என் பொங்கல்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

செல்வநாயகி


****
அடுத்த ஊர் சூளையில்
வெந்துவந்த சுண்ணாம்புக்கற்கள்
ஊறித் தெளிந்த பாலில்
குளித்தெழுந்த ஓட்டு வீடுகள்

பூளைப்பூவின் வெண்மை
வேப்பிலைப் பசுமை
ஆவாரம்பூ மஞ்சள்
மூன்றும் கலந்த சுகந்தம்
காப்புக்கட்டிய இடம்சுற்றி

விளைந்த நெல்லரிசியில்
ஆசையாய்ச் சுட்டெடுத்து
அம்மாயி அனுப்பிவைக்கும்
சால்பானை நிரம்பிய முறுக்கு

அப்பாறய்யனிடம் வாதிட்டு
ஆடுகழுவும் குளமிறங்கி
ஆணுக்குப் பெண்ணெங்கும்
இளைப்பில்லை காணென்று
கும்மாளமிட்ட கொண்டாட்டவெறி

வண்டியிழுத்த வலிமறந்து
சிரித்ததிரும் சலங்கையுடன்
சிவப்புக்கொம்புகள் ஆட்டியாட்டி
ஓய்வில் நெகிழும் மயிலக்காளைகள்

அம்மாகூட்டிய கல்லடுப்புமேல்
திரண்டுநிற்கும் பொங்கல் கண்டு
மிரண்டுவிலகும் குறும்பையாடுகள்
புழுதிக்காட்டின் அடைத்த பட்டிக்குள்

கார்ட்டூன் பார்க்கும் மகனுக்கின்று
கதையாய்ச்சொல்கிறேன் தைத்திருநாளில்
பிறந்தகிராமத்தின் பொங்கல்பெருமையை

எலக்ட்ரிக் அடுப்புமீது
நீண்டநேரமாய்
பொங்க மறுக்கும்
என்பொங்கலில் இருந்து
தெறித்து விழுகிறது கொஞ்சம்
நட்சத்திரங்களற்ற வானத்து வெறுமை.

—-
snayaki@yahoo.com

Series Navigation

செல்வநாயகி.

செல்வநாயகி.