என்னைச் சொல்லி,எனக்காய்(ச்) சொல்லுவது. (சலாம் பம்பாயும் நானும்,மீரா நாயரும்.)

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்



“…………………….” …ம்… இது எனக்குள் இருக்கும் காயப்பட்ட மனதுக்கு ஒரு ஒத்தடமல்ல.சமூகத்தின் அதி முக்கியமான ஒரு பொதுப் பிரச்சனை.நாம் மிகச் சர்வ சாதாரணமாக பார்த்து,ஏசி,காறித் துப்பிக் கலைத்து”ஓடுங்க நாய்களே”என்று விரட்டப்படும் என்னைச் சொல்வது!எனக்காகவும் இனித்தோன்றும் என் அடுத்த பிறப்புக்காகவும் நான் வதைப்பட்டதும்,படுவதும்-படப்போவதும் குறித்துப் பேசுவது அவசியமில்லையா?

பேசவேண்டும்!

தர்மம் செய்கிறோமெனும் பேர்வழிகளில் நானும் ஒருவனல்ல.கையேந்தும் ஒரு சின்னஞ்சிறு பிஞ்சு விரல்களில் ஒன்று நான்.எனது மனவலியும்,வடுவும் என்னைப் பல முறைகள் மீரா நாயரைப் பார்க்க வைத்தது.அவர் திறந்து காட்டிய என் வாழ்வை, நான் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.எனது சின்னக் கனவின் வண்ணங்களைச் சொன்னதால் மீரா நாயரை மனதுக்குள் அதிகம் நேசித்த காலம் அதிகம்.இளைமைக் காலத்தின் அற்புதமான கனவுகள் எல்லோருக்கும் ஒன்றல்ல.

கிருஷ்ணாவுக்கு வீட்டுக்குப்போகவேணும்!அம்மாவைப் பார்க்கவேணும்.

கடைகளில் தேனீர்க் குவளை தாங்குகிறான்.பணம் சேர்க்கிறான்.ஏதோவொரு முடுக்கு வீதியில் அநாதவராக எழுந்திருக்கும் சுவருக்குள் ஒரு பொந்து!நண்பன் அதைப் பெட்டகமாகவும்-வங்கியாகவும் அறிமுகப் படுத்துகிறான்.கிருஷ்ணாவின் சின்னவிரல்கள் சேர்த்த பணம் அம்மாவுக்கு,அப்படியே வீட்டைபோவதற்கு.பொந்துக்குள் பணம் பத்திரமாக வைக்கப் படுகிறது.

தொடர்ந்து இயங்கிய சின்னக்கால்கள் ஒரு முறை பொந்தைப் பார்த்தபோது பணம் மாயமாக மறைந்துவிடுகிறது.

உலகம் இருண்டு விடுகிறது!மனம் வலியெடுக்கிறது எனக்கு.எங்கேயடா எனது பணம்?

கேட்டேன்.

உதைத்துத் தள்ளுகிறான் நண்பன்.

“நான் வீட்ட போகணும்,வீட்டை போகப் போறேன்.”பணம் போனது போனதுதாம்.

எனக்கு எழுத வராது.

வீதியில் அமர்ந்து “அதை” மக்களுக்கு நிறைவேற்றும் ஒரு அண்ணரிடம் கடிதம் எழுதுவிக்கிறேன்.

“அன்புள்ள அம்மா,…” கடிதத்தில் என்னைக் கொட்டி கவருக்குள் திணித்து மூடிய பின், முகவரி எழுதுவதற்கு அந்த அண்ணர் “என்னடா உன்ர வீட்டு அட்றஸ்?”…ம்…

தெரியாது!

தெரியாது.அம்மாவை,அப்பாவை,அன்புடைய சகோதரத்தைத் தெரியாத முகவரியால் நான் தொலைத்தேன்.

என்னோடு உலாவும்-வாழும் எல்லோரும்தாம்.

மஞ்சுவுக்கு ஒரு அம்மாவும்,பல அப்பாக்களும் இருப்பது தெரிந்திருக்கு.அவள் அம்மாவோடு இருப்பாள்.பொழுதுகளில் என்னோடு உலா வருவாள்.

நாங்கள் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம்.

எங்கள் கதைகளில் நாங்களே நாயகர்கள்.எனினும் எங்களுக்கும் ஸ்ரீதேவியைக் காதலிக்கவும் தெரியும்.தெருவில் அமிதாப் பச்சனாக வாய்விட்டுப்பாடவும் தெரியும்.

ஒருநாள்,ஒருநாள் என்னப் பல நாள் பொலிசினால் நகரத் தூய்மை-அழகு கருதி நகருக்கு அப்புறமாகத் துரத்தப்படுவதும் உண்டு.நாங்கள் மீளவும் நகரத்துக்குள் கால் வைப்போம்.

எங்கே போவோம்?

இந்தியாவின் கதாநாயன் கிருஷ்ணன்!

ஆனால் இந்தக் கிருஷ்ணாவுக்கு தாயுமில்லை,தந்தைத் தேசமுமில்லை.வீதியின் விளிம்பில் படுத்துறங்கும் நாம்,சமூகத்தின் உள்ளேயும் வாழ முடியாது விளிம்பில்தாம்.

ஆம்! நாங்கள் விளிம்பு மனிதர்கள்.

“சலாம் பம்பாய்”-மீரா நாயர்.

“என்ன பிரச்சனை?,ஒரு பிரச்சனையுமில்லை!” -மீரா நாயர்.

வெண்திரை மூடி விடுகிறது.

மீளவும்,மீளவும்… ஒரு அறுபது தடவைகளுக்கு மேலே இந்தச்”சலாம் பம்பாய்”க்குள் வாழ்ந்திருக்கிறேன்.அதனால் எனது பையனுக்கு”கிருஷ்ணா” என நாமமும் இட்டேன். அந்தக் கிருஷ்ணா அநாதையில்லை என்பதற்காக நான் கிருஷ்ணாவுக்குப் பெற்றவனாய்… இது நிஷம்!வாழ்வு இப்படித்தாம் மனதுள் விரிகிறது.வசந்தத்தை நாம் வடிவமைப்பதிலும்,வாழ்வதிலும் இணைத்துவிடுகிறோம்.

…………………………………………………………………………………………………………………………………………………………….

சுய உணர்வும்,சுய நம்பிக்கையும் சமூகத்தின் அனைத்து ஆளுமைக்கும் அடிப்படைக் காரணியாகும். மனித சமுதாயத்தில் அநேகமாகப் பல குழந்தைகள் அச்சத்தைத் தரிசிப்பவர்கள்.சமூகப் பாதுகாப்பற்ற ஒரு மொன்னைத்தனமான ஆட்சி,நிர்வாகக் கட்டமைப்பு உலகத்துள் நிலவுகிறது.இங்கே மனிதவுணர்வுகள் இயந்திரத்தனமான மனதுகளுக்குள் பின்னப்பட்டிருக்கிறது.இது சமூகத்தின் மொத்த மறுவுற்பத்தியையும் பாழடித்தபடி, பொருள் உற்பத்தியின் திறனைத் தினம் உயர்த்துவது எப்படியெனச் சிந்திகிறது.இந்தவுலகத்தில் துண்டாடப்படும் மனித ஆற்றலானது எந்தக் காரணத்துக்காகவும் புரிந்து கொள்ளப்படுவதில்லை.இது தாரளமயமான ஜந்திர வடிவத்துக்குள் உலகைத் தரிசனம் செய்யுந் தரணங்களில் தகவமைக்கும் மானுட மாதிரியானது மேலே வரும் வாழ்வைத் தினம்,தனம் மெருக்கேற்றி வளர்த்தெடுக்கிறது.

இன்றைக்கு மானுடத்திடம் சுய பெறுமானாவுணர்வு குறைந்துவிட்டது.சுயமதிப்பென்பது மானுடத்தின் ஆளுமையை விருத்திக்கிட்டுச் செல்வது.அது மனித ஆற்றலைத் தீர்மானிப்பதும் அறிவை மேம்படுத்திப் பல நல்ல சமூக மனிதர்களை உலகத்துள் வாழத் தருவதுமாக மறு உற்பத்தி இயங்குவதன் ஆதார சுருதியாகும்.இந்தச் சுயமதிப்பு சமுதாயத்தின் மொத்த உற்பத்திச் சக்திகளின் தனியுடைமையில் ஒருசில மேட்டுக் குடிகளுக்கான வரையறையாக மாற்றப்பட்டுள்ளது.இவர்கள் தவிர்ந்த சமூகத்தின் மற்ற மனிதர்கள் யாபேரும் இந்தச் சமுதாயத்தின் ஏதோவொரு விளிம்பில் தொங்குகிற ஒட்டுண்ணிகளாகச் சமூக யதார்தத்தம் உருப்பெற்றுள்ளது.இது சமுதாயத்தின் கடமையைச் சரிவர இயக்க முடியாது ஆட்சியையும்,அதிகாரத்தையும் ஏற்படுத்திவைத்திருக்கும் ஆளும் வர்கத்தின் அரசியலானது இந்தவுலகத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன்கள் குழந்தைகளை வீதிக்கு உதைத்துத் தள்ளியுள்ளது.இந்த ஈனத்தனமான பொருளாதார இலக்கானது மனிதர்களில் இப்படி மனிதக் குப்பையாக சமூகத்தின் ஒருபகுதித் தலைமுறையைத் தனது கழிவாக்கி வைத்திருக்கிறதென்றால் இந்த ஆட்சி,அமைப்புகள் எவ்வளவு மனிதக்கொடுமைகளைச் செய்கிறது!இதைக் கடைந்தெடுத்த துரோகத்தனமென்பதா இல்லை பயங்கரவாதம் என்பதா?

இது பயங்கரவாதமே!

மனிதக் கூளங்களாக நூறு மில்லியன்கள் குழந்தைகள் உலகமெங்கும் வீதியில்கிடந்து உழல இந்த மனித சமுதாயமும்,அதன் பெருந்தலைவர்களும் அமைதியாகக் “கனவு காணுங்கள் இளைஞர்களே”என்கிறார்கள்!

எதைப்பற்றிக் கனவு?

கோடிக்கணக்கான குழந்தைகளை எங்ஙனம் வீதிக்கனுப்புவதென்றா?

வீதிகள்தோறும் மனிதக் கழிவாகக் குழந்தைகளைக் கொட்டிவைத்திருக்கும் தேசங்கள் வீராப்போடு போர்கள் செய்கின்றன!

இன்றைய அரசுகள்-நிறுவனங்கள் விண்ணுலகத்துக்கு ரொக்கட்டுகளைச் செய்மதிகளை பல கோடிக்கணக்கான நிதியிட்டு அனுப்பிவைக்கின்றன.ஆனால் அப்பாவி மனித ஜீவன்களுக்கு ஒருபடி உணவளிக்கமுடியாது,தேசத்துக் குழந்தைகளைச் சமுதாயத்தின் விளிம்பில் உந்தி தள்ளி அவர்களின் வாழ்வைக் காட்டுமிராண்டித்தனமாகப் பறிக்கின்றன.இது கொடுமையில்லையா?,கோபம் வரவேண்டாமா?எத்தனை காலத்துக்குத்தாம் மற்றவர்களைக் காறித் துப்பிப் பழகப்போகிறோம்!இந்தக் குழந்தைகள் நம்மில் ஒரு அங்கமில்லையா?

நடுவீதியில் பத்திரிகைத் துண்டு பொறுக்கி,கழிவுக்குள் உணவு தேடித் தேசத்தின் குழந்தை அவலப்பட நாம் வல்லரசுக்கனவு காண்போமா?வந்திடுமா தன் நிறைவு?தந்திடுமோ இந்தத் தேசம் தக்கவொரு வேலை?கிடையாது!

உலகப் பொருளாதாரப்போக்குகள்,அதன் காடைத்தனமான சுரண்டல்,மற்றும் நிதிமூலதனத்தின் கண்ணைப் பொத்தியடிக்கும் வட்டி,அந்த வட்டிக்கு வட்டி இப்படி நிதியை வைத்திருப்பவர்கள் செல்வத்தில் புரண்டொழும்ப,உலகத்துச் செல்வமெல்லாம் இவர்கட்கே சொந்தமெனும் மோசடி அரசுகள்-சட்டங்கள்.இவற்றைப் பொறுத்தே பழகுவெனக் கல்வி,நிர்வாக ஒழுங்கு,சட்டம்,நீதிமன்றம்,பொலிசு,இராணுவமென்று பற்பல ஒடுக்குமுறைகள் விலங்கிட அப்பாவிக் குழந்தைகள் அநாதையாகிக் கண்முன்னே செத்து மடிகிறார்கள்.

கடைந்தெடுத்த யுத்தங்கள்,கண்மண் தெரியாத போர்களின் காட்டுமிராண்டிக் குண்டுகள் எத்தனை வகையான துன்பத்தைச் சிறார்க்கு வழங்கி விடுகிறது!

1830 இல் உலக வல்லரசு பிரித்தானியாவிலேயே 30.000. அநாதைக் குழந்தைகள் பெற்றோர்கள் இன்றி வீதிக்கு வந்தார்கள் என்கிறது ஒரு அமைப்பின் பிரசுரம்(terre des hommes)..ஆனால் அது இந்தக் காரணத்தாலல்ல.சமுதாயத்தில் எங்ஙனம் வறுமை தோன்றுகிறதென்பதும்,குழந்தைகளின் பெற்றோர்கள் எங்ஙனம் இணைந்து வாழ முடியாதுபோனது அல்லது குழந்தைகளைச் சமுதாயத்தின் பொது உயிரியென்ற வகையில் அவர்களைக் காக்க அரச முயலவில்லையென்பதையும் வெறுமனவே பெற்றோர்கள் இன்மை என்பதற்குள் அடக்கி, உண்மைகளை உருத்தெரியாமல் அழிப்பது இந்தச் சமூக அரசியலுக்குப் பழக்கமாகிறது!இதுதாம் முதலாளியத்தின் தப்பித்தல்.முதலாளியத்தில் இந்தப் பிரச்சனை தவிர்க்க முடியாது தொடர்ந்தே இருக்கும்.வேலையில்லாத் திண்டாட்டத்தைப்போன்று!

ஆண்டுதோறும் கடலில் கொட்டும் கோதுமையும்,பழங்களும்,மற்றும் பல்வகைத் தானியங்களும் இந்தவுலகத்திலுள்ள அனைத்து மானுடர்களும் ஒரு மாதத்துக்கு உணவருந்தப்போதுமானது.பல இலட்சம் கோடி டொலர் மதிப்புள்ள விளை பொருட்களைச்”செயற்கைத்தனமான அழிப்பு”எனும் சந்தை விதி வார்த்தையில் நாம் அழைத்துக்கொள்கிறோம்.இவையாவும் எதன்பொருட்டு?முதலாளியத்தின் “சந்தைப்படுத்தல்-மதிப்பிறக்கத்தைத் தணித்தல”; எனும் தந்திரத்தின்-உத்தியின் விளைவல்லவா?

இன்றைய நிலவரப்படி 100 மில்லியன் வீதிக்குழந்தைகள் இந்த உலகத்தில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்!(தரவு:Weltgesundheitorganisation WHO.)இலத்தீன் அமெரிக்காவில் மட்டும் முப்பது மில்லியன் வீதிக் குழந்தைகள் வாழ்கிறார்கள்.பிரேசில்போன்ற உலகின் மிக ஏழ்மையான நாட்டில் ஏழு மில்லியன்கள் குழந்தைகள் வீதியில் கையேந்தும்-கண்ணயரும் நிலை.

வளர்ச்சியடைந்த ஜேர்மனியானது உலகத்தின் எந்த நாட்டையும்விட மிக முன்னேறிய சமூகப் பாதுகாப்புடையது.அதன் மண்ணிலே அண்ணளவாக 40.000. வீதிக் குழந்தைகள்,தெருவினில் சீவித்துச் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அமெரிக்காவென்ன ஜப்பானென்ன முதலாளியத்தின் மூச்சு எங்கே நிலவுகிறதோ அங்கெல்லாம் குழந்தைகள் வாழ்வைத் தொலைத்துத் தெருவுக்குத் துரத்தப்படுகிறார்கள்.

“இராஜசிறீ பன்சிவார் கூறுகிறார்:”:”Viele Leute meinen die beste Hilfe fuer diese Kinder waere,sie zuruek zu den Eltern zu schicken oder bei wohlhabenden Leuten unterzubringen.Das ist eine Illusion aus den Filmfabriken”-Voluntary Organisation in Community Enterprise-VOICE.”இக் குழந்தைகளை பெற்றோர்களுடன் அல்லது வளம்மிக்க மனிதர்களிடம் மீள அனுப்பிவைப்பதே சாலச் சிறந்ததெனப் பல பேர்கள் எண்ணுகிறார்கள்.ஆனால் இது ஒரு மாயை சினிமாவால்.”

இந்தியாவில் கிட்டத்தட்ட 15 மில்லியன்கள் குழந்தைகள்-பெரியவர்கள்,பெற்றோர்கள்-குடும்பங்கள்; முற்றுமுழுதான அநாதைகளாகத் தெருக்களில் அலைகிறார்கள்.
கனவுத் தொழிற்சாலைதாம் இவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக இருக்கிறது.இந்த தொழிற்சாலை இச் சிறார்களை- இளைஞர்களை இரண்டும் கெட்டான் நிலைகிட்டுச் சென்று எவருடனும் இணைய முடியாத அகப் புறநிலைக்குள் தள்ளி விடுகிறது.மில்லியன் கணக்காகக் குழந்தைகளையும்,பெற்றோர்களையும் தெருவுக்கு விரட்டியடித்த இந்தியப் பொருளாதாரமானது இப்போதுதெல்லாம் வல்லரசுக்கனவு காண்கிறது.

இவையனைத்தும் இந்த முதலாளித்துவப் பெரும் சுரண்டலினால் தொடரப்படும் பயங்கரவாதமாக இனம் காணப்பட வேண்டும்.
இத்தகைய அரசியல் பொருளாதாரப் பயங்கரமானது இன்னும் சில தரணங்களில் பல மாவட்டங்களில் மனிதர்களைக் கிருமிகளிடமிருந்து காக்காது கொன்றுவிடும் திட்டம் வைத்திருக்கின்றது.சனத்தொகை இங்ஙனம் குறைப்பதற்கானவொரு பொருளாதாரப் புள்ளி இனத்துவ அடையாளப்படுத்தலுடன் நகர்ந்துகொண்டிருப்பதும் இங்கே கவனிகத் தக்கது.

எனவேதாம் கூறுகிறோம் இவ்வுலகம் மாற்றப்படவேண்டுமென.

ப.வி.ஸ்ரீரங்கன்

02.09.2006

srirangan@T-Online.de

Series Navigation