ஊர்விலக்கத்தினூடே தொடரும் பயணங்கள்

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

ஹெச்.ஜி.ரசூல்என் மீதான ஊர்விலக்கத்தையும் மதவிலக்கத்தையும் கண்டித்து எழுதிய சூபிமுகமதுவின் கடிதத்திற்கு பூவண்ணன் என்றபெயரில் எழுதப்பட்ட எதிர்வினையை திண்ணை குழுமம் என்னிடம் அனுப்பி உண்மை நிலையை கேட்டிருந்தது.

பூவண்ணனின் கடிதம் நம் மனங்களில் ஆழ உறைந்து கிடக்கும் பாசிசத் தன்மைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும். அதிகாரத்தால் நொறுக்கப்பட்டு வீழ்ந்து கிடப்பவர்களைபார்த்து பரிகாசத்தொனியில் பேசுவது மிகவும் அபாயகரமானது.

உள்ளூர் ஜமாத்தார்கள் ஊர்விலக்கம் செய்தவுடன் வழக்கம் போலே ரசூல் மீண்டும் ஊர்ஜமாத்திற்கு மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என எல்லாம் தெரிந்தவர் போலபூவண்ணன் குறிப்பிடுகிறார். ஊர்ஜமாத்திற்கு நான் எழுதிக் கொடுத்ததாகச் சொன்ன மன்னிப்புக் கடிதத்தின் நகலை அனுப்பச்சொல்லி தின்ணையில் பிரசுரம் செய்யுங்கள். அது என்ன மன்னிப்புக் கடிதம் என்று நானும் தெரிந்துக் கொள்கிறேன்.

பிறகெதற்காக கன்னியாகுமரி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் காபிர்_இஸ்லாத்திலிருந்து விலக்கப்பட்டவர், என்ற பத்வாவிற்கு எதிராகவும், அபீமுஅ ஜமாத்தின் மனித உரிமைக்கு எதிரான ஊர்விலக்கத்திற்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய அவசியமேற்பட்டது?

ஏறத்தாழ ஆறாண்டுகளுக்கு முன்பு நடந்த மைலாஞ்சி கவிதைகள் தொடர்பான கதையை பூவண்ணன் பேசுகிறார்.அப்பிரச்சினையில் அனைத்து பத்திரிகையாளர்கள் சிற்றிதழாளர்கள் இலக்கியப் ப்டைப்பாளிகள் தங்களது ஒருமித்தகுரலை எழுப்பினர்.அப்போது ஊர்விலக்கு நிகழவில்லை. அதற்கான எத்தனிப்புகள் நடந்தது.

இதற்கு எந்தவித வேண்டுகோளும் கொடுக்காமல் சுய எழுச்சியாக இந்தியாடுடே,நக்கீரன்,ஜீனியர்விகடன்,குமுதம் த இந்து போன்ற வெகுஜன இதழ்களும் தாமரை,கணையாழி,காலச்சுவடு,காலக்குறி, சொல்புதிது ,புதியகோடங்கி,புதியதடம்,ஈழத்துஇதழ் யாத்ரா உள்ளிட்ட இதழ்களும் மைலாஞ்சி கவிதைகள் குறித்து ஆழமாக விவாதித்தன.

எழுத்தாளர்கள்பொன்னீலன்,பா.செயப்பிரகாசம்,சுந்தரராமசாமி,ஜெயமோகன், கனிமொழி, அம்பை, பழமலை, மனுஷ்யபுத்திரன், பா.ஆனந்தகுமார், நட.சிவகுமார், அழகியபெரியவன், யவனிகாசிறீராம்,சி.சொக்கலிங்கம், ந.முத்துமோகன்,ஹாமீம்முஸ்தபா,அப்ழல், செளரிராஜன் ஈழ அறிஞர் சிவசேகரம்,ஈழ தத்துவ இயல் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் டொமினிக்ஜீவா, மலர்செல்வன், துபாய் துவக்கு இசாக்,தாய்லாந்து எ.மாலிக், ஹாங்காங் அப்துல்ரகுமான் என மைலாஞ்சி கவிதைகள் குறித்து தங்கள் பதிவுகளைச் செய்தவர்கள் ஏராளம்.

இந்த ஜனநாயக நிகழ்வின் உன்மைகளை புரியாமல் மிக மேலோட்டமாக பூவன்ணன் கொச்சைப் படுத்துவது உள்நோக்கம் கொண்டதாகும்.அப்போதுதான் இணையதளமொன்றில் மக்கள்கவிஞர் இன்குலாப் கேட்டார் ரசூலின் தலையை வெட்டலாம்.. ஆனால் கேள்விகளை என்ன செய்வீர்கள்..? என்று.

ஒரு படைப்பை எழுதுகையில் நியாயமானமுறையில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஜனநாயகபூர்வமாக ஏற்றுக் கொள்வதில் எனக்கொன்றும் தயக்கமில்லை. தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்வதில், யாரின் மனமோ வெகுவாக புண்பட்டிருப்பின் வருத்தம் தெரிவிப்பதில் பெரிதான பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. இது அப்பிரச்சினையின் தனித்த சூழல் சம்பந்தப்பட்டது. இதுவும் ஜனநாயகத்தின் ஒரு வகை பண்புதான்.

ஆனால் கருத்துக்கு, மாற்று கருத்து என்றில்லாமல் மனைவி குழந்தைகளோடு ஒரு படைப்பாளியை ஊர்விலக்கம் செய்வது எந்த ஷரீஅத்தில் இருக்கிறது. இந்திய அரசியல் சாசன அடிப்படை உரிமைகளுக்கு உட்பட்ட செயலா…?

ஆணாதிக்கமும்,அதிகாரவெறியும் கொண்ட ஜமாத்துகளில் இன்னமும் உருவாக வேண்டிய ஜனநாயகத் தேடலை படைப்பாளிகளின் ஒருமித்த ஆதரவோடும், நீதிமன்றத்தின் துணையோடும் கண்டடைய வேண்டியுள்ளது.வெற்றி தோல்வியை தாண்டிய ஒரு இடையறாத போராட்டமாகவே இதனை நான் கருதுகின்றேன்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்