எலி

This entry is part [part not set] of 8 in the series 20001217_Issue

அசோகமித்திரன்


இரண்டாவது நாளாக இப்படிச் செய்ததில் கணேசனுக்கு மிகவும் கோபம் வந்தது. இன்றைக்கும் இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ஒன்றையும் மீதம் வைக்காமல் சமையலிடத்தை ஒழித்துப் போட்டு அவன் வீட்டுப் பெண் மணிகள் படுத்துவிட்டார்கள். அப்படி ஒன்றும் விவரம் தெரியாதவர்களில்லை. அக்காவுக்கு ஐம்பது வயதாகிறது. மனைவிக்கு நாற்பது முடியப்போகிறது. மகளுக்குப் பதிமூன்று வயது வரப்போகிறது. ஒரு தோசைத் துண்டு, ஒரு அப்பளத்துண்டு, ஒரு தேங்காய்ச் சில்லு கிடையாது. எலிப் பொறிக்கு எதை வைக்கிறது ? எக்கேடு கெட்டுப் போங்கள் என்று கணேசனும் படுத்துவிட்டான்.

அரைமணி தூங்கியிருக்கமாட்டான், துணி உலர்த்தும் மூங்கில்கோல் அசைவது கேட்டது. எலி கோலடியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இரு நிமிஷங்கள். இப்போது கோல் இன்னும் அதிகமாக அசைகிறது. எலி கோல்மீது ஏறிக் கொண்டிருக்கிறது. இப்போது பித்தளைத் தாம்பாளம் சுவரில் இடிக்கும் சப்தம் கேட்கிறது. எலி பரண்மீது ஏறி விட்டது. கசகசவேன்று சப்தம். எலி பழைய செய்தித்தாள் குவியல் வழியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தடக்கென்று ஒரு சப்தம். எலி பரணிலிருந்து மரப் பீரோவுக்குத் தாவிவிட்டது. பீரோமீது போட்டிருந்த காலித் தகர டின்கள் கடகடவென்கின்றன. எலி பீரோமீதிலிருந்து சுவரில் ஆணி அடித்து மாட்டப்பட்டிருக்கும் அலமாரிக்குப் போய்விட்டது. சிறிது நேரம் எல்லாம் அமைதியாக இருக்கிறது. அதற்கு ஈடுசெய்வதுபோல் தடாலென்று ஏதோ கீழே தள்ளப்படுவது பெரிதாகக் கேட்கிறது. இப்போது கணேசன், அவன் மனைவி இருவரும் எழுந்து விளக்கைப் போட்டுப் பார்க்கிறார்கள். எலி எண்ணெய் ஜாடியின் மூடியைக் கீழே தள்ளிவிட்டிருக்கிறது.

மனைவி அரைத் தூக்கக் கண்ணுடன் எண்ணெய் ஜாடியை மூடி அதன் மீது ஒரு கூடையைக் கவிழ்த்து வைக்க அவளைப் பல்லைக் கடித்தவண்ணம் கணேசன் பார்த்து நின்றான். ‘ஏதாவது மிச்சம் வைச்சுத் தொலைன்னா ஏன் இப்படித் தினம் துடைச்சு துடைச்சு வைக்கிறே ? ‘ என்று கேட்டான்.

‘என்னத்தை மிச்சம் வைக்கிறது ? ரசத்தை எலிக்கு வைக்கறதா ? இல்லெ, உப்புமாவைப் பொறிக் கொக்கியிலே மாட்டி வைக்கறேளா ? ‘ என்று அவள் கேட்டாள்.

‘நீ என்னன்னு நினைச்சுண்டிருக்கே ? ‘ என்று கணேசன் கேட்டான்.

‘நான் ஒண்ணும் நினைக்கலே. தோசை அடைன்னா பாக்கி வைச்சு எலிப் பொறியிலே மாட்டி வைக்கலாம். நம்ப வீட்டிலே தினம் தோசையும் அடையும் தானே பண்ணிண்டிருக்கோம் ? ‘

‘அப்ப தினம் எலி வந்து எல்லாத்தையும் கொட்டிப் பாழ் பண்ணிடட்டும். ‘

மனைவி பதில் பேசாமல் காய்கறிக் கூடையிலிருந்து ஒரு உலர்ந்த வெங்காயத்தை எடுத்துக் கொடுத்தாள். ‘இதை வாணா வைச்சுப் பாருங்கோ. ‘

‘இந்த வெங்காயத்தைத்திங்க என்னிக்கு எலி வந்தது ? ‘

அவன் வீசியெறிந்த வெங்காயம் அவளுக்கு வலித்திருக்கக்கூடச் செய்திருக்கும். இருந்தும் ஒன்றும் பேசாமல் படுக்கப் போய்விட்டாள்.

கணேசனுக்குப் படுக்கமுடியவில்லை. அந்த இரு அறைகளில், பத்து பேர் சேர்ந்தாற்போல் படுக்கவோ சாப்பிடவோ முடியாத அந்தச் சிறு இடத்தில் தினமும் நான்கைந்து எலிகள் சர்வசுதந்திரத்துடன் ஓடியாடி விளையாடுகின்றன. துணிமணிகளைக் குதறிப் போடுகின்றன. டப்பா மூடிகளைத் திறந்து கீழே தள்ளிவிடுகின்றன. தக்காளிப் பழத்தைக் குடைந்து தின்கின்றன. எண்ணெயைக் குடித்துப் போகின்றன. ஒருநாள் தவறாமல் சுவாமி பிறையில் வைத்திருக்கும் விளக்கின் திரியை இழுத்துப் போய்விடுகின்றன.

கணேசன் சட்டையை மாட்டிக்கொண்டு கால் ரூபாயைச் சட்டைப் பையில் எடுத்துப் போட்டுக் கொண்டான். வாசல் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

ஹோட்டல்களை மூடிவிட்டார்கள். டாக்கடைகள் வெற்றிலைப் பாக்குக் கடைகள்தான் திறந்திருந்தன. ஒரு வடை, ஒரு வடையில் பாதி கிடைத்தால் கூடப் போதும்.

ஆனால் எங்கும் வடை மீதமில்லை. ரொட்டி, பன், பிஸ்கட்டு, வாழைப்பழம் இவைதான் இருந்தன. இதெல்லாவற்றையும் வெவ்வேறு சமயங்களில் உபயோகித்துப் பார்த்தாகிவிட்டது. எலி இவைகளைச் சட்டை செய்வதில்லை. எண்ணெயில் பொரித்தெடுத்த பண்டம்–வடை, பக்கோடா, பப்படம்-இவைதான் பலனளித்திருக்கின்றன. பருப்பு விற்கிற விலையில், எண்ணெய் விற்கிற விலையில் தினம் எங்கே இதெல்லாம் வீட்டில் பண்ணிக்கொண்டிருக்க முடிகிறது ? அரிசி உப்புமா, ரவை உப்புமா, பொங்கல். அப்புறம் பொங்கல், ரவை உப்புமா, அரிசி உப்புமா. அப்புறம் ரவை உப்புமா, பொங்கல், அரிசி உப்புமா இப்படித்தான் மாறி மாறி அந்த வீட்டில் கிடைக்கிறது. கணேசனுக்கு உப்புமா, பொங்கல் என்ற வார்த்தைகளே கூட அலுத்துப் போயிருந்தன. எலிக்கும் அப்படித்தானிருக்கும்.

சரி, இன்றைக்கு எலி நரி முகத்தில் விழித்திருக்க வேண்டும் என்று கணேசன் வீடு திரும்ப இருந்தான். தூரத்தில் மைதானத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மொத்தம் முப்பது நாற்பது பேர் கூட இருக்கமாட்டார்கள். இருந்தும் ஒருவர் கைகளைப் பலமாக வீசிப் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கேட்டால் என்ன ? கணேசன் கூட்டத்தை நோக்கி நடந்தான். பேச்சாளர் நிக்சனுக்கு எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தார். சைனாவுக்கு எச்சரிக்கை. பிரிட்டனுக்கு எச்சரிக்கை. ரஷ்யாவுக்கு எச்சரிக்கை. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை. அப்புறம் இந்திரா காந்திக்கு எச்சரிக்கை. தமிழ் நாட்டுத் தலைவர்களுக்கு எச்சரிக்கை. இந்தப் பயங்கர எச்சரிக்கைகளில் நூறில் ஒரு பங்கு எலி வர்க்கத்துக்குப் போய்ச் சேருமானால் அவ்வளவு எலிகளும் வங்காளக் கடலில் போய்த் தஞ்சம் புகும். ஏன் எலிகளுக்குத் தமிழ் மொழி புரிவதில்லை ?

ஆனால் கணேசனுக்கு அந்தப் பேச்சைவிட இன்னொன்று பலனளிப்பதாக இருந்தது. கூட்டத்திலிருந்து சிறிது தள்ளி ஒரு தள்ளு வண்டியைச் சுற்றிப் பலர் நின்று கொண்டிருந்தார்கள். அந்த வண்டியில் பதிக்கப்பட்ட ஸ்டவ் ஒன்றின் உதவியால் சுடசுடப் பணியாரங்கள் தயாராகிக்கொண்டிருந்தன. கொதிக்கும் கடலை எண்ணெயிலிருந்து சல்லடைக் கரண்டியால் அவை எடுத்துத் தட்டில் போடப்பட்ட சில விநாடிகளில் விற்றுப் போய்க் கொண்டிருந்தன.

கணேசனும் அந்த வண்டிக்கருகில் நின்று கொண்டான். நீர்மூழ்கிக் கப்பல்கள்போல இருபதுமாவு தோய்ந்த மிளகாய்கள் பொரிந்துகொண்டிருந்தன. ஒருவன், ‘வடை போடுய்யா, வடை போடுய்யா ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆனால் அடுத்த முறையும் மிளகாய் பஜ்ஜிதான். கணேசனும் ‘வடை போடுய்யா, ‘ என்றான். ஆனால் மிளகாய் பஜ்ஜிக்கு நிறையத் தேவையிருந்தது. ஒருவன் காரில் வந்திறங்கி, ‘ஒரு எட்டு பஜ்ஜி எடுத்துக் கட்டிவை, ‘ என்று சொல்லிவிட்டு இருட்டில் சிறு நீர் கழிக்கப் போனான். கணேசன், ‘வடை போடுய்யா இந்தத் தடவை, ‘ என்றான்.

மிளகாய் பொரித்து எடுக்கப்பட்டு நிமிஷமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது. செய்தித் தாள் துண்டுகளில் இரண்டு, நான்கு, பத்து என்று கூடப் பொட்டலம் கட்டப்பட்டன.

‘நீங்க என்ன வடையா சொன்னீங்க ? எவ்வளவு வேணும் ? ‘

கணேசனுக்கு ஒன்று என்று சொல்லத் தயக்கமாக இருந்தது. ‘இரண்டு போதும், ‘ என்றான்.

‘அப்ப இதுக்கு அடுத்த வாட்டி போட்டெடுக்கறேன். ‘

மீண்டும் மிளகாயே எண்ணெயில் இறங்கியது. வெகுநேரமாக வடை கேட்டுக் கொண்டிருந்தவன் பெரிதாகச் சண்டையே போட ஆரம்பித்தான். ‘இதோ ஆயிடுத்துங்க. ஒரு நிமிஷம்.அதோ அவரும் வடைக்காகத்தான் காத்திட்டிருக்காரு. ‘

கணேசனுக்கு வேதனையாக இருந்தது. வண்டியைச் சுற்றி இப்போது நல்ல கூட்டம். எல்லாரும் அவர்கள் தின்பதற்காகப் பணியாரங்களுக்குக் காத்திருக்கிறார்கள். அவன் வடை தின்ன ஆவலோடு காத்திருக்கிறான் என்றுதான் அவர்கள் எல்லாரும் நினைத்திருக்க முடியும். அவர்களுக்கு அந்த வடை எலிப்பொறிக்காக என்று தெரிந்தால் எப்படியிருக்கும் ? கணேசனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

வடை போட்டு எடுத்தவுடன் முதலில் கணேசனுக்குத்தான் இரு வடைகள் ஒரு ‘மாலை முரசு ‘த் துண்டில் கொடுக்கப்பட்டது. சுடசுட எண்ணெய், காகிதத்தில் ஊறி அவன் உள்ளங்கையில் பரவிற்று. மணக்க மணக்க இருவடைகள். வடையின் மேற் புற ஓட்டில் பருப்புத் துகள்கள் வெள்ளையாகத் துருத்தி நின்றன.

கணேசன் வீட்டுப் பக்கம் நடந்தான். சூடு தாங்க மாட்டாமல் வடைகளைக்கைக்குக்கை மாற்றிக்கொண்டிருந்தான். கையும் காகிதமும் ஒரே எண்ணெய். பாவம், அந்த வண்டிக்காரனுக்கு அந்த வடைகள் எலிக்காக என்று தெரியாது. கணேசனுக்கு அந்த வடைகள் அவன் வீட்டிலேயே செய்யப்பட்டதாயிருந்தால் சங்கடமிருக்காது. இப்போது வேதனையாகத்தான் இருந்தது.

சட்டையைப் பாழடிக்காமல் எண்ணெய்க் கையால் சாவியை எடுப்பது முடியாத காரியம். கணேசன் வடைகளைக் கீழே வைத்துவிட்டுக் கையிலிருந்த எண்ணெயைப் புறங்காலிலும் ஆடு சதையிலும் தேய்த்துப் போக்கினான். வீட்டிற்குள் சென்று எலிப்பொறிக் கொக்கியில் ஒரு வடையைப் பொருத்தினான். இன்னொரு வடை மீதம். கணேசன் அவனே அதைத் தின்றான். ஐம்பது வயதுக்காரன் இரவு பத்து மணிக்குவடை தின்றால் நிச்சயம் விளைவுகள் இருக்கும். ஆனால் அது எதற்கோ பரிகாரமாக என்று நினைத்துக் கொண்டான். படுத்துக் கொண்டான். தூங்கி விட்டான்.

காலை. கணேசனுக்கு வயிறு ஒரே குழப்பமாக இருந்தது. பொறியில் எலி அடைப்பட்டு இரவெல்லாம் ஏகமாகச் சப்தம் எழுப்பியிருக்கிறது. அவனுக்குத் தெரியாது, அவன் மனைவி தான் சொன்னாள்.

இப்போது எலியைக் கொண்டுபோய் எங்காவது விட வேண்டும். கணேசன் பொறியைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான். பொறியில் இருந்த ஒரு சிறு துவாரத்தின் வழியாக எலி மூக்கை நீட்டிற்று. அந்த மூக்கிலிருந்து அது பெரிய எலியா சிறிய எலியா என்று தெரியவில்லை. ஆனால் வீட்டில் மாவு டப்பாவைக் கீழே தள்ள, எண்ணெய் ஜாடியை உருட்டிவிட, அழுக்குத் துணியைக் கடித்துப் போட, காய் கறிகளைக் குதறிப் போட எலி பெரிதாயிருந்தால் என்ன, சிறியதாயிருந்தால் என்ன ?

இம்முறை தெருச்சாக்கடை வேண்டாம் என்று கணேசன் மைதானத்திற்குச் சென்றான். ஒரு வாரமாவது ஆகும் இந்த எலி வீடு கண்டுபிடித்துத் திரும்பிவர. ஆனால் இந்த எலி இல்லாது போனால் வேறு ஏதாவது எலி.

இந்தப் பையன்கள் சிறிது தள்ளிப் போகமாட்டார்களா என்று கணேசன் நினைத்தான். ஆனால் அவர்கள் அவன் எலிப்பொறியைத் திறப்பதற்காகக் காத்திருந்தார்கள். கணேசன் பொறியைத் தரையில் வைத்து மெதுவாக மூடிக் காம்பை அழுத்தினான். எலி வெளியே ஓடிற்று.

அது பெரிய எலியும் இல்லை. மிகச் சிறியதும் இல்லை. பரந்த வெளி பழக்கமில்லாமல் எலி தாறுமாறாக ஓடிற்று. ஒரு பையன் கல்லை விட்டெறிந்தான். கணேசன், ‘வேண்டாம் பையா, ‘ என்றான். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த காக்கை எலியை ஒருமுறை கொத்திவிட்டுப் போயிற்று. எலி மல்லாந்து படுத்துத் துள்ளிற்று. பிறகு இன்னும் வேகமாகத் தத்தித் தத்தி ஓடிற்று. காக்கை ஒரு சுற்று சுற்றிவிட்டு வேகமாகக் கீழிறங்கியது. எலிக்குப் பதுங்க இடம் தெரியவில்லை. காக்கை எலியை அப்படியே கொத்திக் கொண்டு தூக்கிச் சென்றுவிட்டது. கணேசனுக்குத் துக்கமாக இருந்தது.

இன்னொன்றும் அவனுடைய துக்கத்தை அதிகரிக்கச் செய்தது. பொறியைத் தூக்கிக் கொண்டு வீடு திரும்ப ஆரம்பித்தவன் பொறிக்குள் பார்த்தான். அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப் படாமல் இருந்தது.

Series Navigation

அசோகமித்திரன்

அசோகமித்திரன்