எச்சரிக்கை வேண்டுகோள்!

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

தமிழநம்பி


இலங்கையின் முல்லைத்தீவில் முழுப் பேரழிவில் இரண்டரை
இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களைக் கொன்றழிக்க சூழ்ச்சி
நடைபெறுகின்றது.

சிங்களக் கொலைவெறிப் படையின் கொடுங்கொடிய தாக்குதலுக்கு அஞ்சித் தம்
சொந்த வீடு வாசல் நிலபுலங்களைத் துறந்திழந்து சென்ற வடக்கிலங்கைத்
தமிழர்கள் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்டோர், இப்போது முல்லைத்தீவில்
அடைக்கலமாகி உள்ளனர்.

ஆனால், இலங்கையின் சிங்கள அரசும் இந்திய அரசும் முல்லைத்தீவில்
அடைக்கலம் புகுந்துள்ள ஏதுமறியாத் தமிழர்களின் எண்ணிக்கையை எழுபதாயிரம்
என்றும், எண்பதாயிரம் என்றும், அறுபத்தையாயிரம் மட்டுமே என்றும் இக்கால்
மாற்றி மாற்றிக் கூறி வருகின்றனர்,

இந்த எண்ணிக்கை மோசடியின் பின்னே உலகே அதிர்ச்சி அடையக்கூடிய ஒரு
கொடும் பேரழிவிற்கு அடிகோலும் சூழ்ச்சி இருப்பதாக மாந்த உரிமை ஆர்வலர்கள்
அஞ்சுகின்றனர்.

இலங்கை அரசு ஏதுமறியாத் தமிழர்களை வந்துவிடும்படிக் கூறும்
பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் பெண்கள் நாசமாக்கப்பட்டுக்
கொல்லப்படுகின்ற நிலைமையும் ஆண்களில் இளைஞகள் தனியே பிரிக்கப்பட்டுக்
கொண்டுசென்ற பின், அவர்களின் பிணங்கள் கடலில் மிதக்கும் நிலைமையுமே
நிலவுவதாலும் முல்லைத்தீவில் இப்போது குவிந்துள்ள தமிழர்கள் பாதுகாப்பு
வளையங்களுக்குள் வர அஞ்சுகிறார்கள்.

இந்நிலையில், பாதுகாப்பு வளையத்திற்குள் வராதவர்களை, அவ்வாறு
வராததையே காரணமாக்கி அவர்களைப் ‘போரிடுவோர்’ (combatant) எனக்கூறிவிட்டு
குண்டுமழை பொழிந்து அந்த இலக்கக்கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்து
பெரும் பேரழிவு நடத்த சூழ்ச்சி நடைபெறுகிறது.

நெஞ்சப்பதைப்புடன் எச்சரிக்கின்றோம்!
தமிழக அரசே! தமிழர்களே!
நடுவண் அரசில் மாந்த நேயமும் நயன்மையுணர்வும் அற்றுப்போகாதவர்களே!
இந்தக் கடைசி நேரத்திலாவது உடனடியாகச் செயல்படுங்கள்!
முழுப்பேரழிவு நடக்காமல் தடுத்து நிறுத்துங்கள்!
சிங்கள இனவெறியாளரிடமிருந்து அத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!

(மக்கள் தொலைக்காட்சி ‘சங்கப் பலகை’ச் செய்தியைக் கேட்டு மனங்கசிந்து
வேண்டிய வேண்டுகோள்!)


தமிழநம்பி

Series Navigation