ஒரு தரிசனம்

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

ருத்ரா


அந்த சொரிநாய்
லாரியில் அடிபட்டு
செத்து விழுந்தது.
யாருக்கும் கவலை இல்லை.
அதைச்சுற்றி
போலீஸ்காரர் சாக்பீஸால்
வட்டம் போடவில்லை.
போக்குவரத்து நெருக்கடி
ஏற்பட்டு
வாகனங்கள்
சந்து பொந்துகளுக்கு
திருப்பிவிடப்படவில்லை.
அந்த நாயின் சடலம்
காலபைரவரின்
கசங்கிப்போன
வாகனம் அல்லவா?
ஆனாலும் அது
கண்டு கொள்ளப்படவில்லை.
பக்கத்து கோயிலில்
எண்ணெய் பிசுக்கில்
பள பளப்பாய்
கால மூர்த்தியின்
உற்ற தோழனாய்
இருக்கும்
அந்த சிலை
இங்கே ரோட்டின் ஓரத்தில்
ரத்த குங்குமத்தில்
சத்தமின்றிக் கிடந்தது.
திருச்சங்குகள் முழங்காத
உடுக்கைகள் ஒலிக்காத
திருவாதிரைக்காட்சி அது.

சாவதற்கு முன் அது
எந்த காலை
தூக்கியிருக்கும்?
இடது காலோ
வலது காலோ…
காலைத்தூக்கிய
ஊர்த்துவ தாண்டவங்களின்
ஊளைக்குரல்கள் அங்கே
மௌனத்தில்
திருப்பள்ளியெழுச்சி
பாடின.
அந்த சிவன் “சிவனே” என்று
அங்கு கிடந்தது.
ஐந்து சபையில்
அது என்ன சபை ?
எலும்பும் சதையுமாய்
கிடக்கும்
அந்த சபையில்
சில காக்கைகள் வந்து
பதஞ்சலிகளாயும் வியாக்கிர
பாதர்களாயும்
சூத்திரங்கள் கத்தின.

கோவிலைச்சுற்றி மக்களின்
ஈசல்கள்.
ஈசன் விளையாட்டின்
“ஈக்குவேஷன்களை” புரிந்து
கொள்ளாத
ஈக்களின் கூட்டங்கள்.
இறப்பெல்லாம் பிறப்பு.
பிறப்பெல்லாம் இறப்பு.

நாய் பிடிக்கும் வண்டியோடு
சுறுக்கு கம்பிகளுடன்
சிவனின் பூதகணங்கள் போல
வந்த சிறு கும்பல்
அந்த நாய்க்குப்பையை
துப்புரவு செய்ய்யும் முன்
கொஞ்சம்
துப்பறியத் துவங்கியது.

“எந்த லாரிடா இப்டி அடிச்சு
போட்டது”
“தெரியலை”
“சாதி நாயான்னு பாருடா”
“சாதியா?
இந்த சாதிகளுக்கெல்லாம்
எந்த லாரிடா வரப்போகுது?”
“அது இருக்கட்டும்டா
உடம்புலே டிசைன் டிசைனா
அந்த கலரப் பாரு”
நெத்தியிலெ பாரு
நாமம் போட்ட மாதிரியாவும்
இருக்கு
விபூதிப்பட்டை மாதிரியும்
இருக்கு”
அதன் வர்ணத்தைப்பற்றிய
நேரடி வர்ணனை அது.
எந்த பேட்டை நாயோ.
அதன் கோத்திரம் என்ன?
நைத்ரூபமா?
நசிகேதமா?
“அடேய் ஆணா பொட்டையா
பாருடா.”
“ஆண்தாண்டா”
“ஆனா கழுத்தில் பட்டை
இருக்குடா.
வீட்டு நாய் தான்”
அடையாளம் கண்டுகொண்ட
குஷியில்
இந்த கரிசனம் மட்டுமே
அங்கு இருந்தது.
அது என்ன ஆருத்ரா தரிசனமா?
ஓதுவார்கள்
முப்பது திருவெம்பாவை
பாட்டுகள் பாட.
அத்துடன்
குப்பையும் காலி.
கும்பலும் காலி.


epsi_van@hotmail.com

Series Navigation