சின்னக் கருப்பன்
வேலைகளில் சாதி அடிப்படையிலான முன்னுரிமைக்கு உச்சநீதி மன்றம் 50 சதவீத வரையறை வைத்துள்ளது. இந்த 50 சதவீத முன்னுரிமை வரையறை, கடந்த வருடங்களில் நிரப்பப் படாத இடங்களுக்குச் செல்லுபடியாகாது என்று சட்டம் இயற்றியிருக்கிறது. இந்தச் சட்டம் பற்றி விதி விலக்கில்லாமல் இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து போன்ற எல்லா ஏடுகளும் விழுந்து பிராண்டியிருக்கின்றன.
வேலையில் முன்னுரிமை என்பது சில பின்தங்கிய வகுப்புகளுக்குத் தரப்பட்ட உரிமை. இந்த உரிமையைத் திருடிக் கொண்டு ‘மேல் சாதி ‘க் காரர்கள் முன்னுரிமையுள்ள இடங்களுக்குத் ‘தகுதி ‘யுள்ளவர்கள் கிடைக்க வில்லை என்று பொய் சொல்லி தம்முடைய மாமன் மச்சான் போன்றோரையும், லஞ்சம் தரத் தயாராய் இருந்த பெரும் ‘தகுதி ‘ படைத்தோரையும் நிரப்பிக் கொண்டிருந்தனர். பிறகு பல வழக்குகளுக்கும், நீதி மன்ற உத்தரவுக்கும் பின்னர், இடங்களைக் காலியாகவே வைத்திருக்கலாம், நிரப்ப வேண்டியதில்லை என்று உத்தரவு பெற்றனர். இதனால் மேல் சாதியினர் நிரப்பியாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள் என்று கணக்குப் போட்டது தவறாகி விட்டது. இடங்களைக் காலியாய் வைத்திருப்போமே தவிர உரிமையைப் பிற்படுத்தப் பட்டவருக்குத் தர மாட்டோம் என்பது அவர்கள் செயலாய் இருந்தது.
இப்போது வந்திருக்கும் சட்டம் இதை நிவர்த்தி செய்ய முயல்கிறது. தாழ்த்தப் பட்ட மக்களின் உரிமையைப் பிடுங்கியவர்கள் மீதும் , சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் முன்னுரிமை தேவைப் படுகிற அவல நிலையைத் தக்கவைக்கக் காரணமாய் இருந்த அரசியல் வாதிகள் மீதும் , அதிகாரவர்க்கத்தினரின் மீதும் வரவேண்டிய நியாயமான கோபம் எங்கே என்று தேடிப் பார்க்கிறேன். அது இந்து ஏட்டின் பக்கங்களிலோ, எக்ஸ்பிரஸ் ஏட்டின் பக்கங்களிலோ இல்லை. உரிமை மறுக்கப் பட்ட அநியாயம் ஒரு பக்கம். உரிமையை மீட்டுத்தரச் செய்யும் முயற்சிகள் பெறும் எதிர்மறையான கவனிப்பு ஒரு புறம் என்று நம் இந்திய மேல் தட்டுப் பத்திரிகைகள் தாழ்த்தப் பட்ட மக்களின் மீதான நேரடி தாக்குதலையும், மறைமுக உளவியல் ரீதியான தாக்குதலையும் நிறுத்துவதே இல்லை. உரிமையை நிலை நாட்டிப் பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் இடம் பெற்றால் ‘தகுதியற்றவர்கள் ‘ என்று உணரச்செய்யும்படி நடப்புகள். ஆனால் இப்படிப் பட்ட பார்வைகள் பணம் கொடுத்து கல்லூரியில் சேரும் ஆட்களைப் பற்றி மூச்சே விடுவதில்லை என்பதைக் காணும் போது தான் நம் சமூகம் இன்னமும் சாதியப் பார்வைகளிலிருந்து விமோசனம் பெறவில்லை என்பது புரியும்.
Thinnai 2000 May 21
திண்ணை
|