகசியமாப் பேசிக்கிறாங்க. என்னத்தான் ரொம்ப விரட்றாங்க! தமிளாளுங்கன்னா எளப்பாதான பாக்கிறாங்க!”

“நீங்க முஸ்லிம் ஆச்சே!”

“அத யாருங்க பாக்கிறாங்க? தோல் கலரத்தான பாக்கிறாங்க!”

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன். அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். “நீங்கதான் ஏதாவது சொல்லி எனக்கு இங்க நிரந்தரமா இருக்க லைசென்சுக்கு ஏற்பாடு பண்ணிக் குடுக்கணும்!” என்றார்.

“நானா? நான் எப்படி…?” என்று திகைத்து நின்றேன்.

“உங்க பேருக்கும் பேச்சுக்கும் மதிப்பிருக்கும். நீங்க சொன்னா லைசென்ஸ் குடுத்திருவாங்க!” என்றார்.

உதவியாளர் எனது மீ கொரெங் பொட்டலத்தைப் ப்ளாஸ்டிக் பைக்குள் வைத்து என் கையில் கொடுத்தார். நான் காசு கொடுக்கப் பைக்குள் கைவிட்டேன்.

“ஐயோ அதெல்லாம் வேணாங்க! உங்ககிட்ட நான் காசு வாங்கலாமா!” என்று தடுத்தார்.

“இல்லைங்க! இது வியாபாரம் இல்லியா?” என்றேன்.

“வியாபாரம் என்னங்க வியாபாரம்!. ஆயிரக் கணக்கில சம்பாதிச்சதும் உண்டு; ஆயிரக் கணக்கில விட்டதும் உண்டு. மனுஷாளுங்கள மதிக்கணுங்க! இப்ப யாரு நம்பள எல்லாம் மனுஷனா மதிக்கிறாங்க? நீங்க ஒரு வார்த்த அவங்க பெரியவங்ககிட்ட பேசுங்க!” என்றார்.

“எனக்கு யாரையும் அங்க தெரியாதுங்களே!” என்று இழுத்தேன்.

“நீங்க யாருன்னு சொன்னா போதும் சார். உங்களுக்கு இல்லாத மதிப்பா?” என்றார்.

“சரி பார்க்கிறேன்!” என்று இயலாமையுடன் எழுந்தேன். அப்புறம் ஆறுதலாகச் சொன்னேன். “இதப் பாருங்க! இவங்களயெல்லாம் அனுமதிக்கும் வரையில உங்கள மட்டும் தனிப்படுத்தி விரட்டிட மாட்டாங்க. நீங்க பாட்டுக்குத் தைரியமா இருங்க” என்றேன்.

“சரிங்க! சார் இருக்கும்போது எனக்கென்ன பயம்?” என்றார்.

கையில் ப்ளாஸ்டிக் பை கனக்க நான் காரை நோக்கி நடந்தேன். அந்தப் பை அன்பா, லஞ்சமா எனத் தெரியாமல் மனம் தவித்தது. அவரை அலைக்கழிக்கும் அரசு ஆதிக்க வெள்ளத்திலிருந்து தப்பிக்க எல்லாப் புற்களையும் பிடித்துக் கொண்டு தொங்க முயல்கிறார் என்று மட்டும் தெரிந்தது. அதில் நானும் ஒரு புல்.

நான் காரை நிறுத்தி வைத்திருந்த வரிசையில் எல்லாக் கார்களிலும் இளஞ்சிவப்பு டிராஃபிக் டிக்கட் வைப்பரில் சொருகி வைத்திருந்தார்கள். என் வைப்பரிலிருந்ததை எடுத்து அரை இருளில் சோகமாகப் பார்த்தேன்.

பேசாமல் வீட்டில் காளான் கிரீம் சூப் சுடவைத்துச் சாப்பிட்டிருக்கலாம் என்று தாமதாமாக எனக்குத் தோன்றியது.

—முடிந்தது—


karthigesur@gmail.com

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு