ஏதேன் தோட்டமும் கேலாங் விடுதியும்

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

நெப்போலியன்


ஏவாளின்
அந்தரங்கம் மறைப்பதற்காய்
இலை ஆடைகளைத்
தைத்துக் கொண்டிருந்தான்
ஏதேன் தோட்டத்தில் ஆதாம்.

கண்ணாடி அறையுள்
தாய்லாந்து ஏவாளை
ஐம்பது வெள்ளி கொடுத்து
அவிழ்த்துக் கொண்டிருந்தான்
கேலாங் விடுதியில் ஆதாம்.

நாக்கில் சொட்டிய இச்சையுடன்
விருட்சத்தின் கனியைப்
புசிக்கச் சொன்னது
ஏவாளிடம் சர்ப்பம்.

வரவேற்பறையில் இளித்தபடி
தொங்கிய நாக்குகளையெல்லாம்
ருசிக்க
அழைத்துக்கொண்டிருந்தாள்
லோரோங் 18 ஏவாள்.

தான் சுவைத்தப்
பாவக்கனியை
ஆதாமிற்கும் ஆசைகாட்டி
கடித்துக் கொடுத்தாள்
ஏதேனில் ஏவாள்.

புசித்த களைப்பில்
சரிந்து சாய
நெஞ்சில் உதைத்து
விரட்டித் தள்ளினாள்
கேலாங் ஏவாள்.

தோட்டத்தில்
அவர்
சத்தம் கேட்டவுடன்
நிர்வாண அவமானமுணர்ந்து
மீறலின் பதட்டத்தால்
ஓடி ஒளிந்துகொண்ட
ஆதாமும் ஏவாளும்
அடித்து விரட்டப்பட்டனர்
ஏதேன் தோட்டத்திற்கு
வெளியே….

விரட்டப்பட்டு…
அலையும் ஆதாம்களையும்
எச்சில் ஊறிய ஏவாள்களையும்
நீலக்கனிகளையும்
பச்சை சர்ப்பங்களையும்
பட்டயத்துடன் கேருபீன்களையும்
இப்பொழுதும்,
லோரோங் 18
கேலாங் வீதிகளில்
நீங்கள் பார்க்கலாம் !

ஏதேன் தோட்டம் கதை
கேலாங் விடுதி நிஜம்.

—- நெப்போலியன்
சிங்கப்பூர்

( சிங்கப்பூரில் கேலாங் சாலையில் லோரோங் வீதிகள் சிவப்பு விளக்கு
விடுதிகளால் நிறைந்திருக்கும் )

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்