ஒரு ஆண்டி கம்யூனிஸ்டும் இது வேறு செப்டெம்பர் பதினொன்றும்

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

அகப்பை சித்தர்(முதலில் ஒரு அறிமுகம் – தன்னிலை விளக்கம் தேவைப் படுகிறது.

இது வேறு செப்டம்பர் _ 11 என்பது குறிஞ்சி பதிப்பகம் வெளியிட்டுள்ள பாப்லோ நெரூதா நூற்றாண்டு நினைவு கூரல் நூலாகும் . நெஞ்சுள்ள வரை நினைவிருக்கும் உருக்கமான சம்பவங்கள் பற்றிய உணர்ச்சி கொப்பளிக்கும் ஒரு தொகுப்பு இது. சுடச்சுட மிளிரும் தங்கம் படப்பட மிளிரும் தாரு என்றவாறும், செந்தமிழும் நாப்பழக்கம் சித்திரமும் கைப்பழக்கம் என்றவாறும் “அன்று வேறு செவ்வாய்க் கிழமை” என்ற இலத்தீன் அமெரிக்க சிறுகதைத் தொகுப்பு தொடங்கி சே குவேராவின் நாட்குறிப்பு, ·fபிடல் காஸ்ற்றோ சொற்பொழிவுகள், ஹொசே மார்த்தியின் வாழ்க்கை வரலாறு, சிலுவையில் தொங்கும் சாத்தான், நிழல்களின் உரையாடல் என மேலும் மேலும் மிளிர்ந்து வரும் மொழி நடைக்குச் சொந்தக்காரர் அமரந்தா . கடும் உழைப்பாளியும் சகிப்புத்தன்மை மிகுந்தவருமான இவருடன் சகோதரி லதா ராமகிருஷ்ணனும் தன் கை வண்ணம் காட்டி உள்ளார்.

18,09,2004 அன்று குறிஞ்சி பதிப்பத்தாரால் வெளியிடப்பட்ட இந்நூலின் பின் அட்டை கீழ் வருமாறு பிரகடனப்படுத்திக் கொள்கிறது : “முப்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 11 ஆம் தேதியில் தான், சிலெ நாட்டு மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வதார் அயண்டே படுகொலை செய்யப்பட்டார்.அமெரிக்க உளவு நிறுவணமான சி.ஐ.ஏ. தனக்கு விசுவாசமான சிலெ நாட்டு ராணுவ அதிகாரிகளைக் கொண்டு, குடியரசுத்தலைவர் மாளிகையை விமானம் மூலம் குண்டு வீசிக் கொளுத்தி, டாங்குகளால் இடித்துத் தகர்த்து, குடியரசுத்தலைவர் அயண்டேவைக் கொன்றது; அவருக்குப் பக்க பலமாக தங்கள் இன்னுயிரை இழக்கும் மனோ திடத்துடன் இறுதிவரை போராடிய நாற்பது பேரையும் படுகொலை செய்தது.
இது 1973 ஆம் ஆண்டில் அதே செப்டம்பர் 11 ஆம் தேதியில்,அதே போன்றதொரு செவ்வாய்க் கிழமையில் தான் நிகழ்ந்தது.”

அனைத்து ஜனநாயக வாதிகள், முற்போக்காளர்கள் , ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மத்தியில் இது பலத்த வரவேற்பைப் பெறும், பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் .(இந்தக் கட்டுரை எழுதப்பட்டு ஒப்படைக்கப் பட்டது அக்டோபர் அல்லது நவம்பர் 2004. கடந்த திண்ணை இதழில் சகோதரி லதா ராமகிருஷ்ணன் ·fபிடல் காஸ்ற்றோ 80 விழா பற்றி எழுதப்போக அதை நான் மீண்டும் தேடிப் பிடித்து அனுப்பி வைக்கிறேன்.) )

‘ஒரு ஆண்டி கம்யூனிஸ்ட்’ என்ற எனது பதப்பிரயோகத்தினை நீங்கள் ஆங்கிலத்தில் புழங்கும் ANTI COMMUNIST என்பதாகப் புரிந்து கொண்டு விடாதீர்கள். ANTI CHIRST என்பதை தமிழில் ‘அந்திக் கிருத்து’ என எழுதுவார்கள். ANTI COMMUNIST என்ற பதத்தை தமிழில் எழுதுவதாக இருந்தால் ‘அந்திக் கம்யூனிஸ்ட்’ என்பதாகத்தான் எழுத வேண்டி வரும். நானோ ‘ஒரு ஆண்டி கம்யூனிஸ்ட்’, அதாவது கம்யூஸ்டுகளை நம்பி ஆண்டியாகவும் போண்டியாகவும் ஆகிப் போனவன். ஆங்கிலத்தில் ‘mendicant communist’ தமிழில் ‘ பிச்சைக்கார கம்யூனிஸ்ட்’ என நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Mendicant என்பது ஆன்மீக ரீதியில் மிக உயர்ந்ததோர் புத்த மத சொல்லாடல். அடுத்த வேளைச் சோற்றை சேமித்து வைத்துக் கொள்ளாமல் ‘பசித்துப் புசி’ என்றவாறு பசிக்கும் போது மட்டும் ஒரு வீட்டில் பிச்சை ஏற்று சாப்பிடும் புத்த பிட்சுவை பிக்குவை ஆங்கிலத்தில் MENDICANT என அழைப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு புத்த மதத்தைப் பின்பற்றும் ஜப்பான்,சீனா,பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே !”

“ ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்,
இருநாள் உணவை ஏலென்றால் ஏலென்றால் ஏலாய்
இடும்பை கூர் வயிறே உன்னோடு
வாழ்தல் அரிதே!”

என்று கூழுக்குப் பாடிய ஒளவையார் ஒருகால் பவுத்தராக இருக்கூடும்.

CHAIRMAN MAO அவர்கள் தனது கல்லூரி நாட்களில், ஒரு கோடை விடுமுறையின் போது வீடு செல்ல விரும்பாமல், தோழர்களுடன் சேர்ந்து பிச்சை எடுக்கத் திட்டமிட்டார். தோழர்களோ பயந்து போய், ‘யாரும் பிச்சை போடாமல் விட்டு விட்டால் தங்கள் கதி என்னாவது?’ என்று அஞ்சினார்கள். அப்போது மாவோ சொன்னார், “பிச்சை எடுத்து யாரும் செத்துப் போனதாக சரித்திரம் இல்லை! ” . அவர் பேச்சை நம்பி அவரோடு அவரது நண்பர்களும் பிச்சை எடுத்து கோடை விடுமுறையைக் கழித்தனர் என்பதாக LONG MARCH என்ற நூலில் நான் படித்து இருக்கிறேன்.

நமது கலாச்சாரமும் இந்த பிச்சையெடுக்கும் பழக்கத்திற்கு விதிவிலக்கானது அல்ல. நமது மும்முர்த்திகளில் முதன்மையான சிவபெருமானே பிச்சைகார ஆண்டிப் பரதேசி தான். சிதம்பரத்தில் நடராசப் பெருமானுக்கு ஒரு நாள் பிச்சைக்கார வேடமிட்டு பிச்சாடன மூர்த்தியாக ஊர்வலம் விடுவது நமது பெருமை !. வட்டித் தொழில் நடத்தி சிவபுண்ணியம் தேடும் நகரத்தார்கள் அன்ன சத்திரம் கட்டினர் ஆயிரக் கணக்கில். பாரதியாருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து “அன்ன சத்திரம் ஆயிரம் கட்டலின் ஆகப்பெரியது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்று பாடினார். இத்தகைய சத்திரம் கட்டும் பழக்கத்தை எம்.ஆர்.ராதா இரத்தக்கண்ணீரில் வெளுத்து வாங்கிய வசனங்கள் மயிர்க்கூச்செரியச் செய்யும் தன்மையானவை.

ஆனால், நானே விரும்பிப் பிச்சைக்கார-ஆண்டி ஆகவில்லை. விதி அப்படி ஆக்கி விட்டது. ‘;அவனவன் சொத்து தனி உடமை அடுத்தவன் சொத்து பொது உடமை’ என்பதாக மார்க்சீயத்தை இந்திய மயமாக்கியதால் இவ்வாறு நேரிட்டது எனலாம்.
அடுத்ததாக எனக்கென்று சொந்தமாக எந்த அறிவும் இல்லை. சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும் ! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ? எனவே அகப்பேய் சித்தரைக் கொஞ்சம் மருவித்து ‘அகப்பை சித்தர்’ ஆகி இருக்கிறேன். ஏழை சொல் ஏறுமா அம்பலம் ?

இப்போது மீண்டும் ‘செப்டம்பர் 11’ க்கு வருவோம்.இது பாப்ளோ நெரூதாவின் நூற்றாண்டு நினைவு கூரல். இனி யாரும் நெரூடா என்று சொல்லக்கூடாது ,அல்லெண்டே என்று சொல்லக் கூடாது, ‘ இவை தவறான உச்சரிப்பு என்பதாக நாங்கள் கண்டு பிடித்திருக்கிறோம்’ என்கிறார்கள் இச்சகோதரிகள்,ஏற்றுக்கொள்வோம், வாழ்த்துவோம்.

எங்கள் ஊரில் ஐயாசாமி குருக்கள் என்றொரு பெரியவர் இருந்தார்.பார்ப்பதற்கு அச்சு அசலாக பகவான் ரமண மகரிஷி போலவே தோற்றமளிப்பார்.. அவருக்கு நிறையக் குழந்தைகள். ஆனால் ஒரு அதிர்ஷ்டம் ஒன்று கூட பெண் குழந்தை இல்லை. .கோயிலுக்கு நிறைய நிலபுலன் உண்டு . என்றபோதிலும் தருமகர்த்தா வழங்கும் சம்பளம் கம்மி. கோயில் பூஜை செய்வதோடு கூடவே புரோஹிதம் செய்வதும் அவரே தான். திவசம் (ஸ்ரார்த்தம்) வந்தால், திருமணம் நடந்தால், கிரகப் பிரவேசம், மஞ்சள் நீராட்டு, காது குத்தல் போன்ற விசேஷங்களில் கொஞ்சம் அரிசி பருப்பு, புளி, மிளகாய், தேங்காய் என்று கிராம வாசிகள் கொடுப்பவை உபரி வருமானம். குறிப்பாக இதன் மூலம் தான் ஜீவனம் நடந்து கொண்டிருந்தது எனலாம்..கஷ்ட ஜீவனம் என்ற போதிலும் மிகப் பெரிய படிப்பாளி. ஒரு நெல்லுப் பெட்டி நிறைய ஆன்மீக நூல்கள். ஒரு அரிய பொக்கிஷம் வைத்திருந்தார் என்றேசொல்ல முடியும். ஒவ்வொரு புத்தகத்துக்கும் முதலில் ஒரு பட்டுச்சீலை மூடி, பிறகு ஒரு பத்தாறு வெண் துகில் மூடி மூன்றாவதாக ஒரு காவித்துணி மூடி, பெட்டி நிறைய தாழம்பூ மடல் ( மகரந்தம் ) போட்டு பூச்சி அரிக்காமல் பாதுகாத்து வைத்திருப்பார். Presvation technology யில் அக்கறை உள்ள நூலகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தொழில் நுட்பம் இது. கோவில் பராமரிப்பு, பூசை சாமான்களை புளி போட்டு பள பளக்க வைப்பது, பட்டு ,பத்தாறு, காவியிலான சாமி ஆடைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, வெளியூர் கோயில் திருவிழாக்களில் விசேஷ அழைப்பின் பேரில் சென்று சாமி அலங்காரம் செய்வது போன்ற பணிகள் இல்லாத போது ஐய்யர் திருஅருட்பாவோ, திருமந்திரமோ, திருப்புகழோ, எனக்குப் புரியாத அஷ்டோத்திரம்,ஸகஸ்ரநாமம் போன்ற வடமொழி நூல்களிலோ முழுகிவிடுவார். அப்படிக் கொண்ட ஒரு ஆழ்ந்த புலமையை, ஆன்ம ஞானத்தைப் போற்றத் தெரியாத புண்ணாக்கு ஊர் அது.

அவர் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று புதியதாகச் சந்தைக்கு வரும் 28 ஆம் நெம்பர் பாம்பு பஞ்சாங்கம் வாங்குவார். வாங்கி வந்ததும் மஞ்சள் பூசிக் கும்பிட்டு விட்டு வருஷாதி வெண்பா, கந்தாய பலன், அந்த வருஷத்திய சுப முகூர்த்தங்கள் பார்த்து முடித்த பின்னர் அவர் செய்யும் முதல் வேலை, அதற்கு முந்தைய வருடப் பஞ்சாங்கத்தை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு , ஊரில் ஓரளவு வசதி உள்ளவர்களின் வீட்டில் எப்போது யார் யாருக்கு திவசம் வருகிறது என்பதைப் புதுப் பஞ்சாங்கத்தில் அடிக்கோடிட்டு எழுதிக்கொள்வார். சித்திரை, வைகாசி,ஆனி, ஆடி என்று ஒவ்வொரு மாதத்திலும் பணக்காரர்கள் வீட்டுக்குப் போய் இன்னாருக்கு இந்த தேதியில் திவசம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவு படுத்துவார். வயிற்றுப் பிரச்சனை இருக்கிறதே ! கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா ?

அது போலவே, நம்ம ஊரு கம்யூனிஸ்டுகளும் மே தினம், அக்டோபர் புரட்சி தினம்,லெனின் பிறந்த நாள், சமீபத்தில் காலமான பிரபல உள் நாட்டுத் தலைவர்கள் நினைவுநாள், பகத் சிங் நினைவு நாள், பாரதியார் நினைவு நாள் என்று டயரியில் குறித்துக் கொண்டு வசூல் செய்து கூட்டம் நடத்துவார்கள். ஐயோ பாவம் ! அவர்கள் எந்த முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்களோ அதே முதலாளிகளிடம் நிதி வசூல் செய்வதையோ, நான் சொல்லத் தேவை இல்லை உங்களுக்கும் ஏன் முதலாளிகளுக்கும் கூட இந்த நடைமுறை தெரிந்தது தான்.

நானும் கூட செப்டம்பர் 11 பற்றிய சில கவிதைகளை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளேன்.என்றபோதிலும் அதே செப்டம்பர் 11 இல் தோழர் அல்லெண்டே ( சாரி ! ) அயண்டே படுகொலை செய்யப்பட்டது எனக்கு நினைவுக்கு வராமல் போனதிலிருந்தே நான் ஒரு அயன் கம்யூனிஸ்டு அல்ல போலி கம்யூனிஸ்ட்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தோழர்கள் அமரந்தாவும், லதா ரமகிருஷ்ணனும் தலை சிறந்த ஒரு அஞ்சலியை இந்த நூலின் மூலம் செலுத்தி இருக்கிறார்கள் .அவர்களுக்கு எனது நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக ! ஆனாலும் ஒரு கவலை. Life is a celeberation என்று ஓஷோ சொல்வதற்கு முன்பிருந்தே எங்கள் ஊர் அய்யாசாமி குருக்கள் போல் ஒவ்வொரு மாதமும் யாருக்காவது நினைவு நாள் கொண்டாடும் கம்யூனிஸ்டுகள் இந்த செப்டம்பர் 11ஐயும் கொண்டாடிவிடப் போகிறார்களோ என்ற கவலை தான் அது !

எனக்கு சிலி, அல்லெண்டே,நெரூடா என்ற பெயர்கள் எல்லாம் சென்னையில் நான் பணியாற்றுகையில், அதாவது 70 – களின் துவக்கத்தில் அறிமுகமாகின. சிலியில் அல்லெந்தே பதவி ஏற்ற உடனே Indian School of Social Sciences என்ற அமைப்பில், தோழர். கருணாகரன் சிலியின் அனுபவங்கள் குறித்து பேசினார். ( இவர் பின்னாளில் தோழியர்.மைதிலி சிவராமன் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.)

மல்லாட்டை ஜில்லாவிலிருந்து மதராஸ் போய் சேர்ந்த இந்த மன்னார்சாமி ஏதோ ஒரு அகில இந்திய நிறுவணத்தில் பணி புரிந்ததாலும் அதன் தொழிற்சங்கத்தில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த்தாலும், அப்போது C.P.M. – இன் அகில இந்திய தலைவர்கள் அடிக்கடி கேரளா செல்லும் வழியில் central லில் இருந்து எழும்பூருக்கு ரயில் மாறுவதற்காக தங்குவதைப் பயன்படுத்தி அடிக்கடி கோகலே ஹாலில் ஆங்கிலத்தில் கூட்டம் நடத்தப் பட்டது. அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் தான் பேசினார்கள். தோழர்.S.R. நீலகண்டன் என்ற அற்புதமான தோழரின் அழகான தமிழ் மொழிபெயர்ப்பும் சுடச்சுட உடனடியாக வழங்கப் பட்டது.( இப்போது நான் மொழி பெயர்ப்பு என்ற பெயரில் உங்கள் கழுத்தை அறுப்பதற்கு ஒரு வகையில் இந்த கோகலே ஹால் கூட்டங்கள் தான் மூலகாரணம்) இந்த அனுபவங்கள் பிற்காலத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு இல்லாமலேயே ஆங்கில சொற்பொழிவுகளை ஓரளவேனும் புரிந்து கொள்ள உதவின.

அப்படிப்பட்ட நிலையில் நான் இருந்த போது தான் தோழர்.கருணாகரன் அவர்கள் சிலி நாட்டு அனுபங்கள் குறித்து L.L.A. வில் ஆங்கிலத்தில் உரையாற்றியதைக் கேட்டேன்.அவர் அன்று பேசியதைப் பார்த்தால், ஏதோ ஆண்டாண்டு காலமாக சிலியில் வசித்து வந்தது போலவோ அல்லது பல ஆண்டுகள் அங்கே தங்கிப் படித்தது போலவோ தோன்றியது. ஆனால் ,அவர் அங்கெல்லாம் போனது கூடக் கிடையாது, மிகச்சிறப்பாக அவர் அளித்த தகவல்கள் யாவும் பத்திரிகைச் செய்திகளில் இருந்து அவர் தொகுத்தவை என்று அவரே தெரிவித்தது மிகமிக வியப்புக்குறியதாக இருந்தது. அப்பேற்பட்ட திறமைசாலி பிற்காலத்தில் ‘ மவுன சாமி,’ ஆகிப்போனது வருத்தத்திற்குறிய ஒன்று. அதன் பிறகு அப்படிப்பட்ட அரசியல் பொருளாதார ஆய்வு எதுவும் சிலி குறித்து என் கண்ணில் படவில்லை. அல்லது மறந்து போயிருப்பேன் Selective Amnesia எனக்கு மட்டும் வரக்கூடாதா என்ன ?

ஆனால் அந்த எழுபதுகள், அவனது பொற்காலம். நிறையக் கூட்டங்கள்,வகுப்புகள்,பத்திரிகைகள்,படிப்பு,ஆர்ப்பாட்டம், ஊர்வலம்,போராட்டம் என்று காலம் போனதே தெரியவில்லை. அப்போது தோழியர் மைதிலி சிவராமன் L.L.A. வில் ஏற்பாடு செய்த ASIA IN UPSURGE என்ற புகைப்படக் கண்காட்சியும், அதில் மையமாக இடம் பெற்ற ஆயிரக்கணக்கான க்யூபத் தோழர்கள் வியத்நாமுக்கு ஆதரவாக இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்திப் பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மிகப்பெரிய புகைப்படமும் நெஞ்சில் இன்றும் பசுமையாகப் பதிந்து இருக்கிறது. அப்போது ஒரு பதின்மூன்று பதினான்கு வயது அம்பி பிறைச்சந்திரப் பொட்டோடு அஞ்சி நடுங்கி “இத்தகைய வன்முறையைத் தூண்டும் கண்காட்சியை அரசு அனுமதிக்கலாமா ?” என்று பார்வையாளர் குறிப்பில் எழுதியதும் நினைவில் நிற்கிறது. பிற்காலத்தில் இந்த அம்பி HINDU பத்திரிக்கையில் LETTER TO EDITOR பகுதியில் ஏராளமாக எழுதும் EASY CHAIR மாமாவாகவோ தாத்தாவாகவோ வளர்ந்திருக்கக் கூடும்.! அந்த காலகட்டத்துக்கு சற்று முன்பிருந்தே தோழர் வி.பி.சிந்தன் அவர்களுக்காக தினம் தினமும் மொழிபெயர்ப்பு செய்தல், நாட்குறிப்பு எழுதுதல் போன்ற பணிகளும் ஒரு சில மாதங்கள் ‘ போக்குவரத்துத்தொழிலாளி’ பத்திரிகையை நடத்தும் பொறுப்பினை என்னிடம் அவர் ஒப்படைத்து இருந்ததும் எனக்கு நல்லதொரு பயிற்சியாக அமைந்தது.

அது போல் ஒரு நாள் காலை நாட்குறிப்பு எழுதிக் கொண்டிருக்கும்போது தோழர்.வி.பி.சி., “கொஞ்சம் படித்தவர்கள் சேர்ந்து இன்று மாலை மாங்கொல்லையில் ஒரு கூட்டம் போட்டிருக்கிறார்கள். போகலாம் வருகிறாயா ?” என்று கேட்டார். கரும்பு தின்னக் கூலியா? சரி என்றேன். மாலையில் மாங்கொல்லை போனபோது ஒரே ஜகஜோதியாக ஜொலித்தது. ஏகப்பட்ட கார்கள் அவற்றில் வந்து இறங்கிய பட்டுப் புடவையும் வைரக்கம்மலும் மல்லிகை சரமுமாய் மினுக்கிய மாமிகள், பைஜாமா ஜிப்பா சோடா புட்டிக் கண்ணாடி சகிதம் அறிவு ஜீவிகள் – -அது ஒரு வியட்நாம் போர் எதிர்ப்புக்கான சர்வ கட்சிக் கூட்டம். அதில் ம.பொ.சி. வி.பி.சி. இன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எனப் பலரும் பேசினர். அந்த மேல்தட்டு போரெதிர்ப்பாளர்கள் யாருமே தெருவில் தார் ரோட்டில் உட்கார்ந்து பொதுக்கூட்டம் கேட்டு வளர்ந்த என்னைப் போன்ற பட்டிக்காட்டான் அல்லவே! யாருமே உட்காரவில்லை.கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் அருகிலிருந்த மளிகைக் கடையிலிருந்து பழைய இந்துப் பேப்பர் எடை போட்டு வாங்கி அந்தப் படித்த பணக்கார அறிவு ஜீவிகளுக்கு விநியோகித்து அதனைத் தரையில் விரித்துப் போட்டு உட்காரும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர் – ஆங்கிலத்தில் தான்! அந்த விநியோகப் பணியில் அவனும் சேர்ந்து கொண்டதில் பல நல்ல தோழர்களின் நட்பு பிற்காலத்தில் அவனுக்குக் கிடைத்தது. ( இப்போதெல்லாம் தெருவில் பார்வையாளருக்குக் கூட பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப் படுகின்றனவே ! )

அதன் பலனாக வெறுமனே தொழிற்சங்கம்,ஆர்ப்பாட்டம்,ஊர்வலம்,பொதுக்கூட்டம், மாநாடுகள் என செக்கு மாடாக சுற்றித் திரிந்த அவன் வேறொரு பரிமாணத்துக்கு வித்தியாசமான அனுபவங்களுக்கு ஆட்பட நேர்ந்தது. SATURDAY EVENING CLUB, RADICAL REVIEW அந்தப் பத்திரிக்கைக்காக இரவு நேரத்தில் கடலோரம் மீனவர்களைச் சந்தித்து அவர்தம் வாழ்நிலை குறித்து ஆய்வு செய்வதற்கான களப்பணிகளில் உடனுழைத்தது எல்லாம் வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்கள். பின்னர் உருவாக்கப்பட்ட INDIAN SCHOOL OF SOCIAL SCIENCES என்ற அமைப்பில் கூட்டங்கள் ஏற்பாடு செய்வதில் அழைப்பிதழ் அச்சிடுவது, முகவரி எழுதுவது , தபால் தலை ஒட்டி அஞ்சலகத்தில் சேர்பிப்பது,அரங்கம் ஏற்பாடு செய்வது காவல் துறையினரின் அனுமதி பெறுவது ,அரங்கத்தின் எதிரே கரும்பலகையில் அறிவிப்பு எழுதுவது, பார்வையாளரிடம் கையெழுத்து முகவரி வாங்குவது போன்ற எல்லா விதத்திலும் ஒரு கடைநிலை ஊழியன் போல அவன் உழைத்தான். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்றவாறு கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் அவனது மர மண்டையிலும் கொஞ்சம் ஏறியது. இப்போது நான் செய்யும் எல்லா முட்டாள் தனமான முயற்சிகளுக்கும் அடித்தளம் அமைத்தது இத்தகைய அனுபவங்கள் தானே ?

இந்திய மாணவர் சங்கம் பிற்காலத்தில் உருவானது, அதன் துவக்க மாநாடு திருவனந்தபுரத்தில் நடந்தது, தோழர் ராம் அதன் துணைத் தலைவர் ஆனது, இன்றைய C.P.M.ன் முன்னோடித் தலைவர்களில் பலரை சந்திக்க நேர்ந்தது, எழும்பூர் ரயில் நிலையத்தில் அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் பிரதிகள் நடத்திய அராஜகம், எதிர்த்துக் கேட்ட தோழர்கள் மீது போலீஸ் நடத்திய அநியாயமான தடியடி, தமிழ் மொழி தெரியாத வடநாட்டு மற்றும் வங்கத்தோழர்கள் சொல்லுவது என்னவென்று புரியாத தமிழ்க் காவல் துறை , இடையில் மாட்டிக்கொண்ட என்னைப் போன்ற தொண்டர்கள்; எப்போதாவது எழுதியே தீர வேண்டிய அது ஒரு பெரிய புராணம்!.

ஏனோ இப்போதெல்லாம் இத்தகைய கூட்டங்கள் நடப்பதாகத் தெரியவில்லை.

அறிஞர் ‘நாம் சோம்ஸ்கி’ அவர்கள் சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் செப்டம்பர் 11 பற்றிப் பேசிய கூட்டத்தில் 70 களில் ஏற்பட்ட அதே அனுபவம் திரும்பவும் கிட்டியது. பட்டுப் புடவைகள் வைரக்கம்மல்கள், தாத்தா பாட்டிகள் பெரிய பெரிய கார்கள் கூடவே ஜீன்ஸ் T.SHIRT போட்ட இளம் பெண்கள் அதிலும் கூடுதலாக வங்கி இன்ஷ¤ரன்ஸ் ஊழியர்கள் ஆகியோர் ‘செப்டம்பர் 11’ – இன் பின் விளைவுகள் பற்றி அறிந்து கொள்ளக் கூடி இருந்தனர்.என்னைப் பொறுத்தவரை இது அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு அலை அல்ல .அமெரிக்காவில் இருக்கும் மகன்கள்,மகள்கள், மருமக்கள், பேரன் பேத்திகள் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய திகிலும் கவலையும் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. (இந்தப் பாசம் தலை வணங்கிப் போற்றப் பட வேண்டிய ஒன்று என்பது எனக்குத் தெரியும் ) ஆனால் பாவம் சோம்ஸ்கி ! அவர் தான் இதனை ஏகாதிபத்திய எதிர்ப்பு அலை என்பதாக தவறாகப் புரிந்து கொண்டு இருக்கக் கூடும்.

மீண்டும் நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட ‘இது வேறு செப்டெம்பர் 11’ நூலுக்கு வருவோம். இந்நூலின் உள்ளடக்கம் முற்றிலும் உணர்ச்சிக் கொந்தளிப்பு .எந்தப் பகுப்பாய்வும் இல்லை. எந்தத் திசைவழியும் தேடவில்லை .நம்மூர்க் கோவில்களில் கார்த்திகை தீபத்துக்கு சொக்கப்பனை கொளுத்துவார்கள்.பகபகவென்று பனை மட்டையில் பற்றியெரியும் தீ பத்து நிமிடத்தில் அணைந்துவிடும். அதன் ஒலைகளும் சுள்ளிகளும் அனல் கங்குகளை விட்டுச் செல்வதில்லை. முற்றிய வைரம் பாய்ந்த மரங்கள் மட்டுமே எரிக்கப் பட்டால் அனல் கங்குகள் மிஞ்சும்.அவை சாம்பல் பூத்த நெருப்புத் துண்டங்களாக மீண்டும் தீப்பிடிக்கும்.

“அறிவியல் என்பது மனித மூளையின் கவிதை என்றால் ,கலை இலக்கியம் மனித ஆன்மாவின் கவிதை” என்ற மாமனிதர் கார்க்கி.யின் சொற்றொடர்கள் நினைவுக்கு வருகின்றன. அறிவைப் பயன் படுத்த வேண்டிய இடத்தில் மனதையும் ,மனதைப் பயன் படுத்த வேண்டிய இடத்தில் அறிவையும் பயன் படுத்தி ; பகுதியைத் தேடி முழுமையையும் ,முழுமையைத்தேடி பகுதியையும் பக்குவமாய்க் கோட்டை விடுபவர்கள் நாம்.

இனியேனும், ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலபிரபுத்துவ எதிர்ப்பு ,மக்கள் ஜனநாயகம் போன்ற அனைத்து விஷயங்களிலும் ‘அறிவைப் பயன் படுத்தும் அறிவு’ பெறுவதற்கு முயற்சிப்போமா ? அப்படிப்பட்ட அனைத்துலக விவாதங்கள் நம் காதுக்கு எட்டுமா? என்ற ஆவலும் கிட்டினாலும் நாம் என்ன சீறிப்போன பட்டாசு தானே (Spent force) என்ற ஆதங்கமும் இந்த நூலைப் படித்ததால் உண்டாகி இருக்கிறது. ஆனாலும் ஒரு மனதுக்குப் பிடித்த மொழி பெயர்ப்பு ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நெஞ்சம் விழைகிறது. அந்தக் கவிதையைப் பாருங்கள் !

“சர்வாதிகாரிகள்”

பிரப்பம்புதர் வெளிகளில் ஒரு நெடி தங்கியது
பிண அழுகல், ரத்தம் ஆயுதப்பல்
துவைத்த மலர் இதழ்களின் ஒரு குமட்டலும் சேர்ந்து

தென்னை பனையூடாகப்
புரையோடிச் சீழ்த்த எலும்புகளின் ஏராளங்கள்
ஒரு நிலைத்த கழுத்து நெரிப்பில்
இடுகாடுகளாகிக் கிடந்தன.

மதுக்கிண்ணங்கள் ஏந்தி சட்டைக் கழுத்து விரைப்புகளும்
ஆடையோர வனப்புமாக ஒரு ஆண்டை
பொய் நேர்த்திகளோடு அளவளாவினான்
கையுறைகளுக்குள் சிரிப்பு நுரைத்து

ஒரு கணம் வியர்க்க
பாதைவழி சந்திப்பு அழைத்து அளக்கப்பட
அரண்மனையில் எல்லாம்
கடிகார முகப்புப்போல மின்னின.

பிரலாபித்தபடி இருந்த வாய்
பார்வைக்கப்பாற்பட்டு
நீலம் பாரித்து அதன்
புதிதாய் நிறுத்தப்பட்ட குரல்கள்
விழுந்தன ஒரு தாவரம் போல்,
அதன் மகரந்தம் போல்.
அந்தப் பெரிய இலைகளைக்
குருடாக்கி சருகாகும் படிக்கு
நிர்பந்தம் செய்ததால்.

பின்பு குறுந்தடி குறுந்தடியாக
அச்சுறுத்தும் நீர்ச்சதுப்பில்
மட்டத்துக்கு மட்டம் உருவாகி
மெளனமும் கசண்டும் நிரம்பிய சேற்றில்
பழிக்குப் பழி நாடும்
தொடர் வன்மம்
பிறந்தது.

தமிழில் : மாலதி ( சதாரா )
—————————————–

j.p.pandit@gmail

Series Navigation