என் பார்வையில் =நவீன தமிழ்க்கவிதைகளில் பரிசோதனை முயற்சிகள்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

மாலதி


விமரிசகனும் பத்தியாளனும் விநாடி விவரணைக்காரனும் எந்த மொழியிலும் கொண்டாடப் பட்டதாகச் சரித்திரமில்லை. அவன் சொன்னவற்றையும் விடச் சொல்லாமல் விட்டவை சீற்றத்தைக் கிளப்பி விட்டிருக்கின்றன. இன்று நான் வரிக்கின்றகோட்பாடுகளும் கவிதையை மிஞ்சிய,தன்னைத்தான் சாடிக்கொள்கிற, முரணையே மையமாகக் கொண்ட ஒரு வீச்சத்தின் உதிரிகளாகத்தாம் விழப்போகின்றன. யாரும் திரித்தோ திருகியோ உரை எழுதிவிடக் கூடாது என்பதற்காகநானே முன்சுருக்கம் சொல்லி விடுகிறேன். பரிசோதனை முயற்சிகள் நவீன தமிழ்க்கவிதையில் பெரிய அளவில் நேர்ந்து விடவில்லை என்பதே என் அடிப்படைக் கருத்து. கதை ஆரம்பத்திலேயே கதா நாயகனைத் தீர்த்துக் கட்டி விட்டாற்போல கட்டுரையை இத்துடன் முடித்து விட முடியாத படிக்கு ஒரு சிலர் மிகவும் வலுவாக இடைஞ்சல் செய்திருக்கிறார்கள். அந்த மிகச் சிலரை அடையாளம் காட்டுவது அவசியமாகிறது. செய்திருக்கிறேன்.

பெண்மொழிக்கவிதைகள் பரிசோதனைகள் அல்ல என்று நிறுவியிருக்கிறேன். போர்க்கவிதைகள் சந்தர்ப்பம் சார்ந்தவை.எல்லா நேர கவனிப்பு அவற்றின் மேல் அவசியமில்லை,என்றிருக்கிறேன்.புரட்சிக் கவிதைகள் உருவகங்களில் அடங்கும்போது அவை நிரந்தரம் கோரியிருக்கின்றன என்று உதாரணம் தந்து விளக்கியிருக்கிறேன்.குழுக்கவிதைகளுக்குத் தேவையான அக்கறையைத் தருவோம். அதனதன் இடத்தில் அதது இருக்கட்டும் அத்து மீறிய அந்தஸ்து யாருக்கும் தரப்படக்கூடாது கவிதைப் பரப்பில்.குழு மனப்பான்மை தாண்டி திறந்த மனத்தோடு கவிதை வாசிப்பில் கவனம் செலுத்துவதும் கருத்துப் பரிமாற்றம் செய்வதும் கவிதை சிறக்க வழி என்று முடித்திருக்கிறேன்.

**

கவிதைவழி வெளிப்பாடு அடிப்படையானது.இயற்கையானது.உண்மையில் அதுவே உணர்வின் ஆரம்ப வெளிப்பாடு என்று நம்பப் படுகிறது.உரைநடை முற்றிலும் முதிர்ந்த மொழியின் இறுதி வடிவம்.உரைநடை போல் கவிதை செய்தல் தான் நவீன தமிழ்க் கவிதையின் முக்கியமான திருப்பம் என்பதை நினைவுறுத்திக் கொள்ளும்போது, வலிந்து செய்யப்படும் பிரக்ஞை கூடிய முயற்சி தான் நவீன கவிதை என்பது தெளிவாகி விடுகிறது.

பிரக்ஞை கூடிய வலிந்த முயற்சி என்று வசன கவிதையை அழைக்கும் வேளையில் ,எதுகைமோனை கூடிய,முடிவை நோக்கிப் பறக்கிற,பதட்டமான சொற்களை இடையில் வைத்த ,ஒலிக்கட்டுடைய மரபுக்கவிதையை பிரக்ஞையில்லாமல் செய்தார்கள் என்று நம்ப வைப்பது சிறுபிள்ளைத்தனம்.ஆக மரபுக்கவிதையோ புதுக் கவிதையோ எதுவாயினும் அதில் பிரக்ஞை உண்டு.எல்லாக் கவிதையுமே போதையில் அல்லது போதத்தில் எழுதப்பட்டுத் தெளிந்தபின் வெளியிடப் பட்டவை என்று நிலைநாட்டுகிற தகுதி கவிஞர்களுக்கில்லை என்கிற நிலைப்பாட்டைச் சற்றுக் கூடுதல் கவனத்துடன் மனதில் வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பிரசுரத்துக்கும் தொகுப்புக்கும் பின்வாங்காத கவிஞர்கள் யாருமே போதையிலோ போதத்திலோ எழுதியவர்களல்ல.பிரக்ஞையற்றுக் கவிதை செய்தவர்கள் வேண்டுமானால் சங்ககாலத்திலோ பக்தியிலக்கிய காலத்திலோ இருந்திருக்கலாம்.அவர்களின் கவிதைகளைத்தாம் அவர்களே தொகுக்கவில்லை.பின் யார்யாரோ கூரை பிரித்து வீடிறங்கி குப்பை பொறுக்கி வகை பிரித்துத் தொகுத்தார்கள்.

தமிழ்க் கவிதையின் தொன்மையான கோட்பாடுகளை மறந்து விதேசியக் கோட்பாடுகளை அங்குல அங்குலமாக ஏற்றுக் கொள்கிற தமிழ் சமுதாயம், வெறும் கதை சொல்லுதலும் நீதி கூறுதலும் தான் பழைய இலக்கியம் என்று ஒதுக்கி விட்டது.

சங்கப் பாடல்களில் பின் நவீனத்துவ சாயல்கள் இருப்பதையும் செய்திக் குறுக்கம்[நகுலன் செய்ததாக சொல்லப்படுகிற நூற்றாண்டின் மிக முக்கியமான விஷயம்] பொலிவதையும் நூற்றுக் கணக்கான உதாரணம் காட்டி விளக்க முடியும். அப்படியே நாலாயிர திவ்யப்பிரபந்தத்தின் யுக்திகள் கணக்கிலடங்காதவை. நம்மாழ்வார் பாடல்கள் பிரம்மராஜனின் முன்னோடியாகக் கருத இடம் வைப்பவை.நாம் பேசுவது இப்போது நவீன கவிதை பற்றி மட்டுமே என்பதால் அவசியமில்லாத விவரணைகளைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது.

ஆனால் கிறித்துவுக்குத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் உலக இலக்கியம் தொடங்கியிருக்கிறது.ஹோமருக்கு முன் அதி முக்கியமாகப் பேசப் ப்ட்ட படைப்பாளியில்லை.தமிழிலக்கியம் கிட்டத்தட்ட அதே அளவு புராதனத்தன்மையைச் சந்தேகமின்றி படைத்திருந்து,அந்த காலகட்டத்துக்கு முற்பட்ட இலக்கியத்தையும் பிரமாணித்திருக்கிறது.அப்போதே மிக நல்ல வடிவங்களை வெகுவாகக் கொண்டிருந்தது.அப்படியிருக்கக் கூச்சமின்றி நவீனம் மேற்கில் தான் பெருக்கெடுத்ததாக நம்புவதும் அதை அடியொற்றி அசட்டுப் பத்தாம்பசலிப் பாதைக்குப் போவதும் மிகவும் கேவலமானது.

பிரக்ஞையுள்ள கவிதையில் பரிசோதனை இருந்து தானாக வேண்டும்.பரிசோதனை செய்கிற எண்ணம் வந்தவுடன்,தன்னழுத்த இயல்பெழுச்சி ஒதுங்கி , பிரக்ஞைக்கு கவிதை பரப்பில் வெளிர் பரப்பு எது என்று தேடுகிற உந்துதல் வந்து விடுகிறது. வெற்றிடத்தில் துண்டு போட்டு ஆக்கிரமிப்பது போன்ற ஒரு மலினம் உணர்வில் பொங்கி விடுகிறது.

இந்த திசையிலான முயற்சிகள் தாம் இதுவரை புதுக் கவிதையில் வரையப்பட்ட எல்லா விதமான உருவங்களும்.

அதனால் தான் நகுலனின் செய்திக் குறுக்கமும் ரமேஷ் ப்ரேமின் விவரணை நீள் வடிவமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வசீகரப் படவில்லை.

‘ஆண் உடல்வர்ணனையைஅங்குலம் அங்குலமாகப் பெண்கவிஞர்கள் செய்யக்கூடாதா ? ‘என்று ஆதங்கம் தெரிவித்தது நூற்றாண்டின் முந்தைய கவித்துவ ஆய்வறிக்கை ஒன்று.

‘எங்களுக்கேன் வலுவில்லாத கரு ?நாங்கள் எங்களையே பாடிக்கொள்வோம் ‘ என்றபடி பெண் உடல்மொழி மேற்கிலிருந்து வேகமெடுத்து ஓடி தமிழ்க்கால்வாய்களில் கரை புரண்டது. கூடவே ‘ஆண் உடல் அழிவுக்குரியது.எதற்கும் பயன்படாதது ‘ என்கிற பிரச்சாரமும் பரவியது. எப்போதும் அடிக் குறிப்புகளே அதிக வலு பெறுவது போல கவிதை என்றால் அதைப் பெண்ணோ தலித்தோ அல்லது யுத்தத்து எச்சமோ எழுதினால் தான், அதிலும் அதீதம்,அழுக்கு,பிணவாடை அவ்வளவும் சப்புக்கொட்டிகளின் வக்கிர ரசனைக்கு ஏற்றாற்படி பிட்டு வைக்கப் பட்டிருந்தால் தான் இன்னும் நலம் என்கிற அளவுக்கு நுகர் இலக்கியம் விளம்பரப்பட்டுப் போயிற்று.

தாய் சேய் உறவைப் புனிதப் படுத்துவதையும் பெண்குழந்தையைக் கையில் இறுக்கிக் கொள்வதை தாயின் அதிகாரமாக நிலை நிறுத்துவதையும் நவீனம் என்று முன் வைப்பதை என்னவென்று சொல்வது ?அடுத்த நூற்றாண்டாவது பால் சமனத்தோடு ஆரம்பிக்கக் கூடும் என்பதும் கனவாகப் போகிறதா ? ‘பாவம் கவிஞர்கள்,வளர்ந்த குழந்தைகள் ‘ என்று யாரோ கூவின 2003 பிரகடனம் தான் நினைவுக்கு வருகிறது.ஆண்பெண் சமத்துவமும் ஒருவரையொருவர் சுரண்டாத தனித்தனி நல வாழ்வும் மனிதத்தின் கடைசிபட்சக் கனவு.அதற்காகத் தானே ஓரினப் புணர்ச்சிக்குக் கூட நவீன சமூகவியலாளர்கள் அனுதாபியாகிறார்கள் ?

மேற்சொன்ன கருத்துக்களை வைத்து நான் எதை எதைப் பரிசோதனை முயற்சிக்குள் அடங்காத வளர்ச்சி என்று சொல்கிறேன் என்பது புரிந்திருக்கும்.

அதே சமயம் பெண்மொழிக்கவிதையின் ஒரு கோணத்தை ஆபாச இலக்கியமாகப் பார்த்துக் கசையடி வழங்கவென்று சாட்டையுடன் கூட்டங்கள் நிற்பது கேலிக்குரியது.ஸ்டாலினிஸ ஹிட்லரிஸ தணிக்கைகளையே தாண்டி வந்தவர்கள் கவிஞர்கள்.நிறையபேர் கூட்டங்கள் போட்டு ஒழுக்கவியல் போதிக்கிறார்கள் கவிஞர்களுக்கு.அதற்குப் பதிலாக நூலகப் பாடம் நடத்தி எல்லாரையும் உட்காரவைத்துப் பிறர் கவிதைகளைப் படிக்க வைக்கலாம்.கவிஞர்கள் ஒழுக்கவியல் பட்டறைகளில் குறிப்பெடுத்துப் பழக்கப் பட்டவர்களில்லை.

அடுத்து வருகிறது கவிதையைப் பற்றிய இன்னொரு முக்கியமான கணிப்பு.

கவிதை பிரக்ஞையுடன் கூடியது.புதுக் கவிதையில் உரைநடையின் முதிர்ச்சியிருக்கிறது. எல்லாம் சரி.அப்போது அது உரைநடை போலத் தானே ?அது தானில்லை.உரைநடை கூட்டல் கணக்கு ,கவிதை பெருக்கல் கணக்கு. ஏன் அப்படி ? கவிதை என்று பெயர் வைத்து விட்டதாலா ? அது அப்படித் தான்.கவிதையின் ஈவு பல்லாயிரங்கோடி.கவிதை உரைநடை போல் தட்டை யில்லை. தகட்டுப் புழு இல்லை. நாடாப்புழு இல்லை.உரைநடை அசைவு வேறு. கவிதையின் இயங்கு தளம் வேறு. உரை நடை கூட்டுகிறது கவிதை பெருக்குகிறது என்று அதனால் தான் சொன்னார்கள்.

‘தண்ணீர்த் தொட்டி மீன்கள் ‘ என்று ஞானக்கூத்தன் ஒரு கவிதை செய்திருக்கிறார்.பெருக்குகிறது கவிதை என்பதற்கு நல்ல உதாரணம் அது.

இந்தக் கடலில்

எந்தக்குபேர மூலையிலும்

கிடைக்காத புழுக்கள்

வேளை தவறாமல்

தானாய் வருகிறது.

தெய்வக் கிருபையால்

புயல்களும் இல்லை.

திமிங்கிலங்களை

அவதாரக்கடவுள்

காணாமல் செய்துவிட்டார்.

ஆனால் இன்னும்

ஒன்றுமட்டும்

புரியாத புதிராய் இருக்கிறது

உலகத்தை உதடு குவியப்புணர்கையில்

இஃதென்ன இடையில்

அப்புறம் ஒன்று

எங்கே எங்கள்

முள்ளுச்சூரியன்களும் கள்ளுப்பிறைகளும்.

வசன கவிதைகளைத் துண்டு போட்டு ஒட்டு வேலைகள் செய்து நஞ்சுண்டன் நாகார்ஜுனன் லட்சுமி மணிவண்ணன் ஆகியோர் கவிதை எழுதினார்கள்.அலை நீடிக்கவில்லை என்பதிலிருந்தே அதன் வெற்றியின்மை புலப்பட்டது.

புதுக்கவிதையின் இன்னொரு அம்சம் பாடலில் இருக்கப் பிடிக்காமல் துள்ளி விழுந்த ஏதோ ஒன்று இதற்குள் கிடப்பது.அதாவது எதுகை மோனையிலும் அலங்காரச் சொற்களிலும் இசையைப் பிடித்துக் கொண்டு எழும்பி சேட்டைகள் செய்து செயற்கை வசீகரம் செய்யும் ஏதோ ஒன்று தன் ஒப்பனை மறந்து , இயல்பின் அதி மதுரமான லயத்தில் ,பேய் ஓட்டுபவனின் முணுமுணுப்பு மாந்திரீகம் போலவோ ,அழுந்தி அழுந்தி மென்மையாக ஒலிக்கும் மழலைவாய் வேதம் போலவோ,ஏ.ஆர்.ரெஹ்மான் பாட்டுகளில் குறுக்கிடும் அரபிப்பையன் தனிக்குரல் போலவோ இன்னும் ஏதேதோ போலவோபுதுக்கவிதையில் ஒட்டிக்கொள்கிறது.வாசகன் தன்னுடைய அழுகுரலையோ கேவலையோ கிசுகிசுப்பையோ பிரதியில் பார்த்துத் தன்னை இழக்கிறான்.

பரிசோதனைக்கவிதைகள் உள்ளடக்கத்தால் தான் அதிகம் அடையாளப்படுவதாகத் தோன்றுகிறது.

முற்றிலும் புதிதாக,எளிதாகக் கருவை அமைத்து,யாரும் அதிகம் கையாண்டிராத வார்த்தைகளைக் கொண்டு வடிவமைத்து நடப்பியலுக்கு மிக அணுக்கமான விவரங்களைத் துணைக் கருவில் நீட்டித்து கவிதையாக்கம் உருப்பெறுகிறது.

பரிசோதனை நீட்சி பெறுவதிலேயே அந்தப் பாணியின் வெற்றி அல்லது முக்கியத்துவம் புரிகிறது.உதாரணம் பிரம்மராஜன் கட்டியிழுத்து வந்த மிருகம். பழைய மிருகத்துடன் புதிய மனிதன் சில குறிப்புகள் ….என்ற பிரம்மராஜனின் கவிதை பலரின் கவனத்தைப் பெற்றது.

நெரிசல் மிகுந்த நகரச் சூழ்நிலையில் தாக்குதல் மறந்து போனோம்.பகைவர் யார் நண்பர் யார் என்று தெரியாத நெரிசல் இங்கு.போர்க்குணம் உறைந்து கையாலாகாத்தனம் வலுத்த நடை முறை யுகத்தில் தான் மிருகத்தைக் கட்டிப் போட ஆரம்பித்தோம். கட்டிப்போட்டுப் போஷிக்கும் மிருகத்தைக் கருவாக்கி ‘நன்றி ‘ சொல்கிற சீமைப்பழக்கம்,பஸ் பிடிக்கும்,சோடா உடைக்கும்,டாக்ஸி பிடிக்கும்,காட்சிசாலைக்கு விடுக்கும்,நகர்ப்புறச்சூழலை உள்ளடக்கி தன்னிடமிருந்து எப்போதும் விலகாமல் கூடவே இருக்கிற, தன்னை நெருக்கடிக்குள்ளாக்குகிற ஏதோ ஒன்றைப் படிமமாக்கினார். பிரம்மராஜன்.

‘சொல்லில் கிடைத்த சங்கிலியைக்

கழுத்தில் கட்டி

இழுத்துக் கொண்டலைந்தேன் அம்மிருகத்தை ‘.

பற்றாக்குறைகளும் தடைகளும் நவீன யுகத்தின் தவிர்க்க இயலாத துண்டுகள்.எனவே நம் உடமைகளை அணுக்கங்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்கிற பொறுப்பு நமக்கு ஏற்படுகிறது.அவ்வகையில் சங்கிலி போடுவதே நாகரிக உலகத்தின் அதி நவீன அம்ஸம்.

‘கிளைகளுடன் விளையாடித் திரும்பிய மனநிலைகளில்

விநோதப் பறவைகள் பற்றி

வண்ண வண்ணமாய்க் கதைகள் சொல்லிற்று

கேட்டவர் உறங்க. ‘

அலுப்பூட்டும் கதை சொல்லி அந்த சகஜீவி.ஆனால் முக்கியமான வசீகரங்களில்

தேர்ந்திருந்தது.

‘கண்களில் நெருப்பு ஜொலித்தாலும்

பிடரியைத் தடவிவிட்டுத் திரியைத்தூண்டி

‘நானை ‘ வளர்த்த பெண்களிடம்

நன்றி என்றது குளிர் காற்றைப் பார்வையில் கொணர்ந்து. ‘

பாருங்கள் மிருகம் நடிக்கிறது.

‘கோடுகளைத் தாண்டி காடுகளில் அலைந்து

கனவுச்சுமையைத் தவறவிட்டுத் திரும்பியது ‘

இது மகத்தானதொரு விஷயம்.கோடுகளைத் தாண்டியதற்கும் கனவைத் தவற விட்டதற்குமுள்ள தொடர்பைப் பார்க்கவேண்டும்.

‘முளைத்த ரோமங்கள் உதிரும் என்று

நேற்றதற்கு போதித்ததைக் கவனித்ததாய்ப்

பாவனை செய்தது. ‘

நிறைய பாசாங்குள்ளது அந்த மிருகம்.

‘நித்திரையிலும் கர்ஜித்துப் பயத்தின் குகைகளிலிருந்து

தப்பித்து மீண்டும் அப்பெண்களின் கைமடிகளில்

புகுந்தது தஞ்சமென ‘.

நித்திரையில் கர்ஜிப்பது தற்காப்பின் பயத்தால்.அங்கும் அது பாதுகாப்புக்கு எதிர்பாலை நாடுகிறது.அங்கேயே படிமம் முடிந்து விடுகிறது.இந்த மிருகம் இப்படி ஏன் விவரிக்கப் பட்டது ?என்பது அந்த கால கட்டத்தில் [1980]மூக்கியம், வில்லியம் பட்லர் யீட்ஸ் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்னமேயே ,

for certain minutes at the least

that crafty demon and that loud beast

that plague me day and night

ran out of my sight

[Demon and beast] என்று எழுதியது ஞாபகம் இருப்பினும்.

[1923ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கியவர் யீட்ஸ்.]

கவிதையாக்கம் ஒன்றும் உலகளாவிய கிரிக்கெட் போலவோ,கிட்டிப்புள்,கபடி போன்ற கிராமிய ஆட்டங்கள் போலவோ வீர விளையாட்டல்ல.மெளனமும் தனிமையும் கணிசமாகக் கலந்த, பெரும்பாலும் ஒதுக்கப் பட்ட,கிட்டத்தட்ட ஊடுருவவே முடியாத அந்தரங்கத்தன்மை வாய்ந்தது படைப்பாக்கம்.எனினும் ஆர்வலர்கள் அதைப் பல்கலைக் கழக வளாகங்களில், அதிகாரபூர்வமாய் நிமிர்ந்துலாவும் பாடத்திட்டங்களில் ஒன்றாக்காத குறையோடு, கவிஞர்களுக்குச் சட்ட பூர்வமான பிழைப்புத் தொழிலாகக் கவிதையாக்கத்தை ஒட்டவைத்து, பொதுச்செலவில், அவர்களுக்கு ஊதியமும் ,படிகளூம், மருத்துவக் காப்பீட்டு வசதிகளும்,திட்டவட்ட பணிக்கால வரையறைகளூம்,ஓய்வூதிய உத்திரவாதமும்,பட்டறைகளும்,நுண்புலம் திறன் தீட்டும் சந்திப்பு மையங்களும்,ஏற்பாடு செய்யும் தூரத்துக்குப் போகிறார்கள்.கவிஞர்களுக்குச் செய்யும் விமரிசைகள் குறித்து எனக்கொன்றும் விசனமில்லை.அப்படி விமரிசைகளைப் பெறுபவர்கள் கவிஞராக இருந்து தொலைப்பதில்லை. அது தான் விசனம்.

மிருகம் சுகுமாரனிடம் வளர்ப்பு மிருகமாயிற்று.

பசி நீங்கியும் போகாமல்

என் நிழலைத் தொடர்ந்தது அது.

….

தொல்லை தாளாமல்

நம்பிக்கைகளைக் கோர்த்துச்சங்கிலியாக்கிக்

கட்டிவைத்தேன்.

….

உலாவப் போகையில் சங்கிலிகள் புரளக்

கூட வந்தது

பிறகு

இழுத்துப் போக வலுவற்ற என்னை

இழுத்துப் போகத்தொடங்கியது.

சங்கிலிச் சுருளில் மூச்சுத் திணறச்

சிக்கிக் கொண்டேன் நான்.

சொல்லில் கிடைத்த சங்கிலியால் மிருகத்தைக் கட்டின பிரம்மராஜனுக்கு ஓரளவு இசைவாக தன் கவித்துவத்தையே ஒரு ஐந்தறிவு ஜீவி போலாக்கி,

‘மற்றபொழுதுகளில் தொந்தரவு செய்யாமல்

என் கவிதை தள்ளி

ஒரு மூலையில் என்னை

உற்றுப் பார்த்தபடி காத்துக் கொண்டிருக்கும். ‘

என்றார் பா.வெங்கடேசன்.

மிருகத்துக்குப் பல் தேய்த்துவிட்ட சங்கரராமசுப்ரமண்யமும் பிசாசைப் பழக்கின விவரணைகளைத் தந்த மனுஷ்யபுத்திரனும் அதே ‘மிருக ‘ அலையை நீட்டித்தவர்கள் தாம்.

நானும் பிரக்ஞையின்றி ‘என் பிசாசு ‘ கவிதையில் மிருகத்தை நீட்டியிருக்கிறேன். அதில் அதிகப்படி என்னவென்றால் என் பிசாசுக்குச் சங்கிலி கிடையாது. அதுவும் நானும் சேர்ந்தே இளித்துக் கொள்வோம்.

‘நானும் என் கவிதையும் ‘என்ற ஒரு சிறிய முன்னுரையில்,பேதலித்த முரட்டு மிருகத்தைக் குட்டியிலிருந்து வளர்த்தெடுத்து அதிர்ச்சியும் ஆதுரமும் ஒருங்கே கொண்டு அதைப் போஷிக்கும் மேய்ப்பானை ஒத்த பாவம் என் கவித்துவத்தின் மீது எனக்குண்டு என்று சொல்லியிருக்கிறேன். அந்த உணர்வின் அடிப்படையை தோண்டியபடி இக்கட்டுரையை எழுதும்போது எனக்கும் வெட்கம் மேலிடுகிறது.

ஆக மிருகமும் பிசாசும் மாறி மாறி நான் நீயாக மோதியபடி முடிவின்றி தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இனியானமொழி இனிமேலான மொழியின் துவக்கம் என்ற கட்டியத்துடன் வந்த ஆத்மாநாமின் கவிதைகள் அகவிதைகளின் பிரக்ஞையார்ந்த முயற்சி.

நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன் என்பது

தெரியாமலே இருக்கிறேன்.

நான் இருப்பதைத்

தெரிந்துகொண்டபோது

நானும்நானும் இருந்தோம்.

உண்மையான நானும்

உண்மை போன்ற நானும்

பேசிப்பேசி

உண்மை போன்ற நானாய்

நானாகிவிட்டேன்.

உண்மையான நான்

அவ்வப்போது ஆவேன்

உண்மை போன்ற நான்

மறைந்திருக்கையில்

உண்மை போன்ற நான்

இல்லவேயில்லை என்று

உண்மையான நான் சொல்லும்

சரி என்று

உண்மை போன்ற நான்

ஆமோதிக்கும்.

இதனைக் கவனித்த நான்

உண்மையான நானும் இல்லை

உண்மை போன்ற நானும் இல்லை.

நான் மட்டும் இருக்கிறேன்

என்றுணர்ந்தேன்.

நான் மட்டும் இருக்கையில்

அமைதியாய் இருந்தது.

அமைதியாய் இருப்பதை

உணர்ந்ததும்

நான் வேறு ஆகி விட்டேன்.

நானும் வேறான நானும் பொய்.

நான் இல்லை.

ஆத்மாநாம் எப்படி உயரத்துக்குப் போனான் என்பது புரிகிறதல்லவா ?நம் மிருக,பைசாச ஆத்ம விசாரணைகளுக்கெல்லாம் ஒரு விளக்கம் போலிருக்கிறது ஆத்மாநாமின் வெளிப்பாடு.

வெறுமை, கண்ணுக்குத் தெரியாத ஒரு கட்டு, மித மிஞ்சிய சோகம்,அன்பின்மை,மனிதமை இழப்பு,மெது மெதுவே பரவித் தாக்கும் ஒரு வித நோய்த் தன்மை, இதெல்லாம் தான் நச்சு தீண்டிய தற்காலத்தின் நிழற்படம்.இத்தன்மையைக் கூட்டல் குறைத்தலின்றி கவிதைக்குள் கொண்டு வந்தது விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா என்று சொல்லிவிட முடியும்.ஒரு வகைப் பாட்டுக்காகவும் அதன் அசல் தன்மைக்காகவும் சிலவரிகளை முன்வைக்கிறேன். ‘சித்திரவதைகள் ‘ என்கிற கவிதை,

எதுவும் மாறிவிடவில்லை

அதே பழைய அளவுகோல்கள்,

அதே வேகம்

எதுவும் மாறிவிடவில்லை.

மனிதனின் சைகைகள் கொண்டாட்டங்கள்

நடனங்கள் மாறியதைத் தவிரவும்

முகத்தை மறைக்கும் கை குலுக்கல்கள்

மாறாமல்

அதே மாதிரித் தான் இருக்கிறது.

உடல் அதிர்கிறது.

பதைபதைக்கிறது.

வேதனையின் வலிப்பில் வெட்டிக்கொள்கிறது.

வெட்டித் தள்ளூம்போது

தரையில் வீழ்கிறது.

நசிகிறது உப்புகிறது

கோணலாகிறது

இரத்தம் பீய்ச்சுகிறது.

எதுவும் மாறிவிடவில்லை.

உடல் இருக்கிறது

அதற்கென போக்கிடம் வேறேதுமில்லை

இதைவிட உக்கிரமான போர்க்கவிதை இல்லை. இதில் மனிதாபிமானம் பிணைந்திருக்கிறது. இதில் எந்தவிதமான மறு போர் விதைகளும் தந்திரமாக ஊன்றப்பட்டிருக்கவில்லை

அடுத்து இன்னொரு கவிதை,

என் சகோதரி கவிதை எழுதுவதில்லை.

அவள் திடாரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவாள் என்று

நான் நினைக்கவில்லை.

அவள் கவிதைகள் எழுதாததென்பது அம்மா போலத்தான்

அப்பாவையும் போலத் தான்

அவரும் கவிதைகள் ஏதும் எழுதுவதில்லை.

….

எனது சகோதரியின் கணவரும் கவிதை எழுதுவதை விட

செத்துப் போவதையே விரும்புவார்.

இது ஏற்கனவே நிலவும் ஒரு கவிதை போல.

எனக்குத் தோன்றுகிறது-எனது சொந்தக்காரர்கள்

எவரும் கவிதை எழுதுவதில்லை என்பது.

இந்த வரிகளில் தொனிக்கும் கேலியும் விரக்தியும் ஆழம் காண முடியாதவை.காயடிக்கப்பட்ட இனம் போல மனிதம் தளர்ந்ததை மீளவே முடியாத ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சொல்பவை.

நடைமுறை சோகங்களை ,அறிவியலும் தொழில் நுட்பமும் கொண்டு குவித்த விபரீதங்களை நவீன தமிழ்க் கவிஞர்கள் கவிதைகளில் வைத்தார்கள்.

‘நலிந்த பழங்கள் நாலிரண்டு கூறாக

தெருக்கடையில் தெரியும் திருட்டு வரிசைபோல ‘…. என்றும்

‘கையைத் தலையணையாய்வைத்துத்

துயில்பவர்கள் கும்பலுக்குப் பேர் போன வீதி ‘ …. என்றும்

‘கைவல்யவீதி ‘ செய்தார் ந.பிச்சமூர்த்தி.

‘சூடகத் தளிர்க்கை மாதரொடு

சிகரெட் பிடிகை மைந்தரும் ‘

‘நானுமொரு ‘மெய்டன்ஃபார்ம் ‘

தானெனவே சொல்லலாம் ‘

என்கிறபடி சிகரெட்டையும் உள்ளாடைமுத்திரையையும் இலக்கியப் படுத்தினார் சி.மணி.

எவர்சில்வர் நிலாவையும் பிளாஸ்டிக் பையையும் வால்போஸ்டரையும் கவித்துவப்படுத்தினார் எஸ்.வைதீஸ்வரன்.

‘இன்று குடியிருக்க மரங்கள்

குறைந்துவிட்ட நகரத்தில்

கூப்பிட்டுச் சோறு போடும்

பழைய மரபும் அழிந்தபின்பு

நாங்கள்

திருடுவதற்கு உகந்தது உங்கள்

திட்டமிடும் மாத்திரை தான் ‘

என்கிறது கர்ப்பத்தடை மாத்திரையைக் கவ்விச் சென்ற எஸ்.வைதீஸ்வரனின் காக்கை. கவிதையின் தலைப்பு வடையல்ல, விடை.

இப்படி நவீன விஷயங்களைக் கையாள வேண்டி வந்தது இவர்களுடைய பரிசோதனையல்ல. உண்மையில் அத்தகைய கையாளல் நெருக்கடி சார்ந்து இவர்களுக்கு வாய்த்தது என்றும் கூறலாம்.

‘பெறக் கிடைக்கலாம் இனியென்

பத்திரத்துக்கான உத்திரவாதம்

வறுமைக் கோட்டின் வெகு கிழே

இறங்கிவிட்ட போதும் ‘

என்று ரிஷி சொல்வதில் ‘வறுமைக்கோடு ‘ஆட்சி மொழியிலிருந்து பெறப் பட்டது. அதுவே காலம் சொல்லியாகி விடுகிறது.

‘நட்ட நடு நிசியிலும் தெருவில் லாந்தும் நாய்கள் ‘

என்ற விக்ரமாதித்யனிலும்

‘பரந்த முதுகின் நடுவில் நான் ஒட்டின ஸ்டிக்கர்

பொட்டைத் தேடி அலையும் உன் வலக்கை

விரல்களின் பரபரப்பு ‘

என்ற சுப்ரபாரதிமணியனிலும் நெருக்கடி தொடர்கிறது.

சில சமகாலத்துக் கூறுகளை நம்மால் விலக்கவே முடியாத நெருக்கடி தான் அது.

அமிர்தம் சூர்யா,யுவன்சங்கர், ராணிதிலக் எல்லாருமே நெருக்கடிக்குள்ளும் வெளியிலும் இயங்கி இருக்கிறார்கள்.நவீன கவிதைக்கு ‘உள்ளேன் ‘ பட்டியல் எடுக்கப் போவதில்லை நான்.எனினும் மறுக்கமுடியாதவர்கள் இன்னும் பலர் பலர். கவிஞர்களை முழுவதுமாக வாசித்து விடுகிறேன். நல்ல கவிதைகளை மனம் உவந்து அனுபவிக்கிறேன் உரிய தருணங்களில் உரத்தும் சொல்கிறேன்.உயிரைக் கரைத்து ச் சொல்வதில் நேர்மையையும் கடைப் பிடிக்கிறேன்.

எல்லா யுகங்களிலும் நுகர்வி இருக்கிறான். செயலி இருக்கிறான்.நுகர்வியையும் செயலியையும் பாடி மேன்மைப் படுத்துபவன் கவிஞன். கவிதைப் பரப்பு ஒரு வட்டமேசையொட்டிய இருக்கைகளால் ஆனது.மேசை நடுவில் யாருக்கும் இடம் கிடையாது.வட்டச்சுற்றில் மையம் கிடையாது.ஓரமும் கிடையாது.வட்டச் சுற்றுக்குத் தலைவனோ பேச்சாளானோ பொறுப்பாளனோ பீடமுள்ளவனோ கிடையாது.

கவிதை தானாகவே முக்கியப்படும். அதனால் தான் அதிகப் படி கவனத்தை ஒரு சார்புக்குத் தருவது கேலிக்கிடமாகிறது. யாருக்கும் அங்கி நுனியைப் பின்னாலிருந்து தூக்கிக் கொடுத்தோ குடை பிடித்தோ சுயலாபம் பெற விரும்புபவர்கள் கவிஞர்களையும் கவிதையையும் ஒருங்கே அழிக்கிறார்கள். அவரவருக்கான வாசிப்பை உகந்து தருவது தான் கவிஞர்களைக் கெளரவிக்கும் ஒரே வழி.

நிற்க, நுகர்வியும் செயலியும் கவிஞன் வயப்பட்ட ‘சொல்லி ‘யால் தான் பெருமைப் படுத்தப் படுகிறார்கள் என்று சொன்னேன்.இங்கு கவிஞன் எப்படிப் பட்டவன் என்பதும் அவன் சொல்லும் விஷயம் எப்படிப்பட்டது என்பதும் அவதானிக்கப் படுவதில்லை.கவிஞனின் ‘சொல்லி ‘ எத்தனை தூரம் கூட்டல் குறைத்தல் இல்லாத நேர்மையோடு செயல்படுகிறான் என்பது தான் கவனத்தில் கொள்ளப் படுகிறது. அந்த வகையில் தான் ‘பிரமீள் ‘ என்ற கவிதை சொல்லி அடையாளப் பட்டான்.கவிஞனின் குரூரமும் அவன் எடுத்துக் கொண்ட விஷயங்களின் வக்கிரமும் முக்கியப் படவில்லை. அவனுடைய ‘சொல்லி ‘ உள்ளது உள்ளபடி எடுத்துச் சொன்ன நேர்மையில் கூட்டம் கிறங்கிற்று. பிரமீள் ஒரு தனியிடத்தைப் பிடித்தார்.உள்ளடக்கத்தின் பரிசோதனைகளை ஒண்டியாகச் செய்த ஒரு கவித்துவப் புது எழுச்சியாக பிரமீள் விசுவரூபமெடுத்தார்.அவருடைய தனி வாழ்வின் இன்ன பிற அம்சங்கள் மறக்கடிக்கப் பட்டன.

‘பல்லி ‘ என்று தலைப்பிட்டு

கவிதை

இறக்கத் துடிக்கும் வாலா ?

உயிரோடு மீண்ட உடலா ?

என்று கேள்வி கேட்டுத் தன்னைத் தானே வேடிக்கை பார்க்கவும்,தனக்குத் தானே முரண்படவும் தேவையான ஆத்ம சுத்தி பிரமீளிடம் இருந்து வைத்தது.

‘வீடெதுவோ எந்தனுக்கு ?

ஆடும் அரன் தீவிழியால்

மூடியெரித்துயிரறுத்த

காடு ஒத்துப் பேய்களின்றி

ஆருமற்ற சூனியமாய்

தளமற்ற பெருவெளியாய்

கூரையற்று நிற்பது என்

இல்

யாரோ நான் ?…. ‘ இந்த உருக்கம் நவீன தமிழ்க் கவிதைக்குள் வந்தது

ஆச்சரியம்.

‘என் பாதம் பதித்து

நடக்கும்

இடத்தில் மட்டும்

நிழல் தேடி

என்னோடு அலைந்து

எரிகிறது

ஒரு பிடி நிலம் ‘…. ஒராயிரம் அர்த்தம் தொனிக்கும் இந்த வரிகளை இன்னொரு புலம் பெயர்ந்தவன் சொல்லியிருக்க முடியாது.

போர்க்கவிதைகளின் பிணவாடையும் சோகமும் சொல்லப் படுதலின் உக்கிரமும் தனியிடம் பிடித்தது உண்மைதான். அதன் ஒளிகூட்டலும் ஒருபக்க வெளிச்சம் போடலும் விவாதத்துக்குரியன. போரெனில் மனிதநேயம் அங்கு மழையாக வேண்டும்,நிஜம்…ஆனால் போரோடு கூட அரசியலும் உண்டல்லவா ?அரசியல் நுழைந்தபின் பொருளும் அதிகாரமும் குற்றங்களும் பிரிக்க முடியாதவை தாமே!

போர்களால் நேரிடையாக பாதிக்கப் படாதவர்கள் பாவிகள் என்ற முத்திரை குத்தலில் ,பாதிக்கப் பட்டவர்களின் அரசியல் மற்றும் சட்டரீதிக் குற்றங்கள் மறக்கப்படும் அல்லது மறைக்கப்படும் சாத்தியங்கள் அதிகமாகி விடுகின்றன.. எனவேஅழகியல்,விவரணை,யதார்த்தம்,காட்சிவழி,உவமை,உருவக.நவீன, மற்றும் பின் நவீனத்துவ கவிதைகளை முன்நிறுத்தும்போது போர்க் கவிதைகள் ஒளியிழந்து வெறும் பிரசாரக்கவிதைகளாகி இலக்கியத்தில் அவ்வப்போது புரட்சி நாட்களில் மட்டும் ஒலிப்பவை ஆகிப் போயின.

இந்த இடத்தில் ஒரு எளிய கவிதையை நினைவுறுத்தத் தோன்றுகிறது. சி. மணியின் எல்லா வெளிப்பாடுகளிலும் என்னுடைய பூரண உடன்பாடு இல்லை எனினும் இந்தச் சிறு கவிதை ஆயுத நிராகரிப்பை மிகத் துல்லியமாகச் சொல்வதாக எனக்குப் படுகிறது.

இரு தொழில்

குண்டு விதைத்தேன்

முளைக்கவில்லை

குண்டு விதையல்ல

விதைத்ததும் முளைப்பதற்கு

குண்டு விதையானால்

விதைத்ததும் முளைத்துவிடும்

துப்பாக்கி நட்டேன்

தளிர்க்கவில்லை

துப்பாக்கி கொம்பல்ல

நட்டதும் தளிர்ப்பதற்கு.

துப்பாக்கி கொம்பானால்

நட்டதும் தளிர்த்து விடும்.

[எழுத்து-மார்ச் 67]

உள்ளடக்கத்தில் பிரமீளும் காட்சிவழியில் ஆத்மாநாமும் பரிசோதனைக் கவிதைகள் செய்தார்கள் என்று கொண்டோமானால் வார்த்தை கையாளலில் பரிசோதனைகளை பிரம்மராஜன் மேற்கொண்டார்.ஆங்கிலம்,வடமொழி,மற்றும் கணிதம்,அறிவியல், தர்க்கம் சார்ந்த எல்லா புதுச் சொற்களையும் பண்டைய தமிழ்ச் சொற்களோடு பிணைத்துக் கலந்துருக்கிப் புதிய சொற்றொடர்களைச் செய்தார்.

வைரஸ்பூ,க்ளோரோஃபில்,நாய்க்குடை,எலெக்ட்ரிக் பிண எரிப்பு,ஹார்மோன் வாடை,விகிதம்,ஈரடைனமைட்,கேஸட்டுகள்,நுரையீரல்,தாவரங்கள் ஒற்றிய ஸெல் பரப்பு,பீங்கானின் கூக்குரல்,காலரா தோற்றக் கிருமி,தசைநார்களின் தகிப்பு, ஒரு சொட்டு பாதரஸம்,ஆரஞ்சு சூரியன்,பூச்சி ஆராய்ச்சி,எலெக்ட்ரிக் பழங்கள்,தலைப் பிரட்டைகள்,ஊதா ஒளி….இப்படி எத்தனையோ வார்த்தைகள் கவிதைக்குள் வரவாயின.

இந்தவகை கலந்துருக்கு வார்ப்புலோகக் கவிதைகள் பிரம்மராஜனே அறிமுகம் செய்த ஐரோப்பியக் கவிதையுலகிலோ வேறெந்த இந்திய மொழியிலோ கிடையாது.

பிரம்மராஜனின் பொருள்புரியா இருண்மையைப் பலர் பழித்ததுண்டு. ஆனாலும் கவிதையின் இணைபிரியாத கவர்ச்சியான நவீனமும் மறைநுட்ப மர்மமும் அதிகப்படி கெளரவம் கோரியதோடு பலர் பின்பற்றும் அலையைத் தோற்றுவித்து விட்ட படியால் மறுக்க முடியாத இடத்தைப் பிடித்தார் கவிஞர்.

ஆனாலும் பிரம்மராஜன் கேள்விகளுக்கும் விமரிசனத்துக்கும் அப்பாற்பட்டரல்ல.அவரிடம் அக்கறையுள்ள படைப்பாளிகள் சில கேள்விகளைக் கேட்க விழைகிறார்கள்.

‘உறுப்பை ‘ மையமாக்கிக் கவிதை எழுத வேண்டாம் என்று பெண்கவிஞர்களுக்குச் சொல்கிறாரே!முன்னால் ஆண்கவிஞர்கள் எழுதியபோது ஏன் சொல்லவில்லை ? தானே ‘உறுப்பு ‘ப் பெயர்களை சர்வ சாதாரணமாகக் கையாண்டிருக்கிறாரே! அவை ஐரோப்பிய ‘உறுப்பு ‘களா ?

கலந்துருக்கு வார்ப்புலோக வார்த்தைகளால் நவீன கவிதைகள் படைத்து அது போன்ற பல நூறு படைப்பாளிகளுக்கு முன்னோடியானவர் அதே வகை ‘உரைநடை ‘ எழுதும் ‘கோணங்கி ‘யை ஏன் மறுதலிக்கிறார் ?

நவீன கவிதையை இன்னும் மேம்படுத்துவது இளைஞர் கையில் இருக்கிறது. அவர்களைக் குழுக்களுக்குள் முடக்காமல் வெளியே விட்டாலே போதுமானது. கவிதை பிழைத்துப் போகும்.

மாலதி

[சதாரா]

2-10-2004 அன்று ‘பொருநை இந்தியா ‘சார்பில் பூமாஈஸ்வரமூர்த்தி நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது]

====

Malathi

malti74@yahoo.com

Series Navigation