என் கதை

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


அவள் தனி வனமான ஆலமரம்.

நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.

என்னை முதன் முதற் கண்டபோது

நீலவானின் கீழே அலையும்

கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.

நானோ அவளை

கீழே நகரும் பாலையில் தேங்கிய

பாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.

ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி

ஜாடை காட்டினாள்.

மறுநாள் அங்கிருந்தது என் கூடு.

இப்படித்தான் தோழதோழியரே

எல்லாம் ஆரம்பமானது.

தண்ணீரை மட்டுமே மறந்துபோய்

ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்

பாலை வழி நடந்த காதலர் நாம்.

அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.

நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.

சிறகுகளில் மிதக்கும் எனக்கோ

நிலைத்தல் இறப்பு.

மண்ணுடன் அவள் எனை

வேரால் இறுகக் கட்ட முனைந்தும்,

நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்

எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம்.

உண்மைதான் அவளை

நொண்டியென்று விரக்தியில் வைதது.

முதலில் அவள்தான் என்னைப் பார்த்து

கண்ட மரம் குந்தி, ஓடுகாலி

வெள்ளத்தில் மிதக்கும் நரகல் என்றாள்.

ஒரு வழியாக இறுதியின் இறுதியில்

கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்

சமரசமானோம்.

மாய ஊறவின் கானல் யதார்த்தமும்

வாழ்வின் உபாயங்களும்

காலம் கடந்தே வாய்த்தது நமக்கு.

நம் காதலாய் அரங்கேறியதோ

உயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்

என்றோ எழுதிய நாடகச் சுவடி.

இப்போது தெளிந்தேன்.

சந்திக்கும் போதெலாம்

என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.

”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்

உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.”

மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்

” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள்

என் கிளைகளில் அமர்ந்ததோ

நீ மட்டும்தான்.”

இப்படித்தான் தோழதோழியரே

ஒரு மரமும் பறவையும் காவியமானது.

***
visjayapalan@hotmail.com

Series Navigation